ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதான குழந்தையான ஹெல்மியை வைத்து இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
கிரான் கனேரியா தீவுக்கு விடுமுறைக்காகச் செல்லும் நடுத்தர வயது பெண் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற விபரத்தை கூறும் ‘லாஸ் பால்மாஸ்’ என்ற குறுந்திரைப்படத்திற்கான ட்ரைலரே இதுவாகும்.
கவர்ச்சி நடிகை மறைந்த சில்க்ஸ்சுமிதாவின் வாழ்க்கை “சில்க் சக்கத் ஹாட்” என்ற பெயரில் கன்னடத்தில் படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே இந்தியில் டேட்டி பிக்சர் என்ற பெயரில் வந்தது. இதில் சில்க்ஸ்சுமிதா வேடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் நடித்துள்ளார்.
கடந்த வாரம் இப்படம் கர்நாடகா முழுவதும் ரிலீசானது. இதற்கு ஸ்ரீராம சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் நடித்துள்ளதால் இப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டங்கள் நடத்தினர்.
மங்களூர், மைசூர், பெல்காம் பகுதிகளில் தியேட்டர்களில் புகுந்தும் ரகளையில் ஈடுபட்டனர். தியேட்டர் அதிபர்களும் மிரட்டப்பட்டார்கள்.
இதையடுத்து கோர்ட்டிலும் ஆபாச காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில்க் சக்கத் படத்துக்கு செப்டம்பர் 10ம் திகதி வரை தடை விதித்து தீர்ப்பு கூறினார். இதனால் படத்தின் இயக்குனர் திரிசூல் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தான் நடிகை நடித்தார் என்பதற்காக எனது படத்தை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
வீரேந்த ஷேவாக் மிகச் சிறந்த அதிரடி வீரர். கெளதம் கம்பீரும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரர். ஆனால் இருவரும் தற்போது அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.
தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் ஷிகர் தவான், ரோகித் சர்மா சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதனால் ஷேவாக், கம்பீரை தேர்வு குழுவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.
கடைசியாக ஷேவாக் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐதராபாத் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடினார். கம்பீர் ஜனவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
இந்த நிலையில் ஷேவாக், கம்பீர் எதிர்காலம் முடிய வில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிரண் மோரே கருத்து தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஷேவாக், கம்பீர் ஓட்டங்களை குவிக்க சிரமபட்டதால் நீக்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகின்றனர். ஷேவாக் எதிரணி பந்துவீச்சை நிலைகுலைய வைக்கும் திறமை உள்ளவர். தற்போதும் அவரிடம் அந்த திறமை இருக்கிறது. அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதே நிலையில்தான் கம்பீரும் உள்ளார்.
அவர்களது எதிர்காலம் இன்னும் முடியவில்லை. ரோகித் சர்மா திறமையான வீரர்தான். ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அதிக பயிற்சி தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.
ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது..
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டதும் துடித்துபோய்விட்டேன். வாழ வேண்டிய ஒரு இளம் தளிர் இன்று சருகாகி கிடக்கிறது.
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன்.
விஷ்ணுகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மையென்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முச்சக்கரவண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மட்டுமே செலுத்த முடியும் என புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர முச்சக்கரவண்டிகளை செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கமைய வலது புறமாக முச்சக்கரவண்டிக்குள் பிரவேசிக்கவே அதிலிருந்து இறங்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை முச்சக்கர வண்டியில் பின்புறம் இடது பக்கத்தில் மிகவும் தெளிவாக காட்சிபடுத்த வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதிற்கு குறைவான இரண்டு சிறுவர்களை ஒரு பயணி என்ற அடிப்படையில் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிக்குள் நேர் எதிரே ஆசனங்களை பொருத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சாரதியை தவிர்ந்த வேறு நபர்கள் சரதிக்கான ஆசனத்தில் அமர்ந்துச் செல்வதற்கு முச்சக்கரவண்டிக்குள் இருந்தவாறு கையேடுகளை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிக் கருவிகள் அல்லது வேறு உபகரணங்களை முச்சக்கரவண்டியில் பயன்படுத கூடாது விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து பயணிகளும் சாரதி வினவும் பட்சத்தில் செல்வதற்கு உத்தேசித்துள்ள பயணம் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமெனவும் மானியில் குறிப்பிடப்படுகின்ற மொத்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டுமெனவும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முச்சக்கரவண்டியை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் மானிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையம் 2200 கோடி இந்திய ரூபாயில் அண்மையில் கட்டப்பட்டது. இந்தநிலையில், இண்டிகோ விமானத்திற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
300 அடி நீளமும் 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மழை மற்றும் ஏசி தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னால் இதே பகுதியில் மேற்கூறை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய், அமலாபால் நடித்துள்ள தலைவா திரைப்படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்கினர். இதனால் ரிலீஸ் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே தலைவா’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.
கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தலைவா திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளனர். படத்தைப் பார்த்த குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும் விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
யு சான்றிதழ் பெற்றிருந்தாலும் திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும் பெண்கள் குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி தலைவா திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.
இன்று உலகில் அதிகமான நோய்களுக்கப முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான். அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம்.
இதற்காக நாம் செல்லும் இடமெல்லாம் மினரல் தண்ணீர் போத்தல் வாங்குவது என்பது அனைவருக்கும் இயலாத காரியம். அதற்காகவே பிரத்யோகமான ஸ்ரோ ஒன்றை வடிவமைத்துள்ளார் ஒருவர்.
இந்த ஸ்ரோவில் சிறிய அளவிலான தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் பிளேட்டுகள் உள்ளது. இந்த ஸ்ரோ மூலம் நாம் தண்ணீரினை அருந்தும் போது நுண் கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தமான தண்ணீர் மட்டுமே நாம் அருந்தலாம்.
இந்த ஸ்ரோ மூலம் நாம் நீர் நிலைகளில் கூட தைரியமாக தண்ணீர் அருந்தலாம் இதோ அந்த ஸ்ரோவை படத்தில் பாருங்கள்..
இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மத்தியதர வீரராக களமிறங்கும் இவர் டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக பெற்ற 96 ஓட்டங்களாகும்.
மிஸ்பா இதுவரை விளையாடிய 125 ஒருநாள் போட்டியில் 29 அரைசதம் உட்பட 3819 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
இவரை அடுத்து பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (356 போட்டி, 3717 ரன், 6 அரைசதம்), மோயின் கான் (219 போட்டி, 3266 ஓட்டங்கள், 12 அரைசதம்), சிம்பாவேயின் சிகும்புரா (150 போட்டி, 2996 ஓட்டங்கள், 15 அரைசதம்) ஆகியோர் உள்ளனர். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் இர்பான் பதான் (120 போட்டி, 5 அரைசதம், 1544 ஓட்டங்கள்) உள்ளார்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் சென்ற பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்திய மிஸ்பா 4 அரைசதம் உட்பட 260 ஓட்டங்கள் எடுத்து, தொடர் நாயகன் விருது வென்றார்.
இதன்மூலம் இரண்டு அணிகள் மட்டும் மோதிய ஒருநாள் தொடரில் அதிக அரைசதம் அடித்த தலைவர் வரிசையில் முதலிடத்தை அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (எதிர்-இலங்கை, 4 அரைசதம், 2004), தென் ஆபிரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்-பாகிஸ்தான், 4 அரைசதம், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
இந்திய அணித் தலைவர்களில், அசார், கங்குலி, டோனி ஆகியோர் ஒரே தொடரில் அதிகபட்சமாக தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.
கேள்வி :– நடிகர் விஜய் நடித்து 9ம் திகதி வெளிவருவதாக இருந்த தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வருகிறதே?
பதில் :– தலைவா திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும் யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் முதல்– அமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடை நாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும் ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. மேலும் தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும். வரி விலக்கு கூட இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் இந்த நிலைதான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமேயானால் அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால் ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.
கேள்வி :– அ.தி.மு.க. அரசு தாமதமாக ஓகஸ்ட் 2ம் திகதி பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்த போதிலும் விவசாயிகள் அந்தத் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாதவாறு கால்வாய்கள் எல்லாம் தூர் வாரப்படாமல், புதர் மண்டிக் கிடப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளனவே?
பதில்:– டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் எல்லாம் எவ்வாறு தூர் வாரப்படாமல் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன என்பதைப் புகைப்படங்களோடு நாளேடுகள் எடுத்து வெளியிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் அவை தொடர்ந்து காட்டப்படுகின்றன.
