பிரிட்டனில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது. பிரிட்டனின் பிளைமவுத் பகுதியை சேர்ந்த 16 மாதக் குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.
இந்த குழந்தையின் தாய் சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பல்கனிக்கு சென்று அங்கிருந்த கம்பி வழியே கீழே விழுந்தது.
குழந்தையின் அலறலைக் கேட்ட தாய் பதறி அடித்துக் கொண்டு வந்தார்.
ஆனால் குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஆனால் இதற்கு உள்நாட்டில் எதிர்கட்சி தரப்பிலும் ரஷ்யா மற்றும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து ஒபாமா கூறுகையில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா நாட்டை ஐயத்துடனும் அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனித்து வருகிறோம்.
சிரியாவிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை பன்னாட்டு சமூகத்திடம் ஒப்படைக்க சிரியா அரசை வலியுறுத்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம்.
இதற்கு சிரியா ஜனாதிபதி உறுதியளிப்பாரேயானால், அந்நாட்டின் மீதான தாக்குதல் திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்படும். இந்த முடிவு எனது தேசிய நலனை பொறுத்தே அமையும். சண்டையில்லாமலே இந்த பிரச்சினை முடியும் என்று நான் நினைக்கிறேன்.
அமெரிக்க மக்களிடம் நேரிடையாக பேசிய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய போய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி ஆகிய இருவருக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது . இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 14 அன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.
திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தென் ஆப்ரிக்க அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஹசீம் அம்லாவுக்கு விருது வழங்கப்பட உள்ளது. தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபையின் சார்பிலேயே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் சிறந்த வீரராக அம்லா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தவிர சிறந்த டெஸ்ட் வீரர், களத்தில் சிறப்பான அணுகுமுறைக்கான வீரர் உள்பட மொத்தம் 4 விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டி சிறந்த வீரராக டிவில்லியர்ஸ் தேர்வாகியுள்ளார். 20- 20க்கான சிறந்த வீரர் விருதை ஸ்டெயின் தட்டிச்சென்றார். அறிமுக வீரர் விருதுக்கு கெய்ல் அபோத் தெரிவாகி உள்ளார்.
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை விட்டு விட்டு செவ்வாய் கிரகத்தில் குடியேற மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மார்ஸ் வன் என்ற நிறுவனம், 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே செவ்வாய் கிரகம் செல்ல விரும்புபவர்களை அழைத்து செல்ல எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஏராளமானோர் செவ்வாய் கிரகம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 2,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் செல்வதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்து குறித்த நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா(47,654), இந்தியா(20, 747), சீனா(13, 176), பிரேசில்(10, 289), பிரிட்டன்(8,497), கனடா(8,241), ரஷ்யா(8,197) மற்றும் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டினரும் இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் உள்ளனர்.
இன்னும் 2 ஆண்டுகளுக்கு பல்வேறு சுற்றுகளில் தெரிவு குழுவினர் ஆய்வு செய்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தகுதியானவர்களை இந்நிறுவனம் தெரிவு செய்ய உள்ளது.
மேலும் 2ம் சுற்று நேர்காணல் 2014ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்றும், நேரில் பேட்டி கண்ட பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்பின்னர் 2015ம் ஆண்டு முதல் அவர்களுக்கு முழு நேர பயிற்சி அளிக்கப்படும்.
இதனை தொடர்ந்து 2023ல் இந்த குழுவில் இருந்து சிலர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கதாபாத்திரம் சூப்பர் மேன். இவரைப் போன்று சாகசங்களை செய்ய வேண்டும் என பலரும் விரும்புவர்.
இதுபோன்று முயற்சி செய்தவர் தான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்பட் சாவேஸ்(35).
இவருக்கு 5 வயதாக இருக்கும் போது சூப்பர் மேன் கதாபாத்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளார். பின் அதுபோன்றே தானும் மாற வேண்டும் என்பதற்காக இதுவரையிலும் 4,400 பவுண்டுகளை செலவழித்துள்ளார்.
மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது சூப்பர்மேன் ஆடைகளை அணிந்தும், தலையில் ஜெல் தடவி தனித்துவமாக தெரியும் வகையில் செல்வதும் வழக்கமாம்.
