பிரம்மாண்டமாக உருவாகுகிறது பேஸ்புக் நகரம்!!

fb

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் இல்லை என்றால் எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் அடிமையாகி உள்ளனர்.
உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், சென் பிரான்சிஸ்கோவில் உள்ள St.Anton என்ற பில்டிங் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய ட நகரத்தை உருவாக்க உள்ளது. பேஸ்புக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக இங்கு வீடு கட்டப்படுகிறது.

இதன் மதிப்பு 120 மில்லியன் டொலர் ஆகும். அன்டன் மென்லோ என்ற பெயர் கொண்ட இந்த திட்டத்தில் 208 தனி அறைகள், 139 இரட்டை அறைகள் கொண்ட வீடுகள் மற்றும் பேஸ்புக்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக 12 மூன்று அறைகள் கொண்ட வீடுகள் கட்டப்பட உள்ளது.

மேலும் 35 ஸ்டூடியோக்கள், நீச்சல் தடாகம், ஸ்பா, சூப்பர் மார்க்கெட் என அனைத்தும் இதில் அடங்கும்.

விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

baby dead

தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்ததில் ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமானின் அல்குவெய்ர் நகரில் கேரள தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆதி. கடந்த வாரம் குழந்தையின் தாய் சமையல் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது தனியாக விளையாடிக் கொண்டிருந்த ஆதி தொலைக்காட்சியின் வயரை பிடித்து இழுத்துள்ளான்.

எதிர்பாராதவிதமாக தொலைக்காட்சி அவன் மீது விழவே பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் சிகிச்சை பலனில்லாமல் ஆதி பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து ஆதியின் உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

உலக சிறுவர் தினத்தில் இலங்கை சிறுவர்களுக்கு அதிர்ச்சி : மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!!

hrc-srilanka

உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து அரச நிறுவனங்களிடம் கருத்தறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் 10ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அதன் தலைவர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சித்தியடைய தவறிய மாணவர்கள் சிறுவர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியில் விரட்டப்பட்டமை, சூடு வைக்கப்பட்டமை, திட்டப்பட்டமை, மனம் நோகடிக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

விமானத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த கில்லாடி சிறுவன்!!

plane

அமெரிக்காவில் பல்வேறு பாதுகாப்புகளையும் மீறி 9 வயது சிறுவன் ஒருவன் டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மின்னபோலிஸ் உள்ள சென்ட் போல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் வேகாஸ் விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று நேற்று காலை 10.30 மணி அளவில் புறப்பட்டது.

வழக்கம் போல் அங்கு பயணிகள் 3 அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விமானத்தில் ஏறினர். விமானம் 11.15 மணிக்கு லாஸ் வேகாசை சென்றடைந்தது.

அதற்கு முன்னதாக நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான பயணிகள் கண்காணிப்பாளருக்கு விமானத்தில் பயணம் செய்த சிறுவன் மீது சந்தேகம் வந்தது.

பயணிகளின் டிக்கெட்டை சோதனை செய்த போது டிக்கெட் எடுக்காமல் 9 வயது சிறுவன் விமானத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் உடனடியாக சிறுவனை பாதுகாப்பு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் டுவின் நகரத்தில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் 3 அடுக்கு பாதுகாப்பை தாண்டி விமானத்துக்குள் நுழைந்துள்ளான்.

இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு கமராவை சோதனை செய்த போது அதில் சிறுவன் ஊடுருவியது பதிவாகி உள்ளது.

ஆனால் கடந்த 15 வருடங்களில் இதுதான் முதல் முறை சிறுவன் எப்படி உள்ளே நுழைந்தான் என்பது ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அவனது பெற்றோர் நேற்று முன்தினம் திடீரென அவன் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் குழந்தைகள் காவல் பிரிவிக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொதுநலவாய மாநாட்டை அவுஸ்திரேலியா புறக்கணிக்காது!!

Tony-abbott

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுநலவாய மாநாட்டை கனேடிய பிரதமர் புறக்கணிப்பதாக உறுதிப்படுத்தியுள்ள சில மணிநேரங்களில் அவுஸ்திரேலிய பிரதமர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை காரணிகளை சுட்டிக்காட்டி பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும் திட்டம் தமக்கு இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் சுயாதீன முடிவு பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.

