என்னைப் பற்றி வதந்திகள் : அமலாபால்!!

amala-paul

அமலாபால் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் இயக்குனர்களிடம் தன் கரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கெடுபிடிகள் செய்வதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின.

இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவரை நீக்கி விட்டதாகவும் செய்திகள் பரவின. தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்படும் ரமணா படத்தில்தான் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதில் வேறு நாயகியை தேடுகிறார்கள்.

அமலாபால் தற்போது ஜெயம்ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்தில் நடிக்கிறார். ஒரு மலையாள படமும் ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளன.

தன்னைப்பற்றி வதந்திகள் பரவுவதாக அமலாபால் ஆவேசப்பட்டார். அவர் கூறும்போது என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி வருகின்றன. இந்திப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் வதந்தி பரவி உள்ளது. இந்திப் படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை.

அப்படி இருக்க நான் நீக்கப்பட்டேன் என்று எழுதுகிறார்கள். இது மனத்துக்கு வருத்தமாக இருக்கிறது. தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அமலாபால் கூறினார்.

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் : நடிகை இனியா!!

iniya

ஈரோடு ஆர்.வி.கே வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸின் 7வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி விற்பனை தொடக்க விழா இன்று காலை நடந்தது. நடிகை இனியா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் நடிகை இனியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

தற்போது தமிழில் புலிவால், நினைத்தது யாரோ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் பி.பி.ஏ. 2ம் ஆண்டு படித்தும் வருகிறேன். நடிகை என்ற அந்தஸ்தை எனக்கு கொடுத்தது, தமிழ் சினிமாதான். அதை என்றும் மறக்க மாட்டேன். சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆக்ஷன் படங்களில் எனக்கு நடிப்பது மிகவும் பிடிக்கும். ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்க ஆசைப்படுகிறேன். மேலும் டான்சர் வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்படும் சினிமா படத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன். பாரதிராஜா படத்தில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் இல்லை. அமீர் அந்த படத்தில் இருந்து வெளியேறியதால் படத்தின் போக்கே மாறி விட்டது. இதனால் நான் படத்தில் இருந்து விலகி விட்டேன்.

தமிழில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லோருடனும் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகர் ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிகைகளில் பானுப்பிரியா, ஸ்ரீதேவி, சிம்ரன் போன்றோரை பிடிக்கும். எனக்கு யாரும் போட்டி இல்லை. நானே தான் எனக்கு போட்டி.

சில படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் சூழ்நிலை வந்தால் நான் நடிப்பேன். ஆனால் சில நடிகைகள் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போகப்போக டூபீஸ் உடைகளில் நடிக்கிறார்கள். நடிகைகளால் இதுபோன்ற வாக்குறுதியை காப்பாற்ற முடியாது. இதனால் கவர்ச்சி விஷயத்தில் எந்த வாக்குறுதியையும் அளிக்க விரும்பவில்லை. இவ்வாறு நடிகை இனியா கூறினார்.

குஜராத் நிகழ்ச்சியில் முட்டை வீச்சில் இருந்து தப்பிய தீபிகா படுகோன்!!

deepika

குஜராத்தில் நவராத்திரி விழாவின்போது கர்பா நடனம் இடம்பெறுவது வழக்கம். இதற்காக முக்கிய பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் பொலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது படக்குழுவினர் கலந்துகொண்டனர். ரசிகர்களின் வரவேற்பில் திளைத்த தீபிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தீபிகா நடித்துள்ள ராம் லீலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடைபெறும் இடத்தை நெருங்கிய போராட்டக் குழுவினர் தீபிகா மீதும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீச தயாராக இருந்தனர். பின்னர் படக்குழுவினரின் சமரச முயற்சியையடுத்து அவர்கள் கலைந்து சென்றதாக செய்தி வெளியாகி உள்ளது.

முட்டை வீச்சு சம்பவம் நடப்பதை முன்கூட்டியே தடுத்ததால், தீபிகா எந்த டென்ஷனும் இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் ராம் லீலா திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் லட்சிய படமான ராம் லீலாவின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறது. தங்கள் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராபரி சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

child abuse

தமிழ்நாட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வேனில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் பகுதியின் வழியாக சென்ற மினி வேன் ஒன்று திடீரென பள்ளியின் சுற்றுச் சுவர் மீது மோதி நொறுங்கி கிடந்தது.

