வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச் சாவடி!!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் நேற்று (01.05) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தான வீதியில் இச் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் குறிப்பிட்ட சில சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் இலக்கங்கள் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடந்த வாரத்தில் நடைபெற்ற சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் 24 பேர் கைது செய்யப்பட்டும் நான்கு வாள்கள் கைப்பற்றப்பட்டுமுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பெருந்தொகையான பணத்துடன் சஹ்ரானின் சகோதரி கைது!!

தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியுமான முகமட் சஹ்ரான் ஹாசீமின் சகோதரி இன்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகமட் சர்ஹான் ஹாசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா(25வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகமட் சஹ்ரான் ஹாசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டிருந்த ஒரு சகோதரி காத்தான்குடியில் இருந்துவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

-தமிழ்வின்-

இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலில் 16 வீரர்கள் பலி!!

இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு பணிக்கு சென்றுள்ளனர்.

அந்தவாகனம் மஹாராஷ்ர மாநிலத்திற்கும் சதீஸ்கர் மாநிலத்திற்கும் இடையேயான எல்லைபகுதியை எட்டியதும், நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் வாகனம் சிதறி 16 வீரர்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.

மேலும் படுகாயங்களுடன் வீரர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் மஹாராஷ்டிராவில் நிகழ்வு நடந்ததிலிருந்து 24மணி நேரத்தில் நக்சலைட்டுகளால் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று குர்கேடா பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்த இடத்தில் 27 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு நக்சலைட்டுகள் தீவைத்துள்ளனர்.

வவுனியாவில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் மேதின நிகழ்வுகள்!!

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியுடன் இணைந்து வீதிபோக்குவரத்து தொழிலாளர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, புதியசிந்தனை பெண்கள் அமைப்பு, செம்மலர் சிறுவர் அமைப்பு ஆகியனவற்றின் ஏற்பாட்டில் பூந்தோட்டத்தில் குறித்த மேதினநிகழ்வு இ்ன்று காலை நடைபெற்றிருந்தது.

இதன்போது அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களிற்கு மெழுகுவர்தி ஏற்றி, மௌன அஞ்சலி நிகழ்தபட்டிருந்தது.

நிகழ்வில் புதியஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன், வீதிப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர் மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் டொன்பொஸ்கோ, புதிய சிந்தனை பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பி.பிராசந்தி ஆகியோர் கலந்துகொண்டதுடன், தொழிலாளர் தின சிறப்புரைகளையும் நிகழ்த்தியிருந்தனர்.

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் யார்? முழுமையான விபரங்களை வெளியிட்ட பொலிஸ்!!

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டவர் மட்டக்குளி மத்திய வீதியை சேர்ந்த இலாஹுதின் அஹமட் முவாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த அச்சி மொஹமட் ஹஸ்துன் என்பவர் என தெரியவந்துள்ளது. இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவரின் மனைவி சாரா அண்மையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். அவர் சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் நம்பப்படுகின்றது.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோடலுக்கு மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பவரினால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இரண்டு பேர் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான், அவரது மனைவி மற்றும் மகள் சாய்ந்தமருது வீட்டில் இருந்து பொலிஸார் காப்பாற்றப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சஹ்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் சாய்ந்தமருது வீட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் நம்பப்படுகின்றது.

இதேவேளை, ஷங்கிரிலா ஹோட்லுக்கு தாக்குதல் மேற்கொண்டவர் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவராகும். அவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவராகும். அத்துடன் சினமன் கார்டன் ஹோட்டலுக்கு அவரது சகோதரரான மொஹமட் இப்ராஹிம் இன்ஷான் அஹமட் என்பவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் சகோதரன் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட மஹவில பூங்கா வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் பாத்திமா இல்ஹாட் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அவர் ஷங்கிரிலா ஹோட்டலுக்கு தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இல்ஹாமின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சியோன் தேவலாயத்திற்கு மொஹமட் நசார் மொஹமட் அசாத் என்பவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும்.

தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தவர் அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்பவராகும்.

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் பல்வேறு சொத்துக்கள் தொடர்பில் தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, தனியார் துறையில் நாளாந்த கொடுப்பனவு 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறைந்தபட்சம் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியாவில் 24 பேர் கைது : ஹயஸ் ரக வாகனம் மற்றும் 4 வாள்களும் மீட்பு!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இன்று வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்கள் மற்றும் ஹயஸ் ரக வாகனம் ஓன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் வவுனியாவில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரம், பசார் வீதி, பட்டக்காடு, பட்டானிச்சூர்புளியம்குளம், அரபா நகர், மதீனநகர், வேப்பங்குளம், சூசைப்பிள்ளையார்குளம், தர்மலிங்கம் வீதி, மில் வீதி என பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், பொது கட்டிடங்கள், வீதிகள், வாகனங்கள் என்பன சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுற்றிவளைப்பு தேடுதல்களும் இடம்பெற்றன.

இதில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு வேறு இடங்களில் 4 வாள்களும், ஓரு ஹயஸ் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வவுனியாவில் பாதுகாப்பிற்காக 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கனகராயன்குளம் பகுதியில் ஓரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள பிரபல ஹொட்டலில் தீவிபத்து : தீவிர முயற்சியில் 100 தீயணைப்பு வீரர்கள்!!

லண்டனில் உள்ள பிரபல Richmond Hill ஹொட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Richmond ஹொட்டலுடன் Spa இணைக்கப்பட்டுள்ளதால் தீயானது அதன் கூரைப்பகுதிகளிலும் பரவியுள்ளது.

ஹொட்டலை சுற்றியிருக்கும் புகை மூட்டம் மற்றும் தீயை அணைக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தீயணைப்பு நிலைய மேலாளர் Mike Cotton கூறியதாவது, தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சவாலாக இருக்கிறது. தீயானது ஹொட்டலில் உள்ள இணைப்பு கட்டிடங்களிலும் பரவியதால் அதிக புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகில் வசிப்பவர்கள் புகை மூட்டத்தில் இருந்து காத்துக்கொள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியரவில்லை அதுமட்டுமின்றி நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கவில்லை.

அன்று பசி, வறுமை கொத்தடிமையாக வேலை பார்த்த பெண் : இன்று 10 பேருக்கு ஊதியம் வழங்குகிறேன்!!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 10,000 ரூபாய்க்கு கொத்தடிமையாக வேலை பார்த்தேன், இப்போது 10 பேருக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

உலகம் முழுவதிலும் இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உழைப்பின் மூலம் இன்று உயர்ந்து சிலருக்கு வேலை தரும் பெண்ணாக நிற்பவர் தான் தையம்மா, அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அதில், வேலூர் மாவட்டத்திலுள்ள அத்தியாணம் என்பதுதான் எங்களுடைய சொந்த ஊர். நாங்கள் தினமும் கூலி வேலைக்குச் சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வாழ்வை நடத்திவந்தோம்.

விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாததால், கூலி வேலை கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம். அப்போதுதான் என் கணவர் எங்க ஊருக்குப் பக்கத்திலிருந்த விறகு விற்கும் பெரு முதலாளி ஒருவரிடம் வேலைக்குப் போனார்.

அதே காலகட்டத்தில்தான் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய கனவுகளோடு திருமண வாழ்வை வாழ ஆரம்பித்திருந்த காலம் அது. ஆனால், அதன்பின் நடந்ததை எப்படி மறக்க முடியும்.

அப்போது எங்கள் குழந்தைக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போக முதலாளியிடம் வெறும் 1000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு சென்றோம்.

மருத்துவமனையிலிருந்து ஊருக்கு திரும்பி வர மூன்று நாட்கள் ஆகியது, அதற்குள் நாங்கள் ஏதோ ஊரை விட்டு ஓடிவிட்டோம் என்று மாமியாரை வீட்டிற்குள் புகுந்து தாக்கியிருந்தனர்.

