வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியாவில் மிவும் வறிய மக்களுக்கு வீட்டுக்கூரைசீற், கூரைத்தகரம், சீமந்து, சீமந்துக்கல் மற்றும் பொது அமைப்புக்களுக்கு பிளாஸ்ரிக் கதிரைகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா நகரசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட இன் நிகழ்வு வவுனியா நகரசபை செயலாளர் T.தர்மேந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் வவுனியா நகரசபையின் அலுவலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் தலைவர், செயலாளார், அங்கத்தவர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
வவுனியா மாவட்டத்திலுள்ள நீண்டகாலமாக புனரமைக்காது கைவிடப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம்(18.05) வவுனியா மாவட்ட செயலகத்தில் மத்திய நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜயமுனி சொய்சா அவர்களுடனான் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்..
வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது பாழடைந்த நிலையில் உள்ளன. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றதால் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடாமல் இருந்தமையால் பல குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் காடுகளாக காட்சியளிக்கிறன. இவற்றை புனரமைத்து மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.
அத்துடன் வவுனியா மாவட்டம் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டவர்கள் அதிகம் வாழும் மாவட்டமாகும். எனவே பாடசாலைகளில் வடிகட்டிய சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மத்திய அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்தோடு வவுனியாவில் நீரின் தரத்தை பரிசோதனை செய்யும் உபகரண வசதிகள் இல்லை. இவற்றையும் வழங்க ஆவன செய்யவேண்டுமெனக் கேட்டுகொண்டார் .
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜமுனி சொய்சா, திருத்தப்படவேண்டிய குளங்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அத்துடன் குடிநீர்வசதி தேவைப்படும் பாடசாலைகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுகொண்டார்.
அத்துடன் நீரின் தரத்தை பரிசோதனை செய்யும் நடமாடும் உபகரணத் தொகுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலை விடுதியில் தாதிய உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நான்கு இளைஞர்களை நேற்று(19.05.2016) இரவு பொலிசார் கைது செய்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் தாதிய உத்தியோகத்தர்களாக கடமைபுரியும் இருவருக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளரை பார்வையிட வந்த இளைஞர்கள் சிலர் நோயாளரை வைத்தியர் பார்வையிடும் நேரத்தில் விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர்.
அவர்களை வெளியேறுமாறு தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த இளைஞர்கள் தாதிய உத்தியோகத்தருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஏசியுள்ளார்.
அந்த நேரத்தில் நோயாளரை பார்வையிட்டுக் கொண்டிருந்த வைத்தியர் வைத்தியசாலை பொலிசாரிடம் இளைஞர்கள் விடுதிக்குள் இடையூறு ஏற்படுத்துவதாக முறையிட்டுள்ளார். இதை அறிந்த இளைஞர்கள் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
எனினும் தாதிய உத்தியோகத்தரை தாகாத வார்த்தைகள் கூறி ஏசியதையடுத்து வைத்தியரால் வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த நான்கு இளைஞர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுப்போவதாகவும் தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த நான்கு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கும் அவர்களின் கடமைகளை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியுள்ள இளைஞர்களுக்கு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் இனிமேலும் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தை காரணமாகக் கொண்டு அமைச்சர்கள் சிலர் மழை வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
பலர் உண்மையாக உதவி செய்யும் நோக்கோடு களத்தில் இறங்கியுள்ள அதேவேளை ஒருசிலர்ஊடகங்களில் தாமும் உதவி செய்கிறோம் என்பதை காட்டுவதற்காக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கடுவெல பிரதேசத்தில்நிரம்பியுள்ள வெள்ளநீரில் இறங்கி மக்களை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.
இவருடன் இணைந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரேணுக துசாந்தவும்சென்றுள்ளதாக இணையங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில்பாராளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க பெகோ இயந்திரத்தில் ஏறி பாதிக்கப்பட்டமக்களை பார்வையிட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை.
