இணையத்தைக் கலக்கும் இலங்கை யுவதியின் Flood Selfie!!

Flood-Selfie

யுவதியொருவரின் ‪“ ‎Floodfie‬” தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையையடுத்து பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட அதேவேளை பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் யுவதியொருவர் வெள்ளத்தில் நின்றவாறு செல்பி எடுக்கும் காட்சியை மற்றுமொருவர் புகைப்படமொடுத்து அதனை முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ளார்.

குறித்த செல்பிக்கு ‎“ Floodfie” என பெயரிடப்பட்டு தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன!!(படங்கள்)

 
கடந்த மூன்று நாட்களாக வவுனியாவில் பெய்த தொடர் மழை காரணமாக வவுனியாவில் பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன.

குறிப்பாக வவுனியா குளம், நெளுக்குளம், குருமன்காட்டுக்குளம் , வைரவப்புளியங்குளம் என பல குளங்கள் வான் பாய்கின்றன.

வவுனியாவில் தற்போது மழை ஓய்ந்துள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமை நிலைக்கு திரும்புவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு கிராமங்களின் பாதைகளில் மக்கள் பயணிக்கமுடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

P1200515 P1200516 P1200517 P1200518 P1200519 P1200520 P1200521 P1200522 P1200523 P1200524 P1200525 P1200526 P1200527

வவுனியாவில் இடம்பெறும் 14வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டு கருத்தரங்குகான அழைப்பிதழ்!!

 

கிளிநொச்சி திருவையாறு ஐயா கல்விநிலையம் , வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்  மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அனுசரணையோடு 14 வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு  மாநாட்டு கருத்தரங்கு  எதிர்வரும் 22.05.2016  ஞாயிற்றுகிழமை  காலை ஒன்பது(9.00)  மணியிலிருந்து  வவுனியா பூந்தோட்டத்தில்  அமைந்துள்ள  தேசிய கல்வியியல் கல்லூரியில் அனைத்துலக உரைநடைத் தமிழ் மாநாட்டின் இலங்கைக்கான இயக்குனர்  பேராசிரியர்  முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் தலைமையில்  இடம்பெற உள்ளது .

மேற்படி நிகழ்வில் முதன்மை விருந்தினராக  மாண்புமிகு நீதியரசர்  மாணிக்கவாசகர்  இளஞ்செழியன்  அவர்களும் சிறப்புவிருந்தினராக இந்திய துணைத்தூதர் நடராஜன் அவர்களும்  கலந்து கொள்கின்றனர்.

13138867_1006160579476006_5166479441174029304_n 13151412_1006160596142671_6754917108738859441_n

கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம் விற்பனைக்கு வருகிறது!!

1

கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானத்தை ஜெர்மனியைச் சேர்ந்த லிலியம் என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.

வீட்டு மின்சாரத்தைக் கொண்டு மின்னேற்றம் செய்துகொள்ளும் வசதியுடன் இரண்டு பேருடன் 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

விமானத்தை நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக மேலே கிளப்பவும், நினைத்த இடத்தில் செங்குத்தாக கீழே இறக்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதுகுறித்து “லிலியம்’ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டேனியல் வீகண்ட் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்,

சாமானிய மக்கள், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தக்கூடிய விமானத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். நாம் உருவாக்கும் விமானங்களுக்கு விமான நிலையங்களின் சிக்கலான செலவு பிடிக்கும் உட்கட்டமைப்பு தேவையாக இராது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலிருந்தே அந்த விமானத்தை பறக்கச் செய்யவும், தரையிறக்கச் செய்யவும் இயலும் வகையில் வடிவமைத்து வருகிறோம்.

விமானத்தின் இரைச்சலைக் குறைக்க, சாதாரண விமான என்ஜின்களுக்குப் பதிலாக மின்சார என்ஜின்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் மக்கள் அதிகம் வசிக்கும் நகரப் பகுதிகளில் கூட இரைச்சல் மாசுபாடு இல்லாமல் ஏராளமானோர் இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும். தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு, தரையிறங்கும் போதும், கிளம்பும் போதும் நீண்டு மடங்கும் சக்கரங்கள், இறக்கை போல் உயர்ந்து இறங்கும் கதவுகள், ஏராளமான இட வசதி, வீட்டு மின்சாரத்திலும் கூட மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன் (பேட்டரி) ஆகிய அம்சங்களை எங்கள் விமானம் கொண்டிருக்கும்.

இந்த விமானம் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “லிலியம்’ நிறுவனம் உருவாக்கி வரும் இந்த விமானத்தின் மாதிரி வடிவம் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது.

