ஹீரோயின் ஆசையில்லை இயக்குனர் ஆகப் போகின்றேன் : கீர்த்தனா பார்த்திபன்!!

keerthana

சினிமாவில் மிகச்சிறந்த இயக்குநராக உருவாவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபனின் மகளும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான கீர்த்தனா.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை கதாநாயகியாக அறிமுகமானவர் பார்த்திபன்-சீதா நட்சத்திர தம்பதிகளின் மகள் கீர்த்தனா. விரைவில் கதாநாயகியாக வலம் வருவார் என சினிமா வட்டாரம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க இயக்குநராவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் கீர்த்தனா.

என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும் அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன். 5வது வகுப்பு படிக்கும்போது மணிரத்னம் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அவர் படத்தில் நடிக்க கேட்டார். அப்பாவும் சம்மதித்தார்.

இப்போது கதாநாயனாக உள்ள சித்தார்த் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தார். அவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நடிப்பு பயிற்சி அளித்தார். அதில் நடித்ததற்காக பாராட்டுகள் கிடைத்தன.
அதன் பிறகு எனக்கு நடிக்க விருப்பம் இல்லை.

இசை, நடனங்கள் கற்றேன். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். அடுத்து டைரக்டராக முடிவு செய்துள்ளேன். விரைவில் நல்ல கதையொன்றுடன் டைரக்டராக அறிமுகமாக உள்ளேன் என இவ்வாறு கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா??

sl

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்னாப்பிரிக்கா 180 மற்றும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பல்லகலேவில் இன்று நடக்கிறது. தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிப்பதற்கு இந்த மோதலில் தென்னாப்பிரிக்கா கட்டாயம் வென்றாக வேண்டும். ஆனால் இலங்கை மண்ணில் அந்த அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் நிலை படுமோசமாக இருக்கிறது.

1993ம் ஆண்டில் இருந்து இங்கு தொடர்ச்சியாக 11 ஒரு நாள் போட்டிகளில் தென்னாஆப்பிரிக்கா தோற்று இருக்கிறது. இந்த நீண்ட கால சோகத்துக்கு இந்த போட்டியிலாவது தென்னாப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பார்க்கலாம். முந்தைய போட்டியில் காயமடைந்த அம்லா இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக குயின்டான் டி காக் இடம் பெற வாய்ப்புள்ளது.

இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல. முத்தரப்பு தொடரின் போது மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி 2 போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் தலைவர் மத்யூஸ் இந்த போட்டிக்கு திரும்புகிறார். அவரது வருகை இலங்கை அணிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும்.

அதே நேரத்தில் கடந்த போட்டியின் போது விரலில் காயமடைந்த திரிமான விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த போட்டியுடன் தொடரை முடித்து விட வேண்டும் என்பதில் இலங்கை அணி தீவிரமாக இருக்கிறது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடலாம் எனவும் எனவே 2வது சுழற்பந்து வீச்சாளராக அஜந்த மென்டிஸ் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் மத்யூஸ் தெரிவித்தார்.

காதலை கைவிட மறுத்த தங்கையைச் சுட்டுக் கொன்ற அண்ணன்!!

dead

உத்திரப்பிரதேசத்தில் காதலைக் கைவிட மறுத்ததால் குடும்ப கௌரவம் கருதி தங்கையை சுட்டுக் கொன்று ரகசியமாக புதைத்த அண்ணனை போலீசார் தேடி வருகின்ரனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்த சய்மா என்ற 17 வயது பெண் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். சங்மாவின் காதல் விவகாரம் அறிந்த அவரது குடும்பத்தினர் காதலர்களை எச்சரித்து வந்துள்ளனர்.

ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்மாவின் அண்ணன் ராசாகான், நேற்று இது குறித்து தங்கையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

குடும்ப கௌரவத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் காதலித்து வரும் சங்மாவை, ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளான் ராசாகான். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் சங்மா. ஊருக்கு தெரியா வண்ணம் சங்மாவின் பிணத்தை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளனர் குடும்பத்தினர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து புதைக்கப்பட்ட சங்மாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ராசாகானை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதித் தாயும் மகளும் விடுதலை!!

jail

சட்டவிரோதமாக பட்கில் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவில் 04.3.2012 அன்று நடைபெற்ற அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்று திரும்பிய ராமேஸ்வரம் பக்தர்களின் படகில், இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த உஷா என்ற 32 வயது பெண்ணும் அவரது 6 வயது மகள் நீராவும் கள்ளத்தனமாக ஏறி ராமேஸ்வரம் சென்றனர்.

இருவரையும் கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதமாக மண்டபம் முகாமில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று ராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உஷாவிற்கு 50 ரூபாய் அபராதம் விதித்தும், விடுதலை செய்தும் நீதவான் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து இருவரும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை மிரட்ட காத்திருக்கும் இந்திய அணி- ரோட்ஸ் எச்சரிக்கை!!

jonty

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேகப் பந்து வீச்சை சந்திக்க பயப்படுவதே இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான ஜொன்டி ரோட்ஸ். களத்தடுப்பில் பிரபலமானவர் ரோட்ஸ்.

இந்த நிலையில் அவர் இந்திய வீரர்களின் துடுப்பாட்ட திறமையை புகழ்ந்து பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ள நிலையில் வேகப் பந்து வீச்சுக்கு பிரபலமான தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் இந்தியர்கள் திறமையாக விளையாடுவார்கள் என்றும் கணித்துள்ளார் ரோட்ஸ். இதுகுறித்து தெரிவித்த அவர்..

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் திறமையுடன் உள்ளனர். குறிப்பாக டேல் ஸ்டெயின் பந்து வீச்சை அவர்கள் எளிதாக சமாளிக்க முடியும்.
ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்தும் எதிராகவும் விளையாடியது நல்ல அனுபவம் கொடுக்கும்.

இந்திய வீரர்கள் இப்போதெல்லாம் வேகப் பந்து வீச்சைக் கண்டு பயப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்குள் அதிக அளவில் நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.

ஸ்டெயின் நல்ல வேகமான பந்து வீச்சாளர்தான். ஆனால் அவரால் இந்திய வீரர்களை பெரிய அளவில் மிரட்ட முடியாது என்பது எனது கருத்து. பிலன்டரும் அதிவேகமாகவே பந்து வீசுகிறார். ஆனாலும் அவரையும் இந்திய வீரர்களால் சமாளிக்க முடியும். மோர்னி மோர்க்கலுக்கு நன்றாக பவுன்ஸ் வரும். ஆனால் இந்த வித்தியாசமான பந்து வீச்சாளர்களை இந்திய வீரர்கள் எளிதாக சமாளிப்பார்கள்.

தற்போதைய இந்திய வீரர்களைப் பார்க்கும்போது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தவிடுபொடியாக்கி விடுவார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது என்றார் ரோட்ஸ்.

டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகளில் டேபன், கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க் ஆகிய நகரங்களில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடவுள்ளன.

ரோட்ஸ் மேலும் கூறுகையில் விராத் கோஹ்லி இந்திய வீரர்களிலேயே மிகவும் அபாயகரமானவராக தெரிகிறார். அதேபோல தலைவர் டோணியும் அபாயகரமானவர்தான். இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்களை தூங்க விடாமல் செய்யப் போகிறார்கள்.

குறிப்பாக விராத் கோஹ்லி துரிதமாக ரன் சேர்க்கிறார். ரன் எடுப்பதில் வேகம் காட்டுகிறார். அதேபோல தலைவர் டோணியும் ஆட்டத்தை முடித்து வைப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். ஆட ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்துவது மிகக் கடினம். எந்தப் பந்து வந்தாலும் அடித்து ஆடுகிறார்.

இவர்கள் மட்டுமா ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளவர்கள் என்றார் ரோட்ஸ்.

