வவுனியா கணேசபுரம் பகுதியிருலுள்ள விநாயகர் வித்தியாலயத்தின் மாணவி ஒருவருக்கு நேற்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று அதிகாலை குறித்த மாணவிக்கு வீட்டில் படுக்கும்போது பாம்பு கடித்துள்ளது. எனினும் . கடித்தது பாம்பு என்று தெரியவரவில்லை. நேற்று பகல் 11 மணியளவில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுவலி என்பன தொடங்கியுள்ளது.
உடனடியாக வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். வைத்தியர்கள் பாம்பு கடித்துள்ளது என்று தெரிவித்ததையடுத்து வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் பாம்பு இருந்துள்ளது.
வேல்ஸ்குமார் றம்மியா என்ற 14வயதுடைய மாணவியே உயிரிழந்தள்ளார். மாணவியைக் கடித்த பாம்பு அடித்து போத்தலில் அடைக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதிக் கிரிகைகள் நாளை இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு நீர் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வெயில் அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலில் உள்ள நன்னீர் வற்றி உப்புக்கரிக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் இதன் காரணமாக அங்கிருக்கும் முதலைகள் நன்னீர் தேடி ஊர் மனைகளுக்குள் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சூழ்நிலையில் இன்று காலை பொதுமக்களின் வீடுகள் ஊடாக திடீரென நுளைந்த முதலை ஒன்று வீட்டுக்குள் நுளைய முற்பட்டவேளை அங்குள்ள பொதுமக்கள் குறித்த முதலையை பிடித்து கட்டி வைத்துள்ளதாதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் முதியவர்கள் உட்பட அனைவரும் முதலைகளின் நடமாட்டத்தினால் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜெயவர்த்தனவை கட்டித்தழுவி பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கக்கார நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன்.
மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். வீதியில் கைகுலுக்கிக் கொண்டு வந்தார். அவரை பார்த்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்துவிட்டது.
நான் விளையாட்டை நேசிக்கும் ஒருவர். அதனால் அப்படி செய்தேன். ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டன. தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
குவைத் நாட்டில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த மூன்று இலங்கையர்களும் ஒரு இந்திய பிரஜையும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத், கொய்ஃபான் என்ற பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இவர்கள் மதுபானம் தயாரித்து வந்துள்ளனர்.
குவைத் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் 152 பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தேடிய போது, இவர்கள் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை குவைத் சபாஹியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இரண்டு இலங்கையர்கள் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வேறு ஒருவருக்கு கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த போது பிடிபட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 1.5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை. கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு கதாநாயகன் தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார்.
இருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் அவ்வை சண்முகி படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ பெண் தோற்றத்தில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் பெண் தாதி தோற்றத்தில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே பெண்போன்று மேக்கப் சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார்.
இதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகின்றாள். அவர் தாதி கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் வைத்தியராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.
இறுதியில், சிவகார்த்திகேயன் பெண் கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா, சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா என்பதே மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் பெண் வேடத்திலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், பெண் வேடத்தில் தாதி போன்று நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார். அதேபோல், இந்த படத்தில் சண்டைக்கு காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், பெண் வேடத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கைத்தட்டல் திரையரங்கை அதிர வைக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.
சதீஷின் நகைச்சுவை படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் நகைச்சுவையில் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை.
அதேபோல் படத்தில் நிறைய லொஜிக் மீறல்களும் இருக்கிறது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லொஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. ரசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக மாற்றியிருக்கிறார். முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. மொத்தத்தில் ரெமோ ஜொலிக்கின்றான்.
ஹெய்ட்டி நாட்டை மெத்யூ என்ற புயல் தாக்கியதில் நேற்று காலை நிலவரப்படி 478 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவில் பலி எண்ணிக்கை 842 ஆக அதிகரித்து உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடலில் உருவான ‘மெத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹெய்ட்டி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்ட்டியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக அந்நாட்டில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல்-மழைக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. தெருக்களில் காணும் இடமெல்லாம் பிணக்குவியலாக காட்சி அளிக்கிறது.
