இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து வெளியான தகவல்!!

பாடசாலைகள்..

நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முழுவதும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

குழந்தைகள் மத்தியில் கோவிட் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையேயும் கோவிட் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும். பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரில் இரவு நேரத்தில் இளைஞர் குழு அட்டகாசம் : ஆசிரியர் மீதும் தாக்குதல்!!

இளைஞர் குழு அட்டகாசம்..

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (17.11.2021) இரவு வீதியில் செல்பவர்களை வழிமறித்து இளைஞர் குழு அட்டகாசம் புரிந்துள்ளர்.

காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டியில் நின்ற இளைஞர் குழுவினர் வீதியில் செல்பவர்களை அச்சுறுத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இளைஞர் குழுவின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து குடும்பத்துடன் கொழும்பு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து : அறுவர் படுகாயம்!!

விபத்து..

புதல்வியின் பதிவுத்திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி கயஸ் ரக வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியினை சேர்ந்த இவர்கள் நேற்றிரவு (17.11.2021) வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர். இதன் போது கல்கமுவ பகுதியில்,

இன்று (18.11.2021) அதிகாலை குறித்த கயஸ் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த அறுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 20 வயது இளைஞன் : விசாரணைகள் தீவிரம்!!

சரத்குமார்..

ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று (17.11.2021) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நிவ்வெளிகம பகுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒரு ஜோடி பாதணி,ஸ்மார்ட் போன் என்பன காணப்பட்ட நிலையில், இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் போது குறித்த பகுதியில் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் கிடந்த ஸ்மார்ட் போன் மற்றும் பாதணியும் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் எனும் இளைஞனுடையது என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் ஏழு பேர் படுகாயம்!!

விபத்து..

கந்தளாய் – கொழும்பு பிரதான வீதி 87 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து சேருவில விகாரைக்கு வருகை தந்து மீண்டும் சேருவில பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பௌத்த மதகுரு உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த 7 பேரும் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய மற்றும் எழுமாறாக சில பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், வவுனியா, தாதியர் கல்லூரியில் இன்று (17.11) முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து!!

விபத்து..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (17.11.2021) மாலை முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இருந்து மாத்தறை நோக்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அங்கு பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் சோதனை : இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

திடீர் சோதனை..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், இருவருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்று (17.11.2021) தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக சுகாதாரப் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் குறித்து திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது முககவசம் அணியாது நின்றோர், முககவசத்தை சீராக அணியாது நடமாடியோர், சமூக இடைவெளி பேணாதோர் உள்ளிட்ட நபர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

அத்துடன், முககவசம் அணியாது பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடமாடிய ஒருவருக்கு எதிராகவும், முகக்கவசம் அணியாது நகரப் பகுதியில் நடமாடிய ஒருவருக்கு எதிராகவும் என இரண்டு பேருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

 

 

வவுனியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு : விறகுக்கு மாறும் மக்கள்!!

விறகுக்கு மாறும் மக்கள்..

வவுனியாவில் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக வெற்று சிலிண்டர்களுடன் அலைந்து திரிவதையும், வவுனியாவில் விறகு கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதனால் விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

விறகு வியாபாரிகள் தூர இடங்களுக்கு சென்று விறகுகளை துவிச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிவந்து நகரிலுள்ளவர்களுக்கு விற்பனை செய்வதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

எரிவாயுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றதால் எரிவாயு பெற்றுக்கொள்வதை தவிர்த்துவிட்டு விறகு கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு துவிச்சக்கரவண்டியில் எடுத்துவரும் விறகு ஆயிரத்தி எண்ணூறு ரூபாயாகவும் மோட்டார் சைக்கிளில் எடுத்துவரும் விறகு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இருளில் மூழ்கப் போகும் இலங்கை?

சுனில் ஹந்துன்நெத்தி..

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இலங்கைக்கு எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளதாக உறுதியளித்த போதிலும், அதற்கு செலுத்துவதற்கு போதிய டொலர்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ப.ழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூ.டப்படவில்லை. கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால் தான் மூ.டப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த மூடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திற்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையும் நிறுத்தப்படும். மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும்.

அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

லண்டனில் தொடரும் மர்மம் : மற்றுமொரு இளம் பெண் மாயம்!!

லண்டனில்..

லண்டனில் காணாமல் போயுள்ள இளம்பெண் குறித்து பொலிஸார் முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஹேக்னேவை சேர்ந்த ஏஞ்சலினா என்ற இளம் பெண் மாயமாகியுள்ளார்.

அவரின் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த பெண் எப்போதில் இருந்து காணாமல் போனார் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்வில்லை. இந்நிலையில், காணாமல் போன பெண்ணின் இரண்டு புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஒரு புகைப்படத்தில் அப்பெண் பாடசாலை சீருடை அணிந்திருக்கிறார். வீட்டில் இருந்து காணாமல் போன ஏஞ்சலினா தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அண்மைய காலமாக லண்டனில் இளம் பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சிலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

அண்மையில் சபீனா நெஸ்ஸா என்ற பெண் லண்டனில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து லண்டனில் பெண்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்நிலையிலேயே, ஏஞ்சலினா என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளமை குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

8 வயது மாணவிக்கு நேர்ந்த துயரம் : பாடசாலையில் இருந்து வெளியேற்றம்!!

