300 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது!!

wedding

சத்தீஸ்கர் மாநிலத்தில் 300 பெண்களை திருமணம் செய்த நபர் பொலிஸில் சிக்கியுள்ளான்.

ராஜ்நாத்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவன் விஜய் கஜபியே, 47. இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு முறைப்பாடுகள் சென்றன.

கலெக்டர் உத்தரவின்படி பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி நபர் 300 திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவனை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து, பொலிஸ் அதிகாரிகள் கூறியதாவது..

சத்தீஸ்கர் மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதனால் வேறு சாதியைச் சேர்ந்த பெண்களை பதிவுத் திருமணம் செய்யும் விஜய் அரசின் உதவித் தொகையைப் பெற்றவுடன் அதில் பாதியை திருமணம் செய்த பெண்ணுக்கும் மீதித் தொகையை தனக்கு உதவிய அரசு ஊழியர்களுக்கும் கொடுத்து விட்டு சான்றிதழை கிழித்து எறிந்துவிடுவான்.

பின் வேறு மாவட்டத்திற்கு சென்று மீண்டும் வேறு பெண்ணைத் திருமணம் செய்வான். இப்படியே 300 பெண்களை மணந்து பணத்தை சுருட்டியுள்ளான்.

அதற்குத் தேவையான பெயர் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை போலியாக தயாரித்து மோசடி செய்வான். இப்படியே 300க்கும் மேற்பட்ட பெண்களை இவன் திருமணம் செய்துள்ளான்.

இவன் தங்கியிருந்த இடத்திலிருந்து போலி ரப்பர் முத்திரைகள், லெட்டர் பேட், சான்றிதழ்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மனநலம் பாதித்த, ஊனமுற்ற பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!!

sexual_assault

இந்தியாவின் ஷீரடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷீரடியில் உள்ள அஹ்மத்நகரில் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று அவரது வீட்டிற்கு அருகிலிருந்து கடத்தப்பட்டார்.

அப்பெண்ணை கடத்திய 4 பேர் கொண்ட அந்த கும்பல் அவரை அப்பகுதில் உள்ள ஒரு வயலுக்கு கொண்டுசென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது.

32 வயதான அப்பெண்ணை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்துக்கொண்டிருந்த போது வயலில் அப்பெண் மயங்கிய நிலையில் உள்ளதாக சில கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற குடும்பத்தினர் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பிறகு தனது சகோதரியின் உதவியோடு நடந்தவற்றை குடும்பத்தினரிடம் அப்பெண் தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் பொலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் தலைமறைவாகியுள்ள 4 பேரையும் பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மாவோயிஸ்ட் இயக்கத்தை பலப்படுத்த 10 000 சிறுவர்களுக்கு பயிற்சி!!

childsoldiers

இந்தியாவில் மாவோயிஸ்ட் அமைப்பை பலப்படுத்த 10 ஆயிரம் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்ட் அமைப்புள்ள சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட்,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு குழந்தைகள் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மாவோயிஸ்டுகளுக்கு சமையல் பணிக்காக சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

எனினும் 10 முதல் 15 வயது வரை உள்ள 4 ஆயிரம் சிறுவர், சிறுமிகளுக்கு துப்பாக்கி சுடவும், ஆயுதங்களை கையாளவும் மாவோயிஸ்ட்டுகள் சிறப்பு பயிற்சி அளிப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை கண்காணிக்கவும் சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சத்தீஸ்கர் மாநிலத்தின் சில மாவட்டங்களில், மாவோயிஸ்டுகள் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு ஐநா அறிக்கை தகவல் வெளியிட்டது.

