நேற்று (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கோவில்குளத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட கழக உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுறது.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன்(விசு) மற்றும் சந்திரகுலசிங்கம் மோகன் உட்பட பல ஆதரவாளர்கள் கலந்துகொன்டனர்.
இந் நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட கழக உறுப்பினர்கள், அவர்களை சார்ந்தோர்களின் பெயர் விபரங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர்.
வனராஜா மயூராங்கி, கிருபாகரன் இந்துஜா, ரவீந்திரன் துவாரகா ஆகிய மூவருமே 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் 8 மாணவர்கள் 8A B சித்திகளைப் பெற்றுள்ளனர்
சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை 8.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இன்று காலை டிப்பர் உடன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கில் மோதியதில் மோட்டார் சைக்கிலில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் உடனடியாக புளியங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
படுகாயமடைந்தவர் சுகுணன் 38 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடத்தும் பங்குனி திங்கள் முழுநிலா கலைவிழா நாளை 22.03.2016 செவ்வாய்கிழமை வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தில் வவுனியா வடக்கு வலயகல்விப்பணிப்பாளர் திரு.வ .ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெறுகிறது.
மேற்படிநிகழ்வில் கௌரவ ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சர் பிரதம விருந்தினராகவும் வவுனியா அரச அதிபர் M.B.R.புஸ்பகுமார விசேட விருந்தினராகவும் வடமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ லிங்கநாதன் .தியாகராஜா,நடராஜா,இந்திரராஜா,தர்மபால,ஜெயதிலக ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் பங்கேற்கின்றனர்.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகம்மட் சியாட் அஸ்பா 9A சித்தியினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் அப்துல் றகீம் முகம்மது பஸாரத் 8A,C சித்திகளைப் பெற்றுள்ளார். இப் பாடசாலையில் இருந்து 53 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன் பெரும்பாலான மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வவுனியா ஒமந்தை மருதங்குளம் தந்தை செல்வா முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியானது பாடசாலையின் ஆசிரியரின் தலைமையில் 19.03.2016 அன்று நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, G.T.லிங்கநாதன் மற்றும் கெளரவ விருந்தினராக ஒமந்தைப் பகுதி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பகுதிக் கிராம சேவையாளர் ஒமந்தைப் பகுதி கிராம சேவையாளர் மற்றும் விருந்தினராகக் கலந்து கொண்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், அங்கத்தவர் கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் கிருஸ்ணராஜாவினால் இடைநிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர்..
வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் ஊடாக பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் விளையாட்டப் போட்டிகளுக்கு வழங்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் காரணமாக விளையாட்டு மைதானத்தை வழங்கியிருந்தேன். ஆனால் வவுனியா மாவட்ட செயலகத்தின் விளையாட்டத்துறை அமைச்சின் இணைப்பாளர், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவர் ஆகியோர் தொடர்பு கொண்டு வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு கோரியதையடுத்து நிகழ்வுகளை ரத்து செய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
இச்செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை விளையாட்டத்துறை அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.தனுராஜ்..
வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன் மெய்வல்லுனர் போட்டிகளை விளையாட்டுக் கழகங்களுக்கு அறிவிக்காமல் ரகசியமான முறையில் பாடசாலை மட்டங்களில் நடத்தி வருவதுடன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டங்களையும் நடத்துவதில்லையென குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக அரசாங்க அதிபர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருக்கும் நிலையில் அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே மெய்வல்லுனர் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவருடன் இணைந்து விழையாட்டு நிகழ்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 18.03.2016 வெள்ளிக்கிழமை பாக்கியம் அறக்கட்டளை நிறுவனத்தின் பராமரிப்பு மற்றும் நிதி அனுசரணையில் கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினர்களாக பாக்கியம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த திரு.ப.வினாசிதம்பி, திரு.ப.விஜயலக்சுமி, திரு.சு.ஐயாத்துரை, திரு.த.தங்கமுத்து, திருமதி.தி.கமலா, திருமதி.ப.அன்னலட்சுமி, திருமதி.யு.யுவலட்சுமி, திருமதி.பொ.இந்திராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் The Compassion அமைப்பைச் சேர்ந்த செல்வி. கிரிஜா பாலசிங்கம், திரு.P.நவனீதன், திரு.மகேஜ்வரன் ஐயா ஆகியோரும் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத் தலைவர் S.P.சுதர்சன்,
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.S.ஸ்ரீநிவாசன், மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர் திரு. J.கென்னடி, ஆகியோரும் விசேட விருந்தினர்களாக பன்டாரிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.S.N.குனரத்ன,
கூமாங்குளம் கிராம வாழ்வின் எழுர்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.S.கபிலன், கூமாங்குளம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.M.கமலாம்பிகை, கட்டமைப்பு மாவட்ட முன்பள்ளி தலைவரும் பாரதிபுரம் வித்தியாலய அதிபருமான திரு.அ.முரளிதரன்,மற்றும் மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. S.அருள்வேல் நாயகி ஆகியோரும்
கௌரவ விருந்தினர்களாக கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.மா.புஸ்பராஜா, கூமாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தலைவர் திரு.ந.ஆறுமுகம், கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் திரு.P.சத்தியசீலன், ஆகியோரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்ககள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகள் மற்றும் முன்பள்ளி புனர்நிர்மாண வேலைகளை
லண்டன் The Compassion, அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அம்மன் ஆலயத்தில் பூஜையுடன் ஆரம்பமாகிய நிகழ்வு விருத்தினர்களை மாலையிட்டு வரவேற்கபட்டனர் பின்னர் பாக்கியம் அறக்கட்டளை பெயர்பலைகை திறந்துவைக்கப்பட்டது அதன்பின் இறைவணக்கத்துடன் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் கலைநிகழ்ச்சியும் விருந்தினர்கள் உரையும் இடம்பெற்றது மதியபோசன விருந்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சாவகச்சேரி மறவன்புலோவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மறவன்புலோ கிழக்குப் பிரதேசத்தில் வசித்து வரும் ரவீந்திரன் நிலோஜினி என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்று கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் தோற்றியிருந்தார்.