குறிப்பாக இதற்கென்று பிரத்யேக அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டுள்ளார். அதாவது மூக்கு அறுவை சிகிச்சை, தோல் வெண்மை நிறமாக மாறுதல், தாடை மறுசீரமைப்பு, உதடு சமன்செய்தல் மற்றும் தோள்கள் சீரமைப்பு சிகிச்சை உட்பட 13 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக சூப்பர்மேன் போன்று தன்னை மாற்றி கொண்டு வந்துள்ள இவர், அதனுடன் சிறு குழந்தைகளுக்கு நல்ல கதைகளை போதிக்கும் பணியை மேற்கொள்வதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் தென் ஆப்ரிக்க வீரர் ஹசீம் அம்லா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் சந்தர்போலும், தென் ஆபிரிக்காவின் டி வில்லியர்சும் இடம்பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆபிரிக்க வீரர்களான டேல் ஸ்டெயின், பிளாந்தர் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.
இந்திய அணியின் அஸ்வின் 8வது இடத்தில் உள்ளார். அதேசமயம், சிம்பாவேக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அஜ்மல் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி ஆரம்பமானது.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக ஆரம்ப விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து வந்தனர்.
மேலும் இந்த ஆண்டுப் போட்டியில் பிகினி உடைக்கும் குட்பை சொல்லியுள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.
முன்னதாக இந்த அழகிப் போட்டியை ஜகார்த்தா அருகே நடத்துவதாக இருந்தனர். ஆனால் ஆபாசமான இந்தப் போட்டியை இங்கு நடத்தக் கூடாது என்று முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பாலி தீவுக்கு போட்டியை மாற்றி விட்டனர் அமைப்பாளர்கள். போட்டியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை பாலி தீவில் நடந்தது. இதில் கண்கவர் அழகிகள் அணிவகுத்தனர். ஆனால் கவர்ச்சி மிகவும் குறைவாகஇருந்தது.
அனைத்து அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையைத் தேர்வு செய்திருந்தனர். மேலும் பாலி தீவின் பாரம்பரிய நடனத்தையும் அழகிகள் ஆடிக் காட்டியது இந்தோனேசிய மக்களுக்கு வைக்கப்பட்ட மாபெரும் ஐஸாக அமைந்தது.
தொடக்க விழாவைத் தொடர்ந்து அன்று மாலை கேட்வாக் நிகழ்ச்சி நடந்தது. அதில் அதற்குகரிய உடையில் அழகிகள் கலக்கினர். இந்தோனேசிய கலைஞர்களின் இசை நடனத்துடன் கூடியதாக தொடக்க விழா இருந்தது.
அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்iளிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த போது தம்மை சந்தித்த சிலர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பழிவாங்கப்படுவதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த துல்லியமான தரவுகள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து சரியான தகவல்களை வெளியிடுமாறு கோருவதாக ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐபில் போட்டித் தொடர் அல்லது தொடரின் சில போட்டிகள் இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு வெளியில் இலங்கை அல்லது பங்களாதேஷ் அல்லது இவ்விரு நாடுகளிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய லோக்சபா தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஐபில் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடாத்தப்படுதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக் கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் காலத்தில் படையினர் முகாம்களுக்குள் வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பணிகளில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் இராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் சுயாதீனமான முறையிலும் நீதியானதாகவும் நடத்தப்பட வேண்டுமாயின் படையினர் முகாம்களில் வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என சம்பந்தன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மலைநாட்டின் ஹட்டன் டிக்கோயா பெருந்தோட்டத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 100க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தோட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் உற்சவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நூறுக்கும் மேற்பட்ட உணவு பொதிகள் அடியார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த உணவு காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையால் இதுவரை சிறுவர்கள் உட்பட்ட நூறுக்கும் மேற்பட்டோர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாந்தி வயிற்றோட்டம், மயக்கம் என்ற குறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பேரவை வழக்குத் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திற்கு எதிராக உச்ச நிதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக சட்டத்தரணிகள் பேரவையின் அழைப்பாளர் கபில கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டுவோர் அரசியல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதாக வாக்களிக்க வேண்டியது அவசியமானது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் அரசியல் அமைப்பிற்கு புறம்பானது. தனி இராச்சிய கோரிக்கையை முதனிலைப்படுத்தி கூட்டமைப்பு கொள்கைப் பிரடகனத்தை வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரம் வடக்கு கிழக்கு மீள இணைவு உள்ளிட்ட பல்வேறு அரசியலமைப்பிற்கு முரணான விடயங்கள் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றியீட்டினால் வடக்கு மாகாண மக்களின் ஆணையை சர்வதேச சமூகத்திற்குக் காண்பித்து தனி இராச்சியமொன்றை அமைக்கும் முனைப்புக்களை கூட்டமைப்பு மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செத்சிறி பாயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.