இதுபோன்று எவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது

அதே நேரத்தில் கடந்த ஆண்டு குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர்களை மாவோயிஸ்டுகளும் சல்வா ஜுடும் அமைப்பும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்,சிறுமியர்களின் உரிமையைப் பாதுகாக்கும் திட்டம் ஆந்திரப்பிரதேசம்,அஸ்ஸாம், சத்தீஸ்கர்,பீகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம்!!

diabetes

இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிராமப் புறங்களைச் சேர்ந்த 10 வீதமானவர்களும், நகர்ப் புறங்களைச் சேர்ந்த 15 வீதமானவர்களும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை உணவு, துரித உணவு அதிகளவில் பயன்படுத்துவதனால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதிகமானவர்கள் எவ்வித உடற் பயிற்சிலும் மேற்கொள்வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைமை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய தேர்தல் : டோனி அபோட் அபார வெற்றி!!

aus

அவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் வேட்பாளரான டோனி அபோட் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழிற்சங்கக் கட்சியினை மக்கள் இந்தத் தேர்தலில் முற்றிலும் ஒதுக்கியுள்ளனர். சென்ற முறை நடந்த தேர்தலில் தங்களுக்கு கிடைத்த ஆதரவினை பெருக்கிக் கொள்ளாமல் கொந்தளிப்பான ஆட்சியை அளித்த தொழிற்சங்க கட்சியினை இத்தேர்தலில் மக்கள் பழி வாங்கியுள்ளனர்.

ரோட்ஸ் தீவின் அறிஞரும்,பயிற்சி மதகுருவும் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான அபோட் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்துவதாக வாக்களித்துள்ளார்.

வரிகளைக் குறைப்பதாகவும், அவுஸ்திரேலியாவிற்குத் தஞ்சம் தேடி படகு மூலம் வரும் மக்கள் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஆட்சிக்கு வந்த ஜூலியா கில்லார்டை எதிர்த்து கெவின் ருத் இறக்கப்பட்டார். ஆயினும்,இந்த வருடம் ஜூன் மாதம்தான் அவரால் ஜூலியாவை உட்கட்சி தேர்தலில் வீழ்த்தி பதவிக்கு வரமுடிந்தது.

ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக நடைபெற்ற கட்சிப் பூசலில் தொழிற்சங்கக் கட்சி எதிரணியிடம் தோற்றுள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் பிரதமரான பாப் ஹாக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

37 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிருகங்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!!

img025

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா எண்ணை வளம் மிகுந்த நாடு. தலை நகர் கராகஸ் பகுதியில் கற்கால ஆராய்ச்சி மேற்கொள்ளும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிக்காக பூமியை தோண்டினார்கள்.

அப்போது அங்கு பல இராட்சத வடிவிலான மிருகங்களின் எலும்பு கூடுகள் புதைந்து கிடந்தன. அவை ஒரு பஸ் அளவுக்கு மேல் பெரிதான முதலை, பெரிய பற்களை கொண்ட புலி உள்ளிட்ட மிருகங்களின் எலும்பு கூடுகளாகும்.

அவற்றை வெனிசுலா அறிவியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இவை 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இப்பகுதி வனப்பகுதியாக இருந்து இருக்கலாம். இங்கு இராட்சத வடிவிலான விலங்குகள் வாழ்ந்திருக்கலாம். அவை இயற்கை மாற்றத்தின் காரணமாக பேரழிவுக்கு சென்று இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த விலங்குகளின் எலும்பு கூடுகள் எண்ணை படிவங்களில் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் இராணுவத்தினரின் தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி!!

nigeria

நைஜீரியாவில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் என்ற தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இவர்கள் போர்னோ என்ற இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டு 20 அப்பாவி மக்களை கொன்றனர்.

இதற்கு ஹெலிகப்டர் படையுடன் சென்று இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.

அதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை இராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மீண்டும் மாலைதீவுக்கு ஜனாதிபதியானர் முகமது நஷீத்!!

mal

இந்திய பெருங்கடல் நாடான மாலைதீவில் மமூன் அப்துல் கயூம் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது.

அதில் மாலைதீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், இராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பதவி விலகினார். துணை ஜனாதிபதியாக இருந்த முகமது வகீத் ஜனாதிபதியானர்.

இந்நிலையில் 2வது ஜனநாயக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய ஜனாதிபதி முகமது வகீத், முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், முன்னாள் ஜனாதிபதி கயூமின் சகோதரரும் மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மாலைதீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரம் ஆகும். 192 தீவுகள், 40 ரிசட்டுகள் ஆகியவற்றில் 470 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 7.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஜனாதிபதி முகமது வகீத் ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார். வரிசையில் நிற்க சொன்னதால் அவருடைய மனைவி வாக்களிக்கவில்லை.

