கடந்த 14ம் திகதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியான விஜயின் தெறி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது.
வவுனியா வசந்தி திரையங்கில் விஜயின் தெறி திரைப்பட வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு இன்று (24.04.2016) நடைபெற்றது.
இந் நிகழ்வில் ரசிகர்களுடன் இணைந்து வசந்தி சினிமா நிர்வாகிகளும் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
கடந்த வாரம் கபாலி டப்பிங்கை தொடங்கிய ரஜினி, இந்த வாரம் அந்த பணிகளை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கபாலி. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினி. ஒரு வாரத்திற்குள் இப்படத்தில் அவருக்குண்டான டப்பிங் பணிகளை எல்லாம் பேசி முடித்துவிட்டார். ரஜினியைத் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். ரஜினி இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.O’ படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார்.
சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென்னிந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
திரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதில்லை. ஹீரோயின் ஆனவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை. வந்தாலும் ஒரு சில ஆண்டுகளில் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.
இந்த வரம்புகள் அனைத்தையும் உடைத்து எறிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறப்பவர் நயன்தாரா.
ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தமிழ் பட உலகின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகை ஆனார். நயன்தாரா நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று திரை உலகினர் இவரை சுற்றி வரும் நிலை இப்போது உள்ளது. இப்போது கருத்து கணிப்பிலும் தென் இந்திய நடிகைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென் இந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார். 2013ல் நடத்திய கருத்துக்கணிப்பில் தென் இந்திய நடிகைகளில் 7வது இடத்தில் இருந்த நயன்தாரா இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். அவரது அழகு, நடிப்பு, திறமை அனைத்தையும் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2வது இடம் சுருதிஹாசனுக்கு கிடைத்திருக்கிறது. 3வது இடத்தை எமிஜக்சனும், 4வது 5வது இடங்களை அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பிடித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் உள்ளனர்.
நடிகை நமீதா நேற்று திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
எங்கள் அண்ணா, மகா நடிகன், ஏய், சாணக்கியா உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. சினிமா வாய்ப்பு குறைந்ததையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவந்த இவர், அ.தி.மு.க.வில் இணைய விரும்பினார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்யெலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், சிறந்த தலைவியாக திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பை தர விரும்புகிறேன், தங்கள் தலைமையில் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக என்னை சேர்த்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகை நமீதா கூறி உள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அவர் உரையாற்றி முடிந்ததும், அவர் முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது நமீதாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
வவுனியாவில் லங்கா சதொசவின் 2வது கிளை இன்று (24.04.2016) காலை 11.30 மணியளவில் நெளுக்குளத்தில் வெகுவிமர்சையாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள், பொலிசார், நெளுக்குளம் கிராமசேவகர், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரானுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் இரவுவேளை இடம்பெற்ற இசை நிகழ்வில் கலந்துகொண்டு வீடுதிரும்பும் போதே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரானுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் இரவுவேளை இடம்பெற்ற இசைநிகழ்வில் கலந்துகொண்டு வீடுதிரும்பிய முள்ளியவளைப் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் மதுபோதையில் வருகைதந்து கள்ளுக் குடிப்பதற்காக கள்ளை பெற்றுக்கொள்ள பனைமரத்திலேறி மரத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முள்ளியவளைப் பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்துச்சம்பவம் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்களும் எழுந்துள்ளன. எது எவ்வாறிருப்பினும் மதுபோதைக்கு பல்வேறு இளைஞர்களும் அடிமையாகி பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு உயிரிழப்புக்களும் எற்பட்டுவருகின்றன.
இச் சம்பவத்தில் 03ம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த சுரேஸ்குமார் வராகன் வயது(20) என்பவரே உயிரிழந்துள்ளார் இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரனைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டிலுள்ள அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
திருமணத்தின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட மணமகன், தப்பிவந்து அவசர அவசரமாக மணமகள் கழுத்தில் தாலிகட்டிய சம்பவம் நடந்துள்ளது.
ஜனார்தன்- சுமலதா ஜோடிக்கு திருமலையில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்,கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜிலானி என்பவர், மணமகன் பத்மா என்ற பெண்ணைக் காதலித்து ஏமாற்றியதாகக் கூறி வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் மணமகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
வராவிட்டால் என்கவுன்டர் செய்துவிடுவதாக காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மணமகனுடன் புறப்பட்ட காவலரின் வாகனத்தை மறித்த உறவினர்கள், அதில் இருந்து ஜனார்த்தனை போராடி மீட்டனர்.