2 3

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை!!

Small Jeans

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது,

நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும் அலுப்பாக இருந்தது. ஒரே மாதிரி வேலையைச் செய்கிறோம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. என்னால் வேறு தொழிலையும் செய்ய முடியாத சூழல். இந்தத் தொழிலை இன்னும் சுவாரஷ்யமாக மாற்றிக்கொள்வது எப்படி என்று யோசித்தேன்.

புதுப் புது யோசனைகள் உதித்தன. அவற்றைச் செய்து பார்த்தபோது, ஏராளமான வரவேற்புக் கிடைத்தது. என் அப்பா ஒரு குழந்தைக்கு சிறிய ஜீன்ஸைத் தைத்துக் கொடுத்தார். அதைப் பார்த்துதான் மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 7.5 செ.மீ. ஜீன்ஸை உருவாக்கிப் பார்த்தேன்.

வெற்றிகரமாகத் தைத்து முடித்த பிறகு, 5 செ.மீ. ஜீன்ஸைத் தைக்க ஆரம்பித்தேன். அளவு சிறியதாகப் போகும்போது தைப்பதும் கடினமாகிக்கொண்டே வரும். 2.5 செ.மீ. ஜீன்ஸ் தைத்து முடித்தவுடன், அதைவிடச் சிறியதைத் தைக்க முடியுமா என்று என் அப்பா சவால் விட்டார். அந்த சவாலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக 0.9 செ.மீ. ஜீன்ஸையும் தைத்து முடித்தேன்.

இந்தச் சிறிய ஜீன்ஸை தையல் இயந்திரத்தில் தைக்க முடியாது. ஆனால் அதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறேன். கின்னஸ் புத்தகத்துக்கும் தகவல் அனுப்பினேன். உலகிலேயே மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்கியவன் என்று கின்னஸ் அமைப்பு என்னைத் தேர்வு செய்துவிட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
என்று குறிப்பிட்டுள்ளார் காசிம்.

Small Jeans 1

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

Rain Srilanka

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக யாழ். மாவட்ட மீனவர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் கடல் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளன.

சீரற்ற வானிலையால் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்லவியலாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கரவெட்டி மற்றும் இன்பருட்டி பகுதிகளில் நேற்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கனகாம்பிகை குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இரணைமடு குளத்திற்கு செல்லும் பிரதான வீதியின் பாலம் உடைந்துள்ள நிலையில், பிரதேச மக்கள் மாற்று வீதியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் ஏ-32 வீதி நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் பாதி்க்கப்பட்டுள்ளது.

தொடரும் மழையினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுள்ளது.

இதேவேளை, வவுனியா – மடு, பண்டிவிரிச்சான் பிரதான வீதி தொடர்ந்தும் நீரிழ் மூழ்கிக் காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தின் போது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, சம்பூர், சாம்பல் தீவு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

தொடரும் மழையினால் கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதி மூழ்கியுள்ளது. மட்டக்களப்பில் கல்லாறு, மண்டூர், பட்டிருப்பு, கல்லடி போன்ற வாவிகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

போரைத்தீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.

இதேவேளை, அக்கரைப்பத்தன பகுதியில் லிந்துலை – டயகம பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கையடக்கத் தொலைபேசியை ஆராய்ந்த கணவனின் கைவிரல்கள் மனைவியால் துண்டிப்பு!!

finger-cut-with-knife

தனது கையடக்கத்தொலைபேசியை ஆராய்ந்த கணவனின் கைவிரல்கள் மனைவி துண்டித்த சம்பவமொன்று பெங்களுரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மனைவி இரவுணவை தயாரிக்காது தனது கையடக்க தொலைபேசியில் மும்முரமாக இருந்துள்ளார். இதன் போது வீட்டிற்கு வந்த அவரின் கணவன் மனைவியின் செயலைக்கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதுடன் கணவன் மனைவியின் கையடக்கத்தொலைபேசியை பறித்து ஆராய முயன்றுள்ளார்.

இதையடுத்து கோபமடைந்த மனைவி கணவனது கை விரல்களை கத்தியால் துண்டித்துள்ளார். இதையடுத்து கணவன் பொலிஸ் நிலையத்திற்குசென்று மனைவி தன்னை மிரட்டியதாக முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி வரலாற்றில் அதி கூடிய மழை வீழ்ச்சி : ஒரே நாளில் 380 மி.மீற்றராக பதிவு!!

Kilinichchi

இதுவரை காலமும் கிளிநொச்சியின் மழை வீழ்ச்சி ஆண்டுக்கு சாரசரியாக 1250 மி.மீற்றராக இருந்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று பெய்த ஒரு நாள் மழைவீழ்ச்சி மட்டும் 380 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.

