இலங்கையை அச்சுறுத்தும் கடும் காற்று : திணைக்களம் எச்சரிக்கை!!

இலங்கையை சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பாரப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு கடும் காற்று வீட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதிகளில் காற்று 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என கூறப்படுகின்றது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களிலேயே இவ்வாறு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலைமை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டத்திலும் இன்றைய தினம் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவனை காணவில்லை!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் வர்த்தக பிரிவில் கல்வி கற்று வருவதாகவும், இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செலவதாக கூறியவர் மீண்டும் வீடு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமற்போனவர் வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசிக்கும் சிவசீலன் சாருபன் என்றும், அவர் இந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்ற இருப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறைவினார்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0776788009 / 0779500230

வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுமக்கள் காணியை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை உடன் நிறுத்தவும்!!

வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடிகூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு வடக்க மாகாண சபை எறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவசரக்கடிததெமான்றினை இன்று (28.05) அனுப்பிவைத்தள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வவுனியா நகரத்திலிருந்து 04 கி.மீ தொலைவில் A9 வீதியில் அமைந்துள்ள பழைய கிராமம் பேயாடிகூழாங்குளம் ஆகும். இங்கு பாடசாலை, பிரதேச சபையின் உப அலுவலகம், பொது நோக்கு மண்டபம், கடைத்தொகுதி, மத தலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் இருந்தன.

1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது மேற்படி கிராமத்திலிருந்த மக்கள் இடம்பெயர்ந்ததை தொடர்ந்து இராணுவத்தினரால் இங்கு முகாம் அமைக்கப்பட்டு தற்போது 56வது பிறிகேட் இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 30.09.2014 திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் இராணுவத் தேவைக்காக காணிகளை சுவிகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் 11 குடும்பங்களுக்கான 8.3 ஹெக்ரேயர் காணி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேற்படி முகாமைச்சூழவுள்ள மேலும் 5.96 ஹெக்ரேயர் காணியை சுவீகரிப்பதற்கான முனைப்புகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தற்போது படிப்படியாக விடுவிக்கப்படுகின்ற நிலையில் வவுனியாவில் புதிதாக காணிகள் சுவீகரிக்க முயற்சிப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும்.

எனவே பாரம்பரிய கிராமமான பேயாடிகூழாங்குளத்தில் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பொதுமக்களிடம் மீளஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் 42 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் நேற்றுமுன்தினம் (26.05) வழங்கிவைக்கப்பட்டன.

மாகாணசபை உறுப்பினர்களுக்கான 2018ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நெடுங்கேணி கால்நடை வைத்தியர் பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 39 குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், 03 குடும்பங்களுக்கு ஆடுவளர்ப்பிற்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம் மற்றும் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் இலங்கை வங்கியின் ‘பிரயாண முகவர் நிறுவனம்’ திறந்து வைப்பு!!

வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான ‘பிரயாண முகவர் நிறுவனம்’ (பி.ஓ.சி, ரவல்ஸ்) இன்று (28.05) நிறுவனத்தின் தலைவர் மித்திர பரணவிதான தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரன கலந்துகொண்டு இலங்கை வங்கியின் பிரயாண முகவர் நிறுவனத்தை திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான பிரயாண முகவர் நிறுவனத்தின் ஆறாவது கிளை திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

வவுனியா கண்டி வீதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்நிறுவனத்தின் நிகழ்வில் இலங்கை வங்கியின் ‘பிரயாண முகவர் நிறுவனத்தின்’ பொது முகாமையாளர் ரமேஸ் சமரநாயக்க, செயற்பாட்டு முகாமையாளர் காசன் மங்களகம ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களுக்கு இப்படி ஒரு நிலை!!

வவுனியா, பரந்தன் ஊடாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களின் வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்களின் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா ஆகியொர் இணைந்து குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கிபிடித்துள்ளனர்.

அத்துடன், தர்மபுரம் பொலிஸாரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தர்மபுரம் பொலிஸாரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களால் நிரம்பி வழியும் வற்றாப்பளை அம்மன் ஆலயம்!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது.

பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபயகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது.

அத்துடன் பாக்குத் தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றுவதற்காக கடந்த 21ஆம் திகதி சிலவாத்தை பெருங்கடலில் இருந்து நீர் எடுக்கப்பட்டிருந்தது.

பொங்கல் விழாவின் போது கண்ணகி அம்மனுக்கு உப்பு நீரில் விளக்கேற்றுவது வழக்கமாகும். இதனாலேயே பொங்கல் விழாவிற்கு 7 நாட்களுக்கு முன் விளக்கேற்றுவதற்காக நீர் எடுக்கப்படுகிறது.

