கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிரக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரான ஜிபோ பகுதியில் கடந்த வியாழக்கிழமை பாரம் ஏற்றிவந்த ஒரு டிரக்டர் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் – தீவகத்தில் மூடப்பட்டுள்ள பல கிணறுகளை நீதிமன்ற அனுமதியுடன் தோண்டினால் காணாமல் போன பலர் தொடர்பான தேடல்களுக்கு, விடை கிடைக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலகத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலணியினால், ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் நிதி உதவியோடு பொது மக்களுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தாங்கி கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே இராஜங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடந்த கால ஆட்சிகளின் போது தீவகப் பகுதிகள் ஆயுதக்குழுவொன்றின் ஆக்கிரமிப்பிலேயே இருந்தன. அதனால் தீவக மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த உதவிகளையும் செய்ய முடியாதிருந்தது.
அக்காலப்பகுதிகளில் குறித்த அந்த ஆயுதக் குழுவை மீறி அங்கு செல்பவர்கள் திரும்பி உயிருடன் வரமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. இவ்வாறான ஒரு அடக்கு முறைக்குள் இருந்து நல்லாட்சி அரசாங்கத்தினால் இன்று தீவகம் விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் விஜயகலா தெரிவித்தார்.
தீவகத்தில் இன்று பல கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான கிணறுகளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தோண்டுவோமானால் பல உண்மைகள் வெளியில்வரும். குறிப்பாக காணாமல் போனவர்கள் பலருக்கு என்ன நடந்தது? என்ற உண்மை வெளிப்படும் எனவும் அவர் கூறினார்.
வவுனியா பூவரங்குளத்தில் நேற்றைய தினம் (12.08.2016) கிணற்றில் வீழ்ந்து 6 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூவரசங்குளத்தில் நேற்றையதினம் (12.08.2016) பாடசாலை முடிந்தவுடன் வீடு திரும்பிய தவச்செல்வம் தனுசன் என்ற 6 வயதுச் சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து பலியாகியுள்ளார்.
குறித்த சிறுவன் அவரது தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தாயாரிடம் தேனீர் கேட்டுள்ளார். தாயார் தேனீர் தயார் செய்ய சென்ற சமயத்திலியே குறித்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்துள்ளார்.
சடலம் பிரதே பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் வவுனியா பூவரசங்குளத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் பலியான குமாரசிங்கம் ரமணகுமார் என்பவரின் சடலத்தினை உறவினர்கள் ஏற்ற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
பொய்யான காரணங்களை பொலிஸார் தெரிவித்து குற்றவாளியினை நிரபராதி ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும். உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தினை பெற முடியாது எனத் தெரிவித்து உறவினர்களும் கிராம மக்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (12.08.2016) இரவு 9.20 மணியளவில் கைவிடப்பட்டது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா, ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் எம்.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன், ஆர்.இந்திரராசா, முதலமைச்சரின் செயலாளர் திருமதி வி.கேதீஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று தா.மகேஸ்வரனை பார்வையிட்டதுடன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தொலைபேசி மூலமாக ஓமந்தையில் மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு தன்னாலான முயற்சியை எடுப்பதாக கூறியதை அடுத்து நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
வவுனியா மன்னார் வீதியில் நேற்று (12.08.2016) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற 39 வயது குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
நேற்றைய தினம் வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற குடும்பஸ்தரை பூவரசங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எனினும் போதிய வசதிகள் பூவரசங்குளம் வைத்தியசாலையில் இன்மையினால் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் தொழிநுட்பத் துறையில் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழரான ஷிவ் நாடார் சர்வதேச அளவில் 17வது இடத்தை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 7,800 கோடி டொலர்கள் சொத்துக்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 6,620 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் 2வது இடத்தை பிடிக்கிறார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 1800 கோடி டொலர்கள் உயர்ந்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் இந்த பட்டியலில் 3வது இடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 5,400 கோடி டொலர்கள் ஒரக்கிள் நிறுவனத் தலைவர் லாரி எல்லிசன் 5,100 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு லாரி எல்லிசன் 2வது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை IT துறை ஜாம்பவான்கள் இருவர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விப்ரோ நிறுவனர்களில் ஒருவரான அசீம் பிரேம்ஜி 1,600 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் 13வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அளவில் அசீம் பிரேம்ஜிக்கு 3வது இடம்.
தமிழகத்தை சேர்ந்தவரும் ஹெச்.சி.எல் குழுமத் தலைவருமான ஷிவ் நாடார் 1,160 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் பட்டியலில் 17வது இடத்தில் வருகிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் ஷிவ் நாடாருக்கு 7வது இடம்.