அப்போது வேனிலிருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டதால் அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதிகள் சந்தேகப்பட்டு வேன் அருகே சென்று பார்த்தபோது கண்ணாடியை உடைத்து கொண்டு ஒருவர் வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

மேலும் வேனுக்குள் ஆடை இல்லாமல் ரத்தவெள்ளத்தில் சிறுமி ஒருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் கூச்சல் போட்டுள்ளனர். அவர்களுடைய சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரண்டனர். முதலில் சிறுமியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில் குடிவெறியில் இருந்த ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

அவரை பொலிசார் மீட்டு விசாரணை நடத்தியதில் ஈஞ்சம்பாக்கம் கவுரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார்(32). இவர் மினி வேன் ஒட்டுகிறார். தினமும் கோயம்பேடு சந்தைக்கு சென்று தண்ணீர் கேன் வியாபாரமும் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஆயுத பூஜையான நேற்று வாகனத்துக்கு பூஜை செய்துவிட்டு மது அருந்திவிட்டு வேனில் சுற்றிய இவர் பெருங்குடியில் உள்ள பழக்கடை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து என்னுடன் வந்தால் விளையாட பொம்மை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி சிறுமியும் அவருடன் வேனில் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதில் சிறுமியின் கன்னம், கை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.

தொடர்ந்து போதையில் வேனை ஓட்டி சென்ற போது பள்ளி சுவர் மீது மோதி உள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பெண்ணாக பிறந்ததால் குழந்தையை கொன்ற தந்தை!!

child

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அவரது மனைவி கருவுற்றிருந்த போது இன்ப கனவில் மிதந்த அவருக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

அடுத்தது ஆண் குழந்தை தான் என்று உறவினர்கள் உசுப்பேற்றி விட்டதால் சில மாதங்களில் அவரது மனைவி மீண்டும் கருவுற்றார். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக போனதால் ஆண் குழந்தையை பெற்றே தீர வேண்டும என்ற முனைப்பில் தனது மனைவியை மூன்றாவது குழந்தைக்கும் தாயாக்கினார்.

மூன்றாவது பிரசவத்திலும் அவரது எண்ணம் ஈடேறாததால் சோகத்தில் மூழ்கிப்போன ஷேக் இஸ்மாயிலை குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது.

நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது பொக்கெட்டில் இருந்த மது போத்தலை திறந்து 3வது மகளான 18 மாத குழந்தையின் வாயில் வற்புறுத்தி ஊற்றினார்.

தொண்டை மற்றும் குடல் எரிச்சலில் வீறிட்டு அழுத குழந்தை சிறிது நேரத்திற்குள் மயங்கி விழுந்தது நிலமை விபரீதமானதை உணர்ந்த அவர் குழந்தையை குண்டூர் அரசு வைத்தியசாலை வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார்.

உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிச் சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை நேற்றிரவு இறந்து விட்டதாக தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள ஷேக் இஸ்மாயிலை பிடிக்க பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜேர்மனியில் ஓய்வு பெறுவதற்கே பயப்படும் மக்கள்!!

germany

ஜேர்மனியில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுவதற்கே பயப்படுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு பணியாளர்களின் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது.
இதில் 42 சதவிகிதம் பேர் தாங்கள் ஓய்வு பெறுவதற்கே பயப்படுவதாகவும், இதற்கு ஓய்வூதியம் மிக குறைவாக கிடைப்பதே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

18 சதவிகிதம் பேர் ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் 69 சதவிகிதம் பேர் பணியிடங்களில் மிக அரிதாகவே பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் குறித்த அமைப்பு, நிரந்தரமான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு கழன்று விழுந்ததால் பரபரப்பு!!

plane-door

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.

இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார்.

விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார். இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும் கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார்.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார். எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்!!

phil

பிலிப்பைன்சில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது 6 பேர் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸின் பொஹோல் தீவில் உள்ள கார்மன் நகரை மையமாகக் கொண்டு இன்று காலை 8.12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தாகவும், 56 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து செபு நகர் அருகில் உள்ள மீன் துறைமுகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். மேலும் செபு மாகாணத்தில் சந்தையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர் மற்றும் 19 பேர் காயம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். செபுவில் 2 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து 8 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தக்பிலாபன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் சேதம் அடைந்துள்ளது. மேலும் நகரில் உள்ள மஹால் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் கார்மனின் தென்மேற்கு பகுதியில் உள்ள லோபோக் நகரில் இருக்கும் 17வது நூற்றாண்டு தேவாலயம் இடிந்து விழுந்தது.

