கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. வீதியின் ஓரமாக சென்ற நபர் ஒருவரை முச்சக்கர வண்டியொன்று மோதிச் சென்றுள்ளது.
இதன் காரணமாக பலமாக மோதுண்டு தூக்கி ஏறியப்பட்ட நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதிகளின் மோசமான செயற்பாடு குறித்து பொலிஸார் எச்சரித்துள்ளது.
போட்டி போட்டு வீதியில் செல்லும் முச்சக்கர வண்டிகளால் விபத்துகள் ஏற்படுவதுடன், பாரிய வாகன நெரிசலும் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், தம்முயிரை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
கம்பஹாவைச் சேர்ந்த 24 வயதான சிந்தன தனஞ்சய என்ற இளைஞரே இவ்வாறு இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த ஸ்கூட்டர், பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ்சலாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில் 700 ஆண்டுகளுக்குப் பின் முதற்தடவையாக பிற இனத்தவர், பிற சமயத்தவர் இந்த கல்வியினை பெற்றுள்ளது வரலாற்று நிகழ்வாகப் பதியப்பட்டுள்ளது.
சைவசமயத்தின் பால் சைவநெறிகூடத்தின் பெயரில் தர்மலிங்கம் சசிக்குமார் இந்த வெளிவாரி பட்டய கல்விக்கான தேர்வில் பல்சமய இல்லத்தின் உதவியுடன் தோற்றியிருந்தார்.
ஈராண்டு செயற்பாட்டு கோட்பாட்டு கல்விக்கு பின்னர் இவர் தேர்விற்கு தோற்றியிருந்தார். சமயபோதனையில் நீண்டகால அனுபவம் உள்ள 14 நிபுணர்கள் இந்த கல்வியினை மேற்கோண்டு நிறைவுத் தேர்வில் 10 சமயபோதகர்கள் தேர்வில் சித்தியடைந்திருந்தனர்.
ஈழத்தமிழ் சைவ அருட்சுனையரான தர்மலிங்கம் சசிக்குமாரும் சித்தி அடைந்து நேற்று பேர்ன் பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில், சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சர் சமறூக்கா முன்னிலையில் பேராசிரியர் ஈசாபெல் நோற்ரோவிடமிருந்து பட்டயத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நடுவன் அரச அமைச்சர் தனது உரையில், இங்கு கல்வியினைப் பயின்று நிறைவில் பட்டயச் சான்று பெற்றிருக்கும் உங்கள் அனைவரது கல்வி அறிவும் சுவிஸ் வாழ் அனைத்து மக்களுக்கும் நிறைவாகக் கிடைக்க வேண்டும். வேற்றுமைகளைக் களைய உங்கள் கல்வி பயன் படவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
இந்த கற்கை நெறியினை வழிநடத்திய ஈசாபெல் பேசுகையில், இதுவரைகாலமும் ஒரு சமயம் மட்டும் கோலோச்சி வந்த சமயநெறியால் ஆற்றுப்படுத்தல் எனும் துறையினை இன்று அனைத்து சமயத்தவர்களும் பெற வழி செய்துள்ளோம்.
இதன் பெறுபேறாக சமயத் தலைவர்கள் சட்டப்படி மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்களுக்கு சென்று தமது கல்வியால் அவர்களை ஆற்றுப்படுத்தலாம்.
ஒரு மனிதரும் தனித்து விடப்பட்ட உணர்விற்குள் கட்டுப்படாமல் இன்னொரு மனிதன் உதவிக்கரம் அளித்து உள்ளத்தை ஆற்றுப்படுத்த வழிசெய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கற்கை நெறி வெற்றியளிக்க உதவிய அனைவருக்கும், சிறந்து கல்வி கற்று சித்தி அடைந்தவர்களுக்கும், இன்று பட்டமளிப்பு நிகழ்விற்கு வருகை அளித்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் குறிப்பாக நடுவன் அரசின் அமைச்சர் சமறூக்காவிற்கும் தமது நன்றிகளை நவின்றுள்ளார்.
கல்வி பெற்றதன் பயன் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும், சிறைச்சாலைகளுக்கும், அகதிகள் முகாம்களுக்கும் ஆற்றுப்படுத்தல் பணிக்காக உள்நுழைய ஒப்புதல் பெற்றுக் கொடுக்கிறது.
