மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது.
கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி கற்குவாரிக் குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர் தாழ் நிலத்தை நோக்கி வெட்டிவிடப்பட்டது.
இக்குளத்தில் இருந்து வெளியேறிய நீர் ஏ9 வீதியில் மாங்குளம் சந்தியை ஊடறுத்தது. இதன்காரணமாக மாங்குளம் சந்தியில் வெள்ள நீரால் ஏ9 வீதிப் போக்குவரத்து காலை சில மணிநேரம் பாதிப்படைந்ததுடன் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.
கற்குவாரி குளத்து நீர் வெளியேற்றப்பட்டமையால் கற்குவாரியடி மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 55 குடும்பங்கள் பாதிப்படைந்தது இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் மாங்குளம் மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் லைக்கா கிராமத்தில் 36 குடும்பங்களும், பெரியமடுக் கிராமத்தில் 05 குடும்பங்களும், நைனாமடு கிராமத்தில் 11 குடும்பங்களும், மன்னகுளம் கிராமத்தில் 25 குடும்பங்களுமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன் மழை காரணமாக நெடுங்கேணி நாம்பன்குளம் உடைப்பெடுத்த நிலையில் இராணுவத்தின் உதவியுடன் உரப்பை மூலம் உடைப்பு அடைக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பகுதியில் உள்ள படுகாட்டுக்குளம் மற்றும் நெடுங்கேணி பகுதியில் உள்ள வண்ணாங்குளம் என்பன வான் பாய்கின்றது எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
உலகின் குண்டு மனிதர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மெக்ஸிக்கோ நாட்டவர் தற்போது அவரது உடல் எடையின் சரிபாதி அளவுக்கு குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்ஸிக்கோ நாட்டவரான 32 வயது ஜுவான் பெட்ரோ பிராங்கோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் 590 கிலோ உடல் எடையுடன் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி வந்துள்ளார்.
நீண்ட இரண்டு ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் உயிர் காக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜுவான், தற்போது சரிபாதி அளவுக்கு எடையை குறைத்துள்ளார். அதீத உடல் எடை காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜுவான் படுக்கையில் இருந்து எழுந்து நடமாட முடியாமல் தவித்து வந்தார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட உயிர் காக்கும் சிக்கிசைக்கு பின்னர் தற்போது 298 கிலோ அளவுக்கு உடல் எடையை கொண்டு வந்துள்ளனர். மட்டுமின்றி நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையும் எடுத்து வருகிறார்.
இருப்பினும் இன்னும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், மேலும் 146 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்போது மட்டுமே அவரால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும் எனவும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் சுமார் 75 சதவிகித வயிற்றுப்பகுதியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். அப்போதிலிருந்தே கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார் ஜுவான். தம்மிடம் போதிய பணம் இல்லை என்பதாலையே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியாமல் போனது என கூறும் ஜுவான், அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் சாலைகளில் நடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தமிழகத்தில் தன்னுடைய ஆடைகளை கிழித்து பொலிசார் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கடைய நல்லூரை சேர்ந்தவர் தளவாய்சுந்தரம், ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது, இதை அறிந்த பெண் வீட்டார் பொலிசில் புகார் அளித்தனர். அதே தினத்தன்று பெண் வீட்டாரின் உறவினர் ஒருவர் இரண்டு பொலிசாருடன் அரிவாளை காட்டி மிரட்டி, தளவாய்சுந்தரத்தை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர்.
இதன்பின்னர் ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து அவரை கடுமையாக தாக்கியதுடன் மேலாடையை கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு திரும்பிய தளவாய்சுந்தரத்தால் அவமானத்தை தாங்க முடியவில்லை, இதனால் நடந்த சம்பவம் குறித்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தெரிவித்து விட்டு அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். விவரமறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டை விட்டு வெளியில் வந்து வென்று காட்டுங்கள் என புளொட் அமைப்புக்கு வவுனியா நகரசபையைச் சேர்ந்த ஈபிடிபி உறுப்பினர் பாலபிரசன்னா சவால் விடுத்துள்ளார்.
வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நடந்த அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நகரசபையின் பாதீட்டில் சில வட்டாரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வட்டார ரீதியில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட தமிழர் விடுதலைக் கூட்டனி உறுப்பினர் செபநேசராணி தமது பகுதியான தேக்கவத்தை பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி சரியானது எனவும் அதில் மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்ததுடன், நாங்கள் பெண்கள் எங்களை வந்து மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நீங்களும் பெண்களை நிறுத்திப் பார்த்தால் தான் தெரியும் எனத் தெரிவித்தார்.
பதிலளித்த கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், நீங்கள் அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம் என எடுத்து போனஸ்சில் வந்தனீங்கள். உங்களையே மக்கள் கேட்கின்றார்கள் என்றால் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெல்ல வைத்த மக்கள் தமது பகுதிக்கு நிதி காணாது எனக் கேட்கிறார்கள் என காராசாரமாக தெரிவித்தார்.
இதன்போது வட்டாரத்தில் வென்ற உறுப்பினர்கள், போனஸ் உறுப்பினர்கள் என சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், போனஸ்சில் வந்த உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஈபிடிபி நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா, நான் ஈபிடிபி கட்சியில் அதன் சின்னத்தில் போட்டியிட்டு போனஸ் உறுப்பினராகவே வந்தேன். கூட்டமைப்பில் போட்டியிட்ட புளொட் உறுப்பினர் சந்திரகுலசிங்கம் அவர்களைக் பார்த்து முடிந்தால் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து உங்களது சின்னத்தில் வென்று காட்டுங்கள் என சவால் விடுத்தார். இதன்போது போனஸ் உறுப்பினர்கள் சிலர் இக்கருத்தை ஆதரித்தனர்.
குறுக்கிட்ட கூட்டமைப்பில் புளொட் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் சு.காண்டீபன் தாம் தனித்து கேட்டும் வெல்வோம். முன்னரும் செய்து காட்டினோம் என வாதிட்டார்.
இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. கூட்டமைப்பின் சு.காண்டீபன், ஐக்கிய தேசியக் கட்சியின் லரீப் மற்றும் தவிசாளர் ஆகியோர் நிலமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு சபையை வழமைக்கு கொண்டு வந்தனர்.
எழு நீ நிகழ்வு தொடர்பில் கேள்வி எழுப்பிய நகரசபை உறுப்பினரை சபையை விட்டு வெளியேற்ற வேண்டி வரும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் எச்சரித்தார்.
வவுனியா நகரசபையால் நடாத்தப்பட்ட எழு நீ விழா தொடர்பாக நேற்றைய சபை அமர்விலும் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டிருந்தது.
நகர சபையால் நடாத்தப்பட்ட எழு நீ விழா தொடர்பாக கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் செந்தில்ரூபனால் தவிசாளரிடம் விளக்கம் கோரப்பட்டது.
அத்துடன் விருதிற்காக தெரிவு செய்யபட்டவர்களிற்கு வழங்கபட்ட சான்றிதழில் நகரசபையின் செயலாளரது பெயர் பொறிக்கபட்டு அது பின்னர் மறைக்கபட்டுள்ளதுடன் அவ்விடத்தில் வேறு ஒருவர் கையொப்பமிடடுள்ளார்.
இதற்கான விளக்கத்தை தலைவர் தர வேண்டும் என தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை தலைவர், எழுநீ முற்றத்திலிருந்து நகரசபையின் 3 உறுப்பினர்கள் விலகியமையால் நிகழ்வை தாங்களே பொறுப்பேற்று நடாத்துவதாக எழு நீ முற்றத்தினர் கூறினர்.
எழு நீ முற்றம் நடாத்திய நிகழ்வானமையால் நகரசபையின் செயலாளர் கையொப்பம் வைக்காமல் முற்றத்தின் செயலாளர் வைத்திருந்தார். அதற்கு காரணமும் நீங்களே என்று தவிசாளர் தெரிவித்தார்.
நகரசபையின் பெயரில் வேறு அமைப்பு இவ்வாறு நிகழ்வை செய்யலாமா என்று செந்தில்ரூபன் கேள்வி எழுப்பினார்.
