பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் தலைவா திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜயின் பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பேனர்களில் அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்புடன் கூடிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்.
ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின. அதில் அஜீத் வேஷ்டியுடன் அமர்ந்து டீ குடிப்பது போன்ற படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
தற்போது நாகரீகமான உடையிலேயே நடித்து வரும் அஜீத், இந்த படத்தில் முதன்முறையாக கிராமத்து பின்னணியில் தோன்றுகிறாராம். இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத் வேஷ்டியுடன் ஆட்டம் போடுகிறாராம். இந்த பாடலும், நடனமும் ரசிகர்களிடையே பெருத்த ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜீத், ஏற்கெனவே அட்டகாசம் படத்தில் வேஷ்டியுடன் நடனமாடியிருந்தார். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என கூறப்படுகிறது.
மும்பையில் நேற்று முன்தினம் மாலை பெண் போட்டோகிராபர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
மும்பையில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் அவமானத்திற்குறிய செயலாகும். இது நம் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தை செய்தவர்களை உடனடியாக கைது செய்து விரைவாக உரிய தண்டனை வழங்க வேண்டும்.
இச்சம்பவம் நடைபெற்ற ஒரு நாளைக்கு முன்னர்தான் பெண்களை சகோரரிகளாக ஏற்றுக்கொள்ளும் ராக்கி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இனி அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் என்று நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் கொண்டாடும் அனைத்து விதமான விழாக்களும் பெண்களை மதிப்பது எப்படி என்பதை நமக்கு கற்றுத் தருகின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நம் நாட்டில் இதைபோன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரேயா கோஷல் பின்னணி பாடகியான இவருடைய குரல் மட்டுமல்ல, முகமும் அனைவரையும் வசீகரிக்கும். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக மைனா’படத்தில் நீயும் நானும், சாட்டை படத்தில் சகாயனே சகாயனே போன்ற பல பாடல்கள் இவரது திறமையை வெளிக்காட்டும்.
இந்நிலையில் ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், எம்.ஜீவன் இயக்கும் மொசக்குட்டி என்ற படத்தில் கள்ளப்பயலே கள்ளப்பயலே என்ற பாடலை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆதித்யா, மகிமா, பசுபதி, எம் எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
சூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 3 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.
மழையால் இதுவரை 53 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. சூடானில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக கர்டோம் மாகாணத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள நைல் நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. கர்டோம் கிழக்கு பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ளத்தால் 3 லட்சத்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் இப்ராகிம் முகமது ஹமீது கூறுகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மழையால் 53 பேர் இறந்துள்ளனர் என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்நிலையில் மணிமேகலாவுக்கு அவரது கணவரை பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த மணிமேகலா தற்கொலை செய்வதென முடிவு செய்தார். அதன்படி கடந்த 19ம் திகதி அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க முயன்றார்.
அந்த சமயம் ராஜேந்திரன் வரவே குளிர்பானத்தை அவரிடம் கொடுத்துவிட்டார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் ராஜேந்திரன் குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாயர்புரம் பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் விசாரணை நடத்தி மணிமேகலாவை கைது செய்தனர்
ஷூஜித் சர்கார் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இன்று ஆகஸ்ட் 23ம் திகதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை.
இத்திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் படத்தில் தவறாக சித்திரித்திருப்பதாக புகார் கூறி மதிமுக கட்சி தலைவர் வைகோ, நாம் தமிழர் இயக்கதின் தலைவர் சீமான் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்தும் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். திரைப்படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும் இத்திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிமாற்ற பதிப்புகள் இன்று தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. எதிர்ப்பாளர்களின் கோரிக்கையின்படி படத்தை போட்டுக் காண்பித்த பின்னரும் எதிர்ப்பு வலுத்தபடியால் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருந்தனர்.
பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் எதுவும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நிலை அதிகரித்திருப்பதாலேயே படத்தை திரையரங்குகள் வெளியிட மறுத்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி சேகர் கூறினார்.
இந்நிலையில் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த வருடத்தில், தமிழகத்தில் எதிர்ப்பு காரணமாக குறித்த திகதியில் திரைப்படம் ஒன்றை வெளியிடாமல் போன மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விஸ்வரூபம், தலைவா ஆகிய படங்கள் பிரச்சினையை எதிர்நோக்கியிருந்தன. மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிராக இணையங்களில் செய்யப்பட்ட பிரசாரத்தை பிரிட்டனிலும் இந்தப் படம் திரையிடப்படவில்லை என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனில் இந்தப் படம் திரையிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள திரைப்படத் தரப்பினர், பாதுகாப்பு காரணங்களால் தான் அந்தப் படம் வெளியாகவில்லை என்றும் கூறியுள்ளனர்.
கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்த போது எதிரே வந்த லொறியில் மோதியே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகி விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன விபத்து உள்ளிட்ட வித்துக்களினாலும் திடீர் சுகயீனம் காரணமாகவும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இவர்களில் சிலர் பரீட்சைக்கு தோற்ற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதான பரீட்சைக்குத் தோற்றும் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அதே சமயம் தங்கள் வீரர்கள் இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக இரு நாட்டு உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், 337 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு இன்று விடுதலை செய்தது. கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த 329 கைதிகளும், லண்டியில் உள்ள சிறார் சிறையில் இருந்த8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிந்து மாகாண உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாலிர் சிறையில் உள்ள ஒரு இந்திய கைதி, இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை உறுதி செய்யாததால் அவரை விடுதலை செய்ய முடியவில்லை என்று சிறை சூப்பிரெண்டு ஷுஜா ஹைடர் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட கைதிகள் 8 ஏ.சி. பஸ்களில் லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மறறும் பணத்தை அரசு கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் ஹைடர் கூறினார்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய கைதிகளில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள். இவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் தண்டனைக் காலம் முடிந்ததும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் டோக்கியோவில் இளவயது தொழில் முனைவோரான ஒரு பெண் தன்னத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். காரணம் அவருக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாததே.
ஜப்பான் ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டன. 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தலைநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த திங்கள் அன்று தன் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு, அபாயகரமான நிலையில் இருந்துள்ளார்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் இதைக் கண்டுவிட்டு, போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். போலீஸார் அம்புலன்ஸை வரவழைத்து, பெண்ணைக் காப்பாற்றினர்.
அப்போது அந்தப் பெண்ணைக் கட்டிப் போட்டு வீட்டில் ஏதேனும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும் முன்னறிவிப்பு அளிக்காமல் விடுப்பு கிடைப்பதற்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பெண்ணின் நிலையைக் கருதி அவர் மீது எந்த நடவடிக்கையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது
ஓடும் ரயிலில் பாய்ந்து ஏற முற்பட்ட இளைஞர் ஒருவர் தடுக்கி விழுந்ததில் ரயில் சில்லினால் அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.
கொழும்பு – வவுனியா ரயிலில் ஏற முற்பட்ட போதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் வண்டி பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்படுவதற்கு முன்பே குறித்த இளைஞர் ஓடிச் சென்று ரயிலில் ஏற முற்பட்டுள்ளார்.
சம்பவத்தில் குறித்த இளைஞனின் கை வேறாக துண்டிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் காயமடைந்த இளைஞனையும் துண்டிக்கப்பட்ட கையினையும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எனக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா பொலிஸாரும் இச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை பொலிசார் பலரை கைது செய்தனர். டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்ட முக்கிய தரகர் சந்திரேஷ் ஜெயினிடம் விசாரணை நடத்த மும்பை பொலிசார் முடிவு செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதிப்படி, மும்பைக்கு அழைத்து வரப்பட்ட ஜெயினிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்பு ஜெயினை மும்பை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சூதாட்ட வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட 15 வயதான மாலைதீவு பெண்ணுக்கு உத்தரவிடப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண் வேறோரு ஆணோடு உடலுறவு கொண்டதாக சிறார் நீதிமன்றம் கண்டறிந்தது தவறு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக இப்பெண்ணுடைய தாயின் கணவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வது மாலைதீவில் சட்ட விரோதமானது ஆகும்.
இந்தப் பெண்ணுக்கு 100 சவுக்கடி கொடுக்குமாறு கொடுக்கப்பட்ட தீர்ப்பை கடுமையாக சாடியிருந்த அம்னெஸ்ட்டி இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளது. திருமணத்துக்கு வெளியே உறவு கொண்டார்கள் என்பதற்காக யாரும் தண்டிக்கப்படக் கூடாது என அம்னெஸ்ட்டியின் ஆசிய பசிபிக் வட்டகை இயக்குனர் பாலி டிரஸ்காட் கூறியுள்ளார்.
சவுக்கடி கொடுப்பத்து கொடூரமானது மனிதத் தன்மையற்றது, சிறுமைப்படுத்துவது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாலியல் வல்லுறவுக்குப் பிறகு கடுமையான மனஅழுத்தத்தில் இருந்தபோது, அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண் 18 வயதை அடைந்தவுடன் சவுக்கடி வழங்கப்பட வேண்டும் என்று சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் எழுந்த நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக மாலைதீவு அரசு பெப்ரவரியில் மேன்முறையீடு செய்தது.
இந்த தீர்ப்பு குறித்து மாலைதீவு அதிபர் முகமது வாகீத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டரீதியான காரணங்களால் அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட முடியாது. அந்தப் பெண் மற்றொரு ஆணுடன் சுயவிருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டிருந்ததாக காவல்துறை விசாரணைகளின்போது தெரியவந்தது.
நாட்டின் வடக்கேயுள்ள ஒரு தீவில் சிறிய குழந்தையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை அவருடைய தாயின் கணவனே வன்புணர்ச்சி செய்தார் என்றும், அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை அவர் கொன்றார் என்றும் தற்போது காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.