யாழில் சிறையில் இருந்து வந்தவர் திடீர் உயிரிழப்பு : உறவினர்கள் சந்தேகம்!!

யாழில்..

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் எனும் இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி, விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் திடீர் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகின்றதுடன், இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்!!

மத்திய பிரதேசத்தில்..

103 வயது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் தனது வயதில் பாதிக்கு குறைவான பெண்ணை மணந்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தனிமையை தாங்க முடியாமல் 49 வயதான Firoz Jahan என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார். ஆனால் அந்த முதியவருக்கு இது மூன்றாவது திருமணம். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது நாசரின் மூன்றாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்த பிறகு, தனியாக இருந்த அவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஃபிரோஸ் ஜஹானை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார், அனால் இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜனவரியில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், ஃபிரோஸ் ஜஹானுடன் நாசரின் நிக்காஹ் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹபீப் நாசரின் முதல் திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்தது. முதல் மனைவி இறந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மூன்றாவது திருமணம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. 49 வயதான ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

மறுபுறம், 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஃபிரோஸ் ஜஹான் தெரிவித்தார். கணவர் நாசர் நலமுடன் இருப்பதாகவும், எந்த வித மருத்துவ பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். தன்னை யாரும் நாசரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அம்மா, அப்பா என்னை மன்னிச்சிருங்க : விபரீத முடிவெடுத்த மாணவி!!

ராஜஸ்தானில்..

“அம்மா, அப்பா என்னால் JEE தேர்வுக்குத் தயாராகமுடியவில்லை. நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் மிக மோசமான மகள். என்னை மன்னித்து விடுங்கள்.” தற்கொலை செய்துகொண்ட மாணவி. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி நிஹாரிகா (18).

இவர் மத்திய அரசின் Joint Entrance Examination (JEE) நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ந்த அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிஹாரிகா இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, ஒரு தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில் நிஹாரிகா, “அம்மா, அப்பா என்னால் JEE தேர்வுக்குத் தயாராகமுடியவில்லை. நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் மிக மோசமான மகள். என்னை மன்னித்து விடுங்கள். தற்கொலைதான் எனக்கு இருக்கும் இறுதி வழி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். போட்டித் தேர்வால், கடுமையான மன அழுத்தத்துடன் பாடங்களைப் படித்து வந்தார்.

தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் படிப்பதற்காகச் செலவழித்திருக்கிறார். ஆனாலும், மாணவியின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு விசாரிக்கப்படும் எனக் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதே கோட்டாவில் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த, உத்தரப்பிரதேச மாணவர் முகமது ஜைத் தற்கொலை செய்துகொண்டார். ஒவ்வோர் ஆண்டும் JEE, NEET போன்ற தேர்வுகளுக்குத் தயாராவதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியை ஹோட்டல் அறையில் சுட்டுக்கொன்ற காதலன்!!

புனேயில்..

புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன் மும்பையில் கைது செய்யப்பட்டார். புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில் இருக்கும் நவிமும்பை போலீஸாருக்கு உளவாளி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ரிஷப் நிகம்(27) என்பவரை பிடித்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துவிட்டு உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் புனேயில் உள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்து பார்த்தபோது அங்கு பெண் ஒருவர் சுப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். போலீஸார் வரும் வரை ஹோட்டல் ஊழியர்களுக்கு கூட இக்கொலை குறித்து தெரியாமல் இருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் வந்தனா திவேதியாகும். அவர் புனேயில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் வந்தனாவும், ரிஷப் நிகமும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் சமீப காலமாக வந்தனா ரிஷப்பை உதாசீனப்படுத்த ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. ரிஷப் நிகம் 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் வந்தனா இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஹோட்டலில் அவர்கள் இரண்டு பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

லக்னோவை சேர்ந்த வந்தனாவுடன் ஹோட்டல் அறையில் நிகம் தன்னை உதாசீனப்படுத்துவது குறித்தும், வந்தனாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபத்தில் வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ரிஷப் நிகம் தப்பிச்சென்றுவிட்டார்” என்று தெரிய வந்தது. நிகம் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டது கூட ஹோட்டல் ஊழியர்களுக்கு கேட்கவில்லை.

ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு அருகில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பாண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அந்த சத்தத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நிகம், வந்தனாவை சந்திப்பதற்காகவே புனே வந்துள்ளார். இருவரும் 25ம் தேதியில் இருந்து புனே ஹோட்டல் அறையில் தங்கியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நிகம் ஹோட்டல் அறையில் இருந்து சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக தான் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், வந்தனாவை சுட்ட துப்பாக்கியை புனேயில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து எட்டி உதைத்து கொலை செய்த கணவன்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் கடும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

பேருந்தில் பேசிக்கொண்டே வந்த தம்பதியரிடையே சற்று நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து அப்போது கணவாய்பட்டி ஒத்தக்கடைக்கு அருகே சென்று கொண்டிருந்தது அப்போது, பின் பக்க படிக்கட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் அவரது மனைவியைக் காலால் எட்டி உதைத்துவிட்டார். வளர்மதி நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பேருந்தின் முன்பகுதிக்குச் சென்று ஓட்டுனரிடம் “எனது மனைவியை நான் கீழே தள்ளிவிட்டேன், பேருந்தை நிறுத்துங்கள்” எனக் கூறிய பிறகு தான் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் விஷயம் புரிந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரை சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான விவேக் சைனி (25 வயது) என்பவரே இவ்வாறு சுத்தியலால் அடித்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்திய மாணவர் ஸ்னாப்ஃபிங்கர் மற்றும் கிளீவ்லேண்ட் வீதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட்டில் உள்ள கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையில், மேலும் ஒரு சில நண்பர்களும் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான ஜூலியன் பால்க்னர் (53வயது) என்பவர், இந்திய மாணவரிடம் போர்வை ஒன்று கேட்டுள்ளார். அதற்கு இந்திய மாணவர் தன்னிடம் போர்வை இல்லை என்று கூறியுள்ளார். இதன்பின்னர் தன்னிடம் இருந்த ஒரு ஆடையை அவரிடம் கொடுத்துள்ளார். இதற்குள் இந்திய மாணவரிடம் சண்டையிட்ட ​​பால்க்னர், அவரை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் இந்திய மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்த நிலையில் அதில், இந்திய மாணவரின் முகம் மற்றும் தலையில் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன் : பொலிஸாருக்கு உதவிய சிசிடிவி!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடியில் கருத்து வேறுபாட்டில் ஏற்பட்ட தகராறில் மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரும் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த ஜான்சிராணி கீதா என்ற பெண்ணும் சாத்தான்குளத்தில் உள்ள கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு அனன்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர்.

அந்தோணி ராஜ் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஜான்சிராணி கீதா மாயமானார். ஜான்சிராணி குறித்து கேட்டதற்கு அந்தோணிராஜ் சரியான பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜான்சிராணியின் உறவினர்கள் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதே தினத்தில் வீட்டிற்கு வந்த கணவர் அந்தோணிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தைலாபுரத்தில் உள்ள அந்தோணிராஜின் வீடு உள்ள பகுதியில் இருந்து,

சாத்தான்குளம் வரையுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர். அதில், அந்தோணிராஜ், ஜான்சிராணி கீதா இருவரும் ஒரே பைக்கில் சாத்தான்குளம் பகுதிக்கு வந்துள்ளது தெரிய வந்தது.

சாத்தான்குளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தஞ்சைநகர் வழியாக திசையன்விளை நோக்கி சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் உள்ள இடைச்சிவிளையிலுள்ள தேரிக்காட்டுப் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அத்தேரிக்காட்டுப் பகுதியில் தனிப்படை போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர். அந்த பெண், மாயமான ஜான்சிராணி கீதாதான் என்பது உறுதி செய்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம்,

“கணவன், மனைவி இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள். இருப்பினும் காதல் திருமண்ம செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர் என அக்கம் பக்கத்தினர் கூறினார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை வருவதும் உறவினர்கள் சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 21-ம் தேதி வெளியே செல்லலாம் என்று தனது மனைவி ஜான்சிராணி கீதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அந்தோணிராஜ் திசையன்விளை நோக்கி சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக தனது குழந்தைகள் இருவரையும் மனைவி வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின் திசையன்விளை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே தைல மரங்கள் மற்றும் கொல்லாம்பழ மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் துப்பட்டாவால் ஜான்சிராணி கீதாவின் கழுத்தில் இறுக்கி கொலை செய்திருக்கலாம். சி.சி.டி.வி காட்சி பதிவுகளில் இருவரும் சிரித்துப் பேசியபடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பின்னர் வீட்டிற்கு திரும்பும் போது அந்தோணிராஜ் பைக்கில் தனியாக செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. அதன் பின்னரே வீட்டிற்கு வந்து அந்தோணிராஜூம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சி பதிவுகளே உதவிகரமாக இருந்தது” என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சி ராணி கீதா காணாமல் போனதாக நாசரேத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அந்தோணி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஜான்சி ராணி உடல் கிடந்த பகுதியான இடைச்சிவிளை, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் மூன்று காவல் நிலையத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கையை காப்பாற்ற சென்ற அக்காவும் உயிரிழந்த சோகம்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர். டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மகள்கள் தர்ஷினி, இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். மற்றொரு மகள் வேம்பு இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.

