வவுனியாவில் புதிதாக எட்டு பேருக்கு சமுர்த்தி நியமனம்..!

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறிரெலோ கட்சியினால் நேற்று (28.06) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நேற்று (28)வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் கிளையில் வைத்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், வவுனியா மாவட்ட திட்டமிடல் பொறுப்பதிகாரி எஸ்.கிருபாசுதன், சமுர்த்தி முகாமையாளர் வில்வராஜா, பிரபல வர்த்தகரும் சிறிரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் ஆன சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அண்மையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியூதினால் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

samurthy1 samurthy2 samurthy3 samurthy4

பிரித்தானியாவின் புதிய விசா நடைமுறைக்கு இலங்கை கண்டனம்..!

பிரித்தானியாவிற்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள், 3000 பவுண்ட்களை வைப்புச் செய்யவேண்டும் என்ற பிரித்தானிய அரசின் திட்டத்திற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கினுக்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும் இது தற்காலிக நடைமுறை எனவும், அதிக அவதானத்திற்குறிய நபர்களுக்கு மட்டுமே எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தாக கருணாதிலக்க அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த, அதிக அவதானத்திற்குரிய நபர்களுக்கு பிரித்தானியாவில் உட்செல்ல 3000 பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என பிரித்தானிய அரசு முன்மொழிந்திருந்தது.

இதன்படி பிரித்தானியா செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கும் குறித்த நாடுகளில் அதிக அவதானத்திற்குரிய நபர்கள் 3000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என்ற யோசனை இவ்வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மீளத்திரும்பும் நபர்களுக்கு இந்தப் பணம் மீளளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு 30,000 – 35,000 இலங்கையர்கள் குறிப்பாக மாணவர்கள் பிரித்தானிய விசாவிற்கு விண்ணப்பிப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

மீள ஆரம்பிக்கிறது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..!

1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் காலங்களில் சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவை நூற்றுக்கு 25 வீதம் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாங்குளத்தில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..!

வவுனியா மாங்குளம், பாணிக்கன்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஒரு தொகை முதுரை மரக்கட்டைகளை டிரெக்டர் வண்டியில் ஏற்றிச் சென்றபோதே கைதாகியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முதுரை மரங்களின் பெருமதி இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக, முதுரை மரக்கட்டைகளுடன் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

wood

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்துகள் இவ்வருடம் 27 பேர் பலி.!

அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதோடு இந்த வருடத்தில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை மீரிகம – அம்பலன்வத்தை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றது. சிறிய ரக லொறியொன்றுடன் ரயில் மோதியதில் லொறியில் பயணித்த இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆம் திகதி அளுத்கமை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் இறந்ததோடு இந்துருவ கைகாவ ரயில் கடவையில் 26 ஆம் திகதி நடந்த விபத்தில் மற்றொருவர் இறந்தார்.

இந்த நிலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

நாடு பூராவும் சுமார் 775 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் கூடுதல் ஆபத்துள்ள அதிக விபத்துக்கள் இடம்பெறும் 200 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் உள்ள இடங்களில் துரிதமாக பாதுகாப்பான ரயில்வே கடவைகளை இட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினூடாக வாகனம் செலுத்துகையில் அவதானமாக வாகனம் ஓட்டாததாலும் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிகள் கவனமாக செயற்படுவதன் மூலம் ரயில் கடவைகளில் நிகழும் விபத்துகளை மட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த வருடத்திலுன் மாத்திரம் இதுவரை 21 விபத்துகள் ரயில் கடவைகளில் பதிவாகியுள்ளன.

இதற்கு முன் ரயில் கடவைகளில் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது தன்னிச்சையா- இயங்கும் மணி அடிக்கும் கடவைகள் பொருத்தி வருவதாக ரயில்வே திணைக்களம் கூறியது. புதிதாக ரயில் கடவைகள் பாதுகாப்பு முறையை நிர்மாணிக்க 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

சுஜிபாலா மீது நடிகர் சங்கத்தில் புகார்..!

Sujibala

படப்பிடிப்புக்கு வர அதிகளவு பணம் கேட்டு சுஜிபாலா தகராறு செய்வதாக நடிகர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை.

இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ரவிக்குமார் தான் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தார்.

திருமணம் நின்று போன பிறகும், அந்தப் படத்தில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தார் சுஜிபாலா.

ஆனால் சண்டிகரில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் சுஜிபாலா கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம். இது தொடர்பாக இயக்குனர் சங்கத்திலும் இயக்குநர் பி.ரவிக்குமார் புகார் செய்துள்ளார்.

