வவுனியாவில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் அதிரடியாக கைது!!

கைது..

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (16.11) இடம்பெற்று இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு போலியான இலக்க தகடுகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும், அம் மோட்டர் சைக்கிள் இலக்கத் தகடுகளை பொருத்தி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும்,

முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் நிலையம் ஒன்றும் சோதனை செய்யப்பட்டது.

இதன்போது குறித்த நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர் ஒருவர் விசேட அதிடிப்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அங்கு இருந்த கணினி மற்றும் வாகன இலக்கதகடுகள் என்பனவும் விசேட அதிடிப்படையினால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அடுத்த வாரத்தில் ஏற்படப் போகும் ஆபத்து!!

கொவிட்..

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாவிட்டால் இன்னும் 10 நாட்களில் கொவிட் தொற்றாளர்கள் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோவிட் நோய் பரவல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது புதிய அலையின் ஆரம்பம் என கூற முடியாது. ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்படாதென எங்களால் கூற முடியாது. அதற்கு காரணம் தற்போதைய கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பாகும்.

கடந்த நாட்களாக காணப்பட்ட மக்களின் செயற்பாடுகளின் முடிவாகவே இந்த அளவிற்கு கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அல்லது 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு எங்கள் நடத்தை முறையின் விளைவாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் எதிர்வரும் நாட்களில் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். எனினும் இன்று நாங்கள் சிந்தித்து செயற்பட்டால் எதிர்வரும் 10 முதல் 15 நாட்களுக்கு அதிகரிக்கும் தொற்றாளர்களை எங்களால் தடுக்க முடியும்.

அதற்காக சுகாதார நடைமுறைகளை நாங்கள் உரிய முறையில் பிற்பற்றி செயற்பட வேண்டும். உரிய முறையில் முகக் கவசம் அணிதல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் உரிய முறைய பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் திடீர் சோதனை நடவடிக்கை : பலர் முகக்கவசமின்றிய நிலையில்!!

சோதனை நடவடிக்கை..

நாட்டில் மீண்டும் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரில் இன்று (16.11.2021) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர் அரங்கன் மற்றும் பிரசன்னா தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நகரில் பல்வேறு பகுதிகளில் மூன்று குழுக்காக பிரிந்து திடீர் சோதனை நடவடிக்கை .இடம்பெற்றிருந்து.

குறிப்பாக நகரில் ஹொரவப்பொத்தானை வீதி, பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முகக்கவசமின்றி, சமூக இடைவெளியின்றி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் என பலர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இனி வருகின்ற நாட்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான சோதனை நடவடிக்கையின் போது கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவர்களுக்கு எதிராக எவ்வித சந்தர்ப்பமும் வழங்காது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் பல இடங்களில் மின்தடை!!

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வைரவப் புளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி, கப்பாச்சி , குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

கிளிநொச்சி..

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இன்று காலை 8 மணி அளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய போலீசார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வு இன்றி வாகனங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக வந்த பாடசாலை மாணவி விபத்தில் பலி!!

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை நோக்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு,

மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று(15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணவிகள் ஏ9 வீதியின் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி 17 அகவையுடைய மாணவி பலியானதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் : புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!!

சுகாதார வழிகாட்டி..

நவம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரைக்குமான திருத்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சமய நிகழ்வுகள்,

பொது நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,

இவ்வாறான நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட தொகையினரே பங்குபற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக வந்த பாடசாலை மாணவி விபத்தில் பலி!!

கிளிநொச்சி..

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை நோக்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு,

மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று(15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணவிகள் ஏ9 வீதியின் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி 17 அகவையுடைய மாணவி பலியானதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கும், அவரது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யாப்பட்டுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று (15.11) மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கும் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆசிரியரின் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான இருவரும் சிகிச்சைக்காக தனிமைப்படுததப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15.11.2021) காலை மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட்திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே, அதிகார இனவெறியை தமிழர்கள்மீது காட்டாதே,

சிங்கள குடியேற்றத்தை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். இதேவேளை ஜனாதிபதிக்கு அனுப்பும் நிமித்தம் வவுனியா வடக்கு பிரதேசசெயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி. ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா,

பிரதேசசபை தலைவர்களான ச.தணிகாசலாம், யோகன், நகரசபை தலைவர் இ.கௌதமன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசகட்சியின் நி.பிரதீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன்,ம.தியாகராஜா, உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

தடுக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகும் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

கொரோனா..

