இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன கூறியுள்ளார்.
இந்த பூமி அதிர்வு காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
தாய் மற்றும் பாட்டியுடன் நெல் வயலுக்குச் சென்ற மூன்று வயது சிறுவன், கல்கமுவ-மிகல்வெவா பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகல்வெவா பிரதேசத்தை சேர்ந்த சதிஸா இசுறு விஹான்ஸ என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தாய் மற்றும் பாட்டி குழந்தையை அவனது சித்தியின் பாதுகாப்பில் முச்சக்கரவண்டியில் நிறுத்தி விட்டு வயல் வேலைகள் முடிந்தவுடன் தன் குழந்தை அழைத்துச் செல்வார்கள் என குழந்தையின் சித்தி தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சித்தி கண்ணயர்ந்த நேரத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைகளை முடித்து விட்டு வந்ந குழந்தையின் பாட்டி மற்றும் தாய் குழந்தையை காணவில்லை என சத்தமிட்டுள்ளனர்.
சத்தத்தை கேட்ட விவசாயி விரைந்து வந்து குழந்தையை கிணற்றில் கண்டு கிணற்றில் காப்பாற்ற குதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மிகல்வெவா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
7 பேர் விடுதலை குறித்த நல்ல முடிவைக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது.
அற்புதம்மாள் தலைமையில் சென்னை – எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைகிறது.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ் கண்ணா, நடிகர் சத்யராஜ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
”பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முடிவு செய்துள்ளார். மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்ய கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சீமான் கூறியுள்ளார்.
”7 பேரை விடுவிக்க தமிழக அரசு முன் வந்தாலும் மத்திய அரசு தடை செய்யக்கூடாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரை சிறையில் வைத்திருப்பது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டது” என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
பேரணியில் அற்புதம்மாள் பேசியதாவது:
‘‘7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை நடவடிக்கை எடுத்தார். அது, தடைபட்டு நிற்கிறது. இந்த முறை விரைந்து 7 பேர் விடுதலைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்த இந்த பேரணி நடத்துகிறோம்.
வேலூரில் தொடங்கி சென்னை கோட்டையில் பேரணி முடிவதாகத்தான் திட்டமிட்டோம். 3 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வேலூரில் பேரணி தொடங்க முடியாது. வேறு ஏதேனும் மாற்றத்துடன் திட்டமிடுங்கள் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் பிரிவை வார்த்தைகளால் விளக்க முடியாது. தற்போது எல்லோருக்கும் 7 பேர் விடுதலையாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நிறைய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. அதில் என் மகன் பேரறிவாளன் நிரபராதி. அவனுக்கும் ராஜிவ் கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இந்த வழக்கே சலசலப்புக்கு உண்டாகி இருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் பேரறிவாளன் ஒரு முறை கூட பரோலில் வெளிவரவில்லை. இளமைக்காலம் முழுவதும் பேரறிவாளனுக்கு சிறையிலேயே போய் விட்டது. இப்போது நோயாளியாக வெளியே வரப் போகிறான்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது.
உலகம் முழுக்க பார்த்தால் 25 ஆண்டுகளில் ஒரு முறை கூட பரோலில் வெளிவராத சிறைவாசிகளே இல்லை. ஆனால், இந்த 7 பேருக்கும் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. சாதாரண சிறைவாசிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட 7 பேருக்கும் கிடைக்கவில்லை. 7 பேருக்கும் கிடைத்திருக்கும் தண்டனை மிகவும் கொடுமையானது.
இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் மட்டுமே முடியும். எங்கள் கோரிக்கையை ஜெயலலிதா தான் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளோம்” என்றார் அற்புதம்மாள்.
யாழ் மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் என்பவரே புதிதாக நியமனம் பெற்றவராவார்.
இன்றைய தினம் சனிக்கிழமை காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.
இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1984ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்னத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் ஆவார்.