இந்த பட்டியலில் முதல் 10 இடத்தை அமெரிக்கர்கள் பிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, பட்டியலில் இடம் பெற்றுள்ள, 100 பேரில் 52 பேர் அமெரிக்கர்கள்தான். இதில் 31 பேர் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். 19 சீனர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 132 .7 பில்லியன் அமெரிக்க டொலர்கள். பட்டியலில் 12 பேர் புதுமுகங்கள்.
பட்டியலில் இடம் பெற்றவர்களில் 5 பேர் பெண் சி.இ.ஓக்கள். முதலிடத்தில் ஹொங்கொங்கைச் சேர்ந்த லென்ஸ் டெக்னாலஜி குழுமத்தின் தலைவர் சூவோ குயின்ஃபே உள்ளார். 100 கோடீஸ்வரர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 89,200 கோடி அமெரிக்க டொலர்கள் ஆகும்.
100 பேர் பட்டியலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலதிபரான சிம்பொனி டெக்னாலஜித் தலைவர் ரொமேஷ் வாத்வானி அவரது மனைவி நீரஜாவும் இடம் பிடித்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது.
இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது 1 தங்கம் பின்னடைவில் இருந்த நிலையில், 6 ஆவது நாள் நிறைவில் 5 தங்கங்கள் பின்னடைவில் இந்த இடத்தை பிடித்துள்ளது.
பதக்கப்பட்டியலை பார்க்கும்போது, அமெரிக்கா 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் அடங்கலாக 30 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதேவேளை 7 தங்கங்களுடன் ஜப்பான் 3 ஆவது இடத்திலும் 5 தங்கங்களுடன் அவுஸ்திரேலியா 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
இங்கிலாந்தில் வசிக்கும் டார்க்னெஸ் விலாட் டெபேஸ் (25), கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்தக்காட்டேரியாக வாழ்ந்து வருவதாகச் கூறியுள்ளார்.
நான் சூரிய வெளிச்சத்துக்கோ, பூண்டின் வாசனைக்கோ பயந்து ஓடும் ரத்தக்காட்டேரி இல்லை. சிறுவனாக இருந்தபோது நாயுடன் வெளியே சென்றேன். அங்கே இறந்த ஆன்மாக்கள் மனிதர்கள் உடலில் வசிக்கக்கூடிய ஸோம்பி பெண்களைப் பார்த்தேன். பயத்தில் ஓடி வந்துவிட்டேன்.
ஆனால் ஆர்வம் அதிகமானது. ரத்தக்காட்டேரி படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக நானே ரத்தக்காட்டேரியாக மாறியதை உணர்ந்தேன். என் பெயருடன் டார்க்னெஸ் என்பதை சேர்த்துக்கொண்டேன்.
தினமும் மாடு, பன்றியின் ரத்தத்தைக் குடித்து வருகிறேன். மனிதர்களின் ரத்தம் கிடைத்தால் அதையும் விடுவதில்லை. இறந்துபோன ஆன்மா ஒன்று என் உடலில் தங்கியிருக்கிறது.
அதற்காகவே நான் ரத்தக்காட்டேரியாக மாறியிருக்கிறேன். அதனால்தான் ரத்தத்தைக் குடித்து, சவப்பெட்டியில் உறங்குகிறேன். பார்ப்பவர்களுக்கு நான் சாதாரண மனிதன் இல்லை, ரத்தக்காட்டேரி என்று புரிய வேண்டும்.
அதற்காக கண்களுக்கு மை பூசிக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகள் வரை இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவில்லை. இப்போது பலருக்கும் தெரிவதால் என்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.
நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. செய்யப் போவதும் இல்லை. என்னைக் கண்டு பயப்படாமல், கிண்டல் செய்யாமல் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை” என்கிறார் டார்க்னெஸ்.
வேலைவாய்ப்புக்களுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதால் குடும்பங்கள் பல சீரழிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சபையில் தெரிவித்தார்.
பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் கணவன்மார் தகாத உறவுகளில் ஈடுபடுவதால் குடும்பங்கள் சீரழிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்கள் உடல், உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி நாடு திரும்புகின்றனர்.
இந்த நிலைமை மாற்றப்படவேண்டும். இதற்குப் பதிலாக பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
யுத்தம், சுனாமி போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னனுபவமின்றி வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாக செல்கின்றனர். இதனால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட 1,043 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களூடாக சட்டபூர்வமாகவும், சட்ட பூர்வமற்ற வகையிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இவ்வாறு செல்வர்களில் 0.14 வீதமானோர் தொழில்வாய்ப்பை ஏற்றவர்களாகும்.
இவ்வாறான நிலையில் பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு உள்நாட்டில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் ஷுவாங்தியன் கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாம்பு வேட்டையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது.
இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர்.
கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்தாக பாம்புகளை இப்பகுதியில் திறந்து விடுவதற்கான காரணம் என்னவென்று இதுவரை இப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை,
இருப்பினும் கிராமத்தின் பல பகுதிகளில் மூலிகை செடிகளை வளர்த்து வந்தாலும், அவை இல்லாத பகுதிகளில் பாம்புகள் மொத்தமும் பரவியுள்ளதாகவும், அவைகளை அப்புறப்படுத்துவதே பெரும் தொல்லையாக இருக்கிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்புகளின் தொல்லை அதிகமிருக்கும் பகுதியில் வசித்து வரும் 82 வயது மூதாட்டி ஒருவர் கூறுகையில், பாம்புகளை அப்புறப்படுத்தும் பணியில் இறங்க தாம் தயார் எனவும், நிம்மதியாக தூங்குவதற்கு கூட முடியாமல் இந்த தள்ளாடும் வயதில் மிகவும் துன்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் பாம்புகளை வெளியேற்றுவது இது முதன் முறையல்ல, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் திடீரென்று இதுபோலவே பாம்புகள் புகுந்தன. ஆனால் உடனடியாக அப்பகுதியில் அமைந்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கவும்,
அவர்கள் வந்து சுமார் 10 நாட்கள் பாடுபட்டு 150-கும் மேற்பட்ட பாம்புகளை இந்த பகுதியில் இருந்து மீட்டனர்.
இதனையடுத்து, இதுபோன்று வன விலங்குகளை பொதுவெளியில் திறந்து விடுபவர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது. மட்டுமின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நேரிட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவின் மன்பிஜ் நகரில் வலுவான நிலையில் இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கடந்த 10 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் விரட்டியடித்தனர்.
பெரும்பாலான ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவு ஐஎஸ் தீவிரவாதிகளே அங்கு உள்ளனர்.
இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு சிரியாவில் உள்ள 2000 பொது மக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்கா கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும் அப்பொதுமக்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள வடக்குசிரியாவின் மன்பிஜ் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த பெண் உமாதேவி பிரபல நடிகை ராதா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தன்னிடம் இருந்து கணவரை பிரிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உமா தேவி அளித்துள்ள புகாரில், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்துள்ள ராதா என்பவர் என்னிடமிருந்து எனது கணவரை பிரிக்க பார்க்கிறார்.
இதுதொடர்பாக ஏற்கனவே நான் விருகம்பாக்கம் மற்றும் மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் மனு அளித்திருந்தேன், அவர்களும் எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் தொடர்ந்து ராதா என் கணவருக்கு போன் செய்கிறாள், எங்கள் குடும்பத்தை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, என்னையும், என் மகளையும் மிரட்டுகிறார்.
எனவே ராதாவிடமிருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றிரவு முதல் தன்னுடைய கணவரை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரும்படியும் தெரிவித்துள்ளார்.
தந்தை தனது தாயை கண் எதிரே தீ வைத்து எரித்துக் கொன்றதை பார்த்த மகள்கள் சமூக வலைதளத்தில் தங்களது அவல நிலையை கூறி நீதி கேட்டு வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் தேவிபுரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் பன்சால் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த சகோதரிகள் இருவரும் தங்கள் கண்ணெதிரே தாயை தீ வைத்து எரித்து கொன்று விட்டனர் என தனது தந்தை மீது புகார் அளித்து உத்திர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு கடந்த யூன் மாதம் புகார் மனு ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த புகாரில், தனது தந்தை மற்றும் சில அடியாட்கள் எங்கள் கண் முன்னே தாயை உயிருடன் தீ வைத்து எரித்து விட்டனர் எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இதுவரை அந்த புகார் மனு பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பொலிசார் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை எனவும் கூறி அந்த இரண்டு சிறுமிகளும் சமூக வலைதளத்தில் நீதிகேட்டு வருகின்றனர்.
இது குறித்து எஸ்.பி மான்சிங் சௌகான் கூறுகையில், இது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மீதமுள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமிகள் இருவருக்கும் பாதுகாப்பு மற்றும் நிதியுதவி அளிப்பது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழித்தவறிச் சென்ற தனது மகனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அஷோக் த்விவேதியை, கூலிப்படை வைத்து மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 6ம் திகதி ஜூன்புட் கடற்கரையோரப் பகுதியில் ஒரு இளைஞரின் சடலம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அதுகுறித்த விசாரணையில், 28 வயது பட்டதாரி அனிமேஷ் த்விவேதி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், தொழில்முறைக் கொலையாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலில், அம்னீஷைக் கொலை செய்ய தங்களுக்கு அவரது தந்தை அஷோக் பணம் கொடுத்ததாகவும், தனது மகன் குடிப்பது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது போன்றவை பிடிக்காததால், அவனைக் கொலை செய் முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அஷோக்கை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.