இதையடுத்து, அங்கிருந்து மணமகள் அறைக்கு வேகமாக ஓடிச் சென்ற ஜனார்தனன், அங்கேயே மணமகள் சுமலதாவுக்கு தாலி கட்டி விட்டார்.
பணம் பறிக்கவே காவல் உதவி ஆய்வாளர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி தன்னை கைதுசெய்ய முயன்றதாக ஜனார்தனன் புகார் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனைகள் முடிந்தபிறகு இருவருக்கும் இடையே முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த சம்பவம் குறித்துகாவல் துறை எஸ்ஐ ஜிலானி கூறியதாவது,தன்னை காதலித்து வந்த மணமகன் ஜனார்தன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அவருடையதாய் மாமன் மகள் புகார்செய்தார்.
அதனால்தான் நாங்கள் அவரை கைதுசெய்ய வந்தோம். திருமணத்தை நிறுத்தி விசாரிக்கவே நாங்கள் வந்தோம். ஆனால்அவர் எங்களது பிடியிலிருந்து தப்பிஓடி மணமகள் ஹேமலதாவின் கழுத்தில்தாலி கட்டி விட்டார். இனிநடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
மணமகன்ஜனார்தன் கூறியதாவது, எங்கள் குடும்பத்தினர் மீது உள்ள பகையால் எனது உறவினர்கள் இவ்வாறு செய்துள்ளார்.
இந்தப்புகார் குறித்து பொலிசார் முறைப்படி விசாரிக்காமல் என்னை கைது செய்யவந்தனர். இது எந்த வகையில்நியாயம் இதை நான் சட்டப்படிஎதிர் கொள்வேன் என கூறியுள்ளார்.
விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு பிணையில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் தொகையை வங்கிகளுக்கு கொடுக்க முன்வந்துள்ளார்.
கிங் பிஷர் விமான நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை.
தற்போது லண்டனில் வசித்து வரும், அவரைநேரில் ஆஜராகி விளக்கம் அளிக்ககோரி, அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. மல்லையா இதுவரை ஆஜராகவில்லை.
வங்கிகள் தொடர்ந்த வழக்கில் மல்லையாவுக்கு மும்பை சிறப்பு நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் மல்லையாவின் கடவுச்சீட்டை வெளியுறவு அமைச்சகம் இன்று முடக்கி, திரும்பபெற்றுக் கொண்டுள்ளது.
எனவே அவர் கடவுச்சீட்டு இனிசெல்லாது என அத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார். இதுகுறித்து விகாஸ் மேலும் கூறியதாவது,
ரூ. 9,000 கோடி கடனை திருப்பிசெலுத்தாமல் இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள வைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பல்வேறு அமைப்புகளோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் அமலாக்கத்துறை கடிதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சட்ட நிபுணர்களோடு ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜய்மல்லையா கூறியதாவது, என்னுடைய கடன்களை பேசித்தீர்க்க நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய கடவுச்சீட்டை முடக்கம் செய்வது எனக்கு எதிராக பிணையில் வர முடியாத பிடி ஆணைபிறப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும் சூழ்நிலையில் பேச முடியாது.
தற்போது 6,868 கோடி ரூபாயை வங்கியில் செலுத்த இருக்கிறேன் என கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் 5 வயது சிறுவன் கொடூரமாக தரையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 5 வயது சிறுவனை மர்ம நபர் ஒருவர் தரையில் அடித்துக் கொலை செய்து உள்ளான்.
இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. சிறுவனை தூக்கி சென்று மர்ம நபர் தரையில் அடித்துக் கொன்று விட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
சிறுவன் தலையில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கும் காட்சி பதபதைக்க செய்து உள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.
பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து, கொலையாளியை தேடிவருகின்றனர்.
12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மூவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்படி, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலையில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் இச் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் ஆடு ஒன்றைக் கடித்த குற்றத்திற்காக நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து காலையில் இருந்து அடுத்தநாள் காலை வரை தூக்கில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இச் சம்பவத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த வவுனியா நெற் வாசகர் ஒருவர் தொலைவில் இருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளிலும் ஐந்தறிவுள்ள விலங்குகளையும் பறவைகளையும் கொடுமைப்படுத்தும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சிலர் இனம்காணப்பட்டு தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இச் செய்தியை வெளியிடுகின்றோம்.
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா தெற்கு வலய தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா தெற்கு வலய தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழான பொருத்து வீடுகளைப் பெறுவதற்கு வவுனியாவில் ஒன்பதாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேறியுள்ள நிலையில் உள்ள ஒன்பதாயிரம் பேரே வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இருப்பினும் இவ் வீட்டுத்திட்டம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து வீடு தேவையான பலர் இன்னும் விண்ணப்பிக்காத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மீளதகவமைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது மாத அமர்வு, வவுனியா மத்திய பேருந்து நிலைய மேல்மாடி கட்டடத்தில் நேற்று (23.04.2016) பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.