இதனால் தவிசாளருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. நிகழ்சிநிரலில் இருக்கின்ற விடயங்களை மாத்திரம் கதைக்குமாறு தவிசாளர் தெரிவித்தார்.
இந்த விடயமும் இருப்பதாக தெரிவித்து உறுப்பினர் செந்தில்ரூபன் கதைத்து கொண்டிருந்தார். இதன்போது இனிமேல் கதைத்தால் உங்களை சபையை விட்டு வெளியேற்ற வேண்டிவரும் என்று தவிசாளர் தெரிவித்தார். இதனால் குழப்பம் நீடித்தது.
இதனையடுத்து மற்றுமொரு உறுப்பினர் இந் நிகழ்வு நகரசபை நடத்தவில்லையா என கேட்டபோது இல்லை நகரசபையே நடத்தியது என தவிசாளர் கூறினார்.
இதன்போது நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா நகரசபை எழு நீ விழாவை நடத்தினால் கணக்கறிக்கையை சபையிடம் ஒப்படையுங்கள் என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தலைவர் அவ்வாறு தெரிவித்தால் பணம் செலுத்த வேண்டி தேவைப்பட்டால் செலத்தவும் வேண்டும் என தெரிவித்தார்.
எனினும் இதன் போது உரையாற்றிய சேனாதிராஜா குறித்த நிகழ்வுக்கான கணக்கறிக்கை தரப்பட வேண்டும். நகரசபை தலைவரின் அறையில் வைத்து ஒருவர் நிகழ்வுக்கு 2 இலட்சம் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவித்தார். எனினும் தவிசாளர் அதனை மறுத்துரைத்திருந்தார்.
அத்துடன் நிகழ்வு நடைபெற்றமைக்கான அழைப்பிதழ்கூட தமக்கு வழங்கபடவில்லை என்று உறுப்பினரான நா.சேனாதிராஜா தெரிவித்தார்.
இதற்கு நீங்கள் நிகழ்வை புறக்கணிப்போம் என்று கூறியமையால் அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று தவிசாளர் பதிலளித்தார். புறக்கணித்தாலும் உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் அனுப்பியிருக்க வேண்டும்.
முதலமைச்சரை விருந்தினராக அழைத்தமையினாலேயே இங்கு குழப்பம் வந்தது. அவர் வருகை தந்து அரசியல் பேசி நிகழ்வை அரசியலாக்கி சென்றுள்ளார் என சேனாதிராஜா தெரிவித்ததுடன், நிகழ்வின் வரவுசெலவு திட்டம்தொடர்பாக எமக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறிய நிலையில் அது தொடர்பாக அடுத்த கூட்டதில் கூறுவதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் மரண வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியொன்றும் எரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு – கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரண வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றுக்கும், நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது நபரொருவர் மீது 10 இற்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த நபரின் முச்சக்கரவண்டியும் வீதியில் போட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குளத்தினை பார்வையிட வரும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் இன்று அறிவுறுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமையினால் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி பயணிக்கும் போது, குறித்த விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் இவ்வாறு விமானத்தை தரையிறக்க நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த விமானத்தில் 490 பயணிகள் மற்றும் 22 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
விமானத்தில் சுகயீனமடைந்த பயணி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் மேலதிக வைத்திய சிகிச்சைக்காக நீர் கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது 80 லட்சம் ரூபாய் பெறுமதியிலான விமான எரிபொருள் 70000 லீற்றர் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் நிவைடைந்த பின்னர் காலை 7.40 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி விமானம் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 வாரத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட இளைஞரை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. வெனிசுலா நாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக கொல்ம்பியாவில் குடியேறியவர்கள் கொல்லப்பட்ட சீசர் அலெக்சிஸ் என்ற 20 வயது இளைஞரின் பெற்றோர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொலம்பியாவில் குடியிருந்து வருவதால் உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று உள்ளூர் நண்பர் ஒருவருடன் மது அருந்திக்கொண்டு இருவரும் கதை பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென்று அப்பகுதிக்கு வந்த ஒரு மர்ம நபர் சீசர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மார்பில் 3 குண்டுகள் பாய்ந்து சம்பவயிடத்திலேயே சீசர் கொல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 10 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து, சீசரின் பெற்றோர் தினமும் சடலத்திற்கு பிரார்த்தனை செய்து வருவதுடன், அடக்கம் செய்யவும் மறுத்து வருகின்றனர்.
