வவுனியாவில் 118 வது சாரணர் உயர் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

scouts

கடந்த வருடம் 13/10/2012 தொடக்கம் 20/10/2012 வரை பீட்ரு (pedro – Nuwaraeliya) சாரண தேசிய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாரணர் உயர் கற்கைநெறி பயிற்சியை நிறைவு செய்த சாரணத்தலைவர்களுக்கான சான்றிதழ்கள் எதிர்வரும் 13/07/2013 (சனிக்கிழமை)அன்று காலை 09.00 மணிக்கு பயிற்சிநெறியின் தலைவர் திரு.செல்வநாயகம் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.

மேலும் 22 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா..!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முகாமில் இலங்கை அகதி அழகுராஜா தீக்குளித்து உயிரிழப்பு..!

ஆரணி மில்லர்ஸ் வீதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்தவர் அழகுராஜா (வயது32). இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. மேலும் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அழகுராஜா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென்று பரவியது. வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரணி நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இலங்கை அகதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வவுனியாவில் ஞாயிறன்று தியாகிகள் தினம்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் செயலாளர்நாயகமுமாகிய அமரர் கே.பத்மநாபாவின் 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உயிர் நீத்த கட்சியின் அனைத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் போராளிகள், பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூறும் தியாகிகள் தின நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30-06-2013) காலை 9.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியில், யுத்தத்தின் போது பெற்றோரை இழந்த 175 பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சேமிப்புப்புத்தகங்கள் வழங்குதலும்,

யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட இருபது நபர்களுக்கு முதல் கட்டமாக சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்குதலும் இடம்பெறும்.

தொடர்ந்து பத்மநாபா நினைவுப்பேருரையும்இ சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கட்சியின் தலைவர்கள், பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

(அதிரடி இணையம்)

eprlf

 

சீனிவாசனை விசாரிக்குமா ஐ.சி.சி ??

srinivasan

விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
IPL தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார் சீனிவாசன்.

இவரை விசாரிக்க வேண்டும் என்று இதன் முன்னாள் ஆலோசகர் பிந்த்ரா ஐ.சி.சி. அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் விவரம் நேற்று வெளியானது.

38 ஆண்டுகளாக கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து வருகிறேன். எந்த தனிநபரை விடவும் கிரிக்கெட் தான் மேலானது என்று எப்போதும் நம்புபவன் நான். சமீபத்தில் நடந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம் சீனிவாசன்.

பதவியை தனிப்பட்ட முறையில் ஆதாயம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்று ஐ.சி.சி விதி தெளிவாக கூறுகிறது. இவற்றை சீனிவாசன் மீறிவிட்டார் என்றும் நடத்தை நெறிமுறைகளை மீறிய இவரை ஐ.சி.சி விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

உத்தரகாண்ட்டுக்கு உதவி செய்யாத இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்கள் ..

sehwag-dhoni-sachin

சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடியை வாரி வழங்கிய பி.சி.சி.ஐ., உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்கு எவ்வித நிதியும் வழங்காதது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திகழ்கிறது. கடந்த 2010-11ல் இதன் ஆண்டு வருமானம் 868 கோடி. ஐ.பி.எல்., தொடரின் ஒளிபரப்பு உரிமம் மூலம் 10 ஆண்டுகளுக்கு (2008-2017) 8 ஆயிரத்து 700 கோடி சம்பாதிக்கிறது.

இப்படி கோடிகளில் புரளும் பி.சி.சி.ஐ., சமீபத்தில் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடி, அணியில் இடம் பெற்ற மற்ற ஊழியர்களுக்கு தலா 30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

மற்றும் எம்.பி.,க்களுக்கு கட்டப்பட்டுள்ள கிளப்பில் நீச்சல் குளம் அமைக்க பெரும் தொகையை நிதியாக வழங்கியது. ஆனால், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியான உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ஒரு சிறிய தொகை கூட வழங்கவில்லை.

இந்திய அணி வீரர் ஷிகர் தவான் கூட, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் வென்ற தங்க மட்டை விருதை, உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார். ஹர்பஜன் சிங் ரூ. 10 லட்சம் வழங்கினார். வசதியே இல்லாத ஹொக்கி இந்தியா அமைப்பு 10 லட்சம் வழங்கியது.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பி.சி.சி.ஐ மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. ஐ.சி.சி., கூட்டத்தில் தற்காலிக தலைவர் டால்மியா பங்கேற்பாரா ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் கலந்து கொள்வாரா என்று தனது உள்விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டுள்ளது.

பி.சி.சி.ஐ நிதி வழங்காதது குறித்து சமூகவலைதளமான டுவிட்டரில் ஏராளமானோர் விமர்சித்துள்ளனர்.

இதே போல டோனி, சச்சின், கம்பீர், ஷேவாக் உள்ளிட்ட கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களும் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வவுனியா – கொழும்பு ரயிலில் மோதுண்டு அண்ணனும் தங்கையும் பலி..!

