யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே மின் கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (06.06.2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி வளாகத்தில் மர நடுகையோடு ஆரம்பமான நிகழ்வில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மரங்களை நாட்டிவைத்ததுடன் கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியாக பூந்தோட்டம் சந்திவரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். இதன்போது சுற்றுசூழல் தொடர்பான பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கேசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது வீதியால் சென்றவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி வைத்த ஆசிரிய மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக விழிப்புணர்வு நாதகமொன்றினையும் ஆற்றுகை செய்திருந்தனர்.
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தையைத் திருத்துவதற்காக தூக்குப் போட்டு தனது உயிரையே விட்டிருக்கிறார் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு.
இவரின் மனைவி கற்பகம். இந்தத் தம்பதிக்கு 17 வயதில் பிரகாஷ் என்ற ஒரு மகனும், 16 வயதில் விஷ்ணுபிரியா என்ற ஒரு மகளும் இருந்தனர். பிரகாஷ் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, மேற்படிப்பைத் தொடரவிருக்கிறார்.
விஷ்ணுபிரியா, சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள்பெற்று, ப்ளஸ் ஒன் செல்லவிருந்தார். இந்த நிலையில், தினமும் காலை வேலைக்குச் செல்லும் பிரபு, மாலை வீடு திரும்பும்போது மதுபோதையில் தள்ளாடி வந்திருக்கிறார்.
வீட்டில்வந்து தகராறு செய்துவிட்டு, மீண்டும் மது குடிக்க பணம்கேட்டு மனைவியிடம் சண்டைப் போடுவாராம்.இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடுவதற்குள், இன்னொரு ‘குவார்ட்டர்’ மதுபாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டுவந்து, விடிய விடிய அட்டகாசம் செய்வாராம்.
இதனால், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் தூங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகிவந்தனர். ‘தந்தையின் குடிப்பழக்கத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விட்டதே…’ என்ற விரக்தியிலிருந்த விஷ்ணுபிரியா, தந்தைக்குப் பாடம் கற்பிக்க தனது உயிரையே மாய்த்துகொள்ளும் முடிவுக்குச் சென்றிருக்கிறார்.
நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தாயின் புடவையை மின்விசிறியில் சுற்றி தூக்குப் போட்டு தொங்கியிருக்கிறார். சிறிது நேரத்தில், அவரின் உயிரும் பிரிந்துவிட்டது. வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்குப் போட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு கதறி அழுதனர்.
பின்னர், மகளின் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், விஷ்ணுபிரியா இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இது பற்றி, குடியாத்தம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியபோது, தூக்குப் போட்ட அறைக்குள் கடிதம் ஒன்று சிக்கியது. அதை மாணவி விஷ்ணுபிரியாவே கைப்பட எழுதியிருக்கிறார். அதில், ‘‘என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. என் ஆசை, என் அப்பா குடியை நிறுத்த வேண்டும்.
என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்கிறேனோ, அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்’’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். தந்தையைத் திருத்துவதற்காக மாணவி தனது உயிரையே மாய்த்துக்கொண்டிருக்கும் இந்தச் சம்பவம், குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் மின்விசிறியை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சர்வேஷ் (24).
பெயிண்டரான இவர், காசிமேட்டைச் சேர்ந்த பவித்ரா (20) என்ற பெண்ணை காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது. நேற்று பவித்ரா வீட்டில் தூங்க சென்றார். அப்போது மின் சிறியை(டேபிள் பேன்) ஆன் செய்து,காற்று நன்றாக வருவதற்கு அதனை சரி செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பவித்ராவை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சர்வேஷ் மற்றும் உறவினர்கள் பரவித்ராவை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பவித்ராவுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசார ணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பிறகே பவித்ரா, மின்சாரம் தாக்கி இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீ சார் தெரிவித்தனர்.
பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ.70 இலட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி தொடர்பிலான தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் காதலாகி அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது அவர்கள் கற்பனைக்கு எட்டாத ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஒன்றாக உலகம் சுற்றி வருகிறார்கள்.
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சௌதியின் விருப்பம் பொழுதுபோக்கு ஒன்று மட்டுமே. இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வரை செலவு செய்கிறார். ஷாப்பிங் செல்வதில் அதிக நாட்டம் கொண்ட சௌதி தனது கிரெடிட் கார்டுகள் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, ஊர் சுற்றுவது என கழித்து வருகிறார்.
இந்நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களும் உங்கள் ஷாப்பிங்கிற்கு வானமே உச்சம் என்று தெரிவித்துள்ளது. ஷாப்பிங், உணவு, பயணம் என ஆடம்பரமாக செலவு செய்வதை இன்றளவும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின் தொடர்பாளர்கள் இவருக்கு பின்னால் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
ஏராமான வீடியோக்களை நாள்தோறும் பகிர்ந்து வரும் சௌதி தனது ஷாப்பிங்கில் அதிக அளவில் டிசைனர் பைகள், பளிச்சிடும் புத்தம் புதிய கார்கள் உள்ளிட்ட ஆடம்பரமான பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்து வருகிறார்.
அவரது இந்த வசீகரமாக வாழ்க்கை முறைக்கு கணவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது துபாய் நாட்டில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த ஜோடி சமீபத்தில் மாலைத்தீவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பலர் அதிசயத்துடன் பார்த்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
இந்த கோடீஸ்வர தம்பதி அடிக்கடி சீஷெல்ஸ் தீவு, லண்டனுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அடுத்ததாக விரைவில் ஜப்பான் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள சௌதி தனக்குப் பிடித்த ஆடைகள் வடிவமைப்பாளர்கள் டியோர் என்றும், அவரது கணவர் ஹெர்ம்ஸை விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி சௌதி கூறுகையில்,
ஷாப்பிங் மீதான எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளும் போது, டிசைனர் உடைகள் மற்றும் கை நகங்களை அழகுபடுத்தும் ரகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இதற்காக ஒவ்வொரு பயணத்திற்கும் எளிதாக ரூ.14 முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்க முடியும்.
இதன் மூலம் எனது ஆடம்பரமான வாழ்க்கை நகர்ந்து வருகிறது. அதில் ஆடம்பரமான உணவு அனுபவங்கள், நேர்த்தியான ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளும் அடங்கும் என கூறி நெட்டிசன்களை வாய்பிள்ளக் வைத்துள்ளார்.
கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள் கீதா (24).
இவருக்கும், கரூர் மாவட்டம் தும்பிவாடியை சார்ந்த குணசேகரன் மகன் வேலாயுதம் என்கின்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
பொறியியல் பட்டதாரியான கெளதம் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், கொரேனோ கால கட்டமாக இருப்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டதாக கூறி தூரத்து உறவுமுறை பொறியாளர் பெண்ணான கீதாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். 7 பவுன் தங்க நகைக்கள் போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமான பிறகு தான் கெளதமிற்கு வேலை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அடிக்கடி பணம் கேட்டு கீதாவை மிரட்டி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
தும்பிவாடியில் இருந்த அவர்களை வெங்கமேட்டிற்கு வீடு பார்த்து வைத்து தனிக்குடித்தனம் வைத்து, கீதாவின் தந்தை சிறுக சிறுக 5 லட்ச ரூபாய் வரை பணமாக கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து புன்னம் சத்திரம் கிராமத்திற்கு இடம் பெயர்ந்து சென்றதுடன், அங்கு உணவகம் நடத்தி வந்துள்ளனர். கீதாவின் தங்கை திருமணத்திற்காக ஊருக்கு சென்றவரை அழைத்து வரச் சென்ற கெளதம், 2 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அவர் தர மறுத்து விட்டதாகவும், கீதாவை அழைத்துக் கொண்டு புன்னம் சத்திரம் சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று இரவு கெளதமின் தம்பி கீதாவின் தாயாருக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.
தகவலறிந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறியதால், அங்கு வந்து பார்த்த போது பிணவறையில் கீதாவின் உடல் வைக்கப்பட்டிருந்துள்ளது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கீதாவின் கணவர், கணவரின் தந்தை மற்றும் தம்பி உள்ளிட்ட 4 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, கீதாவின் தந்தை அவர்களிடம் என் மகளை தூக்கி கட்டி விட்டீர்களா என கேட்டதற்கு கீதாவின் தந்தையை அவர்கள் 4 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தான் என மகள் உயிரிழந்து இருப்பதாகவும், என்னை தாக்கியவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி கீதாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் விஷால் (19). அதேபகுதியை சேர்ந்த அஜித் (20) ஆகிய இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் எப்போதும், எங்கே சென்றாலும் ஒன்றாக சென்று நண்பர்களாக அப்பகுதியில் வலம்வந்தனர்.
இதனிடையே, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு விஷால் கடந்த 28ஆம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்துசென்ற விஷால், நண்பனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
எனினும் தனது நண்பன் இறக்கவில்லை, அவனை காப்பாற்ற வேண்டும் என கதறி அழுதுள்ளார். பின்னர் மருத்துவர்கள் சென்று பரிசோதனை செய்ததில், விஷால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இளைஞர் விஷால் உடல் அக்கிராமத்தில் புகைக்கப்பட்டது. இளைஞர் அஜித், தனது நண்பனை புதைத்த இடத்திலேயே இரவும் பகலும் இருந்துள்ளார். அவரை புதைத்த இடத்தில் மதுவை ஊற்றி, ஸ்வீட், பழங்களை படையலிட்டு அழுதும் வந்தார்.
இந்நிலையில், துக்கம் தாங்காமல் இருத்த விஷால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுவும் விஷால் தூக்கிட்ட அதே கயிற்றில், அஜித்தும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே, அஜித் உடலையும் புதைத்தனர். அஜித் இறப்பதற்கு முன் அதிகாலை, 2.50 மணிக்கு விஷாலுடன் எடுத்துக் கொண்ட படங்களை, வாட்ஸ்அப்’பில் ஸ்டேட்டஸ் வைத்தார். அதில், நானும் வருகிறேன்.. என, பதிவிட்டிருந்தார்.
அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் மார்பில் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இணை பிரியாத நண்பர்களாக இருந்த இருவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர்ம் 40வயது ராமஜெயம். இவரது மனைவி ரத்னா. இந்த தம்பதிக்கு 5 வயது ராஜலட்சுமி , 2 வயது தேஜாஸ்ரீ மற்றும் 2 மாத ஆண் குழந்தை என 3 குழந்தைகள்.
அவரது மனைவி ரத்னா மற்றும் குழந்தைகள் உட்பட 4 பேரும் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் இருந்தனர். இந்நிலையில், மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக ராமஜெயம் தனது சித்தப்பா மகன் ராஜேசுடன் ஆம்னி காரில் சென்னைக்கு வந்துள்ளார்.
பின்னர், தனது குழந்தைகள், மனைவியை அழைத்துக் கொண்டு காரில் வீடு திரும்பி இருக்கிறார். இவர்கள் சென்ற ஆம்னி வேன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிந்தது.
சித்தேரி மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கியது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த கோர விபத்தில் ரத்னா, 2 குழந்தைகள் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 மாத ஆண் குழந்தையும் ராமஜெயமும் காரில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டுவந்து, காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலுச்செட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 மாத ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் ராமஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து 5 பேரின் சடலங்களும் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழா இன்று(05.06.2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் பல இன,மத மக்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு இனத்தவர்களிலும் சிலர் வேறு இன வழிபாடுகளில் கலந்துக்கொள்வதும் அவர்களின் தெய்வங்கள் மீது நம்பிக்கை கொள்வதும் பெரும்பாலான சந்தர்பங்களில் பார்க்க கூடிய ஓர் நிகழ்வாகவே உள்ளது.
இந்நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழாவில் பரவக்காவடி சுமந்து வந்த ஒருவருக்கு முஸ்ஸிம் சகோதர இனத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் பரவக்காவடி சுமந்தவருக்கு நீர் ஊற்றி அவரது வழிப்பாட்டிற்கு மதிப்பளித்துள்ளமை பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பரவக்காவடி சுமந்து வருபவர்களின் களைப்பை போக்குவதற்கும், அவர்களின் அருள்வாக்கை பெறுவதற்கும்,அவர்கள் மீது நீர் ஊற்றி வழிபாடு செய்யும் முறைமை ஒன்று காணப்படுகின்றது.
இலங்கையில் இன்று இனவாதம் என்ற விடயம் பலர் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ள காலகட்டத்தில் இந்துக்களின் வழிபாட்டில் சக இன,மத மக்கள் பங்கேற்பதும் இவ்வாறான நெகிழ்ச்சியான விடயங்களை செய்வதும் இன,மத,மொழிக்கு அப்பால் மனிதம் இன்றும் மரணிக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (05.06.2023) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்தே காணப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 146,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில கிழமைகளுக்கு முன் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் இலங்கையில் டொலரின் வீழ்ச்சியானது இன்னும் சில நாட்களுக்கே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் சில பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கப் போவதாக கடந்த கிழமை முதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என குறிப்பிடுகின்றனர்.
இப்படியான நிலைமை பார்க்கும் போது இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் தங்கப் பவுணொன்றின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (05.06) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்பத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் வழங்கிய வாக்குமூலம் முரண்பாடாக காணப்பட்டதால் பொலிஸாரால் அவர் கைது செய்யபடப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார்.
மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்கள் குழுவொன்று இந்த மாணவனின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் நீராடச் சென்றுள்ளனர்.
குறித்த குழுவினர் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, பாடசாலை மாணவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியாமல் போயுள்ளது. பின்னர், பிரதேச மக்களின் ஆதரவுடன், இறந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டது. இதற்கு முன்னரும் இந்த இடத்தில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மாடு திருடிய இருவரை பாராளுமன்ற உறுப்பினரும், ஊர் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று (04.06) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியை மறித்த மக்கள், குறித்த முச்சக்கர வண்டிக்குள் நான்கு கால்களும் கட்டப்பட்டு தலைகீழாக மாட்டை வைத்து அதனை ரபர் சீற்றால் சுற்றி கடத்திச் செல்வதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரு பகுதியினரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
மாட்டை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொடுப்பதற்கு கொண்டு சென்றதை அவர் மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து இரவு ஒன்றரை மணிவரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊர்மக்களுடன் இணைந்து மாடு திருடுவதற்கு துணை நின்ற மற்றும் ஒரு நபரை மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட மாடு நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து 648 வெற்று காஸ் சிலிண்டர்களுடன் கடத்தப்பட்ட வாகனம் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (05.06) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் காஸ் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் வர்த்தக நிலையப்பகுதிக்கு வந்த காஸ் விநியோக வாகனம் 648 வெற்றுக் காஸ் சிலிண்டர்களுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, அங்கு வந்த குறித்த பெண்ணின் மூத்த மகன் வெற்றுக் காஸ் சிலிண்டருடன் அங்கு நின்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தனது மகனுக்கு எதிராக நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனத்தை வெற்று சிலிண்டர்களுடன் மீட்டுள்ளதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும் வாகனத்தையும் நீதிமன்றில் முற்படுத்த நெளுக்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒடிசாவில் விபத்திற்குள்ளான ரயிலில் பயணம் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியில் சரக்கு ரயிலும், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளின் மீது யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் மோதி மூன்றாவது ரயிலாக விபத்தில் சிக்கியது. இதில் 288 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்திற்குள்ளான ஹவுரா ரயிலில் ஆன்மிக பயணம் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். இவர்கள் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்கள் பெங்களூருவில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் கிளம்பும் போது விபத்திற்குள்ளான ரயிலின் பின்புற பெட்டிகளில் இருந்துள்ளனர், ஆனால் விசாகப்பட்டினத்தில் ரயிலின் என்ஜின் மாற்றப்படும் போது 110 பக்தர்கள் பயணம் செய்த 3 ரயில் பெட்டிகளும் முன்வரிசைக்கு வந்தது.
பாலாசூர் ரயில் விபத்தின் போது ஹவுரா விரைவு ரயிலில் 2 பொதுப் பெட்டிகளும் ஒரு பிரேக் வேனும் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது, நல்லவேளையாக கடவுளை தரிசிக்க சென்ற 110 பக்தர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்தியாவின் ஒடிசா மாகாணத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கோர விபத்து தொடர்பில் பலர் தங்கள் அனுபவங்களை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யவீர் என்ற இளைஞர் தெரிவிக்கையில், தொடர்புடைய ரயில் ஒன்றில், தமது தாயாரும் பாட்டியும் மருந்து வாங்கும்படி டவுனுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பான தகவல் வெளியாக, சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் பாட்டியை கண்டுபிடித்ததாகவும், ஆனால் தாயாரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களுடன் இணைந்து சம்பவம் நடந்த பகுதியில் மொத்தமாக தேடியதாகவும், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது என சூர்யவீர் தெரிவித்துள்ளார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தவித்துப்போன நொடியில், தமது தாயாரின் புகைப்படம் ஒன்றை அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து தேடச் சொன்னதாக சூர்யவீர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி தாயாரின் அலைபேசி இலக்கமும், அவர் உடுத்தியிருந்த உடையின் வண்ணம் உள்ளிட்ட தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் இன்று பகல் அந்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும், நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், தமது தாயாரின் சடலமும் காணப்பட்டதாக இளைஞர் சூர்யவீர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சடலத்தை மீட்டு, பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச் சென்று உரிய முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும். ஆனால் விபத்து நடந்த பகுதியில் பெரும் கூச்சல் குழப்பமாக உள்ளது.
தற்போதைய சூழலில் அந்த வழியாக அனைத்து ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாலைகளும் ஜனங்களாலும் மீட்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவைகளாலும் நிரம்பியுள்ளது. தாயாரின் சடலத்தை எப்போது இனி மீட்க முடியும் என்பது தெரியவில்லை என நொறுங்கிப்போய் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.