மட்டக்களப்பு கல்முனை வீதியில் மாங்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த 19 வயது இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (21.07) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி எருவில் கோடைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மகாலிங்கம் லஷ்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தையிட்டு உயிரிழந்தவர் நான்கு நண்பர்களுடன் இரு மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை (20) இரவு அங்கு சென்று ஆலய வழிபாட்டை முடித்துவிட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வீடு திரும்பும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் பின்னால் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது, லிங்காவிற்கு நஷ்டஈடு தரவில்லை என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது.
தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, ஆனால் படத்தில் மட்டும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் பேசுகிறார், என்று கூறி ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா கண்டி வீதியிலிருக்கும் சனச வங்கியின் ஊழியர்கள் இன்று(21.07.2016) பிற்பகல் உணவு வேளையில் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனச வங்கியின் உதவிப் பொதுமுகாமையாளரை பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
வங்கி ஊழியர் சங்கம் இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்டவரை பணியில் இணைத்துக் கொள்ளுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் உணவு வேளையில் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியில் நடைபெற்ற பல்துறைசார் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (20.07.2016) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் மரியநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
ஒலிம்பியாட் விஞ்ஞான, கணிதப்போட்டிகள், கவிதை, கட்டுரை, புகைப்படக்கலை, சித்திரம் போன்ற தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 24 மாணவர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், வலயக்கல்விப் பணிமனையின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அண்மைக்காலமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மாகாண, தேசிய மட்டத்தில் சாதனைகளை நிலைநாட்டுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பாடசாலையின் பழைய மாணவருமான டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இன்று (21.07.2016) வியாழக்கிழமை காலை தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தனது கடமையை பொறுப்பெற்றுகொண்டார்.
மிக நீண்டகாலமாக இருந்து வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்க்கான அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது.
வவுனியாவில் புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி ஒய்வு பெற்று பின்னர் வவுனியா வடக்கு வலயத்தின் ஓமந்தைகோட்ட கல்வியதிகாரியாக பணியாற்றிஇருந்தார் .
தற்போது அதிபர் சேவை தரம் ஒன்றில் உள்ள (SLPS-I) தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் வவுனியா நகர கோட்டகல்வி அதிகாரி எம்.பி.நடராஜ் முன்னிலையில் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலய பணிமனைகளின் உதவிகல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை சமூகத்தினர் புடைசூழ தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இனி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி மற்றும் இணைபாட விதான செயல்பாடுகளில் பெருமளவிலான மாற்றங்களை எதிர்பார்க்கமுடியும் என கடமையேற்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழக மோதல் குறித்து ஆராய பல்கலைக்கழக நிர்வாகக் குழுவொன்றை நியமித்து சம்பவம் தொடர்பில் நாட்டின் சட்டம் நீதி முறைமைகளுக்கு அமைய பொலிஸ் மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளப்படும். இந்த செயற்பாட்டின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நகர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. இது சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண ஆளுநரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் தமிழ் சிங்கள் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியதாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இப்போது இரண்டு தரப்பினர் மத்தியிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அப்போது எந்த முரண்பாடுகளும் ஏற்படவில்லை. மத நிகழ்வுகளுக்கு சகலரும் இடமளிக்க வேண்டும். தேசிய கீதம் தமிழில் இயற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு நாம் மதிப்பளிப்பதை போலவே சிங்கள நிகழ்வுகளுக்கு தமிழ் மக்களும் மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு விட்டுக் கொடுப்பும் ஒற்றுமையும் இருந்தால் தான் நல்லிணக்கம் ஏற்படும். மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன.
அதேபோல் இந்த சம்பவத்தை திரிபுபடுத்தியும் சட்ட நடவடிக்கைகளில் தாமதல் ஏற்படுவதாக கூறியும் பல்வேறு விமர்சனங்களை அரசியல் ரீதியில் முன்வைக்கின்றனர். வடக்கிலும் தெற்கிலும் பாரிய இனவாதமாக இந்த சம்பவத்தை கொண்டு செல்கின்றனர்.