கையடக்க தொலைபேசிகளின் மூலம் பாடல் இணைப்பு கருவிகளை காதில் பொருத்தியவாறு ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழர்களான அண்ணனும் தங்கையும் வவுனியாவில் இருந்து கொழும்புக்கு பயணித்த தொடரூந்தில் மோதுண்டு பலியாகினர்.

இப்பரிதாபகரமான துயரச் சம்பவம் இன்று அதிகாலை கொழும்புக்கு அருகில் ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது இருவரின் சடலங்களும் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

வத்திக்கான் வங்கி விசாரணையில் மூத்த ஆயர் ஒருவர் கைது..!

வத்திக்கானின் நிதி நிர்வாகத்துறையில் பணிபுரிந்த மூத்த ஆயர் ஒருவர் ( பிஷப்) இத்தாலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலைகளில் ஈடுபட்டமை, பணத்தை சுருட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மொன்சிக்னோர் நுன்சியோ ஸ்காரானோ என்ற இந்த ஆயர் வத்திக்கான் வங்கி ஊடாக தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாதாக தெரியவருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றியே இத்தாலிய காவல்துறையினர் அவரிடம் விசாரித்துவருகின்றனர். இந்த விவகாரத்துடன் சம்மந்தப்பட்ட இத்தாலிய உளவுத்துறை அதிகாரி ஒருவரும் நிதித் தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

வத்திக்கான் வங்கி தொடர்பில் விசாரணை ஆணையம் ஒன்றை பாப்பரசர் பிரான்சிஸ் அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களில் இந்த கைதுகள் நடந்துள்ளன.

வத்திக்கான் வங்கி தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிமிடத்தில் 802 முறை கை தட்டி உலக சாதனை படைத்த இளைஞர் – (வீடியோ இணைப்பு )

faster clapper

ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளை தட்டி சாதனை படைத்துள்ளார் பிரையன் என்ற இளைஞர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் செய்தது தான்.

கடந்த 2003ம் ஆண்டில் கென்ட் என்ற பிரான்சை இளைஞர் நிமிடத்திற்கு 721 முறை கை தட்டியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த பிரையன் என்ற இளைஞர், கென்ட்டை விட கூடுதலாக 81 முறை கை தட்டியுள்ளாராம்.
இவர் சமீபத்தில் யூடியூப்-ல் தனது கைதட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதனை இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

விளையாட்டாக வீடியோவை வெளியிட்ட இளைஞர், தற்போது தான் இதன் அருமை புரிந்து கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளாராம்.

துபாயில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் போர் விமானத்துடன் மோதாமல் தப்பியது..!

துபாயிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று வானில், போர் விமானம் ஒன்றுடன் மோதுவதில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட விபரம் தற்போது தெரியவந்துள்ளது. வெறும் 3.5 செக்கன்களில் இந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு நெருக்கமாக எமிரேட்ஸ் விமானத்தை நோக்கி போர் விமானம் வந்திருக்கிறது!

எமிரேட்ஸ் விமானத்தில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்திருக்கிறது. இதுவரை பலதரப்பட்ட உள்ளக விசாரணைகள் செய்யப்பட்டு, இப்போதுதான் சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான விஷயங்களை விசாரணை முடியுமுன் வெளியே தெரிவிப்பதில்லை.

துபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம், இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. அது டேக்-ஆஃப் செய்து 16 செக்கன்களில் மேலெழுந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த வான் பகுதியில் போர் விமானம் ஒன்று அதிவேகத்தில் தாழப்பறந்து இந்த விமானம் மேலெழும் பாதையில் வந்தது.

துபாய் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்தவர்கள் எமிரேட்ஸ் விமானிக்கு, அவரது பாதையில் எதிரே போர் விமானம் வருவதை உடனே அறிவித்தனர். ஆனால், மேலெழுந்து கொண்டிருந்த நிலையில் போயிங் 777 விமானியால் அந்தக் கணத்தில் விமானத்தை திருப்ப முடியாது.

இந்த நிலையில், போர் விமானத்தின் விமானி எதிரே வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தை கண்டவுடன் சடுதியாக தனது விமானத்தை திருப்பியதில், இரு விமானங்களும் தப்பித்தன. விமானம் திருப்பப்படாது இருந்திருந்தால், 3.5 செக்கன்களில் இரு விமானங்களும் வானில் மோதியிருக்கும்!

தற்போது விசாரணை முடிந்து General Civil Aviation Authority (GCAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் குடைக்குள் காதல் செய்யத் தடை..!

யாழ். மாவட்டத்தில் ஒரு குடைக்குள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஜோடியாக இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டால் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் ஓடிச் சென்ற காதலர்களைப் பிடித்து வருமாறு பொலிஸார் முறைப்பாட்டாளர்களிடமே தெரிவிக்கின்றனர் என்றும் பிரதேச சபை ஒன்றின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் விரும்பிச் சென்றால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

“கொழும்பு காலிமுகத்திடலில் (கோல்பேஸ்) ஒரு குடைக்குள் ஆணும், பெண்ணும் இருந்தால் பிரச்சினையில்லை. இங்கு அப்படி இருக்க முடியாது. அது தென்னிலங்கை கலாசாரம். இது வடபகுதி கலாசாரம். இதனைப் பாதுகாக்க வேண்டும்´´ என்று கூட்டத்தில் கலந்து கொண்டோர் குறிப்பிட்டனர்.

