கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப்பிரிவில் ம.டர்சிகா 3A சித்திகளை பெற்று சாதனை!!

மகேந்திரம் டர்சிகா..

நேற்றைய தினம் வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் டர்சிகா கிளிநொச்சி மாவட்டத்தில் 3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தில் வணிகப்பிரிவில் தோற்றி கிளிநொச்சி மாவட்டத்தில் 3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டு வை.எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு முதல் நிலை பெற்றுள்ளார்.

தந்தை கல்விக்காக கூலி தொழிலையும்.எனது தயார் ஆடுகள் வளர்த்தும் அதில் வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுகளையும் கவனித்து அதில் எஞ்சிய வருமானத்தில் எனது கல்வியை தொடர்ந்து இன்று இவ்வாறு பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும், மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் எனவும், தனது கல்விக்கு உதவிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் நேற்று (04.05.2021) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து ஈச்சங்குளம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஈச்சங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் நீண்ட நேரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படாமல் வீதியில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சில மணி நேரங்கள் தடைப்பட்டிருந்தது. விபத்து தொடர்பாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்ட நேரமாக அம்புலன்ஸ் வராத நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு முச்சக்கரவண்டியூடாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மக்களுக்கு பொலிசார் அவசர அறிவித்தல்!!

அறிவித்தல்..

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.

வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என கூறிக்கொண்டு, வீடுகளில் சோதனை என்ற பெயரில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக, வவுனியா பொலிசார் பொது மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

தங்களை அரச புலனாய்வாளர்கள் அல்லது பொலிசார் என கூறிக்கொண்டு வீடுகளுக்கு விசாரணை என்ற பெயரில் வரும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் சீருடை இல்லாமல் விசாரணை என்ற பெயரில் வருபவர்களை, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு விசாரணை என்ற பெயரில் சிவில் உடையில் வரும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்குமாறு கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களையும் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பாக உடனடியாக, 024-2222222, 024-2222226, 071-8591343, 077-877397, 072-9977302, 071-4716286 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இரு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!!

யாழ்ப்பாணத்தில்..

தென்மராட்சி – பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். கொடிகாமம் வடக்கு (ஜே/326) மற்றும் கொடிகாமம் மத்தி (ஜே/327) ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

அதிகளவு கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பெற்றோரின் அலட்சியத்தால் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கதி : எச்சரிக்கை செய்தி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெற்றோரின் அலட்சியத்தால் பள்ளி மாணவி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் அட்சயா, அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அலாதி ப்ரியம் கொண்ட அட்சயா தனது தந்தையின் வாகனத்தை ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், அட்சயா கடைக்கு செல்வதற்காக பிற்பகல் வீட்டில் இருந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லொறி ஒன்று, எதிர்பாரத விதமாக அட்சயா வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லொறி ஓட்டுநர் சுதாகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்ட 18 வயது ஆக வேண்டும் என்ற நிலையில் அதை மீறி அக்சயா ஓட்டியிருக்கிறார். இதை கண்டிக்காமல் அவர் பெற்றோர் ஊக்கமளித்து அலட்சியம் காட்டியதால் வாழவேண்டிய சிறுமி இன்று உலகில் இல்லாமல் போயுள்ளார்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் அபிதன், வாகீசன், சயங்கொண்டான், கோகுலவதனன் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

தமிழ் மகா வித்தியாலயத்தில்..

இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணிதப் பிரிவில் வவுனியா தமிழ் மகா மகாவித்தியாலய மாணவர்கள் மூவர் 3A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அசோக்குமார் அபிதன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், E.வாகீசன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும், S.சயங்கொண்டான் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் நான்காமிடத்தையும், A.அபினாஷ் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 6ம் இடத்தையும், A.ஜெரோசன் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 8ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானப் பிரிவில் P.கோகுலவதனன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும், K.லக்சனா 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 5ம் இடத்தையும், V.வைஷ்ணவி A 2B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 8ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் M.சஞ்சித் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 7ம் இடத்தையும், P.தினோஜன் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 9ம் இடத்தையும்,

உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் S.கிருஷாணி B C S சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 4ம் இடத்தையும், A.B.அன்ரனி C 2S சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 5ம் இடத்தையும், S.சுலக்க்ஷன் 2C S சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 9ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி பூஜை : சுகாதாரப் பிரிவினரால் ஆலயம் முற்றுகை!!

ஞானவைரவர் ஆலயத்தில்..

சுகாதாரப் பிரிவினரின் கொவிட் 19 தொடர்பான அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான மக்களுடன் அட்டமி பூஜை நடத்திய வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு ஞான வைரவர் ஆலயத்தை சுகாதார துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இன்று (05.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் கொவிட் 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் அதன் பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று (04.05) மாலை விசேட பூஜையாக அட்டமி பூஜை இடம்பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த ஆலயத்திற்கு விஜயம் செய்த சுகாதாரப் பிரிவினர் அங்குள்ள சுகாதார நடைமுறைக் கண்காணித்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய குருக்களை அழைத்து அங்குள்ள சுகாதார விதிமீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாட்டையும் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன், ஆலயக் குருக்கள் மற்றும் நிர்வாகத்தினரை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை : கெஹெலிய!!

கெஹெலிய ரம்புக்வெல்ல..

இலங்கையில் கோவிட் வைரஸ் நிலைமை மோசமாகிவிட்டால், நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான அவசியம் குறித்து விவாதம் நேற்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்றது.