அதில், குறித்த மாணவி ஏ,சி,5எஸ் பெறுபேற்றைப் பெற்றிருந்ததாகவும் அதனால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து வேலூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது..
20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று 2 நாட்டு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
போட்டியை பெரும் ஆவலுடன் இரு நாட்டு ரசிகர்கள் பார்த்தனர். வேலூரில் உள்ள பல்வேறு கடைகளில் உள்ள டி.வி.க்களில் இந்த கிரிக்கெட் போட்டியை பொதுமக்கள் கூட்டமாக நின்று ஆவலுடன் பார்த்தனர். வேலூர் பழைய பஸ் நிலையத்திலும் ஒரு கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக நின்று போட்டியை பார்த்தனர்.
இதற்கிடையில், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சிலர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் வடக்கு பொலிசார் பழைய பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு 4 பேர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பொலிசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல்சுபான் (வயது 38), மக்கான் பகுதியை சேர்ந்த பாபு (31), கொசப்பேட்டையை சேர்ந்த கார்த்தி (35), கொணவட்டத்தை சேர்ந்த இலியாஸ் (30) என்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே நாய்கள் இறந்து கிடப்பதாக டெல்லி பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனே பொலிசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு குட்டையில் 3 தெரு நாய்களும், ஒரு நாய்க்குட்டியும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தன.
இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கமராவை பொலிசார் ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத ஒருவர் 3 நாய்களை சரமாரியாக அடித்து கத்தியால் குத்தி கொன்றதும், பின்னர் ஒரு நாய்க்குட்டியையும் அடித்து கொன்றதும் பதிவாகி இருந்தது.
அந்த நபர் குறித்து அடையாளம் தெரியாததால் கண்காணிப்பு கமராவில் பதிவான வீடியோ காட்சியை ‘யூ டியூபில்’ பொலிசார் பதிவேற்றி உள்ளனர். மேலும் இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தங்கள் பகுதியில் சில நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால் 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று ஒரு தொண்டு நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. தினேஷ் சந்திமால் 16 ஓட்டங்களுடனும், டில்ஷான் 12 ஓட்டங்களுடனும் வௌியேறினர். டில்ஷானின் ஆட்டமிழப்பு தவறாக வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய மெத்தியூஸ் 20 ஓட்டங்களையும், திஸர பெரேரா 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதனையடுத்து, 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 122 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி 123 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அன்றி பிளட்சர் (Andre Fletcher) இலங்கை பந்து வீச்சாளர்களை களங்கடித்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்த அவர் 84 ஓட்டங்களை விளாச மேற்கிந்திய தீவுகள் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 127 ஓட்டங்களை விளாசியது.
இதற்கமைய 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாகை சூடியுள்ளது.
T20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கிண்ணம் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. துவக்க வீரர்களாக டி கொக் மற்றும் ஹசிம் அம்லா களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் அரை சதமடித்த அம்லா இந்த ஆட்டத்தில் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் டூ பிளசிஸ் களமிறங்கினார். இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை தும்சம் செய்தனர்.
இந்நிலையில் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய அதிரடி மன்னன் ஏ.பி. டிவிலியர்ஸ் பந்துகளை நாளா பக்கமும் விரட்டினார்.
இதற்கிடையில் டி கொக் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் டி விலியர்சுடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். 24 பந்துகளில் அரை சதமடித்த டி விலியர்ஸ் தொடர்ந்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் எடுத்த நிலையில் டி விலியர்ஸ் ஆட்டமிழந்தார்.
பின்னர் மில்லர் களமிறங்கினார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆபிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.