பிறகு நிருபர்களிடம் பேசிய முகமது வகீத் தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இத்தேர்தலில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

2 ஆயிரத்து 229 உள்ளூர் பார்வையாளர்களும், 102 சர்வதேச பார்வையாளர்களும், ஆயிரத்து 342 அரசியல் கட்சி பிரதிநிதிகளும், சுமார் 2 ஆயிரம் உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்த தேர்தலை கண்காணித்தனர்.

அத்துடன் இந்திய உயர்மட்ட குழுவும் தேர்தல் பணிகளை பார்வையிட்டது. இக்குழுவில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் ஜே.எம்.லிங்டோ,பி.பி.டாண்டன், என்.கோபாலசாமி, மாலைதீவுக்கான முன்னாள் இந்திய தூதர் எஸ்.எம்.கவாய் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

மேலும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் குழுவும் மாலைதீவு தேர்தல் ஆணையகமும் இணைந்து மென்பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்தது.

மாலை 4 மணிக்கு முடிவடைந்த வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் அதிக வாக்குகளால் பெற்று வெற்றி பெற்றார். 18 மாத இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக தேடப்பட்டபோது அவர் மாலைதீவில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ஜப்பானுக்கு!!

2020

சுவிஸ்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் சபையின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வரும் 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தினை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
இதில் துருக்கியின் இஸ்தான்புல் நகரைத் தோற்கடித்து ஜப்பானின் டோக்கியோ நகரம் இந்த வாய்ப்பினைப் பெற்றது.

வாக்கெடுப்புக்கான முதல் சுற்றில் கனடாவின் மாட்ரிட் நகரத்துடன் சரிசமமான வாக்குகளைப் பெற்ற இஸ்தான்புல் பின்னர் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்குத் தகுதி பெற்றது.

இதன்பின்னர் நடந்த தகுதிச் சுற்றில் இஸ்தான்புல் பின்னுக்குத் தள்ளப்பட்டு டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் சபையின் தலைவர் ஜக்குவஸ் ரோக் அறிவித்தார்.

ரஷ்யாவின் சென்ட் பீட்டர் பேர்கில் நடைபெற்ற ஜி20 கூட்டத் தொடருக்குப் பின்னர் இந்தக் கமிட்டியின் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே கலந்துகொண்டார்.

சுனாமியினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் புகுஷிமா அணு உலை குறித்த உறுப்பினர்களின் அச்சத்தை ஜப்பானியப் பிரதமர் நிவர்த்தி செய்தார்.

டோக்கியோவிலிருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணு உலையானது தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், அதனால் டோக்கியோ நகரத்திற்கு எந்த ஆபத்தும் நேரிடாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியினை நடத்த டோக்கியோ தேர்வு செய்யப்பட்டதை தொலைக்காட்சி வாயிலாக அறிய நேரிட்ட ஜப்பானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

கடந்த 2016ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவிடம் இந்த வாய்ப்பை இழந்தபின் டோக்கியோ இந்த முறை நேரிடையாக இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. கடந்த 1964ம் ஆண்டு முதல்முறையாக டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.

தற்போது, 2020 ஆண்டிற்கான போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதன் மூலம் ஆசிய நகரங்களிலேயே இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெருமையை டோக்கியோ பெறுகின்றது.

தபால் மூல வாக்கெடுப்பு நாளையும் நாளை மறுதினமும்!!

ele

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களில் இடம்பெறவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ஏ.ஜி.விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களுக்கும் இன்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும்.

எதிர்வரும் 13ம் திகதிவரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதித் தபால் மா அதிபர் குறிப்பிட்டார்

கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குணச்சித்திர நடிகை சிந்து!!

sindhu

சென்னை விருகம்பாக்கத்தில் ஓட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த தொழிலதிபர் ரவி. இவருக்கு வயது 45. இவருடைய மனைவி சிந்து. இவர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். அங்காடித் தெரு, பரதேசி, நான் மகான் அல்ல உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முத்தாரம், பிள்ளை நிலா உள்பட பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கும் இவரது கணவர் ரவிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அப்பா வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே, வீட்டில் இருந்தவர்கள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து விவகாரம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் நடிகை சிந்து கடந்த பல மாதங்களாக கடன் பிரச்சினையில் சிக்கி தவித்துள்ளார். இதன் காரணமாகவே தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது.