கடந்த 10 நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கோவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் கடந்த 10 நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே இத்தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

அவ்வாறு நடந்து கொண்டவர்கள் தான் தொற்றாளர்களாக அடையாளமும் காணப்படுகின்றனர். இதனை இப்போதே கட்டுப்படுத்தத் தவறினால் நிச்சயம் இத்தொற்று தீவிரமடைய முடியும்.

நாளொன்றுக்கு 5,000 பேர் படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டால் தினமும் 50 ஆயிரம் தொற்றாளர்களை முகாமை செய்ய வேண்டிய நிலைமை எமக்கு ஏற்படும்.

அதேபோன்று நாளொன்றுக்கு 6,000 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டால் 60 ஆயிரம் தொற்றாளர்களை முகாமை செய்ய வேண்டிய நிலைமை எமக்கு உருவாகும்.

இத்தொற்றாளர்கள் ஒவ்வொருவரையும் பத்து நாட்கள் வைத்தியசாலைகளில் தங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் 80 ஆயிரம் கட்டில்கள் தான் மொத்தமாக உள்ளன.

அப்படியென்றால் 80 ஆயிரம் கட்டில்களையும் இத்தொற்றாளர்களுக்காகவே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தற்போது நாளொன்றுக்கு 500, 600 என்ற படி பதிவாகும் தொற்றாளர்களை 400, 300 என்றபடி குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 94 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மாயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சோகமான செய்தி!!

வாகன இறக்குமதி..

வாகன இறக்குமதிக்கான சந்தை விரைவில் திறக்கப்படாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை.

சிலர் என்னுடன் உடன்படாமல் இருக்கலாம். வாகனங்களை இறக்குமதி செய்ய இன்னும் 6 முதல் 7 மாதங்களாகும் வரை அதற்கான சந்தை திறக்கப்படாது.

இதேவேளை, வரி அறிவிடவுள்ள துறைகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

வரி விதிக்கப்படும் பல துறைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதை வெளியிட்டால், அது அநியாயமாக இருக்கலாம். அந்த பொருட்கள் என்னவென்று கூற வேண்டாம் என நிதி அமைச்சின் செயலாளரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனால் வரி அறவிடப்படும் பொருட்கள் மற்றும் அதில் இருந்து விடுவிக்கப்படும் பொருட்கள் என்ன என வெகு விரையில் அறிந்து கொள்ள முடியும் என நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றும் மரணங்களும் : மீண்டும் ஆபத்து!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சுகாதார துறை எச்சரித்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியது. நேற்று 716 புதிய கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வீட்டில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

மேலும் தினசரி கோவிட் தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஐ தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று கோவிட் தொற்று காரணமாக 22 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அதற்கு முதல் நாளில் 23 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

மன்னார் கடலில் மீட்கப்பட்ட யாழ் யுவதியின் சடலம் : கொலையா? தற்கொலையா?

யாழ் யுவதி..

மன்னார் -கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் நேற்றைய தினம்(13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா (வயது-22) எனத் தெரியவந்துள்ளது. அவர் மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.

இவர் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றிய நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

யுவதியின் தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில், தாயின் பராமரிப்பில் குறித்த யுவதி மற்றும் இரு சகோதரர்கள் இருந்துள்ளனர். தாய் பல்வேறு கூலி தொழில் ஈடுபட்டுக் கிடைத்த வருமானத்திலே மூவரையும் பராமரித்து வந்துள்ளார்.

யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை(11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அதன் போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொண்ட காணொளி வெளியாகியிருந்தது.

பின்னர் வியாழக்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்திலிருந்து அப்பெண் குதித்த நிலையில் நேற்றையதினம் பெண்ணின் சடலம் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த பெண் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. யுவதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டார என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த யுவதியின் சடலத்தைத் தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்றையதினம்(14) காலை வைத்தியசாலைக்குச் சென்று அடையாளம் காட்டியுள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு வலயத்தின் நிர்வாகக் கிளை உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா தெற்கு வலயத்தின் நிர்வாகக் கிளை உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா தெற்கு வலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து,

அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் நிர்வாக கிளையில் பணியாற்றும் நான்கு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்றாளர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வவுனியா தெற்கு வலயத்தின் நிர்வாகக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரின் அதிரடி நடவடிக்கை : 5 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிப்பு!!

மாடுகள்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலினால் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் வவுனியா நகரசபையினால் 100 க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவில்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (13.11.2021) இரவு 5 மணிநேர காலப்பகுதியில் 100க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 1000ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.