இதுவே கிளிநொச்சி வரலாற்றில் அதி கூடிய மழை வீழ்ச்சியாகும் என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரோ நாளில் அதிக கூடிய மழையும், வரலாற்றில் என்றும் வெள்ளம் ஏற்படாத பிரதேசங்களில் எல்லாம் அதிக வெள்ளப்பெருக்கும், நீண்ட காலத்திற்கு பின்னர் கோடை மழையில் கிளிநொச்சியின் அனைத்து பெரிய நீர்ப்பாசன குளங்களும் வான் பாயும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் 17.05.2016 அன்று மதியம் ஒரு மணி வரையான தகவலின் படி இரணைமடுகுளம் 25 அடியாகவும், அக்கராயன்குளம் 26.8 அடியாகவும், கரியாலைநாகபடுவான்குளம் 10.5 அடியாகவும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

அத்துடன், கல்மடுகுளம் 25.1 அடியாகவும், கனகாம்பிகைகுளம் 11 அடியாகவும், வன்னேரிக்குளம் 10.2 அடியாகவும், புதுமுறிப்பு 20.2 அடியாகவும், பிரமந்தனாறு 13.11 அடியாகவும், குடமுருட்டி 9.9 அடியாகவும் நீர் மட்டம் காணப்படுகிறது.

இதில் இரணைமடு குளத்தை தவிர ஏனைய அனைத்துக் குளங்களும் வான் பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தாழமுக்கம் இன்று கடந்து போகும் : மழை சில நாட்கள் தொடரும்!!

Rain

இலங்கையின் வான் பரப்பில் மையம் கொண்டுள்ள தாழமுக்க காலநிலை இன்று நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு வான்பரப்பில் நுழையக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தாழமுக்க காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பிரதேசங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
சிற்சில இடங்களில் மண் சரிவு காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் வான்பரப்பில் மையம் கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நகர்ந்து தமிழ்நாட்டின் வான்பரப்பில் நுழையவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் வடக்கு, வடமத்தி, வடமேல் மாகாணங்கள் மற்றும் வடமேற்குப் பிராந்தியத்தில்இன்னும் சில நாட்கள் வரை மழை வீழ்ச்சி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இன்னும் சில நாட்களில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளதால் தொடர்ந்தும் இலங்கையின் பல பிரதேசங்களிலும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் இரண்டு மண் சரிவுகள் : 16 பேரைக் காணவில்லை : 3 சடலங்கள் மீட்பு!!

mansarivu

கேகாலை, புலத்கோபிட்டியவில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். கேகாலை, புலத்கோபிட்டிய, கலுபான வத்த என்னும் இடத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண் சரிவினால் ஆறு பெருந்தோட்ட லயன் வீடுகள் முழுமயாக சேதமடைந்துள்ளன. மண் சரிவு அனர்த்தத்தில் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேகாலையின் இரண்டு மண்சரிவுகள். இதுவரை மூன்று பேரின் சடலங்கள் மீட்பு

கேகாலையில் நேற்று மாலையும் நள்ளிரவிலும் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களின் போதுகாணாமல் போனோர் என்று கருதப்பட்டவர்களில் இதுவரை மூன்று பேரின் சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்று மாலை அரநாயக்க சாமசர என்ற மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதன்போது அங்கு குடியிருந்த சுமார் 150 குடும்பங்களின் 400 பேர்காப்பாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று காலை வெளியான தகவலின்படி அங்கு இரண்டு சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.

இதனை தவிர நேற்று நள்ளிரவு பெருந்தோட்ட தமிழர்கள் வாழும் கேகாலை புலத்கோஹபிட்டியஎன்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரியில் 16 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இன்று காலை அங்கிருந்தும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை இரண்டு இடங்களிலும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன

இதன்போது மேலும் பல உயிருடனோ சடலங்களாகவோ மீட்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு : 390 கோடி கேட்டும் உரிமையை விற்க மறுப்பு!!

medical_atm4

மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் உருவாக்கிய இயந்திரத்தில் தீக்காயம் உள்ளிட்ட காயங்களுக்கான முதலுதவி மருந்து, பிளாஸ்திரி, பேண்டேஜ் துணி, இறப்பர் கையுறை ஆகியவற்றை பணம் செலுத்திப் பெறலாம்.

