வடமேல் மாகாணத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 705188 (66%) வாக்குகளுடன் 34 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 257011 (24%) வாக்குகளுடன் 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐனநாயகக் கட்சி 46114 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 27860 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 19624 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும் வசப்படுத்தியுள்ளன.
மத்திய மாகாணத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 716247 (60%) வாக்குகளைக் பெற்று 36 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.
330815 (27%) வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐனநாயகக் கட்சி 45239 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 29285 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் வசப்படுத்தியுள்ளன.
மலையக மக்கள் முன்னணி 24913 வாக்குகளுடனுடம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17788 வாக்குகளுடன் தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
முன்னாளர் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி நடந்து முடிந்த மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் மூன்றாவது சக்தியாக உருவாகியுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக கூடுதலான வாக்குகளை பெற்று மூன்றாவது அணியாக உருவெடுத்த மக்கள் விடுதலை முன்னணியை நான்காம் அல்லது ஐந்தாம் இடத்திற்கு தள்ளியே மூன்றாவது சக்தியாக ஜனநாயக கட்சி உருவாகியுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு கூடுதலாக ஜனநாயக கட்சி வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஆசனங்கள் சிலவற்றையும் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து கருத்து தெரிவித்த அவர் இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும் அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும் அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரது குழுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த கபே அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களை தடுத்து அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முகமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதலின்போது காயமடைந்த 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ், கன்னடப் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி கன்னட இயக்குநர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் மகேந்தரை விவாகரத்து செய்த நடிகை ஸ்ருதி கடந்த ஜூன் 6ம் திகதி கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் கன்னட பத்திரிகையாளர் சந்திரசூட்டைத் திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த சந்திரசூட்டின் மனைவி மஞ்சுளா இருவரின் திருமணத்தை ரத்து செய்யுமாறு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
என்னுடன் செய்து கொண்ட திருமணத்தை விவாகரத்து செய்யாமல் நடிகை ஸ்ருதியுடன் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளதை ரத்து செய்யுமாறு மனுவில் மஞ்சுளா குறிப்பிட்டிருந்தார். மேலும் கடைசி நாள் வரை நடிகை ஸ்ருதியுடன் திருமணம் செய்து கொள்வது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
நடிகை ஸ்ருதியும் மஞ்சுளாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் நடிகை ஸ்ருதி- சந்திரசூட் திருமணத்தை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு நடிகை ஸ்ருதி, மஞ்சுளா இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் திருமணத்தை ரத்து செய்ததில் வருத்தமில்லை என்று நடிகை ஸ்ருதி தெரிவித்தார்.
பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. லைக் கொடுப்பது என்பது 21ம் நூற்றாண்டில் ஒரு பிரசாரத்திற்கு இணையான அளவுகோலாக கருதப்பட வேண்டும் என்றும் விர்ஜீனியா மாகாண நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய ஷெரீப்கள் சங்கத் தலைவர் பதவிக்கு ஹம்டன் நகர ஷெரீப் பி.ஜே. ரொபட்ஸ் என்பவர் போட்டியிட்டார். அவரது அலுவலக ஊழியர்கள் ரொபட்ஸுக்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஆதரவு கொடுத்தனர். அவரது பேஸ்புக்கிலும் லைக் போட்டனர். இதையடுத்து 6 பேரை வேலையை விட்டு நீக்கிவிட்டார் ரொபர்ட்ஸ்.
இதனால் கோபமடைந்த 6 பேரும் வழக்குப் தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் செய்தது தவறு என்று கூறியது. இதை எதிர்த்தே ஆறு பேரும் மேன்முறையீடு செய்தனர்.
அதில்தான் லைக் போடுவது அடிப்படை பேச்சு சுதந்திரம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தான் வேண்டும் என்றே அவர்களை பணிநீக்கம் செய்யவில்லை என்றும் சரியாக வேலை பார்க்காததாலும் திறமைக் குறைபாடு காரணமாகவுமே இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறியுள்ளார் ரொபட்ஸ்.
திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுவது ஒஸ்கர் விருதுகள். இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்படும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்படும் திரைப்படத்தை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
ஒஸ்கார் பரிந்துரைக்கு தி லஞ்ச் பாக்ஸ், பாக் மில்கா பாக், இங்கிலிஷ் விங்கிலிஷ், மலையாள படமான செல்லுலாய்டு, கமல்ஹாசனின் விஸ்வரூபம், குஜராத்தி படமான தி குட் ரோட் உள்ளிட்ட 22 படங்கள் போட்டியில் இருந்தன.
