இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதற்காக தீவிர போராட்டங்களை முன்னெக்கப் போவதாக தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
தி ஹிந்து செய்திதாள் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை இலங்கை நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
இதனை ஆட்சேபித்தே தமது போராட்டங்களை முனைப்புப் படுத்தவுள்ளதாக தமிழக பாம்பன் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த 35 மீனவர்களும் கடந்த 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டினால் சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷர் – அல் – ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின.
ஆனால் ஆசாத் மறுத்து விட்டதால் கிளர்ச்சியாளர்களுக்கு இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன. இதனால் சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியா நாட்டுக்கு ரஷ்யா சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்றன. இதனால் சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா ராணுவம் கடந்த 21ம் திகதி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
ரசாயன குண்டு வீச்சில் நச்சு புகை பரவி 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை ஐ.நா பார்வையாளர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது ராணுவ தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல் 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந்நாட்டில் படக்கூடாது என அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ரஷ்யாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது என ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து சிரியா மீது 72 மணி நேர தாக்குதலை நடத்த அமெரிக்க தலைமையகமான பெண்டகன் திட்டமிட்டு உள்ளது.
சிரியா மீதான தாக்குதலால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக ரஷ்யா பன்னாட்டு அணுசக்தி முகமையக கூட்டத்தில் நேற்று தெரிவித்தது.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி குறிப்பிடுகையில் சிரியா தன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை. அதை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும் என்றார்.
சிரியாவின் உள்நாட்டு சண்டையில் இந்திய முஸ்லிம்கள் பலர் ஈடுபட்டுள்ளதாக இந்தியாவுக்கான சிரியா தூதர் ரியாத் அபாஸ் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ரியாத் அபாசை நேற்று அழைத்து, அவருக்கு கண்டன நோட்டீஸ் அளித்தது.
அப்போது அபாஸ் குறிப்பிடுகையில் நான் இந்திய ஜிகாத்துகளை பற்றி குறிப்பிடவில்லை. துருக்கியிலிருந்து வந்த ஜிகாத்துகளை பற்றி தான் சொன்னேன். சிரியாவுக்கு, இந்தியா நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது என்றார்.
இந்திய, ராஜஸ்தானில் 16 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் அவரது தாயார் அழைப்பதாகக் கூறி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 3 வாலிபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுமியை நிவாரு வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்கள் 3 பேரும் அவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்தனர். இதையடுத்து அந்த வீடியோவை வைத்து மிரட்டியே சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
மேலும் தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் வீடியோவை இணையத்தில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து சிறுமி நடந்தவற்றை தனது தாயிடம் தெரிவித்தார்.
அவர் உடனே இது குறித்து பொலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் பொலீசார் அந்த 3 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அந்த 3 பேரையும் பொலீசார் தேடி வருகின்றனர்.
பேரிச்சம்பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உலர் பழங்களுள் ஒன்று. அத்தகைய பேரிச்சம் பழத்தை பலர் சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் அது மிகவும் இனிப்பாக இருப்பதால்.
பலர் சத்தானது என்று தெரிந்தும் அதனை வெறுப்பார்கள். அத்தகையவர்களுக்கு பேரிச்சம் பழத்தை சாப்பிட ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்னவென்றால் அதனை அல்வா போன்று செய்து சாப்பிடலாம்.
இதனால் அதிகப்படியான இனிப்பு தெரியாமல் இருப்பதோடு, உடலுக்கு பல சத்துக்களும் கிடைக்கும். இப்போது அந்த பேரிச்சம் பழ அல்வா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
முதலில் சூடான பாலில் பேரிச்சம் பழத்தை போட்டு 3 மணிநேரம் ஊற வைத்து நன்கு தடிப்பான பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில், 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தைப் போட்டு சீனி சேர்த்து, நெருப்பை குறைத்து வைத்து சீனி கரையும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அத்துடன் இன்னும் சிறிது பால் சேர்த்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி, நெய் பூசிய தட்டில் ஊற்றி, குளிர வைத்து, துண்டுகளாக்கி பரிமாறினால் சுவையான பேரிச்சம் பழ அல்வா ரெடி!!!
அமெரிக்காவில் கொலராடோ மாகாணம் லாங்மோன்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் லால். இந்தியரான இவருடைய மகள் பிரேமிளா லால் (18).
இவர் ஓட்டப்பந்தய வீராங்கனை. இவர்களுடைய குடும்ப நண்பர் நெரிக் காலே (21). இவர் பிரேமிளா குடும்பம் விட்டுச் சென்ற செய்த வீட்டில் தங்கி இருந்தார்.
அந்த வீட்டுக்கு நெரிக் காலேவுக்கு தெரியாமல் பிரேமிளா தன் ஒன்றுவிட்ட சகோதரியுடன் சென்றார். நெரிக்குக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த அவர் அங்குள்ள ஒரு சிறு அறையை திடீரென திறந்து கொண்டு கூச்சலிட்டபடி நெரிக் முன்பு தோன்ற முயன்றார்.