8 வயது மாணவிக்கு நேர்ந்த துயரம்..

தென்னிலங்கையில் தந்தைக்கு கோவிட் தொற்று என பொய்யான தகவலின் அடிப்படையில் மகளை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய அதிபருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

காலி லேல்வல ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் கல்வி கற்கும் 8 வயதுடைய மாணவி பாடசாலைக்கு சென்ற போது அவரது தந்தைக்கு கோவிட் தொற்று என கூறிய அதிபர் அவரை திருப்பி அனுப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு தந்தை ஒருவர் நேற்றைய தினம் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.  சந்தன கொடிதுவக்கு என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் வினவியதற்கு , “எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். நான் கூலி வேலை செய்தே பிள்ளைகளை பார்த்துக் கொள்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மகளை பாடசாலைக்கு அனுப்பினேன். இதன்போது எனக்கு கோவிட் என கூறி மகளை திருப்பி அனுப்பி விட்டனர். திங்கட்கிழமை மீண்டும் மகளை பாடசாலைக்கு அனுப்பினோம். திங்கட்கிழமையும் திருப்பி அனுப்பப்பட்டார்.

போலியான தகவல் வெளியிட்டு பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்புவது தவறு. இன்று எனக்கு கூலி வேலையும் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான செயல்களை செய்ய வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவிய போது கருத்து வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களில் கடமையாற்றுவோருக்கு இலவச மருத்துவ முகாம்!!

மருத்துவ முகாம்..

வவுனியா மாவட்டத்திலுள்ள மத வழிபாட்டுத்தலங்களில் கடமையாற்றுவோருக்கு இலவச மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத்தலங்களில் கடமையாற்றும் மதகுருக்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஏனையோருக்காக வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நாளை (17.11.2021) புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இவ் இலவச மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.

எனவே இவ் மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைவதுடன் மேலதிக விபரங்களுக்கு சமூக சேவைகள் பிரிவினை தொடர்பு கொள்ளுமாறும் வவுனியா உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜிவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா சமயபுரம் வீதியின் நடுவே பல நாட்களாக கொட்டப்பட்டிருக்கும் கிரவல் : மக்கள் சிரமம்!!

சமயபுரம்..

வவுனியா சமயபுரம் – மணிபுரம் பிரதான வீதி அபிவிருத்தி பணிக்காக வீதியின் நடுவே கொட்டப்படிருக்கும் கிரவலினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த வீதி பல வருடங்களாக புனரமைப்புமின்றி காணப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வீதி செப்பனிடும் பணிக்காக. இரு வாரத்திற்கு முன்னர் வீதியின் நடுவே ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கிரவல் கொட்டப்பட்டது. அதன் பின்னர் எவ்வித பணியும் முன்னெடுக்கப்படாது வீதியில் கிரவல் அவ்வாறே காணப்படுகின்றது.

இதன் காரணமாக 20க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாகனத்தினை அவர்களது வீட்டிற்கு எடுத்துச்செல்ல முடியாத நிலைமையுடன் நடந்து கூட செல்ல முடியவில்லை .

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டு அவரை ஏற்றுவதற்கு வாகனம் செல்ல முடியாத நிலையில் அவரை ஒரு கிலோமீற்றர் தூரம் தூக்கிச்சென்றே வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்தி அக் கிரவல்களை வீதி செப்பனிடும் பணிக்கு பயன்படுத்துமாறு கோருவதுடன் அல்லது அவற்றை வீதியிலிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் விடுதிகளில் அடைக்கப்பட்ட 1500 மாணவர்கள் : மீண்டும் உச்சம் பெறும் கொரோனா!!

கொரோனா..

சீனாவில் மீண்டும் கோவிட் பரவலையடுத்து 1500 மாணவர்கள் விடுதிகளிலும் ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோவிட் தொற்று முதன் முதலில் சீனாவில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கோவிட் பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது.

இந்தநிலையில் சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஹோட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு காணொளி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா நகரசபையின் 2022ம் ஆண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!!

வவுனியா நகரசபை..

வவுனியா நகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை அமர்வு இன்று (16.11.2021) காலை 09.30 மணிக்கு வவுனியா நகரசபையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நகரசபை தலைவர் இ.கௌதமன் முன்வைத்திருந்தார். இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தனுஸ்காந் எதிர்த்து வாக்களித்த நிலையில் ஏனைய 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன் போது 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நகரசபை உறுப்பினர் எம்.லரீப் முன்மொழிய, உபதலைவர் குமாரசாமி வழி மொழிந்திருந்தார்.

இப்பாதீட்டில் 10 வட்டாரங்களிற்கு தலா 3.5 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டதுடன், வட்டார பராமரிப்பு, வருமான மேம்பாடு, திண்மக்கழிவு முகாமைத்துவதும், பொதுவிடயங்கள் உள்ளடங்களாக 86.32 மில்லியன் ரூபாவினை கொண்டமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுதந்திர கட்சியின் நகரசபை உறுப்பினர் திருமதி த.புஞ்சிகுமாரி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக பிறிதொரு உறுப்பினர் தெரிவு செய்யப்படாத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.