மீட்பு பணியின்போது மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஹெய்ட்டியில் மட்டும் மேத்யூ புயல் மற்றும் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 842 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேள்வி சத்குரு : கறுப்பு நிறம் அணிவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பொதுவாக கறுப்பு நிறம் எதிர்மறை சார்ந்த நிறமாக கருதப்படுவது ஏன்? கறுப்பு அமங்கலமா?
சத்குரு: கறுப்பு நிறத்துக்கு ஒரு குறிப்பிட்ட தன்மை உண்டு. கறுப்பு அணிந்தால் நீங்கள் பலவற்றையும் ஈர்க்கக் கூடும். அதற்கு நீங்கள் நிறங்கள் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பொருள் சிவப்பாக இருக்கிறது என்றால், அந்த பொருள் சிவப்பு நிறமாக இருப்பதாக நினைக்கிறீர்கள், இல்லையா? ஆனால் அப்படி இல்லை. ஒரு பொருள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், ஒளி அதன் மீது விழும் போது, அது அனைத்து நிறங்களையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டு, சிவப்பு நிறத்தை மட்டும் உள்ளே ஈர்க்காமல் வெளியேற்றிவிடுகிறது. அதனால் தான் அது சிவப்பாகத் தெரிகிறது. எனவே ஒரு பொருள் எதை வெளியேற்றுகிறதோ அதைத்தான் அந்த பொருளின் நிறமாகக் காண்கிறோம்.
கேள்வி அப்படியானால் ஒரு பொருள் வெண்மையாக இருந்தால், அது வெண்மை நிறத்தை பிரதிபலிப்பதால் என்கிறீர்களா?
சத்குரு: வெண்மை நிறம் மற்றும் கறுப்பு நிறத்தில் கவனிக்கத்தக்க விஷயம் உள்ளது. ஒரு பொருள் வெண்மை நிறமாக தோன்றுகிறது என்றால் அது, எதையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை என்று பொருள். அனைத்தையும் வெளியேற்றிவிடுவதால் வெண்மையாக காண்கிறோம். அதேபோல் ஒரு பொருள் கறுப்பாகத் தோன்றினால், அது அனைத்து நிறங்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு எதையும் பிரதிபலிக்கவில்லை என்று அர்த்தம்.
கேள்வி நாம் கறுப்பு நிற ஆடை அணிந்தால், அனைத்து நிறங்களையும் ஈர்க்கிறோம். எதையும் பிரதிபலிக்க மாட்டோம். ஆனால் ‘பல விஷயங்களையும் ஈர்ப்போம்‘ என்று எதைக் குறிப்பிட்டீர்கள் சத்குரு?
சத்குரு: கறுப்பு நிற ஆடை அணிவதால் நீங்கள் பலவிதமான சக்திகளை ஈர்ப்பீர்கள். அதுவும் தொடர்ந்து கறுப்பு நிற ஆடையே அணிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களை ஒரு குறிப்பிட்ட விதமான சாதனா மூலம் நீங்கள் தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மாந்திரீகம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போதுமே கறுப்பு ஆடை அணிகிறார்கள். ஆடை மட்டுமின்றி தலையில் கூட கறுப்புத்துணி கட்டிக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் பலவிதமான சக்திகளை ஈர்க்க விரும்புகிறார்கள்.
கேள்வி ஒரு நிறத்துக்குள் இத்தனை விஷயம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை எனக்குள் அத்தகைய மாந்திரீக ஈடுபாடுகள் எதுவும் இல்லாமல், நான் கறுப்பு உடைகளை வெறுமனே என் மனப்போக்கினால் தேர்வு செய்தால்?