விரைவில் திரைக்கு வரும் ‘உ’ திரைப்படம் ..!

விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய ‘உ’ என்ற தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வடபழனியில் நடைபெற்றுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் கதை நாயகனாக தம்பி ராமையா வருகிறார். இவருடன் 4 இளைஞர்கள் நடிக்கிறார்கள்.

பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய உ படத்தை ஆஷிக் இயக்குகிறார். இப்படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அதி வேக வலையமைப்பை அறிமுகம் செய்யும் தென் கொரியா..

5G network

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவின் நிறுவனமான சம்சுங் மின்னல் வேக 5G கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1GB தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் சம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென சம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை தென்கொரியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குனரான எஸ்.கே டெலிகொம் உலகின் அதிவேக கம்பியில்லா வலையமைப்பினை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வழமையான எல்.டி.இ. வலையமைப்பின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் தரவுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது. மேலும் இது 3 ஆம் தலைமுறை வலையமைப்பினை விட 10 மடங்கு அதிக வேகமானதென எல்.டி.இ சுட்டிக்காட்டியுள்ளது.

இச் சேவையானது ஆரம்பத்தில் சியோல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் பின்னர் நாடு பூராகவும் விரிவுபடுத்தப்படுமெனவும் எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது.

உலகில் வேகமான வலையமைப்பு உபயோகிக்கும் நாடாக தென்கொரியாவும் ஒன்றாகும். அங்கு பல ஏற்கனவே 4G எல்.டி.இ. தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்: அஞ்சலி..!

கற்றது தமிழ், அங்காடி தெரு படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர் அஞ்சலி.
இதன் பின் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார்.

ஆனால் கிளாமர் செட் ஆகவில்லை, எனவே மீண்டும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் நல்ல கதையம்சம் உடைய படங்கள் ஒரு சில நடிகைகளுக்கு தான் கிடைக்கும்.

அதுபோன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி.

நான்கு பாடல்கள், இரண்டு காட்சிகளில் வந்து தலைகாட்டுகிற நடிகை என பெயர் எடுக்க விரும்பவில்லை.

அஞ்சலி என்றால் நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க அரசியல் யாப்பு நகல் சந்திரிக்காவிடம் கையளிப்பு..!

ஐக்கிய தேசியக் கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியல் யாப்பின் நகல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர மாவத்தையில் உள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்தில் வைத்து இன்று காலை இந்த அரசியல் யாப்பு நகல் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் நாளை ஒரு வழி (one way) போக்குவரத்து ஒத்திகை..!

மருதானை பாலம் சந்தி தொடக்கம் டெக்னிகல் சந்திவரை, டெக்னிகல் சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம் சந்திவரை ஒரு வழி போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் நாளை 29ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இத்தினங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை வீதி மற்றும் ஆமர்வீதியில் இருந்து புறக்கோட்டை செல்லும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தையில் பஞ்சிகாவத்தை வீதிக்குள் நுழைந்து எல்பின்ஸ்டன் சினிமா அரங்குக்கு அருகில் தெற்காக திரும்பி டெக்னிகல் சந்தியில் வலது பக்கம் திரும்பி புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.

காமினி சுற்றுவட்டம் மற்றும் புஞ்சி பொரளை திசையில் இருந்து ஆமர் வீதி, மாளிகாவத்தை பகுதிக்கு வரும் வாகனங்கள் நேரடியாக டெக்னிகல் சந்திக்குச் சென்று தெற்காக திரும்பி சங்கராஜ மாவத்தை வீதியில் பயணித்து ஆமர் வீதி, மாளிகாவத்தையை அடைய முடியும்.

புறக்கோட்டை மற்றும் நீதிமன்ற திசையில் இருந்து காமினி சுற்றுவட்டம் அல்லது பொரளைக்கு வரும் வாகனங்கள் நேரடியாக சங்கராஜ சுற்றுவட்டம் வரை சென்று அங்கு பஞ்சிகாவத்தை வீதி ஊடாக மருதானை பாலம் சந்திக்கு வந்து புஞ்சி பொரளை அல்லது காமினி சுற்றுவட்டம் திசைக்குச் செல்ல முடியும்.

டெக்னிகல் சந்தியில் நீதிமன்ற வீதி மற்றும் பாலம் சந்தியை தாண்டி காமினி சுற்றுவட்டம் திசைக்கு வாகனங்களை செலுத்த முடியும்.

மாளிகாவத்தை வீதியில் இருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ சுற்றுவட்டத்தை தாண்டி பின் ஆமர்வீதி திசைக்குச் செல்ல முடியாது. அவ்வாறு வரும் வாகனங்கள் பெந்தாராம வீதி, பபாபுள்ளே வீதி ஊடாக கிரேன்பாஸ் மாவத்தை வழியாக ஆமர் வீதியை வந்தடைய முடியும்.

எனவே எதிர்வரும் இரு தினங்களில் மேற்கூறியவாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.