தலைவர் கோ.ராஜ்குமார் – செயலாளர் தி.நவராஜ் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், புதிய உறுப்பினர்களை உள்ளீர்க்கும் அறிமுக நிகழ்ச்சி இடம்பெற்றதை தொடர்ந்து பதினொரு உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவில் காணப்பட்ட வெற்றிடத்துக்கு, கடந்த மூன்று வருட காலத்துக்கும் மேலாக பிரஜைகள் குழுவுடன் இணைந்து நெருக்கடியான காலங்களில் பயணித்த ஊடகவியலாளர் சு.வரதகுமார் அவர்கள் குழுவின் ஒருமித்த சிபாரிசுவோடு நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 18, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை வருடந்தோறும் அனுஸ்டித்து வருவதைப்போல இம்முறையும் முள்ளிவாய்க்கால் ஏழாம் வருட நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது மற்றும் புதிய ஜனநாயக மார்க்ஸ்ஸிச லெனிஸிச கட்சியின் தலைமையில் 01.05.2016 அன்று வவுனியாவில் நடைபெறும் உழைக்கும் மக்கள் மேதினப்பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினருடன் இணைந்து முழுமையான பங்களிப்பை வழங்குதல் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவர் கி.தேவராசா, ‘குழுவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமை’ தொடர்பாக கடந்த 26.03.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றிருந்த மீள்தகவமைவுக் கலந்துரையாடலில் குழுவால் நிறைவேற்றப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை பகிரங்கமாக இன்று (23.04.2016) சகல பிரஜைகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப்பிரேரணை
திரு.கி.தேவராசா,
நெடுங்கேணி,
வவுனியா வடக்கு.
26.03.2016
அன்புடையீர்,
நம்பிக்கையில்லாப்பிரேரணை
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் உறுப்புரிமையிலிருந்தும் தாங்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானித்தலுமாகிய இன்றைய (26.03.2016 சனிக்கிழமை பி.ப 2.00 மணி) மீள்தகவமைவுக் கலந்துரையாடலானது, செயலாளர் திரு.தி.நவராஜ் அவர்கள் ஒப்பமிட்டு 18.03.2016 திகதியிட்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் அழைப்பின் பிரகாரம் சமுகமளித்துள்ள உறுப்பினர்களுடன் தங்கள் தலைமையில் நடைபெற்றிருந்தது.
செயலாளர் திரு.தி.நவராஜ் அவர்களால் 18.03.2016 திகதியிட்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்த குறித்த கடிதத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம், பிரஜைகள் குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்களை வசதிப்படுத்தி நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் ‘தலைமைக்குழுவை மீளத்தெரிவுசெய்து கட்டமைக்குமாறு’ உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதளித்து, தாங்கள் இன்றைய (26.03.2016 சனிக்கிழமை) மீள்தகவமைவுக் கலந்துரையாடலில் தலைமையுரையை நிகழ்த்தினீர்கள்.
தலைமைக்குழுவை மீளத்தெரிவு செய்து கட்டமைப்பதா? வேண்டாமா? என்பதை குழுவின் வாக்களிப்புக்கு விட்டு தீர்மானிப்போம் என்று உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்ததையடுத்து, தாங்கள் ‘சாதியவர்க்க ரீதியான’ வார்த்தைகளைப்பிரயோகித்து உறுப்பினர்களை திட்டிவிட்டு மீள்தகவமைவுக்கலந்துரையாடலில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளீர்கள். (இன்றைய கலந்துரையாடலில் தாங்கள் விளைவித்த குழப்பம் ஒலி வடிவத்தில் Voice Record ஆதாரமாக உள்ளது)
01. மீள்தகவமைவுக்கலந்துரையாடலை 05.03.2016 சனிக்கிழமை அன்று நிகழ்த்துவதற்கு குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா தங்களின் ஒப்புதல் பெற்று 03.03.2016 அன்று பொதுக்குழுக்கூட்டத்துக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். 05.03.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதாக 04.03.2016 வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்திருந்த தாங்கள், மறுநாள் காலை அதாவது கலந்துரையாடல் நடைபெறவிருந்த 05.03.2016 சனிக்கிழமை அன்று, ‘குறித்த பொதுக்குழுக்கூட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தலைமைக்குழு கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறும்’ தெரிவித்து கலந்துரையாடலை புறக்கணித்திருந்தீர்கள். (இவ்விரண்டு சந்தர்ப்பங்களுக்கும் தங்களின் தொலைபேசி உரையாடல்கள் Voice Records ஆதாரமாக உள்ளன)
அவ்வாறே தங்களின் கோரிக்கையை ஏற்று 26.03.2016 சனிக்கிழமை இன்று தலைமைக்குழு கூட்டத்தை கூட்டியபோது, பொதுக்குழுக்கூட்டத்தை கூட்டுமாறு தெரிவித்து கலந்துரையாடலிலிருந்து வெளியேறிச்சென்றுள்ளீர்கள்.