அமரர் நடாவின் இழப்பு தமிழ் ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு : சித்தார்த்தன்!!

Nadarajah

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவானது பத்திரிகைத் துறைக்கு மிகப்பாரிய இழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950களில் ஊடகத்துறையில் காலடி எடுத்துவைத்த அமரர் நடராஜா அவர்கள் வீரகேசரி பத்திரிகையில் தம்மை இணைத்துக் கொண்டார். பின்னர் அதன் உதவி ஆசிரியராகவும் அதன் பிறகு செய்தி ஆசிரியராகவும் ஊடகத் துறையில் கடந்த 2005ஆம் ஆண்டுவரையில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

1983ஆம் ஆண்டில் காணப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் அமரர் நடராஜா அவர்கள் துணிச்சலுடன் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் உலகிற்குச் சொல்வதில் அயராது பாடுபட்டவர்.

போராட்ட வழிமுறை மாறியபோது அதற்கான நியாயங்களை கோடிகாட்ட அவர் பின்னின்றதில்லை. அந்தவகையில் எமது அமைப்புடனும் பத்திரிகை தொடர்பாக நெருங்கிய உறவை பேணியவர் என்பதை பசுமையுடன் நினைவு கூருகின்றோம்.

ஊடகத்துறையில் 49ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அமரர் நடராஜா அவர்கள் தமிழ்மணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என்பவற்றையும் பெற்றார். ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என பலரினதும் நன்மதிப்பையும் பெற்ற அவர் ஊடகத்துறை பணியிலிருந்து ஓய்வு பெறும்வரையில் பல ஊடகவியலாளர்களையும் உருவாக்கித் தந்தவர்.

மூத்த ஊடகவியலாளரான அமரர் செல்லையா நடராஜா அவர்களின் இழப்பானது தமிழ் ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, அன்னாரின் குடும்பத்தினர், ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

த.சித்தார்த்தன்,
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்),
07.10.2013.

விடைபெற்ற கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட்!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர். டெல்லியில் நேற்று முன்தினம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் மும்பை இண்டியன்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் பெற்றது. இப் போட்டியுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சித்திரமும், மும்பை இண்டியன்ஸ் அணியின் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

அவர் ஏற்கெனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றார்.
அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியும், கரவொலி எழுப்பியும் பிரியா விடை கொடுத்தனர்.

அத்துடன் மும்பை வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர். இதேபோன்று மற்றொரு ஜாம்பவானாகிய 40 வயதான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டுக்கும் தமக்கு இதுவே கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார். அவரும் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

அவர் இந்த தொடரில் 48 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். டிராவிட் வெளியேறிய போதும் அவருக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்கள் மரியாதை தெரிவித்து விடை கொடுத்தனர்.

sachindravid

8 லட்சம் உயிர்கள் பலியாகலாம் : எச்சரிக்கை!!

earthquake

இமயமலைப் பகுதிகளில் ரிக்டர் 8 புள்ளி அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 8 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து என தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஆணையத்தின் துணைத்தலைவர் எம். சசிதர்ரெட்டி இதுகுறித்து கூறுகையில் வடகிழக்கு மலைப்பிரதேச பகுதிகளான இமாச்சல பிரதேசம் முதல் ஜம்மு,காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அங்கு 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் நடந்தால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரும். இமாச்சல பகுதிகளில் 53 ஆண்டுகள் இடைவெளியில் நிலநடுக்கம் நடந்துள்ளது.

முதலில் 1897ம் ஆண்டு நடந்தது. பிறகு 1950ம் ஆண்டில் தான் ஏற்பட்டது. இதே போல அந்த மண்டலத்தில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

மேலும் 1950ம் ஆண்டுக்கு பிறகு அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. அதே சமயம் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு நடந்தால் 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடுவதோடு மட்டுமல்லாமல் அதிக அளவில் பொருட்சேதமும் உண்டாகும். அதனால் அங்குள்ள வீடுகள் இடிந்தால் உயிர்சேதம் ஆகாமல் இருக்கும் வகையில் குடியிருப்புக்களை அமைக்க வேண்டும்.