இவர் பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள காத்தான்குடி நகரில் 10 வயது மாணவன் பிரத்தியேக வகுப்பு நடத்திய ஆசிரியையினால் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் காத்தான்குடி-03, மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் எனும் மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை (11.06) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (11.06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற என்பவரே யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை பொலிசாரின் ட்ரக் வாகனத்துடன் இளைஞன் ஒருவர் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிசாரின் ட்ரக் வாகனத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் இன்று வரையில் எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை. காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரிடமிருந்து எவ்வித முறைப்பாடும் பொலிசாரால் பெறப்படவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிசாரால் தேயிலை, சீனி என்பன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பொலிசார் கடமைக்கு வந்து நின்றுவிட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ள அவரது மனைவி நேற்று வைத்தியர்கள் காயமடைந்த தனது கணவரிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் காலுக்கு கம்பி வைப்பதற்கு பிறிதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு ஐம்பதாயிரம் ரூபா தேவைப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிசாரின் அதிக வேகம் காரணமாகவே தான் வீதியைக் கடக்க முற்பட்டபோது ட்ரக் வண்டி வந்து மோதியதாகவும் விபத்தில் காயமடைந்த இளைஞர் மனைவியிடம் தெரிவித்துள்ளதாகவும், பொலிசார் இவ்விபத்தில் கூடிய கவனம் எடுக்கவில்லை என்றும் மனைவி தெரிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 11-06-2016(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்றைய இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றுஇலங்கையின் முன்னணி இசைக் குழுவான அக்னி குழுவினரின் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டுவரும் வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் பகல்நேர நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்தனர். தொடர்ந்து இரவு நேர நிகழ்வுகள் 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்றும் (10.06.2016),நேற்று முன்தினமும்(09.06.2016)இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.கல்விப் பணிப்பாளர் திரு .வைரமுத்து ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில், கனகராயன்குளம் மகாவித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாம் நாள் நிகழ்வில்
வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி. அன்டன் சோமராஜா பிரதம விருந்தினராகவும் ஓய்வு பெற்ற வவுனியா வடக்கு வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு.ஆ.பொன்னையா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பங்குபற்றியிருந்தனர்.மேலும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மு. சிதம்பரநாதன் அவர்கள் நவீன கற்பித்தல் நுட்பங்கள் என்னும் தலைப்பில் ஆசிரிய மாநாட்டின் போது பேருரை ஆற்றினார் .
ஆய்வறிக்கைகள் மற்றும் அரங்க செயற்பாடுகளை வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர்கள் வழங்கியிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வின் போது
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம அதிதியாகவும் முன்னாள் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு .த .மேகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வட மாகாணசபை உறுப்பிர்களான ஜி.ரி. லிங்கநாதன், ஆர். இந்திரராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் முன்னாள் வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளருமானசி . தண்டாயுதபாணி அவர்கள் கலந்து கொண்டு இன்றைய ஆசிரியர் என்ற தலைப்பின் கீழ் பேருரையாற்றியிருந்தார்.
மேலும் ஆசிரியோதயம் என்னும் ஆசிரிய மாநாட்டு மலர் வெளியீடும் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்வியியலாளர்ககளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட்ட பிரதிகல்விப் பணிப்பாளர்கள் உதவி கல்விப்பணிப்பளர்கள் உட்பட நெடுங்கேணி ஓமந்தை கோட்ட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்த பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.
நாட்டில் முப்பது வருடகாலமாக நடந்து வந்த போரை முப்பதே நாட்களில் நிறுத்த முடியாது. இந்த அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் தான் ஆகின்றது. இன்று நடைபெறுகின்ற சம்பவங்களை படிப்படியாகத் தான் இடைநிறுத்த முடியுமென சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கவீனராக்கப்பட்டவர்களுக்குமான உதவிகளை அரசாங்கம் விசேட மருத்துவர்களைக் கொண்டு பராமரிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமையை வரவேற்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடர்ந்து மீனவர்களை இராட்சத அலைகள் அச்சுறுத்தி வருகின்றன. உயிர் பயத்தில் இரவில் தூக்கம் இன்றி அவர்கள் தவிக்கின்றனர்.
தென்மேற்கு திசையில் இருந்து aவீசும் காற்றின் வேகம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை உள்பட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
மணற்பரப்பை தாண்டி குடியிருப்புகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்து வருகிறது. கடல் சீற்றத்தால் சேதமடைந்த வீடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் வழக்கத்தை விட கூடுதலாக காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கூறியதாவது:-
காலை மற்றும் நேரங்களில் தான் கடல் ஆவேசத்துடன் காட்சி அளிக்கிறது. மதிய வேளையில் சாந்தமாக காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் இராட்சத அலைகள் சீறி பாய்ந்து குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன.
இதன் காரணமாக இரவு நேரத்தில் தூக்கம் இன்றி தவித்து வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தான் எங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீடுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 2 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை பகுதியிலும் நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அவ்வப்போது இராட்சத அலைகள் எழுந்தன. கடல் காற்றும் பலமாக வீசியது.