மேலும், பன்னாட்டு சபையின் சட்டத்தின் படி தடுப்பு முகாம்களுக்கும் உட்சென்று மக்களை ஆற்றுப்படுத்த இது வழி செய்கிறது.
அதேவேளை, 700 வருட சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தவரான தர்மலிங்கம் சசிக்குமார் இறையியல் ஆற்றுப்படுத்தல் பட்டயக் கல்வியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று (28.05.2018) திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் காவடிகள், அங்கபிரதட்சணம், அடியடித்தால் மற்றும் கற்பூரசட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர். இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் நகர நுழைவாயிலில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களிலும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்றும் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன.
‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும், மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர்,
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள், தலைவர்கள் கலந்து கொண்டதோடு, மன்னார் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள் மீட்கப்பட்டது.
மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் விசேட குழுவினர் தமது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மண்ணில் இருந்து அகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள், பற்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – மட்கோ மஹாமாயபுர பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த இராணுவ சிப்பாயை பொது மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை – திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றும் அனுராதபுரம், மான்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சிப்பாய்க்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தொலைபேசி மூலம் பெண் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி, அவருடைய வீட்டுக்கு குறித்த சிப்பாய் சென்றுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கணவர் மறைந்திருந்த நிலையில் சிப்பாயை அயலவர்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது.
இதையடுத்து வீடொன்றின் மரத்தில் நபர் ஒருவரை கட்டி வைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மரத்தில் கட்டப்பட்டிருந்த நபரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப் பகுதியில் வீசப்பட்ட குப்பையிலிருந்து நேற்று முன்தினம் அரச திணைக்களங்களின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் மாலை வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்ட குப்பை கழிவுகளிலிருந்து அரச திணைக்களங்களின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த ஆவணங்களை அங்கிருந்து பெறப்பட்டுள்ளதுடன் சிவில் பாதுகாப்புக்குழுவினரிடம் அவற்றை ஒப்படைத்து வைரவப்பளியங்குளம் பகுதியில் குப்பை வீசுவதைத்தடுக்க நடவடிக்கையினை அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் விழிப்புணர்வுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதே பகுதிகளில் கோழிக்கழிவுகள், குப்பைகள் வீசுப்பட்டு வந்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ‘என்.இ.பி.எல்’ என்ற வெற்றி கேடயம் இன்று (29.05) வவுனியாவை வந்தடைந்தது.
வடக்கு கிழக்கிலுள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபா அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிக்கான கேடயமானது அம்பறை, திருகோணமலை, மட்டக்களப்பை அடுத்து இன்று வவுனியாவை வந்தடைந்தது.
‘வவுனியா வோறியஸ்’ விளையாட்டுக் கழகத்தினர் ‘என்.இ.பி.எல்’ கால்ப்பந்தாட்ட கேடயத்தை வவுனியா நகரசபையிலிருந்து வாகனப் பவனியாக வவுனியா நகரமெங்கும் ஊர்வலமாக எடுத்து வந்ததுடன், வவுனியா வர்த்தகர்களிடம் ஆதரவு கோரியிருந்தனர்.
வவுனியாவிலிருந்து புறப்படும் ‘என்.இ.பி.எல்’ கேடயமானது மன்னார் மற்றும் கிளிநொச்சியை சென்றடைந்து இறுதியாக யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும் என்பதுடன் இக்கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதேச ரீதியாக 12 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் சமூகத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.
கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்துள்ளது.
பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் இதைத் தொடர்ந்து நேற்று இரவு ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் சுரேஷ் (35), ஆறுமுகம் (50), சந்திரசேகர் (31), மருது என்ற சண்முகநாதன் (26), மலைச்சாமி (50), சுகுமாறன் (23), தனசேகரன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த ஆறுமுகம் மற்றும் மருது என்ற சண்முகநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கச்சநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆதிக்க சமூகக் குற்றவாளிகளை அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்பது கச்சநத்தம் கிராம மக்களின் கோரிக்கை.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் போது நடவடிக்கை எடுக்காததும் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதும் மக்களின் குற்றச்சாட்டு.
மணப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதை, அந்தப் பகுதியில் சென்ற சிலர் கண்டுள்ளனர். இதையடுத்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் சடலத்தை மீட்டனர். அந்தப் பெண்ணின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையிலும், முகத்தில் கல்லை போட்டு சிதைக்கப்பட நிலையிலும் இருந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் ஜியாவுல் ஹக், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டது.