நாங்கள் வந்த பின்பு எங்களையும் அடித்து வேலைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். முதலில் நாங்கள் எங்கள் வீட்டில் இருந்துதான் அந்த விறகு வெட்டும் இடத்துக்குப் போயிட்டு வந்தோம்.

ஆனா, நீங்கள் வீட்டுல இருந்து வந்திங்கனா ஒழுங்கா வேலை செய்ய மாட்டிங்க இங்கவே தங்குங்க’னு எங்களை ஒரு மாமரத்துக்கு அடியில தங்க வச்சிட்டுங்கா. நாங்க கொத்தடிமை வாழ்க்கைதான் வாழுறோம்னு தெரியாமலேயே அந்த வாழ்வை வாழ ஆரம்பிச்சிட்டோம்.

நாள் முழுவதும் விறகு வெட்டனும் அதுமட்டுமே வாழ்க்கையாக இருந்தது. எவ்வளவுதான் உழைத்தாலும் சம்பளமென்று எல்லாம் ஒன்றும் கிடைக்காது.

வாரம் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அதை மூணு குடும்பத்தைப் பிரித்து எடுத்து கொள்ள சொல்வார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து வாங்கின கடனை கூட அடைக்க முடியாது.

பசி, நோய், விரக்தி இவற்றுக்கிடையேதான் நாங்கள் ஐந்து ஆண்டுகள் கழித்தோம். அப்போது தான் திடீரென்று எங்களைப் பற்றி அறிந்த அரசு அதிகாரிகள் எங்கிருந்தோ வந்து எங்களை மீட்டனர்.

அதன் பிறகு அரசு அளித்த நிதிகளைக் கொண்டு, நாங்களே எங்களுக்குத் தெரிஞ்ச விறகு விற்கும் தொழிலைத் தொடங்கினோம். இப்போ, எங்களுடன் இணைந்து பத்துப் பேர் வேலை செய்கிறார்கள்.

வரும் வருமானத்தில் அனைவரும் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கிறோம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் மட்டும் கிடைத்தால், அடிமையிலிருந்து அதிபதியாக மாறலாம் என்று கூறியுள்ளார்.

பெண்கள் சிறிய ஆடை அணிவதாலே வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் : பெண்ணின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை!!

ஹரியான மாநிலம் குருகரம் என்ற பகுதியில் பெண்களின் ஆடைகுறித்து பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவர் சில பெண்கள் கடந்து வரும் போது, அவர்கள் சிறிய ஆடை அணிவது தவறு என்றும் சிறிய ஆடை அணிவதால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் பேசியுள்ளார். இதனால் அந்த பெண்ணை தொடர்ந்து சென்ற இளம் பெண்கள் மன்னிப்பு கோரும்படி கூறிகின்றனர்.

ஆனால் அந்த பெண் பெண்கள் குட்டை பாவடை அணிவதாலும் கழுத்து பெரிய அளவில் உள்ள ஆடைகள் அணிவதாலுமே பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அவர் பேசுகிறார்.

இதனை தொடர்ந்து அவரிடம் சண்டைபோட்ட இளம் பெண்ணை, இவரை பெற்றோர் கட்டுப்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியது, பின் அந்தவீடியோ மீது புகார் வழங்கப்பட்டதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

தொடர்ந்து பெண்கள் சிறிய ஆடைகள் அணிவதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!!

இலங்கையில் தங்கியுள்ள சவுதி அரேபியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் பதிவு ஊடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 250இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு சவுதி தூதரகம் இந்த அறிக்கையை வெளிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் இலங்கையில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை கருத்திற் கொண்டு சவுதி அரேபிய தூதரகம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசாதாரண சூழ்நிலையில் கட்டுநாயக்கவில் தரையிறக்கிய 52 வெளிநாட்டவர்கள்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலினால் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், 52 ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான எஸ்.யூ 6265 ரக விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தந்தமை குறித்து சுற்றுலா பயணிகள் கருத்து வெளியிட்டனர். “இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ரஷ்யாவிற்கு தகவல் கிடைத்தது. எனினும் நாங்கள் அச்சப்படவில்லை. திட்டமிட்ட முறையில் இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளோம். 12 நாட்கள் தங்கியிருப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இலங்கையிலுள்ள பல இடங்களை பார்வையிட திட்மிட்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவிய மூவர் கைது!!