எப்போதுமே எதிரும், புதிருமாக இருப்பவை தான் விரைவாக ஈர்ப்புக் கொள்வார்கள். இந்த எதிரும், புதிரும் பட்டியலில் எப்போதுமே உச்சத்தில் இருப்பவர்கள் ஆண்களும், பெண்களும் தான்.
காதலில் அல்லது ஓர் பந்தத்தில் இணையும் முன்பு வரை ஒருவரை பற்றி இன்னொருவர் குற்றம் குறைக் கூறிக் கொண்டேதான் இருப்பார்கள். பெண்களிடம் இதெல்லாம் பிடிக்காது என ஆண்களும், ஆண்களிடம் இதெல்லாம் பிடிக்காது என பெண்களும் காலம், காலமாக கூறிவருகிறார்கள்.
ஆனால், இதுவரை இருவரில் யாருமே அவர்களிடம் இவையெல்லாம் எங்களுக்கு பிடிக்கும் என பெரியளவில் கூறியதில்லை. ஒருவேளை கெத்துக்கு குறைச்சல் வந்துவிடும் போல.
இதன் தொடர்ச்சியாக தான், ஆண்களில் சில வகை ஆண்களை தங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என 10 வகைகளை பட்டியலிட்டுள்ளனர்.
இதில் நீங்களும் ஒருவரா என்று பார்த்துக் கொள்ளுங்கள்..
கெஞ்சும் நபர்
சில ஆண்கள் எதற்கெடுத்தாலும் கெஞ்சுவார்கள். வெளியே போகலாம் ப்ளீஸ் என் கூட வா, இன்று நாங்கள் டின்னர் எங்கயாவது போலாம் ப்ளீஸ் என எதற்கெடுத்தாலும் ப்ளீஸ் சேர்த்துக் கொண்டு திரியும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லை.
நான் தான் சரி
எது செய்தாலும், கூறினாலும் நான் செய்தது தான் சரி, நீ செய்தது தவறு தான் என்று ஒருதலைப்பட்சமாக பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.
வெற்றியில் மிதப்பவர்
பெண்களுக்கு வெற்றியாளர்களை பிடிக்கும். ஆனால், எப்போது பார்த்தாலும் அந்த வெற்றியின் மிதப்புலேயே உலா வரும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லையாம்.
நான் ரொம்ப பிஸி
பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்கள், தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதற்கு நேர் மாறாக எப்போது பார்த்தாலும் நான் பிஸி என்று காட்டிக் கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.
ஆணாதிக்கம்
பெண்களை தரக்குறைவாகவும் பேசும், ஆண்கள் தான் வலிமையனாவர்கள். தங்களால் தான் எதுவும் செய்ய முடியும் என்று நெஞ்சை நிமிர்த்தும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.
பொறாமை
பொறாமை குணம் உள்ள ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம். சொந்தம் கொண்டாடும் நபர் தனக்கு மட்டும் தான் உன் மீது உரிமை இருக்கிறது. வேறு யாரும் உன்னுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று கூறும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. சில சமயங்களில் அதிகமான காதல் கூட உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடுகிறது.
நாடோடி
எதிர்கால திட்டங்கள் இன்றி நாடோடி போல ஊர் சுற்றுவதை விரும்பும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்.
தற்பெருமை
நான் எல்லாம் அப்படி, நாங்க வந்து நின்னா பூமி அதிரும், கடல் கொப்பளிக்கும் என தன்னை பற்றி தானே பெருமையாக பேசிக்கொள்ளும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.
மன்னித்துக்கொள்ளுங்கள்
ஏதாவது ஒன்றை முந்திக் கொண்டு செய்துவிட்டு, பிறகு அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு திரியும் முந்திரிக்கொட்டை ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை.
நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸிற்கு எதிரான போரட்டத்தில் நுளம்புகளையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்திவரும் ஸிக்கா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுளம்புகள் மூலம் ஸிக்கா, மலேரியா உள்ளிட்ட நுளம்புகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
நுளம்புகளின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஸிக்கா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் நுளம்புகளின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவை, கொட்டியாகலை மத்திய பிரிவில் வாழ்ந்து வரும் தயாபரன் எனும் இளைஞன் 10 நாட்கள் தொடர்ந்து நடனம் ஆடி உலக சாதனை படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்.
இதன் முன்னோடியாக 24 மணித்தியாலம் தொடர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை 11 மணிக்கு பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான மண்டபத்தில் நடனத்தை ஆரம்பித்த இளைஞன், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 11 மணி வரை தொடர்ந்து நடனமாடி வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.