நிலநடுக்கம் எங்கே, எப்போது ஏற்படும் என்று துல்லியமாக நாம் சொல்ல முடியாது. ஆனால் தேசிய பேரிடர் ஆணையம் இதிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் கண்டிக்கிறது வவுனியா ஜனநாயக பிரஜைகள் குழு!!

vav

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்வதை கண்டிப்பதாக வவுனியா மாவட்ட ஜனநாயக பிரஜைகள் குழுவின் இயக்குனர் என்.ரஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்..

வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமையானது தமிழ் மக்களையும் அவர்களது எண்ணங்களையும் ஜனாதிபதியின் காலில் போட்டு அவமானப்படுத்துவதற்கு ஒப்பானதாகும்.

தமிழ் மக்கள் இம் முறை வடமாணசபைத் தேர்தலை தமக்கான இறுதித் தீர்வாகவோ அல்லது சலுகைகளுக்காகவோ பயன்படுத்தவில்லை. மாறாக ஜனாதிபதியின் மீதும் அவரது அரச படைகள் மீதும் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அதிக வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்துள்ளனர்.

ஆகவே தமிழ் மக்களின் மனங்களையும் அவர்களின் எண்ணங்களையும் கருத்தில் எடுக்காது இவ்வாறு கூட்டமைப்பின் தலைமையும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஜயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் மக்கள் விருப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்!!

hugary

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுபாடு விதித்தது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், குட்டை பாவாடை, டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களது பேராசிரியை தலைமையில் ஆடை கட்டுபாட்டை கண்டித்து வகுப்பறைக்கு நிர்வாணமாக வந்து பாடம் படித்தனர்.

நிர்வாகம் தனது விதிகளை தளர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் பல்கலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் நிர்வாணமாக வகுப்பறைகளில் பங்கேற்ற புகைப்படங்கள் உள்ளூர் நாளேடுகளில் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எதிர்ப்பு பெரிதானதை அடுத்து மாணவர்களுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

வவுனியாவில் முதியோர் தினத்தை முன்னிட்டு வாகனங்களில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு..!

vavuniyaவவுனியா மாவட்ட முதியோர் தின விழிப்புணர்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி வவுனியா பஸ் நிலையத்தில் 09.10.2013 புதன்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் வவுனியா மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான உயர்திரு எம்.கே பந்துல ஹரிச்சந்திர அவர்களும், வவுனியா நகர பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.மு. உதயராசா அவர்களும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு.ஆ.ளு.பத்மநாதன் அவர்களும், வவுனியா வர்த்தக சங்க தலைவர் திரு.இராஜலிங்கம் அவர்களும் நிறுவனத்தின் சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பத்மினி பாலச்சந்திரன் அவர்களும் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் திரு சந்திரன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் சமூக சேவை உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பாக நடைபெற்ற வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் சிறுவர் தினவிழா(படங்கள்)..!

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தினவிழா நிகழ்வுகள் சில தினகளுக்கு முன் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் தி. மனோகராஜா, வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு நிகழ்வாக சிவஸ்ரீ சண்முகநாதக்குருக்கள் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

vavuniya1

vavuniya2

vavuniya3

vavuniya4

சீ.வி விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை!!

4

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிபட்டுள்ளார். ஊடக அறிக்கை பின்வருமாறு..

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன்.

என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.

போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான கிட்டிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும்.

சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கு வன்முறைக்கு இடமில்லை. வலோத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக

இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!

நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை

சிறுமியை சீரழித்த கணவன் : மனைவி தீக்குளித்து மரணம்!!

aravali sithar

சென்னை வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த எண்கணித சோதிடர் அரவழி சித்தர் (42). மனைவி தனலட்சுமி. இவன், அதே பகுதியில் இரவு நேர பூஜைகள் செய்வதும், குறிசொல்வதும் தனி வேலையை செய்துவந்தான் இந்த சோதிடன்.

இந்நிலையில் சிபிசிஐடி பிடியில் ஒரு ஆந்திர சிறுமி சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வியாசர்பாடியைச்சேர்ந்தவர் என்பதும் அரவாழி சித்தர் மூலமாக செண்ட்ரல் கடிகார கடை வைத்திருக்கும் சுரேஷ் என்பவனிடம் விற்கப்பட்டேன். அவன் என்னை ஒரு விபச்சார கும்பலிடம் விற்றுவிட்டான். இது தவிர சென்னை மெரினா கடற்கரையில் பல ஆட்களுடன் அவன் மூலம் கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளிவிடப்பட்டேன்.

இப்படி என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. திருப்பதியில் ஆந்திராவிற்கு சென்று தலைமறைவாக வாழலாம் என்று முடிவு செய்து ரயில் மூலம் திருப்பதி சென்றேன். அங்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் திருப்பதி கோயில் வாசலில் படுத்துக்கொண்டேன். யாராவது உணவு கொடுத்தால் அதை சாப்பிட்டு ஓரளவு பசியாற்றி வந்தேன். திடீரென அங்கு படுத்திருந்தவர்களை போலீசார் விரட்டியபோது நானும் சிக்கிக் கொண்டேன். அவர்கள் என்னை தமிழ்நாடு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அரவழி, சுரேஷ் அவர்களுடன் இருந்து விபச்சாரத்தில் தள்ளிய 5 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் உள்பட 9 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டவர்களின் ஜாமீன் மனு கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரவாழியின் ஜாமீன் மனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அரவாழியின் மனைவி தனலட்சுமி தன் வீட்டில் கழிவறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அம்புலன்ஸ் வருவதற்குள் தனலட்சுமி எரிந்து கரியாகிவிட்டார்.

அல் கொய்தா தலைவரை அமெரிக்க ராணுவம் சுட்டுப் பிடித்தது!!

al

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சோமாலியாவின் அல் சபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் பலியாகினர். அல் சபாப் இயக்கம் அல் கொய்தா தீவிரவாதிகளுடன் மிகவும் நெருக்கமானது.

எனவே அப் சபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அமெரிக்காவின் நேவிசீல்´என்ற சிறப்பு அதிரடிப்படை ஈடுபட்டது. லிபியா மற்றும் சோமாலியாவில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடந்த வேட்டையில் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தளபதி அனாஸ் அல் லிபி என்கிற நஜிஅப்துல் ஹமீத் அல் ரூகை (49) என்பவன் பிடிபட்டான்.

இவனை பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை போன்று அமெரிக்க அதிரடிப்படை சுட்டுப்பிடித்த தகவல் வெளியாகியுள்ளது.

திரிபோலியில் அனாஸ் அல் லிபி பதுங்கியிருந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த நேவிசீல் படையினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதை தொடர்ந்து அங்கு அல் லிபிக்கு பாதுகாப்பாக இருந்த அல்கொய்தா தீவிரவாதிகளும் சுட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதன் பிறகு அவர் பிடிபட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிடிபட்ட அல் லிபி கடந்த 1992ம் அண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் நடந்த அமெரிக்க தூதரகம் குண்டு வெடிப்பில் தொடர்புடையவன். இச்சம் பவங்களில் 224 பேர் பலியாகினர். எனவே இவனது தலைக்கு அமெரிக்கா 30 கோடி பரிசு தொகை அறிவித்து இருந்தது.

ஆனால் அல் லிபியை சுட்டுபிடித்த சம்பவம் லிபியா மக்களிடையே அதிர்ச்சியை யும் வியப்பையும் ஏற் படுத்தியுள்ளது. மேலும் இதற்கு விளக்கம் அளிக் கும்படி அமெரிக்காவிடம் லிபியாவின் இடைக்கால அரசு விளக்கம் கேட்டுள்ளது.

ஜனாதிபதி முன் சி.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!(படங்கள்)

வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரச தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.அஸ்வர், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சத்தியப்பிரமாண வைபவம் நிறைவடைந்ததும் வடமாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மரத்தினால் செய்யப்பட்ட அழகிய பிள்ளையார் சிலை ஒன்றினை அன்புப் பரிசாக வழங்கியுள்ளார்.

4 5 6 7 8 9 11 12 10 13 14 15 16