மேலும், இன்றைய திருவிழாவை முன்னிட்டு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியிலிருந்து மாத்திரமின்றி தென்னிலங்கையிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வவுனியா நகரசபை தலைவரை தாக்க முற்பட்ட சிறைக் காவலர்!!

வவுனியா நகரசபை தலைவரை இன்று (28.05) காலை சிறைக்காவலர் ஒருவர் தாக்க முற்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக நகரசபை தலைவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

வவுனியா நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக தரிப்பிடமொன்று புனரமைப்பு செய்யப்படவேண்டியுள்ளமையினால் குறித்த பகுதியை நகரசபை தலைவர் என்ற முறையில் நானும் செயலாளரும் நேரில் சென்று பார்வையிட்டிருந்தோம்.

விளக்கமறியில் சிறைச்சாலைக்கு செல்லும் பகுதியினூடாகவே இப்பகுதிக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளமையினால் நகரசபை வாகனத்தில் இப்பகுதியினூடாக சென்று பார்வையிட்டதன் பின்னர் வாகனத்தினை சாரதி பின்புறமாக செலுத்தி வந்தார்.

இதன்போது சிறைக்காவலர் ஒருவர் தொலைபேசியில் கதைத்தவாறு வாகனத்திற்கு அருகில் வந்தார். எனினும் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டமையினால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந் நிலையில் சிறைக்காவலர் நகரசபை சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந் நிலையில் நான் வாகனத்தில் இருந்து இறங்கி சம்பவம் தொடர்பில் கேட்டபோது என்னை தாக்க முயற்சித்தார்.

எனினும் நான் நகரசபை தலைவர் என தெரிவித்த நிலையிலும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மீண்டும் மீண்டும் கைகளை உயர்த்தி தாக்க முற்பட்டிருந்தார்.

இதன் காரணமாக சிறைச்சாலை அதிகாரியொருவரிடம் முறையிட்ட நிலையில் அவர் எழுத்து மூலமாக முறைப்பாட்டை தருமாறு தெரிவித்தார்.

நகரசபை தலைவர் என்ற வகையிலும் உத்தியோகப்பற்றற்ற நீதிபதி என்ற வகையிலும் அவ்வாறு வழங்க வேண்டிய தேவை எனக்கில்லை என தெரிவித்து பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போது அவர்கள் முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமக்கு தெரியும் என நகரசபை தலைவர் என்ற பதவி நிலைக்கு அகௌரவப்படுத்தும் செயலை செய்துள்ளனர்.

இவ்வாறான பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்வதால் எதனையும் சாதிக்க முடியாது என்பது தெரியும். எனவே பொலிஸார் மீதும் நம்பிக்கை இன்மையால் முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என தெரிவித்தார்.

-தமிழ்வின்-

வாய்த் தகராறால் பலியான உயிர் : 6 பேர் திட்டமிட்டு நடத்திய கொடூரம்!!

 

வாய் தகராறினால் சென்னை இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விமல் (23) என்பவர் பெயிண்டராகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடையும் நடத்தி வருபவர்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் நடனம் ஆடிய போது ஒரு தரப்பினருக்கும் விமலுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் விமலைக் கொலை செய்ய அந்த கும்பல் முடிவு செய்து மோஜோ (18) என்பவரை விமல் வீட்டிற்கு அனுப்பி தூங்கி கொண்டிருந்த விமலை எழுப்பி மது அருந்தவருமாறு அழைத்துள்ளது.

விமலும் மோஜோவை நம்பி ஏரிக்கரை அருகே வந்து குடித்திருக்கிறார். போதையில் இருந்த விமலை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாறுமாறாக குத்திக்கொலை செய்து விட்டு பின் தப்பித்து சென்றுவிட்டது.

இத் தகவல் அறிந்த கண்ணகி நகர் பொலிசார் விமல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணகி நகரில் மேலும் பதட்டம் ஏற்படாமல் காக்க அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமலின் தந்தை வீரய்யன் கொடுத்த புகாரின் பேரில், தப்பியோடியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் தேடி வந்தனர்.

இவர்களில் மோஜோ (18) மற்றும் பிரவீன் (18) ஆகிய இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ராட்டினம் நொறுங்கி கோர விபத்து : சிறுமி பலி : சோகமயமான கோடைக் கண்காட்சி!!

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கோடைகால பொருட்காட்சி நடைபெற்று வந்தது. விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் பொருட்காட்சிக்கு வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

பொருட்காட்சியில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ராட்டினமும் இருந்தன. அங்கிருந்த ‘ஜெயண்ட் வீல்’ ராட்டினத்தில் ஏராளமான குழந்தைகள் சுற்றி வந்தனர். இரவு வழக்கம்போல் ராட்டினம் சுத்திக் கொண்டு இருந்த நிலையில், அதில் கீழே இருந்து மேல் நோக்கி சென்ற இருக்கை ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.