சத்குரு: ஓ! மனப்போக்கு (tendency) என்பதே உடைபட வேண்டிய விஷயம்; வளர்த்துக் கொள்ளத் தகுந்த விஷயம் அல்ல. உங்களுக்கு கறுப்புதான் பிடிக்கும் என்றால் அந்த மனப்போக்கை உடைத்துவிடுங்கள். சிவப்புதான் பிடிக்கும் என்றால் அந்த மனப் போக்கையும் உடைத்துவிடுங்கள். நாம் எதையும் முழுவிருப்பத்தின் பேரில் சுயமாக தேர்வு செய்ய வேண்டும்… மனப்போக்கின் அடிப்படையில் அல்ல. அது தினமும் நீங்கள் காலையில் குடிக்கும் காபியாக இருந்தால்கூட! காபி குடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் மனப்போக்கின்படி இல்லாமல் சுயமான தேர்வின் பேரில் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். மனப்போக்கின் அடிப்படையில் எந்த செயலைச் செய்தாலும் அது திரும்பத் திரும்பச் செய்யும் ஒரு பழக்கமாகவே மாறிவிடும். ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்தால் எங்கும் சென்று சேரமாட்டீர்கள். எனவே உங்கள் தேர்வின் அடிப்படையில் நீங்கள் ஒன்றை அணிவதோ, உண்பதோதான் சிறந்தது. மனப்போக்கு என்னும் பெயரில் கறுப்பு நிற உடைகளை அணிந்தால் நீங்கள் பிரச்சனையை விலைக்கு வாங்குகிறீர்கள் என்றே சொல்லலாம்.
கேள்வி ஓ! அப்படியானால் கறுப்பு நிறம் குறித்து முழுவதுமாக சொல்லுங்களேன்…
சத்குரு: மேற்கத்திய கலாச்சாரத்தில் கறுப்பு உடைகளை அதிகம் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அங்கு குளிர் அதிகம். கம்பளி ஆடைகள் அங்கு அவசியம். செம்மறி ஆடுகளும் கறுப்பாக இருக்கின்றனவே! (சிரிக்கிறார்). கறுப்பு ஆடைகள் உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவும் என்று அறிந்து கொண்டார்கள். இதை நீங்களும் கவனித்து இருக்க முடியும். குளிர் பிரதேசத்தில் கறுப்பு உடை, அதே துணியால் ஆன வெள்ளை ஆடையைவிட, உங்களை அதிக கதகதப்பாக வைத்திருக்கும்.
ஆனால், அவர்களை ஸ்லிம்மாகக் காட்டுகிறது என்பதால், இப்போது ஒரு ஃபேஷனாக கறுப்பு ஆடை அணிகிறார்கள். ஆனால், நீங்கள் கறுப்பு ஆடை அணியும்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், எந்தவிதமான சூழலில் இருக்கிறீர்கள் என்ற கவனம் மிகவும் முக்கியம். ஒரு குறிப்பிட்ட இடம் மிகவும் சக்தி வாய்ந்த இடமாக, நேர்மறை சக்தி கொண்டதாக இருந்தால், நீங்கள் கறுப்பு அணியலாம். அப்படி இல்லாத இடங்களில் கறுப்பைத் தவிர்த்து விடலாம். ஏதோ ஒரு நாள் விருப்பம் என்று கறுப்பு அணிந்தீர்கள் என்றால் பரவாயில்லை. அப்போதும் சில சூட்சுமமான விஷயங்கள் நிகழக்கூடும். அதைத் தவிர்க்க முடியாது தான்.