திடீர் சத்தத்தால் பீதி அடைந்த நெரிக் யாரோ மர்ம ஆசாமி புகுந்து விட்டதாக கருதி தனது துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டார். இதில் குண்டு பாய்ந்த பிரேமிளா, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக நெரிக் மீது இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அஜாக்கிரதையாக ஆபத்தை விளைவித்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருமண விருந்து உபசரிப்பில் அலட்சியம் காட்டியதால் மனமுடைந்த பெண், மகளுடன் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மல்லிகா(48). இவர்களது உறவினர் காளியப்பன் என்பவரது திருமணம் நேற்று காலை, சாத்தனூர் அடுத்த, தேசூர்பாளையம் கிராமத்தில் நடந்தது.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்களுடன் மல்லிகா குடும்பத்தினரும் அங்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு விருந்து நடந்தபோது தகராறு ஏற்பட்டது. மல்லிகாவையும் அவரது உறவினர்களையும் முறையாக உபசரிக்காமல் திருமண வீட்டார் அலட்சியப்படுத்தி உள்ளனர்.
வேதனையடைந்த மல்லிகா அவரது மகள் வள்ளி(25), மல்லிகாவின் தம்பி ராஜமாணிக்கம்(40) ஆகியோர், ஊருக்கு புறப்பட்டனர். திருமணத்துக்கு வந்தவர்கள் தடுத்தும் மல்லிகா தரப்பினர் கேட்காமல் சென்று விட்டனர்.
தேசூர் பாளையத்தில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தில் மல்லிகா உட்பட 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். மூவரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.
வழியில் வள்ளி இறந்தார். வைத்தியசாலையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற பின் புதுச்சேரி வைத்தியசாலைக்கு மல்லிகாவை கொண்டு சென்றபோது, அவரும் இறந்தார்.
ராஜமாணிக்கம் புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சாத்தனூர் பொலிசார் விசாரிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (புதன்கிழமை) வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடமகனசபைக்கான வவுனியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் பிரசாத் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
நாளை காலை 11 மணியளவில் வவுனியா கண்டிவீதியில் வரவேற்பு வைபவம் நடைபெறுவதோடு தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் முகமாகவே இப்பொதுக்கூட்டம் நடைபெறுமெனவும் பிரசாத் தெரிவித்தார்.
விளையாட்டு ஹெலிகொப்டர் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் புரூக்ளின் நகரை சேர்ந்த ரோமன் பிரோசெக்(வயது 19) குயின்ஸ் பகுதியில் உள்ள கட்டுமானம், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை குறித்து படித்து வருகிறார்.
இவருக்கு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் விளையாட்டு விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்றால் அதீத பிரியம். எனவே ரிமோட் கன்ட்ரோல் மூலம் தானே இயங்கும் ஹெலிகொப்டர் ஒன்றை வடிவமைத்தார்.
இதனை கடந்த 5ம் திகதி எடுத்துக் கொண்டு புரூக்ளின் நகரில் உள்ள கால்வெர்ட் பூங்காவுக்கு சென்றார். இதை உற்சாகமாக பறக்கவிட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது.
வானில் தாறுமாறாக சுழன்றபடி பூமராங் போல விட்ட இடத்துக்கே ஹெலிகாப்டர் திரும்பி வேகமாக பறந்து வந்தது.
சுதாரிப்பதற்குள் ரோமன் தலையில் ஹெலிகாப்டர் பயங்கரமாக மோதி கீழே விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ரோமனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
தமிழில் அறிமுகமாகிறார் முன்னாள் மிஸ் இந்தியா வானியா மிஷ்ரா. ரஜினி, கமல், சிரஞ்சீவி நாகர்ஜீன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஸ் கிருஷ்ணா.
இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் நடிக்கவுள்ளார். நாயகியாக 2012 மிஸ் இந்தியா வானியா மிஷ்ரா அறிமுகமாகின்றார்.
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் சமூகத்துடன் நேற்று திங்கட்கிழமை இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வு பெற்ற 107 முன்னாள் போராளிகளே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 101 முன்னாள் ஆண் போராளிகளும் 06 பெண் போராளிகளும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய வெலிகந்தை மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வந்தவர்கள் ஆவர்.
வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 75 பேரும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 32 பேரும் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 11 ஆயிரத்து 651 பேர் இதுவரையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 339 பேர் இன்னும் புனர்வாழ்வு பெற்றுவருகின்றனர் என்று சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.வித்தானகே தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வவுனியா வைத்தியசாலை அத்தியசட்சகர் சத்தியமூர்த்தி, புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஜேர்மனியில் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி தனது வீட்டிலேயே ஆண் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார்.
குழந்தையின் பிறப்பு குறித்து மருத்துவமனை பதிவேட்டில் பதிவதற்காக குறித்த நபரிடம் குழந்தையின் தாயார் பெயரை கேட்டுள்ளனர். ஆனால் அந்தக் குழந்தைக்கு தாய் இல்லை தந்தை மட்டுமே என்று அக்குழந்தையின் தந்தையான திருநங்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் இவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் உள்ளது.