நேற்று இவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். தாய் சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தர்ஷனியும் ,வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அப்போது வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார்.தங்கை மூழ்குவதை கண்ட தர்ஷினி தங்கச்சியை மீட்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார் தங்கையை மீட்கும் முயற்சி பலன் அளிக்காத நிலையில் சகோதரிகள் இருவரும் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கினர்.

இதனை கரையின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்த தம்பி லோகேஸ்வரன் உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்தண்ணீரில் மூழ்கி இறந்து போன சகோதரிகள் உடலை சடலமாக மீட்டனர். இதையடுத்து முசிறி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் கிணற்று நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் சகோதரிகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

உறவை துண்டித்த இன்ஸ்டா புகழ் ஆசிரியையின் கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்!!

கர்நாடகவில்..

கர்நாடக மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். 35 வயதான லோகேஷ், அவரது மனைவி தீபிகா, கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபூர், மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்.

இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தீபிகா மேலுக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார், இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றார். இன்ஸ்டாகிராமில் அவரது ரீல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால், கடந்த 20ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் லோகேஷ் பல இடங்களில் தீபிகாவை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மேலுக்கோடு காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மேலுக்கோடு யோக நரசிம்ம சுவாமி கோவில் அடிவாரத்தில், சாக்கு மூட்டையில், இரண்டு நாட்களுக்கு முன், பாதி புதைக்கப்பட்ட நிலையில், சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதி அழுகிய நிலையில் உடலை தேடியபோது காணாமல் போனது தீபிகா என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் தீபிகா அந்த ரீல்களை வீடியோ எடுத்ததால் யாரோ அவரை கொன்று உடலை புதைத்துள்ளதாகவும்,

அதனால் தெரிந்தவர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தீபிகாவுக்கும், ஒரு வாலிபருக்கும் மலையடிவாரத்தில் சண்டை நடந்தது.

அந்த வீடியோவை போலீசில் கொடுத்தனர். அதை போலீசார் விசாரித்தபோது, ​​தீபிகாவுடன் சண்டை போட்டது மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிதிஷ் கவுடா என்பது தெரியவந்தது. தீபிகாவின் குடும்பத்தினரும் நிதிஷை கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்.

தீபிகாவிடம் கடைசியாக செல்போனில் பேசியவர் இவர் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, விஜயநகர மருத்துவமனையில் நிதீஷை மேலுக்கோட்டை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தீபிகாவை கொல்லவில்லை என்று முதலில் கூறியவர், போலீஸ் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தீபிகாவும், நிதிஷும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்கா, தம்பி போல் பழகி வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே தகாத தொடர்பு இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். நிதிஷிடம் பேசுவதை தவிர்க்குமாறு தீபிகாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் நிதிஷிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நிதீஷ் கவுடா, தன்னிடம் பேசுமாறு அவரை வற்புறுத்தினார். இதற்கு சம்மதிக்காத தீபிகா மீது கடும் கோபத்தில் இருந்த நிதிஷ் கவுடா, தீபிகாவை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி நிதிஷின் பிறந்தநாள் என்பதால், தீபிகாவிடம் செல்போனில் பேசிய நபர்,

உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். நித்திஷின் பிறந்தநாள் என்பதால் அவரக்கு சட்டையை எடுத்துக்கொண்டு யோக நரசிம்ம ஸ்வாமி கோயிலின் அடிவாரத்தில் அவரை சந்திக்கச் சென்றுள்ளார் தீபிகா.

நிதிஷ், தீபிகா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீபிகாவை நித்தீஷ் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து ஏற்கனவே தோண்டிய குழியில் புதைத்துவிட்டு தப்பியோடினார்.