ஆனால் தொடர்ந்து கறுப்பே அணிந்து வந்தால், அது உங்கள் மனநலம், உணர்வுகள், உங்கள் ஆரோக்கியம், நலவாழ்வு என்று அனைத்தையுமே பாதிக்கும். எனவே ஃபேஷன் என்னும் பெயரில் தொடர்ந்து கறுப்பு அணிந்தால், அது உங்கள் உடல்நிலை, மனநிலை, ஆன்மீக நிலை போன்றவற்றில் மிகவும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இருக்கும் இடம், சூழல் குறித்து உங்களுக்கு அதிகம் தெரியவில்லை என்றால் வெள்ளை அல்லது மற்ற வெளிர் நிறங்களை (light colors) அணியலாம். குறிப்பாக வெள்ளை அனைத்தையும் முழுவதுமாக பிரதிபலித்துவிடும்.
ஆனால் மிகவும் நேர்மறையான சக்தி கொண்ட இடங்களில் அடர்த்தியான நிறங்களை (dark colors) அணியலாம். குறிப்பாக கறுப்பு ஆடை அணியலாம். அந்த இடத்தின் சக்தியை நல்ல முறையில் கிரகிக்க இது உதவும்.
கொலைகள், கொள்கைகள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் இடிப்படையில், 125 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 118 பேருக்கு எதிராக நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்களில் ஏழு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பத்து பேரை கைது செய்ய இலங்கை இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது.
இந்தப் போதைப் பொருள் வர்த்தகர்களின் பட்டியலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரும் உள்ளடங்குவதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருபாகரன் புவிராஜ் அம்பாறை மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மாவட்ட நிலையில் இரண்டாமிடத்தைப் பெற்ற புவிராஜ் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தவர். ஆனால் கேடில் விழுச்செல்வம் கல்வி கற்பதை ஒரு போதும் விட்டு விட வில்லை.
மின்விசிறியிலும், மின்குமிழ்களிலும் மத்தியில் கற்றலை மேற்கொள்வோர் மத்தியில் குறைந்த வசதியில் கற்றலை மேற்கொண்டு மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்குவந்த புவிராஜ் முயற்சி வறுமை கல்விக்குத் தடையில்லை என்ற கருத்துடையோருக்கும் ஒரு உதாரணம் ஆகும்.
திருக்கோவில் வலயம் முதல் 5 மாவட்ட நிலைகளில் 04பேரை சாதனையாளர்களாக திகழ வைத்துள்ளது.
இதேவேளை, மாணவரின் வெற்றிக்கு வலயக்கல்விப்ணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், மாணவனின் ஆசிரியரியர்கள் பெற்றோரின் முயற்சியும் ஒரு காரணியாகும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 22ஆம் திகதி நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத் தாயார் மூர்க்கத்தனமாக தாக்கிய காணொளி வளைத்தளங்களில் வெளியானது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் குறித்த பெண்ணை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்ன சாதித்தான் என்று கேட்கும் காலம் மாறி, இன்று தமிழர்களின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏறாளமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இன்று பல சாதனைகளையும் படைத்துள்ளனர்.
அந்த வகையில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட றொப்பி ஜெயரத்தினம் என்ற தமிழர் முதலாவது விமானியாகியுள்ளார். ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பிரான்ஸில் பிறந்துள்ளார்.
பிரித்தானியாவில் தனது விமானி பயிற்சி முடித்த றொப்பி ஜெயரத்தினம் தற்போது விமானியாகியுள்ளார். றொப்பி விமானிகியாகியுள்ளமை தமிழர்களின் துரித வளர்ச்சியை வெளிக்காட்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் என்பன தற்காலத்தில் அதிகரித்த வண்ணமுள்ளன.
பாலியல் இம்சைகள் பாரதூரமான குற்றம் எனத் தெரிந்திருந்தும், அதிலிருந்து அதிகமானவர்கள் விடுபட முடியாதவர்களாக உள்ளனர்.
இவ்வாறான சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டும் வருகின்றனர்.
மனிதன் உலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அன்று முதல் இன்றுவரை சான்றோர் தங்களின் சொல், செயல், எழுத்துத் திறமைகளைக் கொண்டு முயன்று வருகின்றனர்.