தற்கொலை குண்டுதாரிகளுக்கு கல்முனையில் கடையொன்றில் வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ய உதவிய மூவர் மட்டக்களப்பில் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆடை வாங்க செல்வதற்காக பயன்படுத்திய வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த வான் நேற்று முன்தினம் இரவு தற்கொலை குண்டுதாரிகள் ஆடைகள் வாங்க பயன்படுத்தியதாகவும், கல்லடி பிரதேசத்தில் வைத்து இது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி 4ஆம் பிரிவு 3ஆம் பழைய வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹோமட் றிபாஸ் என்பவரையும் (வானை செலுத்தி சென்ற வான் சாரதி) மேலும், இவ்வாறு வானை வாடகைக்கு கொடுத்த கல்லடி மற்றும் கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த வானில் தற்கொலை குண்டுதாரிகளான 3 பேரையும் குழந்தைகளையும் ஏற்றிச் சென்று கல்முனை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வெள்ளை நிற ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வான் சாரதியான றிபாசிடம் தற்கொலை குண்டுதாரிகள் வான் ஒன்றை வாடகைக்கு எடுத்து வரும்படி தெரிவித்ததனையடுத்து, றிபாஸ் மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த யூட் என்ற வான் சாரதியிடம் வான் ஒன்று வாடகைக்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து யூட் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.தனுஷன் என்பவரிடம் வான் ஒன்று தேவை என குறிப்பிட்டுள்ளார். தனுஷன், சோபனா என்பவரின் வானை வாடகைக்கு எடுத்து யூட்டிடம் வழங்கியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கொழும்பில் தொழில் புரியும் பெண் கைது : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!!

திருகோணமலையின் சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்கவின் வாசஸ்தலத்தில் இன்று சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஒலுவில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் கொழும்பு மருதானையில் தொழில் புரிந்து வரும் நிலையில் தம்பலகாமம் 97ஆம் கட்டை பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு பெற்று வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் திருகோணமலை நகருக்கு செல்லும் போது அவரை கப்பல் துறை பகுதியில் வைத்து பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அந்த பெண் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய பட்சத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவி கொண்டிருக்கும் காலகட்டத்தில் வீட்டை வாடகைக்கு வழங்கிய பெண்ணையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சீனக்குடா பொலிஸ் பிரிவில் கடந்த 21ஆம் திகதி தொடக்கம் இன்று வரை 46இற்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை, நாச்சிக்குடா, வெள்ளைமணல் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வு!!

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் இன்று (01.05) அனுஸ்டிக்கப்பட்டது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவிரவாதிகளின் தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் வவுனியாவில் கடமை நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நகரசபை தொழிலாளர் நால்வருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, பசுமைத் தொழிலாளர் நலன்புரிச் சங்கம், நகர சிறுவியாபாரிகள் சங்கம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தொழிலாளர் தொழில் சங்கம், மக்கள் திட்ட ஒன்றியம் வட மாகாணம், ஜனராஜா சுகாதார பொதுச்சேவை சங்கம், இடது குரல் அமைப்பு ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் இராணுவம், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மோப்பநாய் சகிதம் தேடுதல்!!

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை (01.05) மேற்கொண்டனர்.

வவுனியா ஹிச்ராபுரம், அரபாநகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான வீடுகள், பள்ளிவாசல், வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாயின் மூலமும் சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேரூந்து நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையிலேயே இன்று வவுனியா ஹிச்ராபுரம் பகுதியில் காலை 7.30 மணியில் இருந்து 10.30 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.