இது தவிர அப்பகுதியில் உள்ள பல பழைய தேவாலயங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று பிலிப்பைன்ஸில் தேசிய விடுமுறை என்பதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அரண்மனைக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்!!

palace

இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் வாழும் வரலாற்று பெருமை மிக்க பக்கிங்காம் அரண்மனை லண்டன் நகரில் உள்ளது.
இந்த அரண்மனையின் பிரமாண்டத்தையும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள அழகிய பூந்தோட்டத்தையும் கண்டு களிக்க உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில தினங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

இதன்படி நேற்று எராளமான மக்கள் அரண்மனையின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அரண்மனை வடக்கு வாயில் வழியாக கத்தியுடன் நுழைந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபரை ரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த அரண்மனைக்குள் நுழைந்து திருட முயன்றதாக 2 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்..

இச்சம்பவத்தையடுத்து அரண்மனையின் காவல் பலப்படுத்தப்பட்டது. இதற்கு 2 நாட்கள் கழித்து ராணி எலிசபத்தின் மகன் அண்ட்ரூவை வாசலில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அடையாள அட்டையை காட்டிய பின்னரே அவரை உள்ளே அனுமதித்தனர்.

நேற்றைய சம்பவம் நடைபெற்றபோது ராணி அரண்மனையில் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 1982-ம் ஆண்டு சுவர் ஏறி குதித்த மைக்கல் பேகன் என்பவன் ராணி உறங்கிக் கொண்டிருந்த அறையில் சுற்றித் திரிந்தபோது காவலர்களிடம் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் ஓய்வு தாமதம் : வினோத் காம்ளி!!

vinod-kambli

சச்சின் ஓய்வு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமானது எனினும் இம்முடிவு தாமதமானது என்றும் 2011 உலகக் கிண்ணத்தை வென்ற போதே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று வினோத் காம்ளி தெரிவித்தார்.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் (40) சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்து சாதித்த இவரும் பள்ளித் தோழன் வினோத் காம்ளியும் (41) இணைந்து 1988ல் பாடசாலை அளவிலான கிரிக்கெட்டில், அதிக ஓட்டங்கள் (664) சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றனர்.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நவம்பர் 14-18 ல் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

இது குறித்து வினோத் காம்ப்ளி கூறுகையில் தொடக்க காலத்தில் இருந்ததை போல தற்போது சச்சின் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்கள் சேர்க்கவில்லை. இது சோகமானது.

சச்சினின் குழந்தை பருவ கனவு உலகக் கிண்ணம் வெல்வது. இது 2011ல் நிறைவேறியவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்.

சச்சினின் ஓய்வு முடிவு என்பது சரியானது தான். இவர் பங்கேற்கவுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும் என்றும் இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் எனவும் கூறினார்.

இந்தியா வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், இரண்டாவது டெஸ்ட் (நவம்பர் 14-18) போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து இன்று மும்பையில் நடக்க உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பி.சி.சி.ஐ.,) அட்டவணை ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடக்கலாம். சச்சின் கேட்டுக் கொண்டபடி அவரது 200வது டெஸ்ட் போட்டி சொந்த ஊரான மும்பையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.

தவிர இப்போட்டியுடன் விடைபெற உள்ள இவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் , பி.சி.சி.ஐ., சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவால் இனிமேல் சச்சினையோ, கவாஸ்கரையோ உருவாக்க முடியாது : அர்ஜுன ரணதுங்க!!

