யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்று முன் தினம்(04) காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டுள்ளன.
இதன்போது டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த கடற்றொழிலாளர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு திரும்பவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த கடற்றொழிலாளர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் – மாந்தை மேற்கு மூன்றாம்பிட்டி கிராமத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஏ32 வீதி நாச்சிகுடா சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் குறித்த நபர் உணவு உண்பதற்கு சென்ற வேளை உணவில் ஈ இருப்பதை அவதானித்து உணவு பரிமாறுபரிடம் கூறியுள்ளார்.
இதன்போது உணவு பரிமாறும் நபர் சிங்கள மொழியில் கதைத்ததையடுத்து அதற்கு உணவு உண்ண சென்றவர் ஏன் சிங்கள மொழியில் கதைக்கின்றீர்கள் தமிழில் கதையுங்கள் என்று கூறி போது உணவகத்தில் நின்ற ஏனைய பணியாளர்கள் இணைந்து முரண்பட்டு குறித்த நபரிடம் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அதில் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து உணவக உரிமையாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விடயம் தொடர்பில் கூறிய போது, பொலிஸ் நிலையத்தில் முறையிட வேண்டாம் என உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையினாலும் தாக்கப்பட்டதாலும் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
எனினும் பொலிஸார் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவை பொலீசார் பரிசோதித்தால் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் வருகை தந்துள்ளனர்.
இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகள் சுவாமி உலாவரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்ற காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழர் பாரம்பரிய உடையுடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் இருவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் சுவாமி வலம் வரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுவாமியை தோலில் சுமந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறன. இந்தப் போட்டியில் 14 வயதான சாமுதி பிரபோதா என்ற சிறுமி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சாமுதி பிரபோதா மொனராகலை மாவட்டத்தில் உள்ள கும்புக்கன கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளராகும்.
14 வயதில் தேசிய மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை சிறப்பம்சமாகும். அது மட்டுமன்றி மொனராகலை போன்ற கடினமான பிரதேசத்திலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.
அவரது பகுதியில் தேசிய அளவில் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இதுவரையில் எவரும் உருவாக்க முடியவில்லை. ஆனால் இம்முறை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான வீராங்கனைகள் இது போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வந்த மிகவும் திறமையான வீராங்கனைகள் என தெரியவந்துள்ளது.
மேலும், உலகின் தலைசிறந்த பெண்கள் அணிகளான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இளம் பெண்கள் அணிகளை இலங்கைக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தப்பட்டு வருகின்றது.
மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவன் சுகவீனமடைந்து உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவனின் மரணம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்காக களனி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய நான்கு மாணவர்களிடமும், மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற விடுதி கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சாரதி உள்ளிட்ட 08 பேரிடமும் இந்த குழு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நோய்வாய்ப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் குழுவினால் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தின் அடிப்படையில் அவசரகால சுகாதார நிலைமைகளுக்கு பல்கலைக்கழக நடவடிக்கைளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதி ஊழியர்களுக்கும், விரும்பும் மாணவர்களுக்கும் முதலுதவி மற்றும் அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதக்கடவையினை கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் பிக்கப் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி, தர்மபுரம் – பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் மெய்வள்ளுனர் திறனாய்வு போட்டியை இடம்பெற்றுள்ளது.
இதனை பார்வையிட்டு திரும்பி சென்ற பொழுது, வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு 30 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுதே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது.
மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.
நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம்.
இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தனது அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன், அடிக்கடி குடித்துவிட்டு, மனைவி பாரதியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மகேந்திரன் சமீபத்தில் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய மகேந்திரன் தொடர்ந்து போதை பழக்கத்தில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், 15 நாட்களுக்கு பிறகு திப்பாலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பாரதி, நேற்று கணவர் வீட்டிற்கு வந்தபோது, மகேந்திரன் தனது மனைவி பாரதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார்.
இன்று காலை மகேந்திரனின் தாய் வீட்டை சுற்றி பார்த்தபோது மருமகள் பாரதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாரதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (19). இவருக்கும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துருவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
சந்துருவின் தாத்தா சேதுராமன் வீட்டில் சில நாட்கள் தங்கினார்கள். ஒரு கட்டத்தில் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், ஹேமலதாவும், சந்துருவும் மைனர் என்பதால், அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சந்துருவின் பெற்றோர், சந்துருவை பெங்களூரு அழைத்து சென்று தலைமறைவாக வைத்து இருப்பதாக, ஹேமலதா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சந்துருவை தேடி வந்தனர். இந்நிலையில், கணவரை காணவில்லை என்ற மன உளைச்சலில் ஹேமலதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இறந்த ஹேமலதாவின் தாயார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, காதலித்து மகளுடன் குடும்பம் நடத்திய சந்துருவையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். பின்னர், அங்கிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொழில் நுப்ட வளர்ச்சியால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பாரம்பரியம், பழக்க வழக்கம் மூட நம்பிக்கைகள் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 12 முதல் 15 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பதை செய்து விடுகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில், வழக்கமான சடங்கு என்ற பெயரில் இந்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை, திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் விமர்சையாக திருமணம் செய்திருக்கிறார். அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.