அப்போது சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய மோப்ப நாய், அங்கே உள்ள கிராமம் ஒன்றில் கிடந்த புதிய ஷூ ஒன்றை கண்டெடுத்தது. அந்த ஷூவுக்கும், கொலை செய்த நபருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த ஷூ யாருடையது என்று கண்டுபிடிக்கும் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி ஒன்றும், டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இவருடைய சடலம் நீண்ட நேரத்திற்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அளவுக்கு முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, டிப்பர் வாகனத்தை ஜீப் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. இதையடுத்து குறித்த டிப்பர் வாகனம் முன்னால் வந்த முச்சக்கர வண்டியை மோதியுள்ளது.
இதில் மூன்று வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த முச்சக்கரவண்டி குறித்த டிப்பர் வாகனத்தின் கீழ் சென்று இறுகியுள்ளதுடன், முச்சக்கரவண்டியை கடும் சிரமத்தின் மத்தியில் நீண்ட நேரம் கழித்தே வெளியில் எடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேண்டாவுக்கு சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மீண்டும் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
மூன்று குழந்தைகள் பிறந்து விட்டதால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் வேண்டா குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
இதனிடையே பச்சிளம் குழந்தை எரித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் குழந்தையின் தந்தை சிவக்குமாரை கைது செய்தனர்.
அவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என எண்ணியதால் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் எரித்துக் கொன்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தை எரித்து கொல்லப்பட்ட இடத்தில் பொலிசார் தடயங்களை சேகரித்த நிலையில் சிவக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா(20) என்ற மகள் உள்ளார்.
இவரும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரபாகரன்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனக் கசப்பு ஏற்பட்டதால், அசோனா இவரிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து விருத்தாசலத்தில் உள்ள பல்முனை வர்த்தகம் நிறுவனம் ஒன்றில் அசோனா வேலை செய்து வந்ததால், இதை அறிந்த பிரபாகரன் அவரிடம் தினமும் பேச முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணோ இவரிடம் பேசாமல் தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அசோனாவை கடந்த சில தினங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அசோனா தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த பிரபாகரன் அசோனாவின் கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சி செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அசோனா கத்தி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வருவதற்குள் அவர் அங்கிருந்து பைக்கிள் தப்பியுள்ளான்.
அதன் பின் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இதில் மாணவியின் கழுத்தில் லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளதாவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து விருத்தாசலம் எருமனூர் பகுதியில் பொலிசார் ரோந்து பணியில் இருந்த போது இரு சக்கர வானத்தில் வந்த இளைஞரை பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் பதில் கூறியதால், சந்தேகமடைந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை அறுத்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, நானும், அசோனாவும் காதலித்து வந்தோம்.
கடந்த சில மாதங்களாகவே அசோனா என்னிடம் சரிவர பேசாமல் வெறுப்பை காட்டினார். இதனால் அவரை பழிவாங்கும் முயற்சியிலும், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்
தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் மலையடிவாரத்தில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரத்தில் செங்கல்பட்டு எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையில் பொலிசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மலையடிவாரத்தின் ஒரு பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்ததால், பொலிசார் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, இளம் பெண் ஒருவர் உயிரோடு எரிந்து கொண்டிருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், சர்று தொலைவில் வாலிபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதையும் பார்த்துள்ளனர்.
அதன் பின் பொலிசார் தீயை அணைத்து பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். அதன் அருகில் இருந்த சூட்கேஸில்
சுடிதார், சேலைகள் போன்றவைகள் எல்லாம் இருந்துள்ளதால், எரித்து கொல்லப்பட்ட இளம்பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
சூட்கேஸ் இருந்ததால் வேலைக்காக வந்த இடத்தில் யாரேனும் மர்ம நபர்கள் நைசாக பேசி அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்தார்களா, காதல் தகராறில் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28 வயதான கேரி சூ. இவர் Yee-min Huang(27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹுவாங் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாக கேரி சூவுக்கு சந்தேகம் எழுந்தது.