கடவுளிடம் இருந்து தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும், தங்களது மகள் உயிருடன் திரும்பி வருவான் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உரிய முறையில் சடலத்தை பாதுகாத்து வருவதால், துர்நாற்றம் வீசும் என அச்சப்படத் தேவையில்லை எனவும், பொதுமக்கள் தேவையின்றி அச்சப்படுவதாகவும் சீசரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றும், தனது சொந்த நாட்டில் விமர்சனங்களுக்குள்ளானதால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
2018ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Catriona Gray (24) திளைக்க, அவரது சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை. அவரது சொந்த நாட்டினரே அவருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்து, பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த Catriona, மிகவும் வெள்ளையாக இருப்பதுதான் பிரச்சினை.
பிலிப்பைன்ஸ் அழகி என்று கூறப்படுவதற்கேற்ற நிறம் Catrionaவுக்கு இல்லை என்று அவரது சொந்த நாட்டினரே கருதுகின்றனர். அவர் மேற்கத்திய பெண் போல் காணப்படுவதாலேயே அழகிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இது மேற்கத்திய அழகே சிறந்தது என்னும் கருத்தை மெய்ப்பிப்பது போல் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
Catriona போதுமான அளவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர் போல் இல்லை என்று தெரிவிக்கும் ஒருவர், அவர் வெள்ளைக்காரப் பெண் ஒருவர் சற்று நிறம் மங்கியிருப்பதுபோலவே தோற்றமளிப்பதாகக் கூறுகிறார்.
இந்த அழகிப்போட்டிகள், வெள்ளைக்காரர்கள்தான் அழகிற்கான இலக்கணம் என்பதையே வலியுறுத்துகின்றன என்கிறார் அவர்.
ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாருதி லண்டனில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு நாகமணி (34) என்பவரை திருமணம் செய்துகொண்டார். நாகமணி Thirmulgherry கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணம் நடைபெற்ற போது நாகமணி, ரூ.2 லட்சம் பணமும், ஒரு லட்சம் மதிப்பில் தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னரும், மாருதி தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து கொண்டு கூடுதல் பணம் கேட்டு நாகமணியை அவமானப்படுத்தி வந்துள்ளனர்.
சமீபத்தில் நாகமணியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு, உன்னுடைய வீட்டிற்கு சென்று ரூ.7 லட்சம் வாங்கி வா என மாருதி மீண்டும் வரதட்சணை கொடுமை செய்ய ஆர்மபித்துள்ளார். இதில் மனமுடைந்த நாகமணி வீட்டில் ஆளில்லாத சமயம் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில் நாகமணியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐதராபாத் மாநிலத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தில் பொம்மராஸ்பெட் கிராமத்தில் இயங்கி வரும் பிராய்லர் கோழிப்பண்ணையில் சிவசங்கர் (22), அரவிந்த் கௌத் (23), மகேஷ் முடிராஜ் (20), மகேந்தர் ரெட்டி (25) என்கிற 4 இளைஞர்கள் வேலை செய்து வந்துள்ளனர். 4 பேருமே தெலுங்கான மாநிலம் வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து 4 பேருமே அறைக்கு சென்று உறங்கியுள்ளனர். காலை விடிந்தும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த சகஊழியர் சதீஷ் கவுத் (20), கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது 4 பேருமே சடலமாக இறந்து கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஸ் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளான். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் நால்வரின் உடலைகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இரவு நேரத்தில் கடுமையன் குளிர் இருந்ததால் அறையின் உட்பகுதியில் தீ மூட்டி உறங்கியுள்ளனர். இதில் எழுந்த புகையால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இரத்தினபுரம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுகம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்களின் வீடுகளுக்கு வெள்ளம் சென்றமையினால் நேற்றிரவு(21.12) முதல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சீரான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலையில் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.