நடித்துக் கொண்டே படம் தயாரிக்க முடிவு செய்த இவர் தரகர்களிடம் 45 லட்சம் வரை கடந்த ஆண்டு 20 சதவீதம் வட்டிக்கு வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித்தர முடியாததால் கடன் கொடுத்தவர்கள் இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே வந்து கடனை திருப்பிக் கேட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் அவரது மகளை கடத்திவிடுவதாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிந்து நேற்று மதியம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி வீரர்!!

sodhi_anderson_001

அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச T20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

டெஸ்ட் போட்டிகள் சிட்டகாங் (ஒக்டோபர் 9-13), தாகாவில் (ஒக்டோபர் 21-25) நடக்கிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இதில் அறிமுக வீரராக சுழற்பந்து வீ்ச்சாளர் இஷ் சோதி தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான இவர், 1992ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த மூன்றாவது இந்திய வம்சாவளி வீரரானார். முன்னதாக தீபக் படேல், ஜீதன் படேல் ஆகியோர் நியூசிலாந்துக்காக விளையாடினர்.

சமீபத்தில் ஒருநாள் மற்றும் சர்வதேச T20 போட்டியில் அறிமுகமான சகலதுறை வீரர் கோரி அண்டர்சன் டெஸ்ட் போட்டிக்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டார்.

டேனியல் விட்டோரி, மார்டின் கப்டில், டிம் சவுத்தி ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. சவுத்தியின் காயம் குணமடையும் பட்சத்தில் கடைசி நேரத்தில் தெரிவு செய்யப்படலாம்.

அணி விவரம்: பிரண்டன் மெக்கலம் (அணித்தலைவர்), பீட்டர் புல்டன், ஹமிஷ் ரூதர்போர்டு, வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டீன் பிரவுன்லி, வாட்லிங், டொம் லதாம், கோரி அண்டர்சன், பிரேஸ்வெல், நீல் வாக்னர், டிரன்ட் பவுல்ட், மார்க் கில்லஸ்பி, இஷ் சோதி, புரூஸ் மார்டின்.

வவுனியாவில் நடைபெற்ற தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடல்(படங்கள்)!!

வவுனியா மாவட்டத்தில் அரச சார்பான நிறுவனங்களில் தொழில்புரியும் தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடலொன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்த இவ் ஒன்றுகூடலில் தற்போதைய அரசு செய்து வரும் பல்வெறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டிருந்ததுடன் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெற்றது.

இதன்போது வட மாகாணசபையில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, பெற்றோலிய கூட்டத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசன சபை, இலங்கை போக்குவரத்துச்சேவை, சமுர்திச் அதிகார சபை ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 2 3 4

 

வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழியை உடைந்துவிடக்கூடாது : வவுனியா தேர்தல் பிரசாரத்தில் மனோ கணேசன்!!

mano

உலகம் தனது அவதான பட்டியலில் நமது இனத்தின் அரசியல் தீர்வு பிரச்சினைகளையும், உரிமை மீறல் பிரச்சினைகளையும் கணிசமான முன் இடத்தில் வைத்திருக்கும் இந்த வேளையில் நாம் எச்சரிக்கையுடன் வாக்களித்து உலகத்துக்கு உரிய செய்தியை அனுப்ப வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் நேற்று வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

விதை விதைத்து அந்த விதை செடியாகி மரமாகி பூத்து காய்த்து கனியாகி வரும் வேளையில் மரத்தை வெட்டி விட சிலர் முயல்கிறார்கள். இந்த வெட்டியான்களையிட்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வெண்ணெய் திரண்டு வரும் நேரமிது. சிலர் கல்லெறிந்து தாழியை உடைக்க குறி பார்க்கிறார்கள். இந்த குறிகாரர்களையிட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலகம் தனது அவதான பட்டியலில் நமது இனத்தின் அரசியல் தீர்வு பிரச்சினைகளையும், உரிமை மீறல் பிரச்சினைகளையும் கணிசமான முன் இடத்தில் வைத்திருக்கும் இந்த வேளையில் நாம் எச்சரிக்கையுடன் வாக்களித்து உலகத்துக்கு உரிய செய்தியை அனுப்ப வேண்டும்.

