கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து : தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது.

காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி கலுவாஞ்சி குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவத்தில் உயர் சேதம் ஏற்படாமல் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமை 319,000 ரூபாவாக இருந்தது. இன்று (14.10.2025) காலை 10:30 மணி நிலவரப்படி 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நேற்று திங்கட்கிழமை 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக இருந்தது. இன்றையதினம் 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூடிய புகையிரதக் கடவையை கடக்க முயன்ற இளைஞர் ஒரு நொடியில் மரணம்!!

மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீப காலமாக ரயில் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டன. இதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மரணங்கள் குறைந்த பாடில்லை.

இந்நிலையில், இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மூடியிருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் தாத்ரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் துஷார். இந்த இளைஞர் ஒக்டோபர் 13-ம் திகதி அன்று தன்னுடைய பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்த போது தான் விபரீத சம்பவம் நடந்துள்ளது.

ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையிலும், ஆபத்தை உணராமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார் துஷார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த நிலையில் துஷாரும் தண்டவாளத்தில் கீழே விழுந்தார்.

அப்போது ரயிலும் வேகமாக வந்து கொண்டிருந்ததால் பைக்கை எடுக்க முயன்ற துஷார் ரயில் நெருங்கி வந்ததும் பைக்கை விட்டுவிட்டு தண்டவாளத்தில் ஓடினார்.

ஆனால், துஷார் மீது ரயில் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்க முயன்றதில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கொட்டாரக்கரா தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு முயற்சிகளை தொடங்கினர்.

சோனி குமார் என்ற தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி அர்ச்சனாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து, குமார் மற்றும் அர்ச்சனா மீது கிணற்றுக்குள் விழுந்தது.

மேலும் கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச்சனாவின் நண்பர் சிவகிருஷ்ணனும் சுவர் இடிந்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், ஆனால் மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அர்ச்சனாவுக்கும் சிவகிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அர்ச்சனா கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றது தெரிய வந்துள்ளது.

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் விபரீத முடிவு!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திக் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தையாவின் மனைவி முத்துலட்சுமி (27) இரண்டு பெண் குழந்தைகளான முத்தமிழ் (4) மற்றும் சுசீலா (3) ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான முத்துலட்சுமி, தன் இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிய பின்னர் தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மேலும் தாய் முத்துலட்சுமியின் உடலை இன்று காலை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.

அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம்(14) கைது செய்தனர்.

கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வவுனியாவில் உணவகத்தில் கோழி இறைச்சியில் புழுக்கள் : சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று (14.10.2025) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்றயதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புழுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது உணவகம் ஒன்றில் சுகாதாரசீர்கேடான முறையில் உண்பதற்கு ஒவ்வாத கோழிஇறைச்சி மற்றும் உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த உணவுப்பொருட்கள் சுகாதாரப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த உணவகம் மீது நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பட்டது.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணாமல் உணவங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் இதன்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

 

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி மாயம் : கணவர் முறைப்பாடு!!

வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென, அவருடைய கணவன், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) கடந்த மாதம் 10/09/2025 நாடு திரும்பினார்.

மனைவியை கடத்தியிருக்கலாம்

எனினும், இன்றுவரையிலும் வீட்டுக்குத் திரும்பவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் உள்ளவரை கண்டால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு 052 2277222 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0753591052/0753435012 அந்த இலக்கங்களுக்கு அறிய தருமாறு கோர்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்!!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நானுஓயா நகரில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்பியதால் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட், கிரிமிட்டி,

கார்லிபேக் போன்ற பிரிவுகளில் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பலரின் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் பிரதேச மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இப்பகுதியிலுள்ள விவசாய நிலப்பரப்புகள் முற்றாக நீரினால் நிறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அதற்கமைய இன்றைய தினம்(13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,208,731 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 42,640 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 341,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 39,090 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 312,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,310 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 298,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்!!

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய அமெரிக்க டொலர்களின் வீதம் கடந்த செப்டெம்பர் மாதம் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 25.2 வீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் மொத்தம் 5.81 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

காதலனின் வீட்டில் விருந்திற்கு சென்ற காதலி கொடூரமாக கொலை!!

குருணாகலில் காதலனின் வீட்டில் மதுபான விருந்தின் போது, ​​அபிவிருத்தி அதிகாரியான காதலி மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாவத்தகம, வேவகெதர பகுதியை சேர்ந்த 37 வயதான நடேஷானி கீர்த்தி ராஜபக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் ரம்புக்கனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் வீட்டில் நடந்த விருந்துக்கு குறித்த பெண் சென்றுள்ளார்.

இதன்போது காதலனுக்கும் நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், காதலியான பெண் மண்வெட்டியால் தாக்கி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் – ஒருவர் பலி : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். நேற்று நடந்த இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் முகமூடி அணிந்த குழு அட்டகாசம் : வாகனங்களுக்கு தீவைப்பு!!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று (13) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

உந்துருளியில் வந்த குழு, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதற்கு தீ வைத்தனர்.

அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளியையும் எடுத்து வீட்டிலிருந்து எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி, மாசியப்பிட்டி சந்தியில் வீதியின் நடுவில் தீ வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை!!

நாட்டில் அஎதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாதெனவும் இலவசமாக வழங்கப்படாத பொலித்தீன் கொள்கலன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும்

தொகையைப் பற்றுச்சீட்டில் குறிப்பிட வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

அதேவேளை வட மாகாணத்தில் லஞ்ச் சீட் பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய நோக்கம்!!

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து,

நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும்,

எதிர்காலத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் “இது குறித்த தேவையான தகவல்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு தற்போது நிலைமையை மீளாய்வு செய்து வருகின்றது.

புதிய பாடசாலை அட்டவணை அமுலுக்கு வந்தவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான தேவைகளை நாங்கள் தெரிவிப்போம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப பதிலளிக்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணையானது நீண்ட 50 நிமிட பாடவேளைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கொவிட்-19 தொற்றுநோய் போன்ற முந்தைய தடங்கல்களால் இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதன் மூலமும் கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.