இந்தநிலையில் வைரஸ் பரவுவதைக் குறைக்க தற்போது வலய மற்றும் பகுதி வாரியாக முடக்குதல் போதுமானது என்பது அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது என்று ரம்புக்வெல்ல கூறினார். அந்த நேரத்தில் நாட்டின் நிலைமையைப் பொறுத்து எதிர்காலத்தில் இந்த முடிவு மாறக்கூடும் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அண்மையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அண்டை நாடான இந்தியாவைப் போல இலங்கையும் மாறாது என்று அவர் குறிப்பிட்டார்.

“இலங்கை மக்கள் விவேகமானவர்கள், மேலும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அவர்கள் பொறுப்பான மற்றும் விவேகமான முறையில் செயல்படுவார்கள் என்று நம்புவதாக அமைச்சர் கூறினார்.

தனிமைப்படுத்தல் மற்றும் முடக்குதல் தொடர்பான முடிவுகள் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் எடுக்கப்பட்டதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி ப.சுபிலக்ஷி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

பரமசிவம் சுபிலக்ஷி..

இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 351வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 ஆண்டுக்கான க.பொ. த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

உயர்தர பரீட்சையில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை!!

தனராஜ் சுந்தர்பவன்..

தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பௌதீக விஞ்ஞானப் பிரிவில் குறித்த மாணவர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பௌதீக விஞ்ஞான பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கமைய மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

சரசாலையை பிறப்பிடமாக கொண்ட சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டிகளிலும் சாதனை படைத்து வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் அ.அபிதன் கணிதப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

அசோக்குமார் அபிதன்..

இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணி தப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் அசோக்குமார் அபிதன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 326வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கோபிதன் காமன்ஸ் நிறுவன உரிமையாளர் அசோக்குமார் கோகிலதேவியின் மகனான இவர் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 326வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் வாகீசன் 3A சித்திகளை பெற்று கணிதப் பிரிவில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

சில நாட்களில் திருமணம் : 22 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஸ்ரீவாணி ..

இந்தியாவில் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவாணி (22).

இவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஸ்ரீவாணி உயிரிழந்தார்.

ஸ்ரீவாணிக்கு வரும் 13ஆம் திகதி திருமணம் செய்து வைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அவர் நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவார் என வருங்கால கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரின் மரணம் பலத்தை அதிர்ச்சியையும் சோகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியீடு!!

பரீட்சை பெறுபேறுகள்..

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 ஆண்டுக்கான க.பொ. த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

இலங்கையில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் கொரோனா தொற்றாளர் : எச்சரிக்கும் அமைச்சர்!!

கொரோனா தொற்றாளர்..

நாட்டு மக்கள் கோவிட் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் மக்கள் பின்பற்ற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 8000 – 10000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்படும் நபர் ஒருவரினால் மேலும் 4 பேருக்கு வைரஸ் பரப்பினால், அல்லது மக்கள் வைரஸ் குறித்து அவதானமின்றி செயற்பாட்டால் இந்த இலக்கை எட்ட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டினுள் இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் எதிர்வரும் 2 வாரங்களில் அந்த நிலைமை கை நழுவி போய்விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம். முகக் கவசத்தை உரிய முறையில் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழ்வின்-

ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது!!

ஐபிஎல் 2021..

இந்தியாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்.

29 போட்டிகள் வரை விளையாடப்பட்ட இந்த போட்டியில் 8-ல் 6 போட்டிகளில் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7-ல் 5 போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்திலும், 7-ல் 5 போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

30-வது போட்டியாக, மே 03-ம் தேதி திங்கட்கிழமை, அஹ்மதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடக்க வேண்டிய போட்டி நடைபெறவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து போட்டியை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதங்கள் எழுந்தன.

தற்போது அதிகாரபூர்வமாக ஐபிஎல் அமைப்பு, இந்த 2021 ஆண்டுக்கான போட்டிகளை காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை ஏஎன்ஐ முகமை அதன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் நாள் ஒன்றுக்கு சுமார் 3,000-த்தை கடந்து பதிவாகி வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலில் ஐபிஎல் தேவை தானா? என சர்ச்சை எழுந்தது. பேட் கம்மின்ஸ், ஷிகர் தவான், உனத்கட் என பல்வேறு ஐபிஎல் வீரர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசுக்கு பல வகையில் பல வித நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தியாவின் பல நகரங்களில் போதுமான ஆக்சிஜன் விநியோகம், மருந்து விநியோகம் இல்லை என்கிற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இப்படி கொரோனா அதிதீவிரமாக பரவுவதாலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு மத்தியில் கொரோனா பரவத் தொடங்கி இருப்பதாலும் ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக பிபிசி செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

வீரர்கள், பொதுமக்கள், மைதான களத்தில் பணியாற்றும் ஊழியர்கள், போட்டிகளில் பணியாற்றும் அலுவலர்கள் என ஒவ்வொருவரின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஜெய் ஷா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

கொழும்பு பம்பலப்பிட்டியில் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது!!

பம்பலப்பிட்டியில்…

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு பம்பலப்பிட்டி – மிலாகிரிய பகுதியில் இரவுநேர கேளிக்கைவிடுதி ஒன்றில் விருந்து வைத்த 25 பேரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட இரவுநேர கேளிக்கைவிடுதியில் விருந்துக்குத் தயாராகி வந்த குழுவினர் தொாடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது விருந்தில் கலந்து கொண்ட 07 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கோவிட் 19 இன் புதிய வழிகாட்டுதலின் கீழ், Pub,பார் (Bars),கசினோ (Casino), இரவு நேர களியாட்ட விடுதிகள் மறு அறிவித்தல் வரைக்கும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி குறித்த விருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.