Arjuna-Ranatunga

முன்னைய காலம் போலல்லாது இப்போது இந்தியாவிடமிருந்து கிரிக்கெட் தொடர்பாகக் கற்றுக்கொள்வதற்கு எவையும் கிடையாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நியூ டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ஜுன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
தங்களுடைய காலத்தில் தாங்கள் கற்றுக்கொள்ளும்போது இந்தியாவைப் பார்த்து அதனிடமிருந்து கற்றுக்கொள்வது ஒரு பகுதியாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அர்ஜுன ரணதுங்க, ஆனால் இனிமேல் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள முடியுமென நினைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இளைய வீரர்கள் பலர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளை நிதி நலன்களுக்காக விளையாட விரும்புவது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட அர்ஜுன ரணதுங்க இந்தியாவால் இனிமேல் சச்சின் டென்டுல்கரையோ, சுனில் கவாஸ்கரையோ உருவாக்க முடியாது என்பது நிச்சயமானது எனக் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஓய்வுபெற்ற பின்னர் அதை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இலங்கை அணி தயார் நிலையில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதைய பிரதம தேர்வாளரான சனத் ஜெயசூரிய நீண்ட கால நோக்கில் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

தங்களுடைய அணியின் வீரர்கள் வயதாகிக் கொண்டிருந்த போது சனத் ஜெயசூரியவை உப தலைவராக்கியதாகவும் மார்வன் அத்தப்பத்து, றசல் ஆர்னல்ட் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அர்ஜுன இங்கு குறிப்பிட்டார்.

8 வயது பெண் குழந்தைகள் நால்வருடன் ஜெயம் ராஜா நடிக்கும் என்ன சத்தம் இந்த நேரம்!!

enna satham intha neram

ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் என்ன சத்தம் இந்த நேரம். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார்.

உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே தோற்றம் கொண்ட 8 வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பி.லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் குரு ரமேஷ் கூறும்போது,

பிரபல திரைப்பட இயக்குனர் ஜெயம் ராஜா இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் பிடித்துபோக தனது படம் சம்பந்தமான வேலையில் மும்முரமாக இருந்தாலும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி முதன்முறையாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜித் நடித்த காதல் மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாணு பதினைந்து வருடங்களுக்கு பின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ், புரளவன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, சிவசங்கர், வையாபுரி, லொல்லு சபா சுவாமிநாதன் இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் படப்பிடிப்பு ஐதராபாத்திலும், மூன்றாம் கட்டமாக சென்னையிலும் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

பலாங்கொடை பிரதேசத்தில் பேய் பீதி : அதிர்ச்சியில் மக்கள்!!

ghost

பலாங்கொடை வெலங்கே பிரதேசத்தில் அதிகளவில் மக்கள் பேய் பீதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை காரணமாக மக்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.

பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் பீதியடைந்துள்ளனர். கறுமையான உயர்ந்த வயோதிப உருவமொன்று மக்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உருவத்தை நேரில் பார்த்து பயந்த பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இரவு வேளைகளில் திடீரெனத் தோன்றும் இந்த உருவம் திடீரென மறைந்து விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேய் பீதியைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது : மலேசிய நீதிமன்றம் உத்தரவு!!

hammer

முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து வெளிவரும் கத்தோலிக்க பத்திரிக்கை அல்லா என்ற சொல்லை தனது இதழில் பயன்படுத்தி வந்தது. இதை எதிர்த்து பழமைவாத முஸ்லிம்கள் அங்குள்ள தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவதால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மற்றவர்கள் இந்த சொல்லை பயன்படுத்த வேண்டாம் என மலேசிய உள்துறை அமைச்சகம் 2009ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கத்தோலிக்க பத்திரிகை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. அல்லா´ என்ற சொல் கடவுளை குறிக்கிறது. எனவே இந்த சொல்லை பயன்படுத்த நீதிமன்று அனுமதி அளித்தது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.

முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே, “அல்லா´ என்ற சொல் வழக்கில் உள்ளது. கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு.

மேல் நீதிமன்றின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, கத்தோலிக்க பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் எயிட்ஸ் தாக்கம் அதிகரிப்பு!!

aids

நாட்டில் எயிட்ஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எயிட்ஸ் நோய்த் தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பனவற்றை அறியத்தருமாறு இந்தக் குழுவிடம் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க அறிவித்துள்ளார்.

இருப்பினும் இலங்கையில் தாயிடமிருந்து பிள்ளைக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கான இரத்த பரிசோதனைகளை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சற்றுமுன் சரணடைந்தார்!!

Mangala

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணியுடன் சென்று சற்று முன்னர் மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி மங்கள சமரவீரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தென் மாகாண சபை உறுப்பினர் மங்கள பிரியந்தவும் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.

இதனால் மாத்தறை பொலிஸ் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.