குறிப்பிட்ட பிரிவின் மதவழிபாட்டுத் தலைவராக 63 வயதாகும் நுமோ போர்க்டே லாவ் ட்சூரு என்பவர் உள்ளார். இவர் 2 தினங்களுக்கு முன்னர் (மார்ச் 30) கானாவின் குரோவூரில் உள்ள நுங்குவாவில் நடைபெற்ற விழாவில் 12 வயதாகும் சிறுமியை தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும் பகிரங்கமாக திருமணம் செய்து உள்ளார்.
பாரம்பரிய திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, அது அவருக்கு பெரும் விமர்சனத்தை உண்டாக்கி உள்ளது.
திருமண விழாவின் புகைப்படங்கள் வெளியானதில் கானா நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதபோதகரை விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர். கானா சட்டம் வழக்கமான திருமணங்களை அங்கீகரிக்கும், ஆனால் அதே வேளையில், கலாச்சார நடைமுறை என கூறி நடத்தப்படும் குழந்தை திருமணங்களை தடை செய்கிறது. கானாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
கானாவில் குழந்தை திருமண விகிதம் குறைந்து வருகிறது, ஆனால் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது. கானாவில் 19 சதவீதம் பெண்கள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
5 சதவீதம் பேர் தங்கள் 15வது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாத்தறை பிரதேசத்தில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் பணிபுரியும் பிள்ளைகளின் வீடியோ அழைப்பு அறிவுறுத்தலின் பேரில் தாய் கொலையை செய்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிகம தெனிபிட்டிய கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பிரேமகுமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2ஆம் திகதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகில் உள்ள கம்பத்தில் மனைவியால் கணவன் கட்டி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளார். மனைவி, அயல் வீட்டாரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
வீட்டின் முன் நாற்காலியில் அமரவைத்து விட்டு கணவனை கம்பத்தில் கட்டிவைத்தனர். இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் வீடியோ அழைப்பு மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்தனர்.
தொந்தரவு செய்யும் தந்தையைத் தாக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். அதற்கமைய, மனைவி மற்றும் ஏனையோரால் கணவர் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் வெலிகம வாலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கழுத்தில் கட்டப்பட்ட கயிறு மாட்டிக் கொண்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், உயிரிழந்தவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மஸ்கெலியாவில் உள்ள கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர்.
இதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட சித்திரைக் கலை விழாவில் இருந்து வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவை இணைந்து நகரசபை மைதானத்தில் நேற்றும் (04.04) இன்றும் (05.04) சித்திரைக் கலை விழா நிகழ்வை நடத்தின.
இதன்போது, நேற்று (04.04) காலை அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த காட்சிக் கூடம் ஒன்றில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் வைக்கப்பட்டு அதன் பெயர் பொறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புதூர் நாகதம்பிரான் மற்றும் புத்தர் சிலை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சித்திரைர கலை விழாவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கஸ்வரர் என ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருந்தன.
இருப்பினும் மாலை குறித்த ஆதி லிங்கேஸ்வரரை பார்வையிட சென்ற பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். வர்ணப் பூச்சு மூலம் ஆதி லிங்கேஸ்வரரின் பெயர் அழிக்கப்பட்டு வெறும் லிங்கம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, உயர்மட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த பெயர் நீக்கப்பட்டதாக அங்கு கடமையில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று முன்தினம் (03.04) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என குறித்த ஆசிரியர் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளமையுடன் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் எவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதியாத போதிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் சொந்த பிரேரனை மூலம் இவ் விடயத்தினை கவனத்தில் கொண்டு வந்தமையுடன்,
நேற்றையதினம் (04.04.2024) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவனிடம் வாக்குழூலத்தினை பெற்றுக்கொண்டமையுடன் தொடர்ச்சியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மொரட்டுவை பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று (05.04.2024) அதிகாலை பதிவாகியுள்ளது. திடீர் சுகவீனம் காரணமாக அவர், இன்று அதிகாலை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.