வடக்கில் உள்ள தமிழ் இனவாதிகளுக்கும் தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளுக்கும் இது தீனியாக அமைந்துவிட்டது. வடக்கில் இப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பில் சிங்கள மாணவர்கள் தாக்குதலை நடத்தியதாக் கூறுகின்றனர். அதேபோல் தெற்கிலும் தமிழ் மாணவர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் சிங்கள மத விடயங்களை வடக்கில் புறக்கணிப்பதாக கூறுகின்றனர். எனினும் இந்த விடயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை அரசியல் மயப்படுத்தி குழப்பங்களை பெரிதுபடுத்தாது சட்ட நகர்வுகளுக்கு இடமளிக்க வேண்டும். அதேபோல் குழப்பங்களை மேலும் விமர்சித்து பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய இரண்டு கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது பல்கலைக்கழக நிர்வாகக் குழுவொன்றை நியமித்து சம்பவம் தொடர்பில் ஆராயவும் பல்கலைக்கழக செயற்பாடுகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் நாட்டின் சட்டம் நீதி முறைமைகளுக்கு அமைய செயற்படும் வகையில் சிவில் உரிமைகளை பாதுகாக்க பொலிஸ் மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மோதலில் காயமடைந்த மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
ஆகவே சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் தமிழர், சிங்களவர் என்ற பாகுபாடுகள் இல்லாது மத இன ரீதியிலான விமர்சனங்களுக்கு அப்பால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்த நபர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதேபோல் பல்கலைக்கழக மோதலில் வெளியாட்களின் பிரவேசம் இருந்ததாகவும், இனந்தெரியாத நபர்களை வைத்து தாக்குதலை நடத்தியதாகவும் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதற்கமைய பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும் இந்த காரணத்தை வைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தக்கூடாது. மாணவர்களின் பரீட்சை நெருங்கும் நிலையில் கல்வி நடவடிக்கைகளை குழப்பக்கூடாது. படிப்படியாக ஒவ்வொரு பீடங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் இந்த விடயங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார்.
உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். அதேபோல் நல்லிணக்கம் என்பது வடக்குடன் முடிவடையும் ஒன்றா அல்லது தெற்கில் மட்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இனவாதிகள் வடக்கில் போலவே தெற்கிலும் உள்ளனர். பௌத்தத்திலும் மாத்திரம் இல்லை இந்து, முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அடிப்படை வாதிகள் உள்ளனர். ஆகவே இந்த சம்பவங்கள் அவ்வாறான ஒரு சிலரினால் நடத்தப்பட்டதொன்றேயாகும்.
எனினும் பெரும்பான்மை சிங்கள, தமிழ் மக்கள் நல்லிணக்கத்தையே விரும்புகின்றனர். அதை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எனினும் நல்லிணக்கம் என்பது இலகுவில் ஏற்படும் ஒன்றல்ல. பல காலமாக துன்பப்பட்டு விடுதலையான மக்கள் மத்தியில் உடனடியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. மீள் நிர்மாணம் என்பது இலகுவானது. ஆனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினமான பயணமாகும்.
கேள்வி:- இந்த சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபட்டுள்ளதா? திட்டமிட்ட ஒன்றாக கூறப்படுகின்றதே?
பதில்:- இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாகவே இராணுவத்தையும் உள்நுழைக்கின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவறறிலும் உண்மை இல்லை. ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் இதில் இராணுவம் தொடர்புபட வாய்ப்பு இல்லை. அதேபோல் இந்த சம்பவம் திட்டமிட்ட ஒன்றாகவும் என்னால் கருத முடியவில்லை. உணர்வுகளுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பம் மட்டுமே இவையாகும். தமிழர் கலாசாரம் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிங்கள கலாசார நிகழ்வுகள் தடுக்கப்பட்டதன் மூலமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டது.
கேள்வி:- ஏன் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப் படவில்லை?