ஆனால், இதனை முறையாகப் பயன்படுத்தத் தவறும் மனிதன் தனக்குரிய உயர் நிலையிலிருந்து கீழே தள்ளப்படுகின்றான்.
சில சமயங்களில் தனக்குரிய உயர் பண்புகளிலிருந்தும் முற்றாக விடுபட்டு, பகுத்தறிவற்ற பிராணியாக மாறி விடுகின்றான்.
தற்காலத்தில் இடம்பெற்று வரும் பாலியல் குற்றங்கள் அருவருக்கத்தக்கவையாக உள்ளன. உள்ளம் நம்ப மறுக்கின்றது. இவர்களும் மனிதர்களா? என எண்ணத் தோன்றுகின்றது.
பாலியல் குற்றச் செயல்களுக்கு உடலியல் தேவை, சந்தர்ப்ப சூழ்நிலை, போதைவஸ்துப் பாவனை, பெற்றோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லுதல், பிள்ளைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாக இருத்தல், போதிய பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பாலியல் குற்றச் செயல்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என்பதே தற்காலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணமாகக் குறிப்பிடலாம்.
பிள்ளைகளை தவறான, பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் என்பன துஷ்பிரயோகமாகும்.
18 வயதுக்குக் குறைந்த ஆண், பெண் இருபாலாரினதும் அறியாமையைப் பயன்படுத்தி, உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தச் செய்வது, அல்லது தவறாக வழிநடாத்துவது என்பன சிறுவர் துஷ்பிரயோகமாகும்.இளவயதினர்-, பெரியவர்கள், ஆண்கள், – பெண்கள், ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் என்ற வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினரும் பாலியல் ரீதியான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் இம்சைகளில் ஈடுபடுபவர்கள் பாடசாலை மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை.நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்ந்துள்ள பாலியல் இம்சைகள் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளன.
அது மாத்திரமன்றி, பிள்ளைகளின் பாதுகாப்புக்காக பொறுப்பாக்கப்பட்டவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பாலியல் வதைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்த வண்ணமுள்ளன.
அதிபர், ஆசிரியர்களுடன் நெருக்கமாகப் பழகும் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்.சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் உள்ள உரிமைகளை அது வரையறுத்துள்ளது. ‘ஒவ்வொரு பிள்ளையும் விபசாரம் மற்றும் ஆபாசக் காட்சிகள் ஆகியன அடங்கலான பாலியல் சுரண்டல்கள், இம்சைகள் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமையுடையவர்களாவர்’ என சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் உறுப்புரை- 34 குறிப்பிடுகின்றது.
உலகின் அநேகமான நாடுகள் இதன் அடிப்படையிேலயே பிள்ளைகள் வழிநடத்தப்படுவர் என ஏற்றுக் கொண்டுள்ளன.
பாலியல் ரீதியான இம்சைகள், குற்றங்களை சட்டம் பார்த்துக் கொள்ளும் என நாங்கள் ஒருபோதும் ஒதுங்கி விட முடியாது. சமூகத்தவர்கள் இவ்விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
பாலியல் ரீதியான இம்சைகள், வதைகளை சமூகத்திலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதுடன், மேம்பட்ட சமூகத்திற்காகவும் நாங்கள் பாடுபட வேண்டும்.
நாட்டில் அண்மைக் காலங்களில் இடம்பெற்று வரும் பாலியல் இம்சைகளில் அதிகமானவை பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்டவையாகவும், அதில் அதிகம் அதிபர்கள், ஆசிரியர்கள்; சம்பந்தப்படுவதாகவும் அமைந்துள்ளன.
இளவயது பாடசாலை மாணவியர் மீது பாலியல் ரீதியான வதைகளை மேற்கொள்வது பாரதூரமான குற்றமாகும். அதிலும் குறிப்பாக, மாணவியர் மீது ஆசிரியர்கள் புரியும் பாலியல் இம்சைகள் மேலும் மோசமான குற்றமாகும்.