கொள்ளிடம் ஆற்றிலே வருகின்ற தண்ணீர் அரசின் முன்னெச்சரிக்கை இல்லாத காரணத்தால், கடலில் சென்று கலப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
பாசனத்துக்கு உரிய நீர் தலைமடை முதல் கடைமடை வரை தங்குதடையின்றி, பயிர்களுக்குச் சென்றடையாத வகையில் ஏரி, குளம், வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு செடிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாம்.
கேள்வி :– ஓய்வூதிய தாரர்கள் இறக்கும்பொழுது அவர்களது வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பப் பாதுகாப்பு நிதியை 50 ஆயிரம் ரூபாயாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயர்த்தி யிருப்பதாக ஏடுகளில் செய்தி வெளிவந்திருக்கிறதே?
பதில்:– அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்பு நிதியே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் என்னால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் என்பதை அரசு அலுவலர்கள் மறந்து விடுவார்களா என்ன? அதுபோலவே காலஞ்சென்ற ஓய்வூதியர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கென 1-1-1997 முதல் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, ஓய்வூதியர்களிடமிருந்து அவர்கள் இறக்கும் காலம் வரை அவர்தம் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு 20 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து, ஓய்வூதியரின் மரணத்திற்குப் பின் அவரின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற திட்டமும், தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டம்தான்.
இந்த உதவித்தொகையைத் தான் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1-6-2012 முதல் 35 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறார். ஆனால் இந்தத் திட்டத்திற்காக மாதந்தோறும் ஓய்வூதியர்களிடமிருந்து ஏதாவது பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதைப் பற்றியும், அது விருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டமா என்பதைப் பற்றியும் தற்போதைய அரசு அறிக்கையிலே கூறவில்லை.
அது மாத்திரமல்ல இந்தத் தொகை கூட அரசே தன் நிதியிலேயிருந்து அரசு ஓய்வூதியதாரர்களுக்குச் செய்வதும் அல்ல. 35 ஆயிரம் ரூபாய் என்பதை 50 ஆயிரம் ரூபாயாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயர்த்திக் கொடுக்கிறார் என்றால் உயர்த்தப்படும் இந்தத் தொகை கூட அரசினால் வழங்கப்படுவதல்ல.
பணியிலே இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதந்தோறும் 70 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகையிலிருந்துதான், அந்த ஓய்வூதியதாரர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்திற்கு இதுவரை 35 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்தார்கள்.
அதை தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்துகின்ற போது, ஓய்வூதியதாரர்கள் இதுவரை மாதந்தோறும் இதற்காகச் செலுத்தி வந்த 70 ரூபாய் என்பதை 80 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யவிருக்கிறார்கள்.
இதையும் முதல் அமைச்சர் அறிவிப்பில் அப்படியே மறைத்து விட்டு, அரசு ஏதோ ஓய்வூதியதாரர்களுக்கு புதிதாகத் தருவதைப்போல, அதுவும் தற்போதுதான் தருவதைப் போலச் செய்தி கொடுத்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு புதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் கே.எம் இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை ஆரம்பித்துள்ளார். ரமலான் திருநாளன்று நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிடா அம்பானியும் கலந்து கொண்டுனர்.
இது தொடர்பாக சமூக இணையத்தளம் ஒன்றில் தெரிவித்த ரகுமான், இன்று நாங்கள் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை துவங்குகிறோம் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளும் முகேஷ் அம்பானி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு காலமும் நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் தான் இந்த கல்லூரியை ஆரம்பிக்கும் அளவிற்கு என்னை ஊக்குவித்துள்ளது.
இக்கல்லூரி வருங்காலத்தில் இந்தியாவிலிருந்து சிறந்த இசை கலைஞர்களை உருவாக்க உதவி புரியுமென நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு ரத்து, படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஆகிய காரணங்களுக்காக நேற்று வெளியாக வேண்டிய படம் வெளியாகவில்லை.
படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சில இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் விஷ்ணுகுமார் என்ற ரசிகர் ஒருவர் தலைவா படம் வெளியாகாத ஏமாற்றத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் நடித்த தலைவா திரைப்படம் இந்த வாரம் 9.08.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த திகதியில் படம் வெளியாகவில்லை.
என் மீது பாசமும் அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஏமாற்றத்தினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன்.
இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும். அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹூ(63). பாலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவும், பாலஸ்தீன நாட்டுடன் மீண்டும் சமாதான பேச்சு தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களாக வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக பெஞ்சமின் நேதன்யாஹூ கூறியதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பிரதமரின் வயிற்று வலிக்கு ´ஹெர்னியா´ எனப்படும் குடல் இறக்க நோய்தான் காரணம் என்பதை கண்டறிந்த வைத்தியர்கள், உடனடியாக அவசர சத்திர சிகிச்சை செய்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, இன்று ஜெருசலேமில் உள்ள வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஹெர்னியா நோய்க்கான சத்திர சிகிச்சை செய்யப்படவுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த சத்திர சிகிச்சைக்கு பின்னர், ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வரும் புதன்கிழமை ஜெருசலேமில் நடைபெறும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வருகையாளர் பகுதியில் ஏற்பட்ட இந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடிய தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்.
தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிக் கொண்டிருந்த அதே வேளையில், விமான நிலைய ஊழியர்களும், பொலிசாரும் கடமையே கண்ணாக வேறொரு காரியத்தில் ஈடபட்டிருந்தனர்.
வெறிச்சோடி கிடந்த வருகையாளர் பகுதியில் இருந்த வெளிநாட்டு பயணிகளின் பெட்டிகளை திறந்து, அவற்றில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிச் செல்வதில் இவர்கள் கண்ணும் கருத்தமாக இருந்த காட்சி சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து உள்ளே இருந்த பணத்தை பொலிசார் அள்ளிச்சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகளை கண்ட விமான நிலைய உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி. பதிவுகளில் இடம் பெற்றிருந்த பொலிசார் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 7 பொலிசார் மீதும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் டாக்சி டரைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பொலிசார் இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியா வழங்கிய இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரி, கடந்த வாரத்தில் இந்தியாவினால் இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திடம் ராஜதந்திர ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
அதேநேரம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்பில் குறித்த இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சிடம் கையளித்தார்.
அதில் மீனவர்களின் தடுத்து வைத்தல் காரணமாக அவர்களின் குடும்பங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தமது மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் உள்ளிடுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று இலங்கை இந்தியாவிடம் கேட்டுள்ளது. இதனை தடுக்கும் போதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்கிடைக்கும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தில் இலங்கை தமது உள்ளூர் சட்டங்களை மதித்து செயற்படவேண்டிய அவசியம் உள்ளதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் கருணாதிலக்க அமனுகம தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கையின் சிறைகளில் மனிதாபிமான முறையிலேயே நடத்தப்படுவதாகவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய இங்கிஷ் கால்பந்து லீக் தொடரின் இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் என்று மூன்றுவித இந்திய அணிக்கும் டோனி தலைவராக உள்ளார்.
2007ல் T20, 2011ல் உலகக் கிண்ணம், இந்த ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம் என்று மூன்று கிண்ணங்களை வெற்றிபெற்றுள்ளார்.
இவரை, இங்கிலீஷ் பிறீமியர் லீக் கால்பந்து தொடரின் இந்திய தூதராக நியமித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம். இதையடுத்து, இத்தொடரை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில், அடுத்த வாரம் முதல் டோனி தோன்றவுள்ளார்.
அதாவது கால்பந்து போட்டியுடன் இணைந்திருங்கள் என்று அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் டோனி அழைக்கவுள்ளார். டோனி இயற்கையாகவே கால்பந்து போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். மான்செஸ்டர் யுனைடெட் கழக அணியின் தீவிர ரசிகர்.
இது குறித்து டோனி கூறுகையில் கிரிக்கெட் போட்டிகளில் பிசியாக இல்லாத வார நாட்களில் கால்பந்து போட்டிகளில் இணைந்து விடுவேன். எனது பள்ளி நாட்களில் கால்பந்து விளையாடும் போது நான் தான் கோல் கீப்பராக இருப்பேன்.
இன்றைக்கும் முக்கியமான கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் கால்பந்து விளையாடித்தான் என்னை தயார் செய்து கொள்வேன். கிரிக்கெட் மீது தீவிர பற்று வைத்திருக்கும் அதேநேரம், இந்திய விளையாட்டு ரசிகர்கள், அனைத்து போட்டிகளையும் ரசிக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும்.
இங்கிலீஷ் லீக் தொடரின் போது 100 போட்டிகளுக்கும் மேல் இந்தியில் வர்ணனை செய்யவுள்ளது, கால்பந்து போட்டிகளை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
இம்முயற்சி இந்தியா முழுவதிலும் புதிய ரசிகர்களை கொண்டு வரும் என்றும் இதேபோல மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் டோனி கூறியுள்ளார்.