பதில்:- உணர்ச்சிவசப்பட்டு சட்டத்தை கையில் எடுக்க முடியாது. விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு ஏற்றால் போலவே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது உண்மையேயாகும். எனினும் விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்காததைக் கண்டித்து, நாளை மறுநாள் வெளிவர இருக்கும் கபாலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வேளச்சேரியில் நேற்று ரஜினிகாந்த்தின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று கூறி, நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரி காந்திநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு குரல் கொடுக்கவில்லை எனவும், அரசியலுக்கு வருவது போன்று பேசி இளைஞர்களை குழப்பி வருவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ரஜினிகாந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கமிட்டனர். அப்போது ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த அவர்கள், கபாலி திரைப்படத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினர்.
நாளை கபாலி வெளியாகவுள்ள சூழ்நிலையில், இந்த போராட்டம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் உள்ளிட்ட வீரர்கள் பலரை பொலிஸ் நிதிக்குற்றபிரிவிற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப் போவதில்லை என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டு சட்டமூலம் தொடர்பாக நேற்றைய தினம் பாராளுமன்றில் உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போட்டிகளுக்கு முன்பதாக வீரர்களை விசாரணைக்கு உட்படுத்துவதானது அவர்களை மனரீதியான தாக்கங்களுக்கு உட்படுத்தும் செயலெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயல்களால் சர்வதேச ஊடகங்கள் முன்னால் எமது வீரர்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நிதி மோசடி விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ்நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய வீரர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய நாட்டை சேர்ந்த 19 வயது பெண் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Lahadin Makole என்ற கிராமத்தில் வசித்து வரும் Rahma Haruna என்பவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போது, அவரது கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சியடைவது பாதிக்கப்பட்டது.
தற்போது, 19 வயதாகிவிட்ட Haruna ஆல் தனியாக எங்கும் செல்ல இயலாது, இதனால் தனது மகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க கூடாது என எண்ணிய் தாய், பிளாஸ்டிக் கிண்ணத்தில் தனது மகளை வைத்து, அவள் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.
இதுகுறித்து Haruna- வின் தாயார் கூறியதாவது, Haruna க்கு 6 வயது இருக்கையில் அவளுக்கு திடீரென காய்ச்சல் வந்தது, அதன் பின்னர் அவளது உடல் உறுப்பு பாகங்கள் வளர்ச்சியடைவில்லை, போதிய பண வசதி இல்லாத காரணத்தால் மேற்கொண்டு சிகிச்சை செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
Haruna- வின் இளைய சகோதரன் Fahad கூறியதாவது, நான் எப்போதும் எனது சகோதரிக்கு உதவிசெய்வேன், அவரை பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைத்து உறவினர்களின் வீட்டிற்கும், வெளியிலும் அழைத்து செல்வது என பல்வேறு வழிகளில் அவருக்கு உதவி செய்வேன் என கூறியுள்ளான்.
உறவினர்களை பார்த்து பேசி மகிழ்வதில் சந்தோஷம் கொள்ளும் நான், மளிகை கடை வைத்து எனது வாழ்க்கையை தொடர வேண்டும் என்பது எனது ஆசை என Haruna கூறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் அவுஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று மைக் ஹசி கூறியுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 26ம் திகதி பல்லேகலவில் நடைபெறவுள்ளது.
இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கூறுகையில், கடைசியாக அவுஸ்திரேலியா இலங்கை வந்த போது நாதன் லயன் அறிமுகமானார்.
இவரும் ஸ்டீவ் ஓ’கேபியும் சுழலில் அசத்த காத்திருக்கின்றனர். அதே போல் மிட்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹாசில்வுட் ஆகியோர் வேகத்தில் மிரட்ட உள்ளனர். துணைக் கண்டத்தில் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடி பெரிய ஓட்டங்களை குவிப்பது என்பது சவாலான விடயமாகும்..
இந்த தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹேரத் அவுஸ்திரேலிய வீர்ர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார். அவர் ஒரு துப்பாக்கி போல செயல்படுவார்.