தீபிகாவை காணவில்லை என அவரது கணவரும், பெற்றோரும் தேடியபோது, ​​தீபிகாவின் தந்தைக்கு நிதிஷ் அடிக்கடி போன் செய்து, ‘‘அக்கா வந்தாரா?’’ என கேட்டது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நிதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமும் அம்மாவை தொல்லை செய்து வந்த தம்பி : ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்!!

புதுச்சேரியில்..

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பி தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி வில்லயனூர் அருகே உள்ள தனிக்குப்பம் கிராமம் மதுகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 72).

இவரது மூத்த மகன் வெங்கடேசன் (54), கூலித்தொழிலாளி. திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் கல்யாணசுந்தரம் (35). இன்னும் திருமணமாகாத அவர் தனது தாய் ஆதிலட்சுமியுடன் வசித்து வந்தார்.

கூலித்தொழிலாளியான கல்யாணசுந்தரம் மீது காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தாயாரை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் கல்யாணசுந்தரம், ஆதிலட்சுமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

நேற்று காலை ஆதிலட்சுமி இது குறித்து மகன் வெங்கடேசனிடம் , கல்யாணசுந்தரம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வதாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

உடனே வெங்கடேசன் வீட்டில் இருந்த கல்யாணசுந்தரத்தை அழைத்து கண்டித்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அருகில் கிடந்த கட்டையால் கல்யாணசுந்தரத்தை தாக்கியதில், திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தம்பி இறந்ததால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் நேராக மங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று தம்பியை அடித்துக் கொன்றது குறித்து போலீசில் சரணடைந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். இதையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நுளம்பு வலை நூலால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

புத்தளத்தில்..

புத்தளம் – வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்றிரவு உயிரிழந்துள்ளான். புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோய்களிலிருந்த குறித்த சிறுவன் நேற்றிரவு வீட்டில் உள்ள கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது , அங்கு தொங்கிக் கொண்டிருந்த நுளம்பு வலையொன்றின் நூல் பகுதி சிறுவனின் கழுத்தில் இறுகியதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சத்தமில்லாததை அவதானித்த பெற்றோர்கள், வீட்டின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சிறுவன் கழுத்து இறுகி கிடப்பதை பார்த்து உடனடியாக உறவினர்கள், அயலவர்களின் உதவியோடு புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹசாம், மரண விசாரணையை நடத்தினார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், கழுத்துப் பகுதி இறுகியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இலங்கையில்..

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கனமழையால் பாரிய அளவில் மரக்கறி பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும்.

சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும். 2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. மொனராகலை தெலுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மொரகொல்லாகம,

நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம். இதேவேளை அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த வருடத்தில் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு!!

காலியில்..

காலி – கல்வடுகொடையில் உள்ள வீடொன்றில் மின்கட்டணத்தில் செலுத்த வேண்டிய 18 சதம் நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்தும் போது 18 சதம் பற்றாக்குறை உள்ளதாகவும், 18 சென்ட் மின்சாரம் துண்டிக்க மாட்டோம் என நிறுவனம் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து மின்சாரத்தை துண்டித்ததாகவும் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவிக்கையில், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். பின்னர் மாலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

இலங்கையில்..

பெண்களின் இரவு நேர பணி குறித்து அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பத்து மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு திருத்தப்பட்ட வரைவு மசோதாவின்படி, பெண்களின் நலன், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, ஓய்வு வசதி உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதை எட்டிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்திருத்தம் தொடர்பான விடயம் தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரின் ஆக்கிரமிக்கப்பட்ட வீதி : நகரசபை அதிரடி!!

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த வீதி ஒன்று வவுனியா நகரசபையால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, திருநாவற்குளம், கிராம அபிவிருத்திச் சங்க வீதியின் இரண்டாம் ஒழுங்கையின் ஒரு பகுதி தனிநபர் ஒருவரினால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வழிமறிக்கப்பட்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நகரசபையின் செயலாளரால் குறித்த தனிநபருக்கு அறிவித்தல் வழங்கியும் அந்நபரால் வீதி பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து நகரசபையினர் அதிரடியாக செயல்பட்டு பொலிசாரின் துணையுடன் குறித்த வீதியில் தனிநபரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையை அகற்றி அக்கொட்டகையினை நகரசபையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

அத்துடன் குறித்த தனிநபருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து,

குறித்த பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில் வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்ணை வழிமறித்து சோதனை செய்தபோது,

ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த பெண்ணிடம் இருந்து 920 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.