பாடசாலை மாணவிகள் மீது பாலியல் குற்றமிழைக்கும் ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிப்பதற்கு தண்டனை சட்டக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகத்தில் கடமையிலுள்ள ஆசிரியர்களின் அதிகாரபூர்வமான கட்டுப்பாட்டிலிருக்கும் பதினாறு வயதிற்குக் குறைந்த மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது பாரதூரமான குற்றமாகும்.
இவ்வாறு குற்றமிழைக்கும் ஆசிரியர்களுக்கு தண்டனை சட்டக் கோவையின் விதிகளுக்கமைவாக 07 முதல் 15 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத் தண்டனை விதிப்பதற்கும் சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதுச் சிறுமிகள் அல்லது மாணவியர் மீதான பாலியல் வதைக்குற்ற வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் வழக்குகளாக உள்ளன.
பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்படும் ஆசிரியர்கள் நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவியர் மீது, பாலியல் குற்றம் புரியும் ஆசிரியர்களைக் காப்பாற்றும் முயற்சிகளும் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றன.
சாட்சிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட கட்டளைச் சட்டமானது பாலியல் குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்றும் நோக்குடன், செயற்படுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களை தண்டிக்கப்படக் கூடிய குற்றம் புரிந்தவர்களாகவே கருதுகின்றது.
குற்றச் செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது என்ற தகவல் அல்லது முறைப்பாடு கிடைத்ததும், அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்காமல் அலுவலக ரீதியில் விசாரணை நடத்துகின்ற அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் சட்டரீதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாலியல் வதை குற்றச் செயல்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளினாேலயே சமரசமாக தீர்த்து வைக்க முடியாத குற்றச் செயல்கள் என சட்டம் பரிந்துரைக்கின்றது.
இவ்வாறான நிலையில் பாடசாலை வளாகத்தில் மாணவியர் மீது, பாலியல் வதை புரியும் ஆசிரியர்களை சட்டத்தின் முன் நிறுத்தாது, பாதுகாப்பதும் குற்றமாகும்.
சிறைத்தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொண்டும் பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்காது அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பனவற்றின் நிர்வாகிகள் ஆகியோர் ஒன்றிணைந்து சமாதானம், சமரசமாக தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டால் குற்றச் செயல்களுக்கு உதவி, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாடசாலை மாணவியர் மு.ப. 07.00 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை அதிபர், ஆசிரியர்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலையின் பாதுகாவலில் இருந்து வருகின்றனர்.
இக்காலப்பகுதியில் பாலியல் வதைக் குற்றம் ஆசிரியரினால் புரியப்பட்டால், பாதிக்கப்பட்ட மாணவி எந்த அதிபர் அல்லது ஆசிரியரிடம் முறையீடு செய்கின்றாரோ அவர், அம்மாணவியின் பெற்றோருக்கு உடனடியாக அறிவித்து, பெற்றோருடன் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தல் வேண்டும்.
இது சட்டத்தின் முதல் தேவைப்பாடாகும்.மாணவர் பாலியல் வதைக் குற்றம் தொடர்பில், கல்வித் திணைக்கள உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
இச்செயற்பாட்டின் பின்னரே, குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி அறிவிக்க வேண்டும். இவை உயரதிகாரிகளின் பொறுப்பும், கடமையுமாகும்.
சட்டரீதியான நீதிமன்ற விசாரணைகள், பொலிஸ் விசாரணைகளைத் தவிர்த்து, ஓழுக்காற்று விசாரணை நடாத்துகின்ற அனைத்து அதிகாரிகள் மீதும், பாலியல்வதை குற்றச் சம்பவத்தை அல்லது குற்றச் செயலை பொலிசாருக்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாடசாலை மாணவியர் மீதான பாலியல் வதை குற்றச் செயல்கள் இரண்டு வகையான விசாரணைகளைக் கொண்டுள்ளன. பொலிஸ், நீதிமன்ற விசாரணையின் மூலம் குற்றம் புரிந்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்படுவது ஒருவிதம்.