பேஸ்போல் விளையாட்டின்போது தனது நண்பர்கள் காயமடைவதைப் பார்த்ததும் இது போன்ற இயந்திரத்தை உருவாக்கி, விளையாட்டு மைதானங்களில் வைப்பது குறித்த யோசனை அச்சிறுவனுக்கு எழுந்தது.

காசு போட்டால் முதலுதவி சாதனங்கள் அளிக்கும் இயந்திரத்துக்கான வடிவத்தை தனது வகுப்பில் செயல்முறைப் பாடத்தின் கீழ் அளித்தான். பின்னர், முழு அளவில் ஒரு இயந்திரத்தை அவன் உருவாக்கினான். அந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையையும் அவன் பெற்றுள்ளான்.

இந்த நிலையில், மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனம் அந்த இயந்திரத்துக்கான உரிமையை வாங்க முன்வந்தது.

அதற்காக 3 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) வரை அளிப்பதாகக் கூறியது. ஆனால் அந்த இயந்திரத்துக்கான உரிமையைப் பெரு நிறுவனத்துக்கு விற்க ரெய்லர் ரோஸன்தால் மறுத்துவிட்டான்.

இதுவரையில் தனிப்பட்ட முறையில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் திரட்டியுள்ள இந்தச் சிறுவன், அந்த இயந்திரத்துக்கான காப்புரிமையை யாருக்கும் அளிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளான்.

விளையாட்டுத் திடல்கள், பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்கள், கல்விக் கூடங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தனது கண்டுபிடிப்பைத் தானே நேரடியாக நிறுவத் திட்டமிட்டுள்ளான். ஸிக்ஸ் ஃபிளாக்ஸ் என்னும் கேளிக்கைப் பூங்கா 100 இயந்திரங்களுக்காக முற்பணம் அளித்துள்ளது.

வவுனியாவில் அதிகபட்சமாக 261.1 மில்லிமீற்றர் மழை பதிவு!!

Vavuniya Rain

வவுனியா மாவட்டத்தில் கடந்த 72 மணித்தியாலங்கள் பெய்த கடும் மழை காரணமாக 261.1 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டளவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 14.05.2016 காலை 8.30மணிதொடக்கம் இன்று (17.05.2016) காலை 8.30 மணிவரையுமான 72 மணித்தியாலங்களில் வவுனியா மாவட்டத்தில் 261.1மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மழையால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு!!

Jaffna

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ் நகரப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்குவதற்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயலே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மழை வெள்ளம் வழிந்தோடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள் கால்வாய்களில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் மேலும் அடைத்திருந்து மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவற்றை சீரமைத்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிபணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் குருக்கள் புதுக்குளம் பகுதியில் 50 குடும்பங்கள் இடம்பெயரும் நிலையில்!!

 
வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் மழையினால் இன்று காலை நிலவரப்படி 711 குடும்பங்களைச் சேர்ந்த 2689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 3வது நாளாகத் தொடரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் பிரதேசத்தில் மழை நீர் புகுந்ததால் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

13226945_230029600703432_6926543590387271066_n 13226976_230029780703414_6656366521606555404_n 13228016_230619430644449_815066382_n 13235912_230619240644468_582898617_n 13235945_230619067311152_1493390057_n 13244725_230029707370088_2454496674571640451_n 13245941_230619293977796_935692219_n 13245947_230619073977818_1452376947_n 13246103_230619053977820_108786986_n 13250514_230618933977832_1000682791_n 13250535_230619443977781_1860262879_n 13254307_230029814036744_8852531513403844661_n 13256177_230029674036758_7494858035497297063_n

முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு!!

 
முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் வைரவ சுவாமி ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று (16.05.2016) நடைபெற்றது.

கடந்த 09.05.2016 அன்று கும்பம் வைப்புடன் ஆரம்பமான திருவிழா நேற்று திங்கட்கிழமை பகல் விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று இரவு பண்டமெடுப்புடன் சுவாமி வீதிவலம் வந்து அதிகாலை பொங்கல் விழாவுடன் நிறைவு பெற்றது.

01 IMG_1492 IMG_1493 IMG_1495 IMG_1497 IMG_1501 IMG_1502 IMG_1504 IMG_1507 IMG_1509 IMG_1515 IMG_1522 IMG_1524 IMG_1526 IMG_1546 IMG_1553 zzz

வவுனியா ஊடான வட மாகாணத்திற்கான ரயில்சேவைகள் இடைநிறுத்தம்!!

Train

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று வடமாகாணத்திற்கான ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தின் ரயில் போக்குவரத்து பாதையினூடாக செல்லும் 4 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதில் முக்கியமாக, காங்கேசன் துறை (K.K.S), யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா, போன்ற இடங்களுக்கான ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.