டுமினி 29 ஓட்டங்களுடனும் டேவிட் விசெ ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஷசாத் தென்னாபிரிக்காவின் பந்துகளை துவம்சம் செய்தார். ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களே மிரளும் வகையில் அவரது ஆட்டம் இருந்தது. இந்நிலையில்19 பந்துகளில்3 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷசாத் ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் எண்ணிக்கை 52 ஆக இருந்தது. எப்படியும் தென் ஆபிரிக்கா நிர்ணயித்த ரன்களை பெற்றுவிடுவது என்ற முனைப்பை ஆப்கான் வீரர்கள் காட்டி வந்தனர்.
இதனால் 10.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் முன்வரிசை வீரர்களான குல்பதின் நைப் 26, நூர் அலி ஜத்ரான் 25, ஷமியுல்லா 25 ஓட்டங்களை எடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தானின் கை ஓங்கியது.
எனினும் பின்னர் வந்த வீரர்கள் ஓட்டங்களை குவிக்க திணறினர். குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
18வது ஓவரில் ரஷீத் கான் 11ஓட்டங்களிலும் தவ்லத் ஜத்ரான் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கான் 172 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் தென் ஆபிரிக்கா 37ஓட்டங்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா தரப்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பின் உதவியுடன் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
மெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது.
இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். இதுதவிர உலக ஐக்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையிலையால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் அறுபது லட்சம் பேர் பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகை பிடிப்பவர்கள் மட்டும் அல்லாமல், அந்த புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.
ஆனால் வொஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த அளவிலான மதிப்பீடு ஆகும். இப்போது புகையிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள மேலும் ஐந்து நோய்களை கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேக்கப்ஸ் கூறுகையில், ‘இந்தக் கணக்கின்படி ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் அறுபது ஆயிரம் அதிகமாகும்’ என்கிறார்.
இதே ஆய்வின் அடிப்படையில் உலக அளவிலான எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் கூடுதலாக புகைபிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர். இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.
இங்கிலாந்து மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட, இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் ஆவார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில், ஆய்வு நடக்கும் போதே 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்தார்கள்.
புகைபிடிக்கும் பழக்கம் இருந்தவர்களின் இறப்பு விகிதம் மற்றவர்களை விட சுமார் 3 மடங்கு அதிகம். இதுதவிர 17 சதவீதம் பேர் இதுவரை புகையிலையுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத மேலும் ஐந்து நோய்களால் இறந்தது கண்டறியப்பட்டது. இந்த நோய்கள், கணக்கெடுப்பின் போது சேர்க்கப்படவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் தனி கவனம் எடுத்து ஆராய்ச்சி நடத்தியதில், புகைப்பழக்கத்தால் ரத்த நாள சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகளை இருமடங்கு பெருக்குவதாக கூறி உள்ளனர்.
இந்த பழக்கம் இருப்பவர்கள், குடலுக்கு சரியாக ரத்தம் செல்லாததால் ஏற்படும் ஒரு விதமான அறிய நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதையும் கண்டறிந்தனர். இதுவரை புகையிலையால் ஏற்படும் நோய்கள் என்று நிரூபிக்கப்படாத கர்ப்பப் பை மற்றும் மார்பக புற்று நோய் ஆகியவையும் புகையால் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19ம் திகதி புவி மணித்தியாலம் (Earth Hour) அணுசரிக்கப்படுகிறது. வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.
அவுஸ்திரேலியாவின் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்ட முதலாவது புவி மணித்தியால நிகழ்வு 2007 மார்ச் 31 ஆம் திகதி இரவு 7:30 – 8:30க்கு இடையில், சிட்னியில் நடைபெற்றது. 2.2 மில்லியன் மக்கள் பங்கேற்ற இந்த முதல் நிகழ்வின்போது அவுஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% – 10.2% அளவுக்கு குறைந்ததாகக் கருதப்படுகிறது.
அன்றிலிருந்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19ம் திகதி இரவு 7:30 – 8:30க்கு இடையில் உலகில் உள்ள 178 நாடுகள் புவி மணி நேரத்தை கடைபிடித்து வருகின்றன.
அவ்வகையில், ஆசிய கண்டத்தில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நேற்றிரவு அணுசரிக்கப்பட்ட புவி நேரம், உள்ளூர் நேரமாற்றத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து, சிங்கப்பூர், கொங்கொங், ஐரோப்பா, சிட்னி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, பாரிஸ், அமெரிக்கா என உலகம் முழுவதும் உள்ள ஏழாயிரத்துக்கும் அதிகமான பெருநகரங்களில் கடைபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரபல எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம், லண்டன் பாராளுமன்றம், சிட்னி நகரின் துறைமுகப் பாலம் உள்ளிட்ட உலகின் பல்வேறு கலைநயம் மிக்க நினைவுச் சின்னங்கள் நேற்று ஒருமணி நேரம் இருளில் மூழ்கின.