ரோட்ஸ் சொன்னவை பலிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

அதிவேகமாக 15 சதங்கள் எடுத்து விராத் கோஹ்லி சாதனை!!

virat-kohli

சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக தலைவர் விராட் கோலிக்கு இது 15வது சதமாகும்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் தனது 15வது சதத்தை 106வது ஆட்டத்தில் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் சயீத் அன்வர் தனது 143வது போட்டியில் 15வது சதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. சவுரவ் கங்குலி 144வது ஆட்டத்திலும், கிறிஸ் கெய்ல் 147வது ஆட்டத்திலும் இந்த இலக்கை எட்டினார்கள்.

சச்சின் டெண்டுல்கர் 15வது சதத்தை தனது 182வது ஆட்டத்தில் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா – திருகோணமலை பேருந்தில் மோதுண்டு ஒருவர் பலி..!

ACCIDENT_logoவவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா டிப்போக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது.

நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது பேருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில்காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டுள்ளார். 48அகவையுடைய ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பட்டிகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலையில் இரும்புப் பொருள் தாக்கியதாலும் இளவரசன் இறந்திருக்கலாம்- பிரேதப் பரிசோதனை அறிக்கை!!

ilavarasan

தலையில் பலமான இரும்புப் பொருள் தாக்கியதாலும் கூட தர்மபுரி இளவரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவைக் கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த டாக்டர்கள் குழு மறு பிரேதப் பரிசோதனையை நடத்தியது.

இதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இளவரசனின் தந்தையிடமும் அந்த அறிக்கை வழங்கப்பட்டது. அதில், இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

ரயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பாரதிபுரத்தில் நடைபெறும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!(படங்கள்)

பாரதிபுரம் Jolly Boys விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 21ம் திகதி பாரதிபுரம் பாரதி வித்தியாலய மைதானத்தில் மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பம்மானது.

இபோட்டியானது பாரதிபுரம் பாரதி வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.ரமேஸ்கந்தா மற்றும் Jolly Boys அணியின் முன்னாள் வீரர் அமரர் திரு.சசிகுமார் அவர்களின் ஞாபகார்த்த போட்டியாக நடாத்தப்படுகின்றது.

முதல் நாள் போட்டியில் New Sun மற்றும் MCC அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் New Sun அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் Jolly Boys மற்றும் Supper Star அணிகள் மோதின இதில் Jolly Boys அணி வெற்றி பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள 10 ற்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 8 ஓவர்கள் கொண்ட இப்போட்டியானது ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கேடயமும் சிறப்பு பரிசில்களும் வழங்கப்படும்.

-கலைதேவன்-

5 4 3 2 1-கலைதேவன்-

மரணத்தின் விளிம்பில் இருந்து அதிசயமாய் உயிர் தப்பிய மனிதர்கள் (வீடியோ இணைப்பு)!!

மரணத்தின் விளிம்பில் இருந்து அதிசயமாய் உயிர் தப்பிய சில மனிதர்கள் பற்றிய சில வினோத வீடியோக்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்!!(படங்கள்)

அலசான்டோ டிட்டி என்ற கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்களை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…

11 10 9 8 4 5 6 7 3 2 1 12

மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் குண்டு மனிதர்!!

1

அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார். தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை.

காரணம் பல மாடிப் படிகளை ஏறிக் கடக்க முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம். நடந்து நடந்து காலெல்லாம் புண்ணாகி பார்க்கவே படு பரிதாபமாக இருக்கிறது இவரது நிலை. அந்த பரிதாபத்துக்குரியவரின் பெயர் ரிட்சி டோயில். 44 வயதாகும் இவர் பான்ட்ரி என்ற ஊரில் வசித்து வருகிறார்.