19 பேர் கொண்ட தேர்வுக்குழு 5 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு தி குட் ரோட் படத்தை ஒஸ்கார் பரிந்துரைக்கு தேர்வு செய்து அறிவித்தது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்படுகிறது.
கியான் கோராவின் இப்படத்திற்கு சிறந்த குஜராத்தி படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறைக்கு கட்ச் பகுதிக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் பாலைவனத்தில் காணாமல் போகிறான். பின்னர் அவனை கண்டுபிடிப்பதே கதையின் மையக்கரு.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இப்படத்தை தயாரித்துள்ளது. 42 வயது கோரியாவுக்கு இது முதல் படம். பாலைவனத்தில் தொலைந்து போகும் 7 வயது சிறுவன் ஆதித்யாவாக கேவல் கட்ரோடியா நடித்துள்ளார். அவரது பெற்றோராக அஜய் கேகி-சோனாலி குல்கர்னி நடித்துள்ளனர்.
குஜராத்தி படம் ஒஸ்கார் விருது பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டதைக் கேட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவை முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலா ஆகியோரும் குத்துவிளக்கேற்றினர். விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது..
இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் பிரமிக்கத்தக்க சாதனையாகும். ஊமைப்படமாக தொடங்கிய சினிமா, பேசும் படம், வண்ணப்படமாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சினிமா கண்டுபிடிக்கும் முன் இசை, ஓவியம் மற்றும் நாட்டியக் கலைகள் மக்களை மகிழ்வித்தன.
100 நாட்கள் ஓடிய படம் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும். பிற கலைகளைவிட கவர்ந்திழுக்கும் வலிமை திரைப்படத்துக்கு அதிகம். நடிகர்கள், நாடக கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்ள். புகைப்படக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள் என எண்ணற்றோரின் பங்கு இந்திய திரையுலகிற்கு மகத்தானது.
ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, தங்கவேலு, நாகேஷ், சத்யஜித்ரே, திலீப் குமார், பீம்சிங், எம்.ஜி.ஆர், சங்கர், ஏ.பி.நாகராஜன், என்.எஸ்.கே., ஜெமினி, ரங்கராவ் உள்ளிட்ட பலரும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை பரப்பி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளனர்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்போதைய தமிழ் சினிமா எதிரிகளை அழிக்கும் நிலைதான் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக திரைப்படத்துறை மிக சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதே திரைப்படத்துறையின் நோக்கமாக இருக்கவேண்டும். வன்முறை, ஆபாச காட்சிகளை தவிர்த்து திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று அவர் பேசினார்.
பின்னர், இந்திய சினிமாவை நினைவுபடுத்தும் வகையில் காணொளி காட்சி திரையிடப்பட்டது. இதனையடுத்து, பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.சரவணன், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், பிரபு, விவேக், நடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், சௌகார் ஜானகி, மீனா, சிம்ரன், திரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா, இயக்குனர்கள் மகேந்திரன், பி.வாசு, இசையமைப்பாளர் இளையராஜா, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி, கவிஞர் புலமைப்பித்தன், அபிராமி ராமநாதன், ஆர்.பி.சௌத்ரி உள்ளிட்ட பலருக்கும் முதலமைச்சர் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற பேஸ்புக் காதலால் நடந்துள்ள கொடூர கொலையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுகாம்பாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் மற்றும் பாலா தம்பதியினர்,
இவர்களது மகள் சதுர்ஷினி(19), பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.கொம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் யுஜேஷ்குமார்(11) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாலா, வீட்டின் ஹாலில் மகன் யுஜேஷ்குமாரும், படுக்கை அறையில் மகள் சதுர்ஷினியும் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், சதுர்ஷினியையும், அவரது தம்பியையும் அவரது காதலன் முகேஷ்(24) கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று தனிப்படை பொலிசார் முகேசை கைது செய்தனர்.
அவரிடம் தனிப்படை பொலிசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
மேடவாக்கம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் எம்.எஸ்.சி. கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவருடைய தந்தை உன்னிகிருஷ்ணன் கடை நடத்தி வருகிறார். தம்பி ஹரிஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். முகேஷின் தம்பி ஹரிஷ், கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும்போது சதுர்ஷினி அவருடன் படித்து வந்தார். தம்பியை பள்ளியில் விட வரும் முகேஷ் சதுர்ஷினியுடன் நெருங்கி பழகி உள்ளார்.
