வவுனியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை : மூன்று பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (30.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (30.09.2021) மூவர் மரணமடைந்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 66) பெண் ஒருவரும், கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 69) பெண் ஒருவரும், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த (வயது 78) பெண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் : திலீபன் எம்.பி!!

மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கில் மக்களுக்கு எந்தவித முன்னறிவித்தலும் வழங்காது தடுப்பூசி அட்டைகள் பரிசோதித்து மக்களுக்கு அசௌகரியளத்தை ஏற்படுத்தியமை தொடர்பாக அப் பிரதேச மக்களால் எனக்கு தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தவுள்ளேன். எந்த விடயமாக இருந்தாலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை முன் கூட்டியே வழங்கி பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.

அத்தியாவசிய தேவை கருதி நடமாடிய மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று கொண்டிருந்த மக்களை வழிமறித்து கோவிட் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. பரிசோதனை என்பது உண்மையில் நல்ல விடயம். ஆனால் மக்களை அசௌகரியத்திற்குள் தள்ளிவிடக் கூடாது.

அதிலும் குறிப்பாக, அந்த சுகாதார அதிகாரி தடுப்பூசி போடப்பட்ட அட்டையைக் கூட கேட்டுள்ளார். அரசாங்கத்தினால் அவ்வாறான அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

நான் புகைப்படங்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது. வயலுக்கு சென்ற உழவு இயந்திரம் கூட மறித்து வைக்கப்பட்டு காத்திருக்க வேண்டி இருந்தது.

கோவிட் தொடர்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தவுள்ளேன் எனவும் தெரிவித்தார்

 

35 பேரை ஏமாற்றிய 41 வயது பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

சென்னை..

தமிழகத்தில் 41 வயது பெண் ஒருவரிடம் 35 பேர் ஏமாந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா என்ற 41 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறி அறிமுகமாகினார். வழக்கறிஞராக இருந்து வருவதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்து வருவதாகவும், ஒரு முக்கிய அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படங்களையும் தன்னிடம் காட்டினார்.

அதன் பின், மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாகவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறினார். இதனை நம்பி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

ஆனால், நீண்ட காலமாகியும் பணி மற்றும் பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020 வரை சுமார் 35 பேரை ஸ்டெபி ஏமாற்றியது தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஸ்டெல்லா,

சென்னை புழுதிவாக்கத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பலரிடம் தன்னை பிரபலமான வழக்கறிஞர் என்று சொல்லி அறிமுகமாகியுள்ளார்.

அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் வக்கீல் உடையில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அரசியல்வாதியிடம் தனக்கு நிறைய செல்வாக்கு இருப்பதாக சொல்லி, மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வரும் தூய்மை பணியாளர்களிடம் நிரந்தரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை சொல்லி உள்ளார்.

இதை வைத்து தான், 35 பேரிடம், 1.18 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். பொலிசார் தன்னை தேடுவதை அறிந்த அவர் உடனடியாக தலைமறைவாகினார்.

அதன் பின் பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், அவரிடம் இருந்து சுமார் 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

காதலனால் காதலிக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கடலூர்..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பி.இ படித்த கார்த்திக் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.

காதல் ஜோடி இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு இடையூறு இல்லை என்று நெருங்கி பழகி செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு அழிஞ்சிமங்கலம் கிராம கோவிலில் வைத்து,

குடும்பத்தினருக்கு தெரியாமல் தாலி கட்டி ராஜகுமாரியை கார்த்திக் மனைவியாக்கிக் கொண்டதாகவும், அலைபாயுதே ஸ்டைலில் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

படிப்பு முடிந்து இருவரும் சென்னையில் ஒரே வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும், குடும்பத்தினருக்கு தெரியாமல் சில தினங்கள் அங்கேயே தங்கி குடும்பம் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

பெற்றோர் சம்மதம் பெற்று தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறியவர், நீண்ட நாட்களாகியும் வரவில்லை என்று ராஜகுமாரி சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பாக இரு குடும்பத்தாரிடம் பஞ்சாயத்து பேசியதில் விரைவில் கார்த்திக் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி வீட்டிற்குள் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துச்சென்றதாகவும், ஆனால் மாதங்கள் பல கடந்தும் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் கார்த்திக் கழற்றிவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கார்த்திக்கிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து, கார்த்திக் உடன் தான் வாழ்வேன் என்றதோடு வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கூறி ராஜகுமாரி தனது குடும்பத்துடன் சென்று போராட்டம் நடத்தினார்.

தனது ஒரு மகள் சொந்த சாதி இளைஞரை நம்பி வாழ்க்கையை பறிகொடுத்து வீதியின் தவிக்கும் நிலையில், தனது மற்றொரு பெண்ணை அவரது கணவர் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக கண்ணீர் சிந்தி வேதனை தெரிவித்தார் ராஜகுமாரின் தாய்.

கார்த்திக் குடும்பத்தினரோ, தனது மகன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாகவும், ராஜகுமாரியோடு வாழ சம்மதிக்கவில்லை என்பதால் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும் கூறி மறுத்துவிட்டனர்.

காதலுக்கு இங்கே சாதி மட்டும் எதிரியில்லை சாதி ஒன்றாக இருந்தாலும் வசதி வாய்ப்புகள் தான் காதல், திருமணத்தில் முடிவதை நிச்சயம் செய்கின்றது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று.

பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சௌஜன்யா..

கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya) திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளார்.

சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்தவர், வளர்ந்து வரும் நடிகையான இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தி.டீ.ர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளது பே.ர.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய இ.ற.ப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை ம.ன்.னித்து விடுங்கள்.

தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அ.ழு.த்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால்,

இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் த.ற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்லைன் கற்கையில் ஈடுபடத் தவறிய மாணவன் : தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை!!

காலி..

ஒன்லைன் கற்கையில் ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி மஹாமோதர சிஹம்பலாகாஹவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தும்புத்தடியொன்றினால் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

தரம் 11ல் கல்வி கற்று வந்த மாணவரே தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதற்காக தந்தை மகனை தலையில் தாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலைப் பகுதி உணர்வின்றியிருப்பதாக குறித்த சிறுவன் தாய்க்கு கூறியதனைத் தொடர்ந்து, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரின் 49 வயதான தந்தையை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேர பயணங்களுக்கு தடை : புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!!

நாளை (01) அதிகாலை 4.00 மணி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு்ள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட உள்ள நிலையில் நாளை முதல் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டு்ள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின்(Asela Gunawardena) கையொப்பத்தின் கீழ் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

அத்துடன், ஒன்று கூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிவுத் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதன்போது 10 பேருக்கு மாத்திரம் குறித்த திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப கொள்ளளவில் 25சதவீதமானோரை உள்ளடக்கியதாகத் திருமண வைபவங்களை நடத்த சுகாதார வழிகாட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், 16ஆம் திகதிக்கு பிறகு மரண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரே சந்தர்ப்பத்தில் 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

சமய ஸ்தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறக்க முடியும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுப் போக்குவரத்தின்போது ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும்,

அதிசொகுசு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் வளி சீராக்கலை இயக்குவதை தவிர்த்து ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்துப் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பள்ளிகளை 50சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு முன்னெடுக்க முடியும். பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான நிர்மாணப் பணிகள் நிறைவுக் கட்டத்தில்!!

அதிவேக நெடுஞ்சாலை..

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவிலிருந்து பொதுஹெர வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

குறித்த வீதியின் நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் இருக்கும், வெளியேறும் இடம் குருணாகலில் இருக்கும். மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கண்டி, குருணாகல் மற்றும் தம்புள்ளைக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை மிகவும் வசதியாக இருக்கும்.

யாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!!

யாழில்..

யாழ். பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தையொன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குழந்தை வீட்டில் வைத்தே உயிரிழந்த நிலையில் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கொரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் உறவினர்களுடன் சுற்றுலா!!

கொரோனா தொற்றுடன்..

வவுனியாவில் கொரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பம் ஒன்று உறவினர்களுடன், சுற்றுலா சென்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த குடும்பத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றில் ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த குடும்பம் வசித்து வந்த பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்திருந்த வீடு கடந்த 22 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்காது குறித்த குடும்பத்தினர் கொரோனா தொற்றாளருடன் இணைந்து வெளிநாட்டில் இருந்து வருகை தந்த தமது உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து,

சுகாதாரப் பிரிவினர் அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு கொரோனா தொற்றாளர் மற்றும் அவருடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட எவரும் இருக்கவில்லை.

இதனால் குறித்த குடும்பத்தினருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறிலின் கீழ் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

குறித்த குடும்பத்தினர் தற்போது உள்ள பகுதியில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று : 3 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (29.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (29.09) மூவர் மரணமடைந்துள்ளனர். ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த (வயது 81) பெண் ஒருவரும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த (வயது 66) ஆண் ஒருவரும், புதியசின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 69) ஆண் ஒருவரும் என மூவர் இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு வெளியானது!!

பயணக் கட்டுப்பாடு..

நாளையில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாடளாவிய ரீதியில் தொடருந்துகளும் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) அறிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளைய தினம் நீக்கப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பயணிகள் பேருந்துகள் நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு ஒவ்வொரு மாகாணத்துக்குள் மாத்திரம் இயங்கும் எனவும் மாகாணங்களுக்கு இடையில் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

207 பரீட்சார்த்திகளின் மோசமான செயலால் கல்வி அமைச்சு எடுத்துள்ள முடிவு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை..

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் ஆறு பதிவாகியுள்ளன.

மேலும் கையெழுத்து மாற்றம், விடைத்தாள், கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வவுனியா நகரப் பகுதியில் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

கொவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடு முழுவதும் 41 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்பட்டு நாளை காலை 4 மணியுடன் தளர்த்தப்பட உள்ளது.

இந்நிலையில் வன்னி பாதுகாப்புப்படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினர் வவுனியா நகரின் பொது இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், நலன்புரி மையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகர சபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று வாகனங்கள் விபத்து : 6 பேர் காயம்!!

விபத்து..

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30.09.2021) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வானிலை குறித்த முன்னறிவிப்புக்களில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இலங்கையில் வானிலை..

இலங்கையின் தென்கிழக்கில் குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்ப நிலை உருவாகக்கூடும். எனவே, எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளில் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு, இலங்கையின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.

மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இந்தியாவில் குலாப் புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் ‘குலாப்’ புயல், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது.

இதைத்தொடர்ந்து அது பலவீனம் அடைந்து குறைந்த காற்றழுத்த பகுதியாக தெற்கு குஜராத் பிராந்தியத்தில் நேற்று நிலை கொண்டது. இந்தநிலையில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து, இன்று அது, அரபிக்கடலுக்குள் நுழைகிறது.

அத்துடன், மேலும் தீவிரமடைந்து நாளை மற்றொரு புயலாக உருவெடுக்கிறது. தொடர்ந்து, மேற்கு-வடமேற்காக பாகிஸ்தானை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.