அடுத்த தேர்தல் நமக்கானது என ஆதரவாளர்களை தேற்றிக் கொண்டிருக்கிறார் சீமான். சட்டசபை தேர்தல் முடிவுகளை, தனது ஆலப்பாக்கம் வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் சீமான்.
பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என நிலவரம் போய்க் கொண்டிருக்க, கலவரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில், பல தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம் என எதிர்பார்த்தேன். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள் என நொந்து போனார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. 40.8 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இது தமிழக அரசியல் வரலாற்றில் அ.தி.மு.க. இதுவரை இத்தகைய அபரிதமான செல்வாக்கைப் பெற்றதில்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.
அதே சமயத்தில் தி.மு.க. கூட்டணி 39.8 சதவீதம் வாக்குகளை பெற்று தனது வலிமையை காட்டியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.– 31.6 சதவீதம், காங்கிரஸ்– 6.5 சதவீதம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்–0.7 சதவீதம், மனிதநேய மக்கள் கட்சி – 0.5 சதவீதம், புதிய தமிழகம் – 0.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையே ஒரே ஒரு சதவீதம் வாக்குதான் வித்தியாசம் உள்ளது. இந்த ஒரு சதவீத ஓட்டு வித்தியாசம் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட்டு, தி.மு.க.வை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளியுள்ளது.
ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட இடங்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை ஆய்வு செய்தால் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வே அதிக ஓட்டு சதவீதத்தை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 232 தொகுதிகளிலும் போட்டியிட்ட அ.தி.மு.க. 40.78 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
ஆனால் 176 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட தி.மு.க. 41.05 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டியிட்ட இடங்களில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. வுக்கு அதிக ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாவட்டங்களில் பா.ம.க. பிரித்த வாக்குகள், மற்ற மாவட்டங்களில் தே.மு.தி.க.– மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் பிரித்த வாக்குகள்தான் அ.தி.மு.க. – தி.மு.க. இடையிலான 1 சதவீத வாக்கு வித்தியாசத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இது சுமார் 100 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை திசை திருப்பி விட்டு விட்டது. 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகள் அ.தி.மு.க. சுமார் 100 தொகுதிகளில் தோல்வி அடைய காரணமாக இருந்தது.
அது போல 2011ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி வாக்குகள் தி.மு.க.வை வீழ்த்தியது. ஆனால் இந்த தடவை பல முனைப் போட்டிகளால் ஏற்பட்ட ஓட்டு சிதறல்கள் தி.மு.க.வுக்கு ஒரே ஒரு சதவீதம் எனும் நுலிழையில் வெற்றி வாய்ப்பை கை நழுவி போக செய்து விட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் 62,000 குடும்பங்களைச் சேர்ந்த 300,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்காக 611 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சுமார் 3500 வீடுகள் முழுமையாகவோ பகுதியளவோ சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதோடு 132 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இடம்பெயர்ந்த தனது வீட்டாரை காணாது உணவின்றி சேற்று மண்ணில் காத்திருந்த நாய் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தனது வீட்டாரை காணாது எங்கும் செல்லாது ஒரே இடத்தில் இருப்பதை காணமுடிந்தது.
இறுதியில் தனது வீட்டார் முகாமில் இருப்பதை நாய் கண்டுள்ளது. தற்போது வீட்டாருடன் நாய் மகிழ்ச்சியாக இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
விண்வெளியில் பயிரிடக் கூடிய காய்கறி செடிகளை உருவாக்குவது குறித்து நெதர்லாந்து பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
வேற்று கிரகங்களில் மனிதர்கள் குடியேறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று தங்குவதற்கான கனவு தொடங்கி அது நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் சென்று தங்கும் பட்சத்தில் அவர்கள் சாப்பிட காய்கறிகள் உற்பத்தி செய்ய செடிகள் உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான ஆராய்ச்சியில் நெதர்லாந்து பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் உள்ள மண் மாதிரிகளை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சேகரித்துள்ளது. மேலும் அரிசோனா பாலைவனத்தில் சந்திரனின் மண்ணும், செவ்வாய் கிரக்தின் மண் ஹவாய் எரிமலையிலும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே, அங்கிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் 100 கிலோ மண்ணை பெற்று நெதர்லாந்தில் வெஜினிங்ஜன் ஆய்வகத்தில் வைத்து தக்காளி, பட்டானி உள்ளிட்ட பல தாவர செடிகள் சந்திரன், செவ்வாய் தட்ப வெப்ப நிலையில் வளர்க்கப்படுகின்றன.