எனவே வெட்டியான்களின் வலையிலும், குறிகாரர்களின் ஜாலங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ விழுந்து விடாதீர்கள். வெண்ணெய் திரண்டுவரும் இந்த வேளையில் தாழி உடைபட நாமே காரணமாகிவிட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

உலகத்தை நம்ப வேண்டாம் என்று சொல்லி வாழ்வோ, சாவோ நாம் உள்நாட்டிலேயே பிரச்சினைகளை தீர்த்து கொள்வோம். சொல்லி இன்று சிலர் நம்மை சர்வதேச சமூகத்திடம் இருந்து வெட்டி பிரிக்க முயல்கிறார்கள். நமது மக்கள் சாகும் போது ஐநா சபையும் சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்தன. ஆகவே உலகத்தை நம்ப கூடாது. என்ற வாதத்தை நான் ஏற்றுகொள்ள தயார் இல்லை.

உலகம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மைதான். அது எனக்கு தெரியும் அனால் உலகம் என்பது தமிழர் தரப்பு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது அவசரத்துக்கு அது செயல்படாது. அது தன் தேவைகளுக்கு ஏற்பவே நகரும். ஆகவே ஐநாவையும், இந்தியாவையும், அமெரிக்காவையும் புறக்கணித்து நாம் பயணிக்க முடியாது.

அதேபோல் நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உலகம் தங்க தட்டில் கொண்டு வந்து தரும். அதுவரை காத்திருங்கள் என்ற சோம்பேறிகளின் வாதத்தையும் நான் ஏற்றுகொள்ள தயார் இல்லை. நமது தீர்வுகளை தேடி தரும் முழு பொறுப்பை ஐநாவிடம் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் கையாலாகாத சோம்பேறி அரசியலில் எனக்கு வெறுப்பு இருகின்றது.

நாம் நமது பொறுப்பை நிறைவேற்றினால் உலகம் தனது கடமையை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும். நாம் செய்வதுதான் முதற்கடமை. உலகம் செய்வது துணை கடமை. இன்று நமக்கு முன்னால் உள்ளது தேர்தல் அல்ல. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் நடைபெறுவது வெறும் தேர்தல் அல்ல. இது ஒரு மக்கள் ஆணைக்கான வாக்கெடுப்பு. 13ம் திருத்தமும் மாகாணசபையும் முழுமையான தீர்வு அல்ல என்பது நமக்கு தெரியும்.

ஆனால் இந்த தேர்தலை நாம் பயன்படுத்துவோம். இதை ஒரு வாக்கெடுப்பாக கருதி உலகத்துக்கும் அரசாங்கத்துக்கும் திடமான செய்திகளை அனுப்புவோம். உலகம் நகராது உள்நாட்டில் தான் பேசி பேசி தீர்வு காண வேண்டும் என்பவர்களுக்கு நவநீதம் பிள்ளை வந்து பதில் கூறி சென்றுவிட்டார். ஆனால் அத்துடன் விவகாரம் முடிவுக்கு வராது. நாம் இந்த தேர்தலில் தரும் முழுமையான ஆணை ஐநா சபையை அடுத்த கட்டத்துக்கு தள்ளும்.

மொத்தம் 38 ஆசனங்களில் 20 ஆசனங்கள் கிடைத்தாலும் வெற்றிதான். ஆனால் அது மக்கள் ஆணை இல்லை. 30க்கும் மேற்பட்ட ஆசனங்களை வழங்கி அமோக வெற்றியை வடக்கில் தந்தால்தான் அது மக்கள் ஆணையாக கருதப்படும்.

வட மாகாணத்தில் கூட்டமைப்பு போட்டியிடுவது ஆட்சி பொறுப்பை ஏற்க அல்ல என நான் நினைக்கின்றேன். ஆட்சி பொறுப்பு என்பது ஒரு துணை விளைவுதான். மக்கள் ஆணை என்பதுதான் முதல் விளைவு மற்றும் முதல் நோக்கம்.