தமது காதலி தம்மை ஏமாற்றி வருவதாக கருதி ஆத்திரம் கொண்ட கேரி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 19 ஆம் திகதி அவரது குடியிருப்புக்கு சென்ற கேரி, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை 7 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டியுள்ளார். இதனை நள்ளிரவு கடந்த நேரம் அருகாமையில் உள்ள பூந்தோட்டத்தில் மறைவு செய்துள்ளார்.
இதனிடையே ஹுவாங்கின் சகோதரர் தமது சகோதரியை இரண்டு நாட்களாக காணவில்லை என பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் கேரி மீது சந்தேகம் உள்ளது எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் கடந்த 20-ஆம் திகதி கேரி பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
மட்டுமின்றி அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தமது காதலி தம்மை ஏமாற்றியதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்துள்ளார்.
தொடர்ந்து பூங்காவில் இருந்து 7 பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றிய பொலிசார், தைவான் சுகாதாக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனை அருகே கேரியின் தற்கொலை செய்த உடலையும் மீட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், பாம்புகளை சர்வ சாதாரணமாக கையாள்வதால் ‘விஷ மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர் ஜோய் குய்லிலன்(31). இவர், பாம்புகளைப் பிடிப்பதிலும், அவற்றை முறையாக கையாள்வதில் வல்லவராக திகழ்கிறார்.
தனது 14வது வயதிலிருந்து நாகப் பாம்புகளுடன் ஜோய் பழக ஆரம்பித்தார். அப்போது ஒருநாள் பாம்பு அவரை தீண்டியது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லாத ஜோய், கடிபட்ட இடத்திலிருந்து ரத்தத்தை வெளியேற்றிவிட்டு ஓய்வெடுத்தார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர், தூங்கிவிட்டு இயல்பாக எழுந்தார். தனக்கு விஷத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய சக்தி இருப்பதாக அப்போது நினைத்தார் ஜோய்.
அதன் பிறகு, பாம்புகளைப் பற்றி தெரிந்து கொண்ட ஜோய், அதன் விஷக் கடிகளில் இருந்து தப்பிக்க 3 வாரங்களுக்கு ஒருமுறை சிறிது விஷத்தை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறார். இதன் மூலம், தன்னுடைய உடலை பாம்புக் கடியை எதிர்கொள்ளும் அளவுக்கு தயார் செய்து வைத்துள்ளார்.
இதுவரை நூற்றுக்கணக்கான பாம்புக்கடிகளை இவரது உடல் சந்தித்திருக்கிறது. எனினும், அவற்றில் 5 முறை மட்டுமே மிக மோசமான நிலைக்குச் சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார் ஜோய்.
செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் இடத்தில் முதலில் வேலை செய்துவந்த ஜோய், பிறகு பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் பாம்புகளைப் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார்.
இது தொடர்பாக ஜோய் குய்லிலன் கூறுகையில், ‘மரணத்துடன் விளையாடுகிறேன் என்று எனக்கு தெரிகிறது. ஆனாலும் பாம்புகளை விட்டு விலக நான் நினைத்ததே இல்லை. நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் என்னைக் கடித்திருக்கின்றன.
அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்குதான் என் உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் மருத்துவமனை சென்று, சிகிச்சைப் பெற்றுத் திரும்பினேன். மருத்துவர்களே என்னைக் கொண்டு ஆச்சரியமடைந்தனர்.
சாதாரண மனிதர்கள் இந்தப் பாம்புக்கடிகளுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றார்கள். அதனால்தான் என்னை எல்லோரும் ‘விஷ மனிதன்’ என்று அழைக்கிறார்கள். விஷத்தைச் செலுத்திக்கொள்வதால் பாம்புக் கடியிலிருந்து தப்பிப்பதோடு, என் உடல் உறுதியடையவும் செய்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்னைப் பரிசோதித்தனர். அதில் சக்தி வாய்ந்த இரண்டு பாம்புகள் என்னைக் கடித்தன. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, நான் இயல்பாக இருப்பதாக கூறினார்கள். அதற்கு பிறகே நம்பாதவர்கள் கூட நம்ப ஆரம்பித்தனர்.
என்னுடைய ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள், நாகப் பாம்பின் விஷத்தை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புப் பொருள் இவருக்கு இருக்கிறது என்று சான்றளித்திருக்கிறார்கள். இயற்கையைப் பேணுவதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
பாம்புகளை நேசிக்கிறேன். பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுத்து வருவதை என் கடமையாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.