அதில் பொருத்தப்பட்டு இருந்த ஸ்குரூ கழண்டு விழுந்ததால் இந்த விபத்து நடந்தது. அந்த இருக்கையில் அமர்ந்து இருந்த குழந்தைகள் பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். அவர்களில் அமிர்தா என்ற பெண் குழந்தை உயிரிழந்தது.

மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக காவல்துறையினரும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலர் பார்த்துக் கொண்டிருந்தபோது, ராட்டினம் இருந்து குழந்தைகள் மேலே இருந்து கீழே விழுந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் பொருட்காட்சி மூடப்பட்டு மக்கள் அங்கிருந்து அமைதியான முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த ராட்டினத்தை இயக்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும், இருக்கை ‘போல்ட்’ உருவி இருந்தது குறித்து ஏற்கெனவே அவரிடம் புகார் தெரிவித்தாவும், ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாய்த்தகராறு கொலையில் முடிந்த அவலம்!!

கிரிந்திவெல்ல – முதுன்பிட்டிகந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவர் இடையே ஏற்பட்ட வாயத்தகராறு அதிகரித்து நேற்று மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் முதுன்பிட்டிகந்த – ரதாவான பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான குடும்பஸ்தரே கொல்லப்பட்டுள்ளார்.

கொலை செய்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதானை இன்று இடம்பெறவுள்ளது.

மனைவியின் இறப்பை தாங்காத கணவன் தற்கொலை!!

தனது மனைவின் சடலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து கணவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலன்னறுவை அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் மாவனெல்லையில் உள்ள அவரது உறவினரொருவரின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் , அயல்வீட்டில் இருந்த பெண்ணொருவரை காதலித்துள்ளார்.

குறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த தொடர்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் , இருவரும் வீட்டை விட்டு வௌியேறி பொலன்னறுவை அபேபுரகல பிரதேசத்தில் அமைந்துள்ள இளைஞரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பின்னர், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முற்பட்டிருந்த போதும், அவர்கள் இருவரும் சட்டரீதியாக திருமணம் செய்துக் கொண்டிருந்தமையால் அது வெற்றியளிக்கவில்லை.

சில வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ள நிலையில் அவருக்கு ஒன்றரை வயதான நிலையிலேயே இந்த துரதிருஷ்டவசமாக சம்பவத்துக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.

கடந்த தினத்தில் குறித்த இருவரும் உந்துருளியில் உறவினரொருவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ள நிலையில் , வரும் வழியில் அமைந்துள்ள கால்வாயில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது, பிரதேசவாசிகளால் கணவன் காப்பாற்றப்பட்ட போதும், அவரது மனைவி உயிரிழந்துள்ளார். பின்னர் , குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், தனது மனைவியின் உடலத்தை பெற சில நாட்களாக முயற்சித்து வந்த கணவர் கடந்த தினத்தில் இரவு வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகப்புத்தகத்தில் 14 வயது மாணவிக்கு ஏற்பட்ட காதல் : பின்னர் நடந்த விபரீதம்!!

சிறுமயின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் என்றுமே செயற்பட்டதில்லை. அவள் மீது அளவு கடந்த பாசம். சிறுமி கையடக்க தொலைபேசி கேட்டதால் பெறுமதிவாய்ந்த கைபேசி ஒன்றினை பெற்றோர் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

சிறுமி கைபேசி வாயிலாக முகப்புத்தக கணக்கொன்றை உருவாக்கி பலரையும் நண்பர்களாக இணைத்துக்கொண்டுள்ளார்.

அவரின் முகப்புத்தக கணக்கிற்கு குருநாகல் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் நண்பராகுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறுமி அவருடன் தொடர்ச்சியாக உரையாடி வந்துள்ளார்.

சிறிது காலத்தில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட இருவரும் பல தடவைகள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.

காலம் கடந்து செல்ல இருவரும் பிரியாதிருக்க சிந்தித்து திருமணம் புரிந்துக்கொள்ள இணக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

மறுதினம் காலையில் வழமையை போன்று அன்றும் பாடசாலைக்கு சென்றுள்ளார் 14 வயதுடைய அந்த சிறுமி…. ஆனால் மீண்டும் அவள் வீடு திரும்பவில்லை.

அம்பாந்தோட்டை மாவடத்தில் வீரவில பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு சென்று தேடியுள்ளனர். மேலதிக வகுப்பு நடாத்தப்படும் இடம், அயவலர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் தொலைபேசி வாயிலாக கேட்டு தேடியுள்ளனர்.