தொடக்கத்தில் அந்த மண்ணாலான தரைகள் தண்ணீரை உறிஞ்சவில்லை. ஆனால் நாளடைவில் அவை சீராகின. அவற்றில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உலகப் பிரபலம் பெற்று விளங்கும் பீஸா உணவின் பிறப்பிடமான இத்தாலிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர்கள் உலகிலேயே மிகவும் நீளமான பீஸா உணவைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
2,000 கிலோகிராம் மா, 1,600 கிலோகிராம் தக்காளி, 2,000 கிலோகிராம் வெள்ளை பாலாடைக் கட்டி, 200 லீற்றர் எண்ணெய், 30 கிலோகிராம் திருநீற்றுப் பச்சை இலை (பாஸில் இலை), 1,500 லீற்றர் நீர் என்பவற்றைப் பயன்படுத்தி மேற்படி 2 கிலோமீற்றர் நீளமான பீஸா உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
100 சமையல்கலை நிபுணர்கள் கூட்டிணைந்து 11 மணித்தியாலங்களைச் செலவிட்டு இந்த பீஸா உணவை தயாரித்துள்ளனர்.
இதற்கு முன் மிகவும் நீளமான பீஸா உணவு கடந்த வருடம் மிலான் நகரில் இடம்பெற்ற உணவு கண்காட்சியின் போது தயாரிக்கப்பட்டது. அந்த பீஸா உணவின் நீளம் 1,595.45 மீற்றராகும்.
மாத்தறை ஊறுபொக்க தலபலாகந்த, தந்தெனிகந்த பிரதேசத்தில் சடலம் ஒன்று நேற்று 12.00 மணியளவில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 13ம் திகதி இரவு மகன் தனது தந்தையின் கழுத்தை நெரித்து கத்தியால் 3 துண்டுகளாக வெட்டி இறப்பர் சீட்டினால் சுற்றி காட்டு செடிகள் நிறைந்த நீரோடை ஒன்றில் எறிந்துள்ளார்.
அதன் பின்னர் துர்நாற்றம் வீசியதையடுத்து, பிரதேசவாசி ஒருவர் சடலம் கிடப்பதை கண்டு கிராமசேவகரின் ஊடாக ஊறுபொக்க பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சடலம் நேற்று எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வூமராவிலும், நோர்வேயில் அன்டோயா ராக்கெட் தளத்திலும் சோதனை ஓட்டங்கள் நடந்தன. அந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.
சிட்னியில் இருந்து லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறந்தது. இவற்றிக்கு இடையேயுள்ள தூரம் 17 ஆயிரம் கி.மீட்டர் ஆகும். இதில் சூப்பர் சோனிக் கம்பஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி பறக்க கூடியது.
சென்னை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி, மத்திய மேற்கு வங்க கடலில் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு தென்கிழக்கில் நிலைகொண்டது.
நேற்று அது புயல் சின்னமாக மாறி, மசூலிப்பட்டினத்துக்கு 125 கி.மீ. தென் கிழக்கிலும், விசாகப்பட்டினத்துக்கு 350 கி.மீ. தென்மேற்கிலும், காக்கிநாடாவுக்கு 225 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டது. அது மேலும் நகர்ந்து ஒடிசாவை நெருங்குகிறது.
இந்த புயலுக்கு ரோனு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக ஒடிசாவில் இன்று இடியுடன்கூடிய கன மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.