தனி நபராக அணி மீதான அழுத்தத்தை நாள் முழுவதும் தாங்கிக் கொள்ளக் கூடியவர். ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் அவருக்கு எதிராக வித்தியாசமாக ஆட வேண்டும். சரியான திட்டம் இல்லை என்றால் அவர் உங்களை எளிதில் வீழ்த்தி விடுவார் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கள்ளக்காதலன் பத்து நாட்களாக பார்க்க வராததால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை திருநீலகண்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மாதவரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தீபா சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில், தீபாவுக்கும், எருக்கஞ்சேரி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணையன் என்பவருக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.
மேலும் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி வந்ததும், இருவரும் மாதவரம் பகுதியில் வீடு எடுத்து கடந்த ஒரு மாத காலமாக கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே கடந்த பத்து நாட்களாக கண்ணையன் வீட்டுக்கு வராத காரணத்தினால் மனமுடைந்த தீபா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கண்ணையன், இவருக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக உறவினர்களான ராணி மற்றும் சந்திரா ஆகிய மூவரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியை மிஸ் பண்ணுகின்றேன், ஆனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது சரியான முடிவு என்று டோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவர் என்றால் அது டோனி தான்.
ஆனால் வெளிநாடுகளில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறமுடியாததால் ஏற்பட்ட நெருக்கடியால், கடந்த 2014ம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார்.
இந்நிலையில் குர்கானில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, டெஸ்ட் போட்டியை மிஸ் பண்றேன், ஆனால் ஓய்வு பெற்றது சரியான முடிவு. இதன் மூலம் குடும்பத்துடன் நேரம் செலவிட முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில் கிரிக்கெட் உடனான தொடர்பை யாராலும் விட முடியாது. கிரிக்கெட்டை விட்டு விலகிய பிறகும், எதாவது ஒரு வகையில் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறோம்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவர்கள் என எதிர்பார்ப்பதாக டோனி தெரிவித்துள்ளார்.
பியர் குடித்துக் கொண்டே உயிருடன் உள்ள சுண்டெலியை ருசித்து சாப்பிடும் இளைஞரின் வீடியோ வெளியாகி சமூக விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விலங்குகளை துன்புறுத்தும் வகையிலான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சமூக விலங்கு நல ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வகையில், ஒரு இளைஞர் பியர் அருந்திக் கொண்டே அதற்கு சைடிஷ் ஆக உயிருடன் உள்ள சுண்டெலியை குச்சியால் குத்தி சாப்பிடுவதும், பின்பு அருகில் வைக்கப்பட்டிருக்கும் சோயா மொச்சை குழம்பை ருசித்து குடிப்பதும் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இது சீனாவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு சமூக விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாதி கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சுவாதியின் ரத்த மாதிரிகள், ராம்குமார் விட்டுச் சென்ற ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் ரத்தக்கறை படிந்த அவரது சட்டை ஆகியவை இந்த வழக்கில் முக்கிய தடயங்களாக உள்ளன.
இவை அனைத்தையும் ரசாயன மற்றும் தடயவியல் பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர். இந்த தடயவியல் அறிக்கை சோதனையின் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், ராம்குமார் அணிந்திருந்த சட்டையில் படிந்து இருந்தது சுவாதியின் ரத்தமே என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டி.என்.ஏ சோதனையில் சுவாதியின் ரத்தம் என்பது உறுதியானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் சட்டையை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவாதியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக கூறி பறிமுதல் செய்யப்பட்டுள்ள அரிவாளில் ராம்குமார் கைரேகை பதியவில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தடயவியல் சோதனையில் போலீஸார் தாக்கல் செய்த அரிவாளில் கைரேகை இல்லை என்று முடிவு தெரிய வந்துள்ளதாக தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ராம்குமார் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த சட்டையின் மூலமாக தங்களுக்கு வலுவான ஆதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீஸார் உள்ளனராம்.
ஜூன் 24ம் திகதியன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக ராம்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த நிலையில் ராம்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
அதன்படி அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாள், அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டை உள்ளிட்டவை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் முடிவுகள் தற்போது போலீஸாருக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் அரிவாளில் கைரேகை எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் ராம்குமாரின் சட்டையில் உள்ள இரத்தம் சுவாதியுடையது என்று போலீஸார் திடமாக நம்புகின்றனர்.
விரைவில் தடயவியல் ஆய்வறிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.