மற்றையது, திணைக்களத்தின் நிர்வாக ஒழுக்காற்று விசாரணையின் மூலம் பணியிலிருந்து இடைநிறுத்துவது. ஒழுக்காற்று விசாரணை என்ற பெயரில், குற்றச் செயலில் ஈடுபட்ட ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடமாற்றி, பாலியல் வதை குற்றச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் கல்வித் துறை அதிகாரிகள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் தெளிவு பெற வேண்டும்.
பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி மறைக்கப்படும் பாலியல் வதைக் குற்றங்கள், குற்றமிழைத்தவர்கள் மீண்டும், மீண்டும் அக்குற்றத்தை இழைப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேச பாடசாலையொன்றில் மாணவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சு துணிகரமான இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. குற்றமிழைப்பவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான தண்டனைகள், நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.
தற்காலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் பாலியல் வதைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில ஆசிரியர்கள் ஒன்று இரண்டல்ல பல பாலியல் குற்றச் செயல்களை மேற்கொண்டவர்களாக உள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பென்பது பெற்றோருக்கு பெரும் கஷ்டம், சுமையாக மாறியுள்ளது. வெளியில் மாத்திரமன்றி வீட்டிலும் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளின் பாதுகாப்பு விடயத்தில் அசிரத்தையாக யாரும் இருந்து விட முடியாது என்ற செய்தியை கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு மிகத் தெளிவாக கற்றுத் தந்துள்ளன.
ஆகையால், பெற்றோர் அவதானனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.பிள்ளைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரத்த உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், ரியூஷன் நிலைய நிர்வாகிகள், பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டிகள் ஆகியோர் தொடர்பிலும் பிள்ளைகளைத் தெளிபடுத்த வேண்டும்.
பெற்றோரை இழந்த அநாதைப் பிள்ளைகளுக்கு அன்பு, ஆதரவு காட்டுவதாகக் கூறிக் கொண்டு, உறவினர்களும், நண்பர்களும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவங்களும் நமது நாட்டில் அதிகம் பதிவாகியுள்ளன.
ஆங்கில அகராதிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஒக்ஸ்போட் அகராதியில் ‘ஐயோ’, ‘ஐயா’ என இரண்டு புதிய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன.
உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போட் அகராதி நிறுவனம் சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காக தன்னிடம் 6 லட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில், தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளை ஒக்ஸ்போட் அகராதி கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகம் புழங்கும் இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது.
அப்பலோ மருத்துவமனை தனது அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் “டாக்டர் ஜி.கிலானி”, மயக்க மருத்துவ நிபுணர் “டாக்டர் அஞ்சன் த்ரிக்கா”, இதய சிகிச்சை நிபுணர் “டாக்டர் நிதிஷ் நாயக்” ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு அப்பலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு முதல்வரின் சிகிச்சை தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத எய்ம்ஸ் டாக்டர்,
“முதல்வருக்கு இரத்தத்தில் கிருமிகள் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைகளே தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது” என கூறியள்ளார்.
தொடர்ந்து “22ஆம் திகதி முதல் 16 நாட்களாக ஐசியு-வில் வைத்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பொதுவாக குருதியில் கிருமி காணப்பட்டால் முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைப்பாடு என்று ஆரம்பித்து பின்னர் நோயின் தாக்கம் அதிகமாகும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வருக்கு அளித்து வரும் குறித்த சிகிச்சை சரியானதா? இல்லையா? என்பதை அறியவே தாம் வந்துள்ளதாகவும், விரைவில் முதல்வர் குணமடைய வேண்டும் என்பதே தனது எண்ணமும்” என பெயர் வெளியிட விரும்பாத எய்ம்ஸ் வைத்தியர் கூறியுள்ளார்