கொழும்பில் பிரமாண்ட அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு!!

கொழும்பு – காலி முகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (25.4.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும்.

இந்த ஹோட்டல் ”வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா” என்ற துணை நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு ஆகும்.

மேலும், தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை ப்ரிட்ஜ் எனப்படும் வான் பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

புத்தளம்(Puttalam) – மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று பாதையில் நடந்து சென்ற குறித்த இளைஞன் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

21 வயதான மானென் நெத்மிகா இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் தற்காலிகமாக விடுதியொன்றில் தங்கியிருந்து வீட்டிற்கு செல்லும் வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

குறிப்பாக 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது இரண்டு இலட்சம் ரூபாவை தொட்டிருந்தது. இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி இன்று (25.04.2024) காலை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக குறைந்துள்ளது. இதற்கிடையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 188000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பெண் திடீரென உயிரிழப்பு!!

மதுரங்குளிய – முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான சுவாச கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தலம,வில்பொத்த பகுதியைச் சேர்ந்த ரேணுகா இந்திரகாந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 35 வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இவர், கடைசியாக துபாயில் பணிபுரிந்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பணிபுரிந்து சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நாடு திரும்பிய குறித்த பெண் சில மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததால் குணமடைய இந்த இடத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது போத்தல்களில் அடைக்கப்பட்ட சில தண்ணீர் வகைகளை குடிக்கக் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் உடல் நிலை மோசமாகி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிமலைக்கு அருகில் புகைப்படம் எடுக்க ஆசைப்பட இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

எரிமலைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் – இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற சீனா பெண் ஒருவரே இவ்வாறு எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் இஜென் எரிமலை நீல நிறத்தில் காட்சியளித்ததை பார்த்து எரிமலைக்கு மிக அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, அந்த பகுதியில் பலமான காற்று வீசியதில் பள்ளத்தாக்கிற்குள் தூக்கி வீசப்பட்ட குறித்த பெண் சுமார் 246 அடி பள்ளத்திற்குள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

2 மணித்தியால தேடுதலுக்குப் பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டு, சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. படிப்பை பாதியில் நிறுத்தியதால் விபரீத முடிவு!!

மேற்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், திடீரென திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள சந்துரு கொண்டா மண்டலத்தில் உள்ள மங்கையபஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு.

இவரது மனைவி பத்மா. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு தேவகி(23) என்ற மகள் இருந்தார். இவருக்கும், கடந்த மாதம் 28-ம் தேதி துப்பண்டா கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், திருமணம் முடிந்த பதினாறாவது நாளில் திருவிழாவுக்காக மங்கையபஞ்சார் கிராமத்திற்கு தேவகி வந்திருந்தார். கடந்த 14-ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, தேவகி பூச்சிமருந்தைக் குடித்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு விழித்த அவரது பெற்றோர், உடனடியாக தேவகியை கொத்தகூடம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் கம்மம் மருத்துவமனைக்கு தேவகி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த தேவகி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தேவகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ” தேவகி சமீபத்தில் தான் பிஎஸ்சி படித்து முடித்துள்ளார். இதன்பிறகு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று தனது தாயிடம் தேவகி கூறியுள்ளார்.

ஆனால், உடல்நிலை சரியில்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து கடந்த மாதம் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிராசையானதால் தேவகி மனமுடைந்து இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்” என்றனர்.

திருமணமான ஒரு மாதமேயான நிலையில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞ ன் பலியான சோகம்!!

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.

இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு, கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததன்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அதாவது இவர் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தற்போது, இவரின் தோற்றத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

இவரின் முகத்தில் முடி வளர்ந்திருப்பதை குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். மீசை வளர்ந்திருக்கிறது என்றும், அழகில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால், நெட்டிசன்கள் பதிவிடும் கருத்துக்களை கண்டித்து பலரும் மாணவிக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் பெண்களை பாதிக்கும் Polycystic Ovarian Syndrome காரணமாக அவர் முகத்தில் முடி வளர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவி பேசுகையில், “நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். இன்ஜினீயராக விரும்புகிறேன். IIT-JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஆசை” என்று பேசியுள்ளார்.

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் அதிகளவிலான மக்கள் வந்து செல்லும் புதிய பேரூந்து நிலையப் பகுதியில் குறித்த நடவடிக்கை இன்று (24.04.2024) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சமுதாய பொலிஸ் குழுவால் குறித்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சமுதாய பொலிஸ் குழுவினரும் இதில் கலந்து கொண்டு டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

இதில் புதிய பேரூந்து நிலையம், கண்டி வீதியோரம் என்பவற்றில வீசப்பட்டிருந்த போத்தல்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன அகற்றப்பட்டதுடன், நீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபர் : அதிர்ச்சியில் மாணவியின் தாய் மரணம்!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் உள்நுழைந்துள்ளார்.

இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச் சம்பவத்தில் மனமுடைந்து மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் உள்நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னாரில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!!

 

மன்னார் முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது இன்று (24) காலையில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரிய வருகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண் மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக மெல்பேர்னுக்கு சென்ற இலங்கை மருத்துவ அதிகாரி ஓஷிகா விஜயகுணரத்ன புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்திய அதிகாரி தனது கணவர் மற்றும் சிறிய மகளுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த நிலையில், அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சிகிச்சையின் போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்த போதிலும், புற்றுநோய் செல்கள் மீண்டும் கல்லீரல் மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

புற்றுநோய் மிகவும் தீவிரமானதாக இருப்பதால், கூடிய விரைவில் சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறித்த சிகிச்கைக்காக ஒரு முறைக்கு ஒரு லட்ச டொலர் செலவிடப்படுகின்றது. அவர் ஒரு சர்வதேச மாணவி என்பதால், அவுஸ்திரேலியாவில் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் அல்லது தனியார் புற்றுநோய் காப்பீடு எதுவும் இல்லாமல் கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓஷிகா விஜயகுணரத்னவின் கணவர் பணிபுரிந்து வருவதால், பிள்ளைகள் மற்றும் கல்வி காரணமாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவருக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த இலங்கையின் பால் சோறு!!

சிங்களவர்களின் பாரம்பரிய உணவான கிரிபத் (කිරිබත්) எனப்படும் பால் சோறு சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ‘MasterChef Australia’ சமையல் போட்டியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா பால் சோற்றை சமைத்து அதன் சுவையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பால் சோற்றை காட்சிப்படுத்திய விதம் மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார்.

அதேவேளை, அங்கிருந்த நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என பால் சோறை குறிப்பிட்டுள்ளார். சாவிந்திரி பெரேரா போட்டியில் பால்சோற்றுடன் ஸ்னாப்பர் மீனை வைத்து கித்துல் பாணியை மேலாக ஊற்றி நடுவர்களுக்கு வழங்கினார்.

அதோடு உணவை சுவைத்த நடுவர்கள் ஒரு கொண்டாட்டத்திற்கு ஒப்பிட்டனர். ‘நிஜமாகவே சிறந்த இலங்கை உணவு வழங்கியதற்காக சாவிந்திரியை பாராட்டினார்கள்.

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது மணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை எட்டு முப்பது மணியளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து ஒன்பதரை மணியளவில்  எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர்.

தொடர்ந்து பத்து  மணியளவில் இரதோற்சவம் இடம்பெற்று காலை பதினொரு மணியளவில்  ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன.இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் மதியம் பன்னிரண்டு  மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது.

 

பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தால் பதின்ம வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலை செய்ய குறித்த சிறுமி வந்துள்ளார்.

அதன்படி இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு சலூனில் வேலை உள்ளதாக கூறியதாகவும் கொழும்பிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமியை சந்தித்த இந்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக சிறுமியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் காதலி என கூறப்படும் 23 வயதுடைய யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்… இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?

மரத்தை கட்டிப்பிடிப்பதற்கு நபர் ஒருவரின் டிக்கெட்டிற்கு ரூ.1,500 கட்டணமாக வசூல் செய்யும் நிறுவனத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

பொதுவாகவே எல்லோருக்கும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய வாழ்க்கை முறையில் ஏதாவது ஒரு நேரத்தில் பயணமோ, ஓய்வோ எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இன்னும் சிலர் இயற்கையோடு நாம் நேரத்தை செலவழித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பது உண்டு.

இந்த நிலையில், மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1,500 கட்டணத்தை பெங்களூரு நிறுவனம் ஒன்று வசூல் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,500 கட்டணம்

`A Forest Bathing Experience’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ள விளம்பரத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.1,500 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் மார்க்கெட்டில் ஒரு புதிய மோசடி உள்ளது எனக் கூறியுள்ளார்.

இயற்கையோடு தொடர்புடைய ஒரு ஜப்பானிய முறைக்கு ஷின்ரின் யோகு (Shinrin Yoku) என்று பெயர். இதனை வனக் குளியல் (Forest Bathing) எனவும் அழைக்கின்றனர்.

அதாவது, வனத்திற்குள் மெதுவாக நடந்து சென்று அமைதியாகவும் நேரத்தை செலவு செய்ய வேண்டும். மேலும், மரத்தை தொட்டு பார்த்து உணர வேண்டும்.

அந்தவகையில் பெங்களூரு நிறுவனம் ஒன்று கப்பன் பார்க்கில் மரத்தை கட்டிப்பிடித்து, அமைதியான நடைபயிற்சி மேற்கொள்ள ரூ.1,500 கட்டணம் எனக் கூறியுள்ளது. இந்த நிகழ்வானது ஏப்ரல் 28-ம் திகதி காலை 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.