அதில், சண்டிகரில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து விமான டிக்கெட் எடுக்க சுஜிபாலாவுக்கு போன் செய்தேன்.

அவரது அம்மா போனை எடுத்து சூட்டிங் வர முடியாது என்று கூறி விட்டார். சுஜிபாலாவிடம் பேச வேண்டும் என்று கூறினால் போனை கொடுக்க மறுக்கிறார்.

படத்துக்கு பேசிய மொத்த சம்பளமும் கொடுத்து விட்டேன். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் ஷுட்டிங் அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள்.

என்னை இயக்குனர் என்றுகூட பார்க்காமல் சுஜிபாலாவின் தாயார் மிகவும் கீழ்தரமாக பேசுகிறார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம் இன்று ஒப்படைப்பு..!

மன்னார் வளைகுடாவில் காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவர்களை இன்று இந்திய கடலோர காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இராமேஸ்வரத்தில் இருந்து 600க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே இந்திய கடலோர எல்லையில் மீன் பிடித்து கரை திரும்பினர், இதில் ஜஸ்டின் என்பவரது விசைபடகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இராமேஸ்வர மீன்வளத்துறையில் புகார் அளித்தனர். இந்தநிலையில் இந்த நான்கு மீனவர்கள் சென்ற படகு பழுதடைந்து உணவு இன்றி நாடு கடலில் தத்தளித்து வந்தனர்.

அப்பொழுது இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீட்டு உணவு அளித்து அவர்களை பத்திரமாக தங்கள் படகுகில் தங்க வைத்தனர். பின்னர் இந்திய கடலோர காவல் படையினரிடம் தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இன்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்த செய்தி மீனவ குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இதர மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்விசிறி போல சுழரும் மனிதன் – நம்பமுடியாத சாகசம்(வீடியோ இணைப்பு)..!

கிழே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு இவர் மனிதரா அல்லது இயந்திரமா எனக் கூறுங்கள்!!

ATM இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது..!

களுத்துறை, கடுகுரந்த பிரதேச வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸார் இவர்களை நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தினை சோதனையிட்ட போது அங்கிருந்து 03 இலட்சத்து 95 ஆயிரம் பெருமதியான இலங்கை ரூபாய்கள், 500 ரூபா பெருமதி வாய்ந்த யூரோ 30 மற்றும் 1000 ரூபா பெருமதி வாய்ந்த சுவிஸ் பிராங் பணத்தாள்கள் 17 உம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கும் மேலதிகமாக கையடக்கத் தொலைபேசி, கணனி மற்றும் பணம் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் 71 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த சில்க் ஸ்மிதாவாக ஆசைப்படும் பிந்து மாதவி..!

நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தார்.

இந்தநிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது.

இறுதியில் அது தற்கொலை தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வந்தன.

அந்த படத்தில் சில்கின் சாயலில் இருக்கும் பிந்து மாதவி நடிக்க விருப்பம் தெரிவித்த போதிலும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.

அதனால் அவருக்கு ஒரே வருத்தமாம். இந்தநிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சில்க் ஸ்மிதாவைப் போன்று கவர்ச்சியில் கலக்கப் போகிறாராம் பிந்து.

bindu

இப்போதைக்கு சமந்தாவுடன் திருமணம் இல்லை : சித்தார்த் உறுதி!

sidarth
ஷங்கரின், பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களுல் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னத்தின், “ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார்.
ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் அமைய தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார்.
பின்னர் நீண்டஇடைவெளிக்கு பிறகு “180″ படம் மூலம் தமிழில் மீண்டும் தன் திருமுகத்தை காட்டினார் சித்தார்த், அதன்பிறகு “காதலில் சொதப்புவது எப்படி”, “உதயம்” படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.
இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படம் கடந்தவாரம் வெளியானது.
இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் சக்சஸ் மீட் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்,
நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தீயா வேலை செய்யணும் குமாரு பட ஹிட் போல எனக்கு எந்த படமும் அமையவில்லை. இப்படம் வெளியான ஒருவாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுவரை நான் பழகியவர்களில் சுந்தர்.சி போன்று ஒருவர் கிடையாது. பொதுவாக எனக்கு கோபம் அதிகம் வரும், ஆனால் இப்போது அதை குறைத்து ‌கொண்டுள்ளேன்.
இதற்கு சுந்தர்.சியும் ஒரு காரணம். எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படியும் வாழலாம் என்பதை புரிய வைத்தவர் சுந்தர்.சி. வாழ்க்கை என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த நல்ல நண்பர்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தமிழில் நான் அதிகமாக நடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அப்படியல்ல, நல்ல கதைக்காக காத்திருந்து நடிக்கிறேன். அடுத்து தமிழில் நான் 4 படங்களில் நடித்து வருகிறேன்.
ஒன்று பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ஜிகர்தண்டா”, வசந்தபாலனின் “காவியத்தலைவன்” மற்றொன்று எனது சொந்த தயாரிப்பு. எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் இப்படியே இருக்கும் மனநிலை வேண்டும் என்றார். ‌
தொடர்ந்து செய்தியாளர்கள் எப்போது திருமணம் என கேட்டபோது, இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே இடம் கிடையாது என்று உறுதியாக சொன்னார் சித்தார்த்.

பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் த.தே.கூ இன்று தீர்மானம்..!

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ப்ளோட், டி.யூ.எல்.எப், டேலோ, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளன.

இதன்படி குறித்த விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி..!

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா கிளையினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28.6) உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியின் போது அரச ஊழியாகள் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், அனர்த்தத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, அனர்த்தத்தின் போது முதலுதவிகள் வழங்குதல் போன்ற பயிற்சிகள் அதன் போது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேலைத்திட்டங்கள் அதற்கு பொது மக்களினால் வழங்கப்பட வேண்டிய பங்கபளிப்புகள் என்பன தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப் பயிற்சி நெறிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என். சூரியராஜா, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உத்தியோகத்தர் கே. ராஜ்சங்கர் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

va1 va2 va3

சோமாலியாவின் அல்-ஷபாப் மூத்த தலைவர் அரச படையிடம் சரண்..!

சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில் அவர் அரச படையினரிடம் சரணடைந்துள்ளார்.

அல் ஷபாப் இயக்கத்துக்குள்ளேயே கடந்த வார இறுதியில் உள்மோதல்கள் வெடித்தன. அதன் பின்னரே ஆவேயஸ் சரணடைந்துள்ளார்.

அவரை என்ன செய்வது என்று கலந்தாலோசிப்பதற்காக பழங்குடி சமூகத் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, மொகதீஷுவில் உள்ள பிபிசி செய்தியாளரிடம் பேசியுள்ள சமூகத் தலைவர்கள், ஆவேயஸ் சரணடைந்துள்ளதை ஏற்க மறுப்பதாகவும் மொகதீஷுவுக்கு வரவும் மறுப்பதாகவும் கூறியுள்ளனர்.

அல்-ஷபாப் இயக்கத்தின் ஆன்மீகத் தந்தையாக ஆவேயஸ் கருதப்பட்டுவந்தவர். ஐநாவாலும் அமெரிக்காவாலும் பயங்கரவாதியாகவும் கருதப்படுகிறார்.

(BBC)

முத்தரப்பு தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி..!

Sunil-Narine

இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நேற்று ஆரம்பமானது.

இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய முதல்நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்த தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில், மஹேல ஜெயவர்த்தன 52 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுனில் நரேன் 4 விக்கெட்டுக்களையும், ரவி ராம்போல் 3 விக்கெட்டுக்களையும், பிராவோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக துடுபெடுத்தாடி, 109 ஓட்டங்களை குவித்த கெய்ல் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.

என் குழந்தை தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராய்..!

எனக்கு என் குழந்தை தான் முக்கியம், அதற்கு பிறகு தான் நடிப்பு, பணம் எல்லாமே என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு, நீண்ட இடைவேளைக்கு பின் குழந்தை பெற்று கொண்டார்.

இதன் பின் நடிக்க வந்து விடுவார் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அவரோ, எப்போதும் தன் மகள் ஆராத்யாவுடன் உடனே இருக்கிறாராம்.

சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்ற அவர், தன் குழந்தை ஆரத்யாவையும் உடன் அழைத்து சென்றார்.

அங்கு பத்திரிகையாளர்கள், எங்கு சென்றாலும் குழந்தையுடன் செல்கிறீர்களே ஏன்? என்ன காரணம்? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, திருமணத்துக்கு முன்பும், பின்பும் நான் சுதந்திரமாக இருந்திருக்கலாம்.

ஆனால் ஒரு குழந்தைக்கு தாயான பின் எனக்கான கடமை அதிகரித்து இருக்கிறது.

இப்போதைக்கு எனக்கு குழந்தை தான் முக்கியம், நடிப்பு, பணம் எல்லாம் அதற்கு பிறகு தான்.

அதனால் தான் எங்கு சென்றாலும், குழந்தையையும் கூட்டிச் செல்கிறேன் என்று பதிலளித்தாராம்.