பேஸ்புக்கில் இருவரும் அடிக்கடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிளஸ்-2 படித்து முடித்ததும் சதுர்ஷினி, பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் சேர்ந்தார். அதே கல்லூரியில் முகேஷ், எம்.எஸ்.சி. கேட்டரிங் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
தீவிரமாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த யூலை மாதம் 18ம் திகதி சதுர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி முகேசை ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சேலையூர் பொலிசில் சதுர்ஷினியின் பெற்றோர் புகார் செய்தனர். திருமணம் முடித்து பொலிஸ் நிலையம் வந்த சதுர்ஷினி, காதல் கணவருடன் செல்வதாக கூறினார்.
சதுர்ஷினி மேஜராக இருந்ததால் அவரின் முடிவின்படி காதல் கணவருடன் செல்ல பொலிசார் அனுமதித்தனர். இந்நிலையில் காதலனுடன் சென்ற சதுர்ஷினியின் மனதைக் கரைத்த பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டனர்.
அதன் பின்னர் முகேசை சந்திக்க சதுர்ஷினி மறுத்து விட்டார். தாய் வீட்டில் இருந்தே கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் சதுர்ஷினியை சந்தித்து பேச முகேஷ் சென்றபோதும் அவரிடம் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சதுர்ஷினி, முகேசை சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம் இதை அறிந்த முகேஷ் சதுர்ஷினியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கேட்டரிங் பணியின் போது இறைச்சி அறுக்க பயன்படுத்தப்படும் பெரிய கத்தியையும், சுத்தியல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வியாழக்கிழமையன்று மாலை சதுர்ஷினி வீட்டுக்கு முகேஷ் சென்றுள்ளார்.
அங்கு அவரும் தம்பியும் மட்டும் தனியாக இருந்தனர். பின்னர் முகேஷ் படுக்கை அறையில் இருந்த சதுர்ஷினியை சராமாரியாக கத்தியால் அறுத்தார். கழுத்து, தலை, நெற்றி உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சதுர்ஷினி பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அவரது தம்பி யுஜேஸ்குமார் முகேசை தடுக்க முயன்றார். அப்போது அவனது தலையில் சுத்தியலால் அடித்தும், கத்தியால் அறுத்தும் கொலை செய்த முகேஷ், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் காதலித்து திருமணம் செய்து விட்டு பெற்றோர் பேச்சை கேட்டு என்னை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் சதுர்ஷினியை கொலை செய்ததாக பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முகேஷ் கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த கியூரியாசிட்டி தனது பணியை தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து அதை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
உயிரினங்கள் வாழ மீத்தேன் வாயு அவசியமாகும் அதில்தான் கார்பன், ஹைட்ரஜன், அணுக்கள் உள்ளன. இவையே உயிரினங்கள் வாழ்வதற்கான மூலக்கூறு ஆகும்.
எனவே அங்குள்ள வான் வெளியில் மீத்தேன் வாயு உள்ளதா என கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டது. ஆனால் மீத்தேன் வாயு இருப்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை 6 தடவை மீத்தேன் குறித்த ஆய்வை கியூரியாசிட்டி மேற்கொண்டது. ஆனால் அவை இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.
இதற்கு முன்பு செவ்வாய் கிரக வான்வெளி காற்றில் 6ல் ஒரு பங்கு மீத்தேன் வாயு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கியூரியாசிட்டி ஆய்வில் 1.3 பங்கு கூட இல்லை என தெரிய வந்துள்ளது.
எனவே செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவுகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்துள்ள படம் ஆரம்பம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகின. பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அடடா ஆரம்பம், ஸ்டைலிஷ் தமிழச்சி ஆகிய பாடல்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்புகின்றன. படத்தின் டிரைலர் வெளியான 1 நாளில் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அஜீத் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். மங்காத்தா படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிக்கிறது, பில்லா-2வில் என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்குனது போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே பலத்த கைதட்டல்களை பெற்றவை.