‘பொதுக்குழுக்கூட்டத்தை கூட்டினால் தலைமைக்குழு கூட்டத்தை கூட்டுமாறும், தலைமைக்குழு கூட்டத்தை கூட்டினால் பொதுக்குழுக்கூட்டத்தை கூட்டுமாறும்’ இவ்வாறு மாறிமாறி முரண் பேச்சு பேசி, குழுவை மீளத்தகவமைத்து எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானிக்க ஒத்துழைப்பு வழங்காதிருந்துள்ளீர்கள்.
02. தாங்கள் பிரஜைகள் குழுவின் தலைவர் பதவியை வகித்த காலப்பகுதியில் குழுவின் கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்வதற்கும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கும் ஏதுவாக தாங்கள் மாதாந்த கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. குழுவை பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயக்கமுறச்செய்தல், உறுப்பினர்களுக்கு பணிநிலை அடையாள அட்டைகள் வழங்குதல், புதிய உறுப்பினர்களை உள்ளீர்த்தல் இவ்வாறு குழுவை பலப்படுத்தும் அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகளில் தாங்கள் கவனமோ அன்றி ஆர்வமோ செலுத்தவில்லை.
03. மாவட்டத்திலோ அன்றி மாவட்டத்துக்கு வெளியேயோ வேறு சில சிவில் சமுக அமைப்புகளால் நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல்கள் – செயலமர்வுகளுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை குழுவுக்கு பகிரங்கப்படுத்தி, குறித்த அழைப்புகள் தொடர்பில் கூடிக்கலந்தாலோசித்து விவாதிக்காமலும் – குழுவின் ஒப்புதல் பெறாமலும் தாங்கள் தன்னிச்சையாக பத்துக்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் – செயலமர்வுகளில் பங்குபற்றியுள்ளீர்கள். (அந்த அமைப்புகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கும் – கொள்கைக்கும் ஏற்ப இசைந்துவராமல் – வளைந்துகொடாமல் முரண் தளத்தில் நின்று அலுவல்கள் செய்துகொண்டிருக்கும் அமைப்புகள் என்பதும் தாங்கள் அறிந்ததே)
04. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகள் சிலர், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக தங்களுக்கு விடுத்த அழைப்பை தாங்கள் குழுவுக்கு தெரியப்படுத்தாமல் சந்திப்புகளில் ஈடுபட்டமை.
05. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக்குழு 2015 நவம்பரில் இலங்கைக்கு முதல் தடவையாக வருகை தந்தபோது, அந்த கண்காணிப்புக்குழுவுக்கு ‘தமிழ்த்தேசிய இனத்தின் பெருந்துயரமான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உண்மை நிலைவரம்’ தொடர்பில் விதந்துரைப்பதற்கு, ‘ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரதிநிதியாக’ தங்களுக்கு 12.11.2015 அன்று வழங்கப்பட்ட கிடைத்தற்கரிய அந்தச்சந்தர்ப்பத்தில், தங்களது தனிப்பட்ட குடும்பக்கதைகளை மட்டுமே எடுத்துரைத்து வாய்ப்பையும் – நம்பிக்கையையும் வீணடித்தமை.
06. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் – மக்கள் நலன் அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கமும் இணைந்து 2015 மே 18 அன்று, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்’ நிகழ்ச்சியை அனுஸ்டித்தபோது, ஏலவே நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம் ‘உணர்வுப்பகிர்வு’ நிகழ்ச்சி நேரத்தில் போரால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர், (அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த) அரசியல் பிரமுகர்களின் கடந்தகால அருவருப்பான – கசப்பான நடத்தைகள், உண்மைத்தன்மை? தொடர்பாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தவேளை, மேடையில் ஏறி ஒலிவாங்கியை பறித்தெடுத்து, மாவீரத்தெய்வங்களினதும் – மேன்மக்கள் ஆத்மாக்களினதும் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த உணர்வுபூர்வமான அரங்கத்தில் படுகொச்சைத்தனமான (தூசன) வார்த்தைகளால் ஏசியதும், அந்த தாயாரை மேடையை விட்டு பலவந்தமாக இறக்கியதும். (பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரலாக ஒலிக்காமல் அரசியல்வாதிகளின் முகமாக செயல்பட்டமை)
07. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவராலயத்தால் Nominations for Civil Society Representatives to Serve on the Peace building Fund Board க்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக உறுப்பினரை பரிந்துரைக்குமாறு 25.02.2016 திகதியிடப்பட்டு 28.02.2016 அன்று மின்னஞ்சல் மூலமாக கிடைக்கப்பெற்ற Nomination Form தொடர்பில், குழுவுடன் கலந்துரையாடி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக தங்களது பெயரை இட்டு படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பியமை.
இவ்வாறு தனிமனித பலவீனங்களுக்கு ஆட்பட்டு, பிரஜைகள் குழுவுக்குள் ‘கூட்டு முயற்சி – கூட்டுப்பொறுப்பு – கூட்டுநலன் பண்புகளை’ நிராகரித்து தொடர்ந்துகொண்டிருக்கும் தங்களது ஏதேச்சதிகாரம் ஆனதும் சுயநலன்களை முன்னிறுத்துவதும் ஆகிய செயல்பாடுகளுக்கு எதிராகவும்,
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் – விமர்சனங்கள் தொடர்பாக குழுவின் கலந்துரையாடல்களுக்கு சமுகமளித்து, ‘தங்கள் பக்க நியாயங்களை (சாதக பாதகங்களை) உறுப்பினர்களுக்கு விளக்குதல் – பொறுப்புக்கூறுதல் – பதிலளித்தல்’ எனும் உயரிய கடமைப்பாட்டை தாங்கள் முற்றாக தவிர்த்து, வேறுபல சிவில் சமுக அமைப்புகளில் நிதி விவகாரங்களில் தவறிழைத்தவர்களுடனும், நெறிபிறழ்வு நடத்தைகளால் சமுக நம்பகத்தன்மையை இழந்தவர்களுடனும் தாங்கள் தவறான கூட்டுச்சேர்ந்துகொண்டு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உன்னத பணிகளுக்கும் நன்மதிப்புக்கும் களங்கத்தையும் அகௌரவத்தையும் ஏற்படுத்தும் வகையில் தாங்கள் குழுவை மலினப்படுத்தும் – நலினப்படுத்தும் கருத்துகளை பொதுவெளியிலும், ஊடக வெளிச்சத்திலும் கூறிக்கொண்டிருப்பதைக் கண்டித்தும்,
செயலாளர் திரு.தி.நவராஜ் அவர்களால் தங்கள் மீது நம்பிக்கையில்லாப்பிரேரணை இன்று (26.03.2016 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு) கொண்டுவரப்பட்டு, குழு உறுப்பினர்களால் இப்பிரேரணைக்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டு, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவில் தங்களது உறுப்புரிமை நிரந்தரமாக இரத்துச்செய்யப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தாங்கள் நீக்கப்பட்டுள்ளீர்கள்’ என்பதையும், இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள 26.03.2016 சனிக்கிழமை இன்றிலிருந்து இனிவரும் காலங்களில் தாங்கள் எந்தச்சந்தர்ப்பத்திலும் எந்தவேளையிலும் ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் பெயரால் செயல்பட முடியாது’ என்பதையும் மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
தாங்கள் இன்றைய மீள்தகவமைவுக்கலந்துரையாடலிலிருந்து சுயமாக வெளியேறிச்சென்றதன் பின்னர், உபதலைவர் திரு.நா.நடராசா அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டு, ‘பிரஜைகள் குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்களை வசதிப்படுத்தி நெருக்கடிகளை நிவர்த்திக்கும் நோக்கத்தில் புதிய தலைமைக்குழுவை தெரிவுசெய்து கட்டமைத்துள்ளோம்’ என்பதையும் மெத்த மகிழ்ச்சியுடனும் – நம்பிக்கையுடனும் அறியத்தருகின்றோம்.
இன்றைய மீள்தகவமைவுக்கலந்துரையாடலில் சமுகமளித்துள்ளவர்களின் ஒருமித்த சிபாரிசுவோடு (வாக்களிப்பு ஏதுமின்றி) தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய தலைமைக்குழுவில் உறுப்புரிமை பெற்றுள்ள செயல்பாட்டாளர்கள் தமது பொறுப்புகள் – கடமைகளை 26.03.2016 இல் இருந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் – நிறைவேற்றுவதற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்’