திருநங்கையான நபர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செல்களை தானமாக பெற்றதன் மூலம் இவர் குழந்தை பெற்றுள்ளார் என பிரபல பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இதேபோன்று அமெரிக்காவில் Thomas Beatie என்பவர் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அஜித் நடித்த பில்லா2 படத்தில் நாயகியாக நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய நாயகருடன் நடித்து விட்டதால், ஓவர் பில்டப் கொடுத்தார்.
ஆனால் படத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அடுத்து படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதனையடுத்து சென்னைக்கும் கேரளாவுக்கும் அலைந்து கொண்டிருந்தவர் பின் கேரளாவிலேயே தங்கி விட்டார். இந்நிலையில் தான் நதிகள் நனைவதில்லை என்றொரு படத்துக்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வரப்பட்டார் பார்வதி.
அந்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கும் முன்பே பப்ளிசிட்டி செய்து கொண்டார். மேலும் படத்தின் கதை சொல்லப்பட்டு சம்பள பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரே செக்காக 20 லட்சம் தர வேண்டும் என்று தடாலடியாக கூறிவிட்டாராம்.
இதனால் ஆடிப்போன படாதிபதிகள் சத்தமே இல்லாமல் பார்வதியை கழட்டிவிட்டு வேறொரு நடிகையை புக் செய்து விட்டார்களாம். தொடர்ந்து படப்பிடிப்பும் நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறதாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகீர்கான் தென் ஆப்ரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். உடற்தகுதி இல்லாததால் கடந்த சில தொடர்களில் ஷகீர்கான் இடம்பெறவில்லை.
இதனையடுத்து தனது உடற்தகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரான்ஸ் நாட்டில் 6 வாரம் பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது தனது பந்துவீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதற்காக தென் ஆப்ரிக்காவுக்கு சென்று பயிற்சி பெற உள்ளார்.
கடந்த 6ம் திகதியே தென் ஆப்ரிக்கா செல்ல முயன்றும் விசா கிடைக்காத காரணத்தால் முடியாமல் போனது. அங்கு கேப்டவுன் சென்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கரி கிறிஸ்டனிடம் பயிற்சி எடுக்கிறார்.
3 வாரம் அவரிடம் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்வி விவகாரம் குறித்து விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.
பாடசாலை வகுப்பறைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப கருவிகளைத் தவிர்ந்த ஏனைய, தொழிற்நுட்ப சாதனங்கள் பாடசாலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இவ்வாறு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவ மாணவியரின் குணவியல்புகள் பாதிக்கப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பேயோட்டும் சத்தத்தால் ஒரு நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தென்மேற்கு பகுதியில் உள்ள செண்ட் அன்டனி லுமிக்ஸ் பகுதியில் 9.30 மணியளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தால் அதிர்சியுண்ட மக்கள் பொலிசில் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில் ஒரு கட்டிடத்தில் இருந்து வந்த சத்தம் அது அங்கே சென்று பார்த்ததில் சிலர் பேயோட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்பு பொலிசார் அந்த இடத்தில் இருந்து திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் ஒருவர் கூறுகையில் நாங்கள் அந்த பேயை கைது செய்யவில்லை. ஏனெனில் அந்த பேயானது யாரையும் கொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நயன்தாராவையும் ஆர்யாவையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவுகின்றன. ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தார்கள். தற்போது ராஜாராணி படத்திலும் சேர்ந்து நடிக்கின்றனர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நயன்தாராவும் ஆர்யாவும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படங்களை சமீபத்தில் வெளியிட்டனர். பிறகு அது ராஜா ராணி பட விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டது என கூறினர். இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள் என நயன்தாரா ஆர்யா மீது சிலர் எரிச்சலும் பட்டார்கள்.
நயன்தாராவுடன் இணைத்து வரும் செய்திகளுக்கு ஆர்யா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது..
ராஜா ராணி படத்தில் நயன்தாராவும் நானும் கணவன்–மனைவியாக நடிக்கிறோம். படத்தில் எங்களின் திருமண காட்சியொன்று உள்ளது. அதை படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தினர். இது நல்ல யோசனையாகவே எனக்கு பட்டது.
எங்களை இணைத்து வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. என்னைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வெளியாகும் போது நான் சினிமாவில் இன்னும் இருக்கிறேன் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.
பிரபலமாக இல்லாதவர்களை கண்டு கொள்ளமாட்டார்கள். நான் எதையும் மறைக்க மாட்டேன். காதல் ஏற்பட்டால் உடனே ரசிகர்களுக்கு தெரிவித்து விடுவேன்.
சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ராணியாக போகும் பெண்ணை இதுவரை நான் கண்டுபிடிக்கவில்லை.
பெற்றோர் நிச்சயித்து நடக்கும் நிறைய திருமணங்கள் ஈகோ, தகராறு காரணங்களால் நன்றாக இல்லை. அந்த கரு ராஜா ராணி படத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கதை மிகவும் பிடித்தது. வசனங்களும் சிறப்பாக உள்ளன. இதில் துறுதுறு இளைஞனாகவும், கணவனாகவும் இரு கெட்டப்பில் வருகிறேன் என்று ஆர்யா கூறினார்.