அதுபோல் இப்படத்திலும் இடம்பெற்றுள்ள சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒருதடவைதான் சாவான் என்ற வசனம் ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
ஆரம்பம்’படத்தின் டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் இன்னும் தணிக்கைக் குழுவினருக்கு போட்டு காண்பிக்கப்படவில்லை. பொதுவாக படம் வெளியாகும் சில தினங்களுக்கு முன்புதான் படம் தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காண்பிக்கப்படும்.
இந்த முறை தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஓரிரு வாரங்களுக்கு முன்பே சென்சாராகி சான்றிதழை தந்தாக வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர். இதனால் விரைவில் தணிக்கைக் குழுவினருக்கு படத்தை காண்பிக்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
தணிக்கை குழுவினர் டிரைலருக்கே யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதால், படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்குமா என்ற அச்சத்தில் படக்குழுவினர் உள்ளனர்.
ஐரோப்பியா நாடுகளுக்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து மத்தியத்தரைக்கடலில் உள்ள இத்தாலி வழியாக மக்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆபிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் சண்டை மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக சிரியா அகதிகள் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு திருட்டுத்தனமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரித்து உள்ளது.
இது குறித்த பிரச்சினைகளை கண்காணித்து வரும் ஐ.நா. அதிகாரி ஜாய் எசெய்லோ கூறுகையில் ஐரோப்பியாவிற்குள் சட்டவிரோதமாக இத்தாலி கடற்கரை வழியாக கடத்திவரப்படுவர்கள் ஐரோப்பிய நாடுகளில் பாலியல் தொழிலும் கட்டாய பணியாளர்களாகவும் ஆக்கப்படும் மோசமான நிலை உருவாகியுள்ளது.
இந்த மோசமான நிலையை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் மக்களை அடிமைகளாக ஆக்கிவருகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் இப்பிரச்சினை குறித்து இத்தாலி அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து இத்தாலி உள்துறை அமைச்சகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை. கடந்த 2010ம் ஆண்டு இதுபோன்று கடத்திவரப்பட்ட 2400 பேரை தடுத்து நிறுத்தியதாக இத்தாலி கூறியுள்ளது.
நடிகர், நடிகைகள் பெயரில் இணையத்தில் வைரஸ் பரப்பப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணையதள பாதுகாப்பு நிறுவனமான மக்கபே சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளான 80க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இந்த ஆய்வை நடத்தியது.
இதில் திரிஷா பெயரில் அதிக வைரஸ் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரிஷா பெயரை கிளிக் செய்ததும் கணனிகள் சேதம் அடைந்துள்ளன. இதுபோல் ரஜினி, கமலஹாசன், சூர்யா, ஆர்யா, விஜய், தனுஷ், ஸ்ரேயா, சமந்தா, ஸ்ருதிஹாசன் பெயர்களிலும் வைரஸ் பரப்பப்பட்டு உள்ளன. இவர்களைவிட திரிஷா பெயரில்தான் விஷமிகள் அதிகளவான வைரஸ் பரப்பி உள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி பேசியதற்காக நடிகர் கருணாஸ் மீது பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கருணாஸ் வீட்டின் முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொலிசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினார்கள்.
ஆனால் கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி முற்றுகையில் ஈடுபட்டார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை பொலிசார் கைது செய்து திருமங்கலத்தில் உள்ள சமூகநல கூடத்தில் வைத்தனர்.
அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் போய் பார்த்துள்ளார். காமராஜரை அவமதித்து பேசவில்லை என்றும் பத்திரிகையில் தவறாக பிரசுரித்துள்ளனர் எனவும் கருணாஸ் மறுப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், காமராஜர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என் மரியாதைக்கு உரியவர்.
அவர் தந்த சத்துணவை சாப்பிட்டுத்தான் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்த நிலைக்கு வந்தனர். அவரைப் பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி மற்றும் டென்னிஸ் வீரர் பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
மேற்குவங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில அரசு விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளது. இதில் கொல்கத்தாவின் செல்லப் பிள்ளையான முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி, சமீபத்தில் யு.எஸ்., ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தாவில் பிறந்த பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களை தவிர 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து கங்குலி கூறுகையில், என் வாழ்க்கையில் இதனை மகத்தான சாதனையாக கருதுகிறேன். இந்திய டென்னிஸ் வீரர் பயசை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்.
வயது என்பது ஒரு எண் மட்டும் தான் என்றும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் படி அவருக்கு ஆலோசனை வழங்குவேன் எனவும் கூறினார்