எனினும் மாணவியான சிறுமியின் விபரம் பெற்றோருக்கு கிடைக்கவில்லை. பொறுமையிழந்த பெற்றோர் கண்ணீருடன் வீரவில காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் கைபேசி இலக்கத்தினை கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர் சிறுமி குருநாகல் பகுதியில் இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.

இதன்பின்னர் அவர்களை தேடிச் சென்ற போது சிறுமி குறித்த இளைஞருடன் வீடொன்றில் இருந்துள்ளார்.

இருவரையும் கைது செய்த காவல் துறை, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமியை முதலில் திஸ்ஸமாராம பகுதிக்கு காதலன் அழைத்து பின்னர் அவரின் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக தெரிவித்து குருநாகல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி சிறிது காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்து நான்கு வருடங்களின் பின்னர் திருமணம் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு நான்கு வருடங்கள் சென்றதன் பின்னரே திருமண வயதான 18 வயதை அடைவார் என்பதாலேயே இளைஞர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சிறுமி அவருடன் வசிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறுமி குறித்து பெற்றோருக்கு அறவிக்கப்பட்டதன் பின்னர் இளைஞர் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சிறுமியை அவரின் பெற்றோருடன் அனுப்ப மறுத்த இளைஞர் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதனை தொடர்ந்து இளைஞர் கைவிலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுமி நிபந்தனையுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இளைஞரை நீதிமன்றம், நிபந்தனை பிணையில் விடுதலை செய்துள்ளது.

துப்பாக்கி, 90 தோட்டக்களுடன் காட்டுக்குள் தப்பிச் சென்ற தமிழ் சிப்பாய்!!

திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாகி 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் இன்று காலை தப்பியோடியுள்ளார். இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, பெரியமடு முருகன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட இந்த விமானப்படை சிப்பாய் இன்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சிப்பாய், அவருக்கு வழங்கப்பட்டிருந்த 60 தோட்டக்களுடன் இரண்டு ரவைக் கூடுகள் மற்றும் அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாயின் 30 தோட்டங்கள் அடங்கிய ஒரு ரவைக் கூட்டை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து விமானப்படையினர் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கு அமைய மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் வழிகாட்டலின் கீழ் சீனன்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், விமானப்படை சிப்பாய் தப்பிச் சென்றதாக கூறப்படும் காட்டு வழியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேடுதலின் போது விமானப்படை சிப்பாய்க்கு வழங்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல் வைக்கும் சீருடையின் பகுதி கப்பற்துறை பிரதேசத்தில் கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற விமானப்படை சிப்பாயை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸாரும் விமானப்படையினரும் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

பியர் கொடுத்து யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம் பிக்கு!!

காலி, ஊரகஸ் சந்தி பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல பிக்கு ஒருவரும் அவரது சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கவிதை வடிவில் தர்ம உபதேசம் செய்வதில் பிரபலமான குறித்த பிக்குவும் அவரது சாரதியும் தெலிகடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களை தலா 2 லட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ள நீதவான் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

தெளிகடை சுனந்தாராமய விகாரையில் வசித்து வரும் 26 வயதான மான்பிட்டியே சிறிசுமண என்ற பிக்குவும் அவரது சாரதியுமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊரகஸ்சந்தி பிரதேசத்தை சேர்ந்த 19வயதான யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த யுவதி இரண்டாவது சந்தேக நபரின் நண்பி என பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்று அழைத்துச் சென்று விடுவதாக கூறி சந்தேக நபர்கள், யுவதியை தமது காரில் அழைத்துச் சென்றுள்ளனர். யுவதிக்கும் பியர் மதுபானத்தை பருக கொடுத்துள்ளதுடன் சந்தேக நபர்களும் பியர் பருகியுள்ளனர்.

இதனையடுத்து இரவு ஒரு மணியளவில் யுவதியை காரில் அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த போது, யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது யுவதி காரின் ஸ்டேரிங்கை சுழற்றியதை அடுத்து வண்டி வீதியை விட்டு விலகி பத்தை ஒன்றுக்குள் விழுந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பிரதேசவாசிகள் யுவதியை மீ்ட்டு தெலிகடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பத்தைக்குள் கிடந்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

மன்னாரில் மரியன்னையின் சிலையை உடைத்த விசமிகள்!!

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னை சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் பல வருடங்களாக காணப்பட்ட சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த மரியாளின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மரியன்னையின் சிலை வைக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடி போலையானது மேற்பகுதி உடைக்கப்பட்டதோடு, அதனுள் வைக்கப்பட்டிருந்த மரியன்னை சிலை உள்ளிருந்தவாறே சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியூடாக இன்று காலை பயணித்த மக்கள் குறித்த சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலங்களாக மன்னார் மாவட்டத்தில் மதச்சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்ற போதும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதும், சிலைகள் உடைப்பு தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.