இம் முறை தொடர்ந்து 10 நாட்கள் நடனம் ஆடுவதற்கான முன்னோடியாகவே இந்த 24 மணித்தியால தொடர் நடன நிகழ்வை இவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நடன நிகழ்வு பொகவந்தலாவை பொலிஸ் மற்றும் முக்கிய அரச பிரமுகர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
குறித்த இளைஞன் ஏற்கனவே இலங்கையில் ஐந்து நாள் தொடர்ந்து நடனமாடி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காலங்களுக்குரிய கட்டடங்கள் கொழும்பு கோட்டையில் அமையப்பெற்றிருந்தாலும் ஜனாதிபதி மாளிகை முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த மாளிகை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாகும்.
போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலங்களில் தேவாலயங்களாக இந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
18 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட கொழும்பு வரைபடத்திலும் இந்த கட்டடத் தொகுதியைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்த ஆளுனர் ஜெராட் வென் அன்கல்பீக் புதிய கட்டடமொன்றை நிர்மாணித்ததுடன், அந்தக் கட்டடம் ஆளுனர் மாளிகையாகப் பெயரிடப்பட்டது.
பிரித்தானிய ஆட்சியில் இந்த மாளிகை பிரித்தானிய ஆளுனரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாக அமைந்ததால், 1972 ஆம் ஆண்டு வரை கோட்டை ஜனாதிபதி மாளிகை, குயின்ஸ் ஹவுஸ் அல்லது ராணியாரின் இல்லம் என அழைக்கப்பட்டது.
ஆரம்பம் முதல் 32 ஆளுனர்களுக்கும் 7 ஜனாதிபதிகளுக்கும் வாசஸ்தலமாக அமைந்த இந்த மாளிகையை அவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் புனரமைப்பு செய்துள்ளனர்.
இந்த மாளிகையை முதற்தடவையாகப் பயன்படுத்திய இலங்கை ஆட்சியாளராக ஆளுனர் வில்லியம் கொபல்லாவ வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
அவர் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து ராணியின் மாளிகை ஜனாதிபதி மாளிகையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மாளிகை வளாகத்தில் இருக்கும் ஆல மரமும் நீண்ட வரலாற்றுக்கு உரித்துடையதாகும்.
விக்டோரியா மகாராணியார் பதவியேற்று 25 வருடங்கள் பூர்த்தியானபோது இலங்கையின் ஆளுனராக இருந்த சேர். ஜோசப் வெஸ்ட் ரிச்வேயின் சீமாட்டி இந்த மரத்தை நாட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்தனர்.
இங்குள்ள படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது வழமையாக ஜனாதிபதி வலது புறமாக பயணிக்கின்றார்.
வெளிநாட்டில் இருந்து வருகைதரும் அரச தலைவர்களும் வலது புறமாக இங்குள்ள படிக்கட்டுக்களைப் பயன்படுத்துவதுடன் ஏனைய அனைவரும் இடப்புறத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஜனாதிபதி மாளிகையிலுள்ள பௌத்த வழிபாட்டுத் தலத்தில் புராதன ஓவியங்கள் பலவற்றைக் காணக்கூடியதாகவுள்ளது.
பிரித்தானிய ஆட்சியின் கீழ் இந்த மாளிகை நிர்மாணிக்கப்பட்ட போது, மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்கு காணப்படுகின்ற மர வேலைப்பாடுகளும் இலங்கையின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.
மண்டபத்தில் இருக்கும் விருந்துபசார பொருட்களும் பிரித்தானிய ஆட்சிக்குரியவை.
அக்காலத்தில் ஆளுனர் உணவு மேசைக்கு வருகை தந்து விருந்தை உண்ண ஆரம்பித்ததும் இங்கு மணியோசை எழுப்பப்பட்டது.
சில காலத்திற்கு முன்னர் மக்களின் பயன்பாட்டிற்காக மாளிகைக்கு பின்புறத்தில் திறந்து வைக்கப்பட்ட கோடன் பூங்காவும் ஜனாதிபதி மாளிகையின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது.
ஜனாதிபதி மாளிகையுடன் அண்மையில் சேர்க்கப்பட்ட பகுதியாக நிலத்தடி மாளிகை விளங்குகிறது.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஜனாதிபதி மாளிகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை, இரவு 7 மணி வரை மக்கள் பார்வையிட முடியும்.