தனக்கு கீழ்த்தளத்தில் ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுக்குமாறும் அவர் நகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். படியே இல்லாத வீடாக இருந்தால் ரொம்பப் புண்ணியமாகப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் கூட இவரால் நடக்க முடியாதாம். அப்படியே நடந்தாலும் உடனே ஒட்சிசன் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமாம். கடந்த ஒரு வருடமாக மாடியில் உள்ள வீட்டுக்குப் போக முடியாமல் படியிலேயே கழித்து வருகிறார் இவர்

தனது நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறும் டோயில் தனக்கு கீழ்த்தளத்தி்ல இருப்பது போல வீடு கிடைத்தால் நல்லது என்று அதற்காக விண்ணப்பித்து போராடி வருகிறார். மாடிப் படியிலேயே தங்கியிருப்பதால் சாலையில் போகும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு வேறு இவரை சிரமப்படுத்தி வருகிறதாம்.

தனது உடலில் கார்பன் மோனாக்சைட் விஷம் ஏறி வருவதாக வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் சொல்கிறார் டோயில். கீ்ழ்த்தளத்தில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே அவர் நடந்து போகிறார். மற்றபடி மறுபடியும் படியிலேயே வந்து செட்டிலாகி விடுகிறார்.

தற்போது அயர்லாந்தில் பயங்கர வெயில் காலம். எனவே காற்று இல்லாமல் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கிறாராம் ரிட்சி. அது வேறு இவரை கஷ்டப்படுத்துகிறதாம்.

எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றும் மகனை கொன்ற தந்தை!!

murder

எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு ஊரைச் சுற்றி வந்த மகனை கொன்று விட்டார் தந்தை. வேலூரில் இந்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சத்துவாச்சாரி பகுதியில் மரக்கடை வைத்திருப்பவர் குருலிங்கம். இவர் தனது மரக்கடையில் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியாகி இறந்து கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் குருலிங்கத்தின் தந்தை நடராஜன் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் அவர்தான் குருலிங்கத்தைக் கொன்றது தெரிய வந்தது. அவரும், இன்னொரு மகன் குமரேசனும் சேர்ந்து குருலிங்கத்தை கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.

குருலிங்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். எந்த வேலையையும் உருப்படியாக செய்யாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். பலமுறை நடராஜன் அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பு இரவு குருலிங்கத்திற்கும், நடராஜனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அப்போது அங்கு குமரசேனும் இருந்துள்ளார். சண்டை முற்றியதில், குமரேசனும், நடராஜனும் சேர்ந்து கட்டையை எடுத்து சரமாரியாக குருலிங்கத்தை அடித்தனர். இதில் அவர் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிய வந்தது.

மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு!!

santhanu

சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார்.

அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட புகழ் கீர்த்திக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதாம். கீர்த்தியின் அம்மா ஜெயந்தி ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.

அங்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். அப்போது தான் கீர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி – வாய் உழறிய விஜய்காந்த்!!

vijayakanth

மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார்.

இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார்.

இந்தநிலையில் மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். விஜயகுமாரை கட்டிப்பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார்.

உடன் வந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்தை தொலைக்காட்சி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு ஏகப்பட்ட மைக்குகளை முகத்துக்கு நேரே நீட்டினர்.

அப்போது அவர் பேசுகையில்,

நடிகை மஞ்சுளா எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றினாலும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பழகினார். அவர் குடும்பத்தில் ஒருவராக இருந்தோம். எப்போது அவரது வீட்டுக்கு வந்தாலும் மோர், நல்ல உணவு தந்து உபசரிப்பார்.

குறிப்பாக அவர் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பையனுக்கு நிகராக வளர்த்தார். இப்படி சொல்லிக் கொண்டே வந்த விஜயகாந்த், என்ன சொல்றதுன்னே தெரியல மஞ்சுளாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றி என்றவர் சட்டென சுதாரித்து “நன்றிங்கறேன்” என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இருபதுக்கு-20 தரவரிசையில் இலங்கை தொடர்ந்து முதலிடம்!!

sl

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜூலை 27-ம் திகதியன்று பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளிடையே 2 இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெற உள்ளன.

அதற்கு முன்னதாக இன்று இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் 134 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 127 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணி 121 புள்ளிகளுடன் தொடர்ந்து 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4, 113 புள்ள்களுடன் இங்கிலாந்து 5, தென்னாப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளன.