முதல் போட்டியில் வெற்றியை தனதாக்கிய போர்த்துகல்…. சாதனை வரலாற்றில் இடம்பிடித்த ரொனால்டோ!!

போர்த்துகல்..

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் குழு எச்(H)க்கான போட்டியின் 3 ஆவது ஆட்டம் இன்று(25) இடம்பெற்றிருந்தது. இப்போட்டியானது கத்தார் தலைநகர் தோகாவிலுள்ள 974 அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் போர்த்துகல் அணி கானா அணியை 3:2 கோல்கள் விகிதத்தில் வெற்றிக்கொண்டது. இப்போட்டியில் முதல்பாதி வரை இரு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.

எனினும் இரண்டாம் பாதியின் 65 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் புகுத்தினார்.

இதன்மூலம் 5 உலகக் கிண்ண சுற்றுப்போட்டிகளில் கோல் புகுத்திய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ரொனால்டோ தனதாக்கிககொண்டார். மேலும், 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் பின்வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றங்களுக்கு மத்தியில் கானா வீரர் அண்ட்றே அயேவ் கோல் புகுத்தினார்.

இதனால் கோல் எண்ணிக்கை சமநிலையை அடைந்தது. 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் ஃபீலிக்ஸ் செகுய்ரா கோல் புகுத்தி போர்த்துகலை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

80 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் கொன்சிகாவோ லியோ அவ்வணியின் 3 ஆவது கோலை அடித்தார். மேலும், 89 ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி, கானாவின் 2 ஆவது கோலை புகுத்தினார். இதனால் இப்போட்டியில் 3:2 கோல்கள் விகிதத்தில் போர்த்துகல் தனது முதலாவது வெற்றியை பதிவுசெய்தது.

கத்தார் உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியனை திணறடித்த தென் கொரியா!!

தென் கொரியா..

உருகுவே மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.

கத்தாரின் Education City மைதானத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான உருகுவே அணியும், தென் கொரிய அணியும் மோதின.

சம பலத்துடன் இரு அணிகளும் மோதியதில் முதல் பாதி கோல் இன்றி முடிந்தது. அதேபோல் இரண்டாம் பாதியில் உருகுவே அணி எடுத்த கோல் முயற்சிகளுக்கு தென் கொரியா முட்டுக்கட்டை போட்டது.

இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. உருகுவே அணிக்கு 4 கார்னர் வாய்ப்புகளும், தென் கொரியா அணிக்கு 3 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.

இரு அணிகளிலும் தலா ஒரு வீரருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. உருகுவே அடித்த ஒரு கோல் ஆஃப்சைடு ஆனது.

உருகுவே அணி 1930 மற்றும் 1950 ஆண்டுகளில் இரண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்!!

அல் ஜனோப்..

சுவிஸ் வீரர் கோல் அடித்ததும் கொண்டாடாமல் அமைதியாக நின்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து – கேமரூன் அணிகள் மோதின.

அல் ஜனோப் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் 48வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ கோல் அடித்தார். ஆனால் கோல் அடித்ததற்காக கொண்டாடாமல் அமைதியாக அவர் நின்று விட்டார்.

இதற்கு காரணம் அவர் பிறந்தது கேமரூன் நாட்டில் தான். தனது சொந்த நாட்டிற்கு எதிராக கோல் அடித்ததால் அவர் சற்று சங்கடப்பட்டார். எனினும் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை எம்போலோ வெளிப்படுத்தினார்.

இறுதிவரை கேமரூன் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுவிஸ் அணி 514 முறையும், கேமரூன் அணி 494 முறையும் பந்தை பாஸ் செய்தன.

தனக்கு 5 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் பிரிந்ததால், தனது தாயுடன் பிரான்சுக்கு குடிபெயர்ந்த எம்போலோ, இறுதியில் சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்தார்.

முன்னதாக, பன்டஸ்லிகா தொடரில் விளையாடியபோது அளித்த பேட்டியில், ‘நான் இப்போது 60 அல்லது 70 சதவீதம் சுவிஸ் நாட்டில் இருக்கிறேன், நான் அப்பிரிக்கன் என்பதை விட அதிகம்’ என தெரிவித்துள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இரு மாணவிகள் 9A சித்தி!!

சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இரு மாணவிகள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2 மாணவிகள் 9A சித்திகளையும், 2 மாணவிகள் 8A B சித்தியினையும், 4மாணவிகள் 7A,B,C சித்தியினையும் 1 மாணவி 7A,B,S சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

விபுலானந்தா கல்லூரியில்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.11.2022) மாலை வெளியான நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளையும், 6 மாணவர்கள் 8ஏ வி சித்திகளையும்,4 மாணவர்கள் 7ஏ2வி சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!! 

தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் ஏ.லோகேஸ்வரன் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 239 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 12 மாணவர்கள் 9ஏ சித்திகளை யும் 14 மாணவர்கள் 8ஏ சித்திகளை யும் 9 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளதுடன் 90 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணித் தலைவி க.பொ.த சாதாரணதர பரீட்சையில் படைத்த சாதனை!!

விஷ்மி குணரத்ன..

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும்,

விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9 சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார். கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார்.

நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 518,245 பரீட்சார்த்திகள் முகம்கொடுத்தனர். அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9A சித்திகள் : மாகாண மட்டத்தில் இரண்டாமிடம்!!

68 மாணவர்கள் 9A சித்திகள்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்தில் 12 மாணவர்களும் வவுனியா தெற்கு வலயத்தில் 56 மாணவர்களும் 9ஏ சித்திகளை பெற்று மாகாண மட்டத்தில் வவுனியா மாவட்டம் இரண்டாம் நிலையை பெற்றுள்ளது.

வட மாகாணம் முழுவதாக 551 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவிகள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.11.2022) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவிகள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 19 மாணவிகள் 9A சித்திகளையும் 14 மாணவிகள் 8A சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 7 பேர் 9A சித்திகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை!!

புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 7 மாணவர்கள் 9A க்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

ரமேஷ் தனு, நந்தகுமார் லிதுசன், வருண்யா கணேசநாதன், டனுக்க்ஷி விஸ்வநாதன், ரஸ்மினா ஜேசுராசா, கிருஷாலினி கிருஷ்ணகுமார், கிநோஜி சேகர் ஆகிய 7 மாணவர்களே இவ்வாறு வரலாற்று சாதனையினை படைத்துள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 7 மாணவர்கள் 9A சித்திகளையும், 3 மாணவர்கள் 8A B சித்தியினையும், 1 மாணவர் 7A2B சித்தியினையும் 2 மாணவர்கள் 6AB2C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவரின் உடலையாவது தாருங்கள் : வியட்நாமில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கண்ணீர் கோரிக்கை!!

கிரிதரனின் மனைவி..

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவிகூறுகையில், அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.

எமது பிள்ளைகளை நன்றாக வளர்கவேண்டும், வறுமையில் இருந்து மீளவேண்டும் என்பதற்காகவே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். ஆனால் இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கண்னீருடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்பதே கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, என உயிரிழந்தவரின் மனைவி கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகளின் முன்னிலையில் இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

குருணாகலில்..

குருணாகலில் பாடசாலைக்கு அருகில் வைத்து பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தங்வெவ யாபஹுவ வீதியில்,

தல்பத்வெவ பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 32 வயதான ஜமினி தினுஷிகா மதுஷானி தென்னகோன் என்ற பெண்னே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று காலை தல்பத்வெவ மகா வித்தியாலயத்திற்கு தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையில் கணவனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

வீதியில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய போது, கணவர் கூரிய ஆயுதத்தால் பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகளில் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 07.15 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர்.

எனினும் அதிக இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்துள்ளார். மனைவியை கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மகனுக்கு கல்லீரல் தானம் கொடுக்க 60 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்..

கல்லீரலை தனது குழந்தைக்கு தானமாக கொடுப்பதற்காக வெறும் 2 மாதத்தில் 10 கிலோ எடை குறைத்த தந்தையின் செயல் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மும்பை நகரை சேர்ந்தவர் யோகேஷ் வாஸ். இவர் மனைவி சுப்ரியா. தம்பதிக்கு நிபீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளான். நிபீஷ் Progressive Familial Intrahepatic Cholestasis என்ற நோயால் பாதிக்கப்பட்டான்.

இந்த பாதிப்பு பிறக்கும்போதே இருந்துள்ளது. இது போன்ற நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கல்லீரல் கோளாறு இருக்கும். மேலும் அவர்களுக்கு பிறக்கும்போதே மஞ்சள் காமாலை நோயும் இருக்கும்.

இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், குழந்தைக்கு கல்லீரல் செயலிழந்து போய்விடும் அபாயம் உள்ளது. இது குறித்து அவன் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறிய நிலையில் சுப்ரியா தனது கல்லீரல் பகுதியை தானம் செய்ய முன் வந்தார்.

ஆனால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் முடியாமல் போனது. இதையடுத்து நிபீஷ் தந்தை யோகேஷ் தனது கல்லீரலை கொடுக்க சம்மதம் தெரிவித்ததால் அவரையும் சோதனை செய்தனர்.

அப்போது அவருக்கு உடல் எடை அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். அதன்பேரில் அவர் தொடர்ந்து டயட்டை பின்பற்றி வெறும் இரண்டு மாதத்திலேயே சுமார் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த அக்டோபர் 16-ம் திகதி Wadia மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தந்தையும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில், PFIC-2 என்பது மிகவும் அரிதான ஒரு நிலையாகும். இது உலகளவில் புதிதாகப் பிறந்த 50,000-1,00,000 குழந்தைகளில் ஒருவரை பாதிக்கிறது. நிபீஷ் 28 நாட்கள் ஐசியூவில் இருந்தான், தற்போது அவன் ஆக்ஸிஜன் உதவியில்லாமலேயே சுவாசிக்கிறான்.

இது இந்த மருத்துவமனையின் முதல் மாற்று அறுவை சிகிச்சை, எனவே நாங்கள் பிரித்தானியாவில் உள்ள பர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் டேரியஸ் மிர்சாவின் வழிகாட்டுதல் மற்றும் உதவியை பெற்றோம் என கூறியுள்ளார்.

திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம் : கனடா லொட்டரியில் 2வது முறை பரிசை அள்ளிய தமிழர்!!

கனடாவில்..

கனடாவில் தமிழருக்கு ஏற்கனவே லொட்டரில் ஒரு கணிசமான பரிசு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஒன்றாறியோவின் மர்கம் நகரில் வசிப்பவர் பாலதாசன் பாலசுப்ரமணியம்.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலதாசனுக்கு Daily Keno லொட்டரியில் கனேடிய $25,000 (ரூ. 67,79,981.86) பரிசு விழுந்தது.

லொட்டரி விளையாட்டு என்றால் விடாமுயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கலவை என்ற நிலையில் தொடர்ந்து அதில் பாலதாசன் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து இரண்டாம் முறையாக அவருக்கு $100,000 (ரூ. 2,71,23,546.25) பரிசு விழுந்துள்ளது.

பாலதாசன் கூறுகையில், பிறந்தநாட்கள் மற்றும் திருமண நாள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் எண்களின் தொகுப்பை வைத்து தான் லொட்டரி விளையாடுகிறேன்.

தற்போது எனக்கு பரிசு விழுந்ததா என ஸ்டோரில் சென்று பார்த்த போது திரையில் ”பெரிய வெற்றியாளர்” என காட்டப்பட்டது. அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியும், மிகுந்த மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டது.

உடனடியாக வீட்டிற்கு சென்று என் மனைவி மற்றும் மகனிடம் தகவலை கூற, அவர்கள் உற்சாகமடைந்தனர் என கூறியுள்ளார். பரிசு பணத்தை வைத்து முதலில் தனது வீட்டை புதுப்பிக்க பாலதாசன் திட்டமிட்டுள்ளார்.

வேறு சமூகத்தில் காதலித்த மகள்… தாய் செய்த விபரீத செயல்!!

திருநெல்வேலியில்..

தமிழக தென்மாவட்டம் திருநெல்வேலியில், திருமணத்திற்கு மறுத்த மகள் காதலனுடன் ஓடிவிடுவேன் எனக் கூறியதால் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது முற்றிலும் கௌரவ கொலை என சந்தேகிக்கப்படுகிறது. திருநெல்வேலியில், பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பேச்சி – ஆறுமுக கனி தம்பதியினர். இவர்களுக்கு 19 வயதில் அருணா என்ற மகள் உள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது தந்தையும், சகோதரனும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக கூறப்படுகிறது.

அருணாவுக்கு வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் குடும்பத்திற்கு தெரியவரவே அவருக்கு திருமண முயற்சி ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்த அருணா தனது காதல் விவகாரத்தை தாயிடம் தெரிவித்தபோது, சரி ஊருக்கு வா பேசிக்கலாம் என திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார் ஆறுமுக கனி. அருணா வீட்டுக்கு வந்த நிலையில் அவருக்கு அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஆறுமுக கனி முடிவு செய்துள்ளார்.

இதனை அறிந்த அருணா காதலனை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என சண்டையிட்டு தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மீறி வலுக்கட்டாயமாக வேறு நபருக்கு திருமணம் செய்துகொடுக்க நினைத்தால் அந்த நபரிடமே என் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக அருணா மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுக கனி மகள் என்று பாராமல், துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை சம்பவம் வெளியே தெரிந்து தாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும் மாத்திரைகளை விழுங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆறுமுக கனியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றி சீவலப்பேரி பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது முற்றிலும் கௌரவ கொலை என சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சமாதானம் பேச வந்த கணவனை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் மோரூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் தனபால்(44). தனியார் நூற்பாலை சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த சரிதா(38) என்பவரை காதலித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(20) என்ற மகளும், நித்திஷ்குமார் (18) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சரிதா தனது குழந்தைகளுடன் அவருடைய தாயார் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனபால் தனது மனைவி சரிதாவை சமாதானம் பேசி, குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன்(44), மாமனார் குமாரசாமி(68), மாமியார் ராஜம்மாள்(68) ஆகிய நான்கு பேரும் தனபாலை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மயங்கி கீழே விழுந்த தனபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தனபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலின் பெற்றோர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் தனபாலின் மனைவி சரிதா உட்பட நான்கு பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தியதில் தன் கணவனை கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததை தனபாலின் மனைவி சரிதா மற்றும் மைத்துனர் சரவணன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த சங்ககிரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைக்க சென்ற காதல் கணவனை, அண்ணனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.