உரிமை மீறல்கள் முதல் அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு வரை பல கேள்விகளும், கோரிக்கைகளும் உங்கள் மனங்களில் உள்ளன. இவற்றுக்கான பதில்களை உலகம் பெற்று தர வேண்டும் என்றால் மக்கள் ஆணையை தரும் வண்ணம் அமோக வெற்றி தரும் வண்ணம் வாக்களிக்க வேண்டும்.

ஆகவே மீண்டும் சொல்கிறேன். உலகம் உதவாது என்ற மோசடிக்காரர்களின் கருத்தை நிராகரித்து உலக சமூகத்தை நம்புங்கள். அதேவேளை உலகம் கொண்டு வந்து தரும் நாம் சும்மா இருப்போம் என்று சொல்லும் சோம்பேறிகளையும் நிராகரியுங்கள். உலகம் செயல்பட வேண்டும். நாமும் செயல்பட வேண்டும்.

நமது செயல்பாடு என்பது வீடுகளில் உட்கார்ந்து உலகை அளப்பதும், அரசியல் தலைவர்களையெல்லாம் விமர்சித்து காலம் தள்ளுவது அல்ல. நமது செயல்பாடு வெளியே வந்து மக்கள் ஆணை என்று கருதப்படும் வண்ணம் வாக்களித்து, உலகை உற்சாகப்படுத்துவது ஆகும். வடக்கில் இதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இது நடக்காவிட்டால் என்னை இனிமேல் இங்கே வரும்படி அழைக்காதீர்கள் எனத் தெரிவித்தார்.

தீபாவளிக்கு கோச்சடையான் : படத்தில் ரஜினி புது அவதாரம்!!

kochi-bigg

தமிழ் திரையுலகில் இது வரை காணாத ஸ்டைலில் வருகிறது கோச்சடையான் படம். இதில் ரஜினியும் புது அவதாரம் எடுத்துள்ளார். இதிகாச காலத்தில் வாழ்ந்த மன்னன், இளவரசனாக இரு வேடங்களில் மிரட்டுகிறார். இதற்காக பிரத்யேக ஆடைகளை வடிவமைத்து அணிய செய்துள்ளனர். பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜியின் வரலாற்று படங்களில் பார்க்காத ஆடைகளை கோச்சடையானில் பார்க்கலாம்.

சண்டையிலும் புதுயுக்தி புகுத்தியுள்ளனர். ரஜினி வாளுடன் புயலாய் சுழன்று எதிரிகள் தலைகளை வெட்டி எறியும் காட்சிகளில் ஹொலிவுட்டையே மிஞ்சும் படி இருக்கும் என்கின்றனர். வெளிநாட்டு நிபுணர்களை வைத்து கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளதால் யுத்த காட்சிகள் மிரள வைக்குமாம்.

தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை அள்ளி கொடுக்க வரும் இப்படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்து பிரமாதம் என கைதட்டி பாராட்டி மகள் சவுந்தர்யாவை தட்டி கொடுத்துள்ளார். ரஜினிக்கு படம் மிகவும் பிடித்து போனது என்றார் இயக்க மேற்பார்வை பணிகளை கவனித்த கே.எஸ்.ரவிக்குமார். இப்படத்துக்கான மொத்த செலவு 125 கோடி என்கின்றனர்.

விஸ்வரூபத்தைத் தொடர்ந்து கமல் இயக்கும் மூ!!

Kamal at Ilayaraja Book Release Stills

விஸ்வரூபம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் கமல்.

இப்படத்திற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் லிங்குசாமி தயாரிக்கும் இந்த படத்தை முதலில் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக இருந்தது.

ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமியோ படத்தை நீங்களே இயக்குங்கள் என்று கமலிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு கமலும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். எனவே மூன்று மொழிகளிலும் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்கிறார் கமல்.

ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான முன்னணி நடிகர்கள் கமலுடன் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மூ என்று ஒற்றை எழுத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். விஸ்வரூபம்-2 வெளியான பிறகே இப்படம் குறித்து மூச்சு விடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கமல்.