கனடாவில் இலங்கைத் தமிழர் பலி : நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!

கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி அவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்துள்ளது.

இம்மானுவேல் சின்னதுரை (17) என்ற இலங்கை தமிழர் டொரண்டோவின் Scarborough-ல் உள்ள Lester B. Pearson Collegiate பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் திகதி சாலையில் சின்னதுரை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு கார்கள் அங்கு வேகமாக வந்த நிலையில் சின்னதுரை மீது அதில் ஒரு கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சின்னதுரை மீது மோதிய 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்தார். உடன் இன்னொரு காரில் வந்த ஜோன் வாஸ் (25) என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இவ்வழக்கில் சிறுவன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவனுக்கு பத்து மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு ஐந்தாண்டுகள் வாகனம் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜான் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவர் தற்போது வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜோனும், சிறுவனும் சட்டவிரோதமாக சாலையில் கார் ரேசில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஜோன் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு சரியான ஆதரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜோன் வேகமாக சாலையில் கார் ஓட்டியது தவறு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து சின்னதுரையின் தந்தை கருத்து கூற மறுத்துவிட்டார்.

வவுனியாவில் சிரிய இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன அமைதிப்பேரணி!!

சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது.

சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே இதன் வலியை வெளிப்படுத்தி வவுனியாவின் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று 03.03.2018 மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன அமைதிப்பேரணி இடம்பெற்றது.

இக் கண்டன அமைதிப்பேரணி வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடியில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா பழைய பஸ்நிலையத்தில் முடிவடைந்தது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவே ஆக்கிரமிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்து , அமெரிக்காவே, ரஷ்யாவே சிரியாவை விட்டு உடன் வெளியேறு , அன்று – ஈராக் நேற்று – லிபியா இன்று – சிரியா நாளை – எந்த நாடு? , துருக்கியே குர்திஸ் மக்களைக் கொல்லாதே , போர் வேண்டாம் அமைதி நிலவட்டும் , சிரியாவை பாலைவனம் ஆக்காதே என பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் அமைதிப்பேரணியில் இளைஞர்கள் , யுவதிகள் , சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!

 
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை இன்று (03.03.2018) காலை 8.30 மணியளவில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் நகரபிதாவும் வட மாகாணசபையின் உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் , பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), கவிஞர் மாணிக்கம் ஜெகன் ,

வவுனியா நகர சபை உறுப்பினர்களான நாகலிங்கம் சேனாதிராஜா , சுந்தரலிங்கம் காண்டீபன் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், தமிழருவி சிவகுமார், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், வர்த்தகர்கள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வுவச் சிலையை அப்போது நகரசபைத் தலைவர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் அக் காலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தர்மலிங்கம் சித்தார்த்தனால் 1997.04.04ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் : தடுக்க ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ அமைப்பு உதயம்!!

 
வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக 024-324 4444 என்கிற தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

அரசியல், மதசார்பற்ற அமைப்பாக இயங்கும் இவ்வமைப்பானது பல பொது அமைப்புக்களை இணைத்து செயற்பட்டுவருகின்றது.

வவுனியாவில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை இன்று (03.03.2018) 8.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை வவுனியா நகர் முழுவதும் விநியோகித்தனர்.

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐவர் தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலை ஊழியரின் நூதன மோசடி : பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா பொதுவைத்தியசாலை ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரின் மனைவியிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப்பணி உதவியாளராகிய பா.நாகேந்திரன் என்பவரே 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பண மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கணவரை வவுனியா பொது வைத்தியசாலயில் அனுமதித்த குறித்த பெண்ணிடம் உங்கள் கணவரை விசேட சிகிச்சை வழங்குவதன் மூலம் உடனடியாக காப்பாற்ற முடியும். பெரிய வைத்தியரிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய முடியும். மருந்துகள் வெளியிலிருந்து வாங்கவேண்டும் என தெரிவித்து மோசடி செய்த நபர் பணம் கேட்ட நிலையில் தனது கணவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற அவசரத்தில் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை குறித்த ஊழியரிடம் கொடுத்ததாகவும் அதன் பின் அவ் ஊழியர் தலை மறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை குறித்த நபரிடம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் அவ் வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அத்துடன் இம் மோசடி தொடர்பாக 08.02.2018 ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறைப்பாடு எழுத்து மூலம் வழங்கப்பட்ட நிலையில் 20.02.2018 பணிப்பாளரினால் விசாரணை ஒன்று நடத்தப்பட்ட போதும் மோசடியில் ஈடுபட்ட பணியாளர் விசாரணைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதுடன் முறைப்பாடு செய்த நாளிலிருந்து குறித்த நபர் 25.02.2018 திகதி வரை வைத்தியசாலையிலிருந்து நீண்ட விடுமுறையில் சென்றிருந்தார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் 14.02.2018 அன்று செய்யப்பட்ட பண மோசடி தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் நிமித்தம் 02.03.2018 குறித்த நபர் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கும் பொலிசார், இந்த நூதன மோசடி தொடர்பாக முறைப்பாடு செய்த போதிலும் சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக கொழும்பிலுள்ள இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை 02.03.2018 மேற்கொண்டதாக மேலும் தெரிவித்தார்.

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியில் ரூபா : கடன் சுமையில் இலங்கை!!

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

155.23 ரூபாயில் இருந்த டொலர் 157.00 வரை அதிகரித்துள்ளமையினால் வெளிநாட்டு கடன் 84,456 மில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டு நிறைவடையும் போது இலங்கையின் கடன் பெறுமதி 46,585.7 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

ரூபாய் வீழ்ச்சியடைந்த நிலையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக சந்தையில் எண்ணை விலை அதிகரித்துள்ள நிலையில், ரூபாயின் வீழ்ச்சியான பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவை உறைய வைக்கும் பனிப்புயல் : இதுவரை 55 பேர் பலி!!

 
ஐரோப்பாவில் வீசும் கடுமையான பனிப்புயலால் ஸ்கொட்லாந்து, சுவிஸ்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நகரங்களை வெண்பனி போர்த்தியுள்ளது. வீதிகள், விமான நிலையங்களிலும் பனி உறைந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய கண்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. சராசரியாக மைனஸ் 10 டிகிரி அளவிலேயே வெப்பநிலை நீடிப்பதால் கடுமையான பனிப்புயலையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளைப் பனி போர்த்தியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான நிலையங்களிலும் இதே நிலை தான்.

தெளிவான வானிலை இல்லாததன் காரணமாகவும் டப்லின் விமான நிலையத்தை வெண்பனி போர்த்தி இருந்ததாலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஐரிஸ் ரயில் சேவைகளும் நாளை வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத நிலை இருக்கிறது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,

வணிக வளாகங்களும் அதிக அளவில் மூடியே கிடக்கின்றன. பனிப்புயல் காரணமாக வீடற்றோரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

வயதானோர், குழந்தைகள் மற்றும் எளிதில் நோய் தொற்றும் அபாயம் இருப்பவர்களுக்கு இந்த பனிப்புயலால் அதிக ஆபத்துகள் இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

பிரெஞ்ச், பாரிஸ் அரசுகள் வீடற்ற 3 ஆயிரம் பேருக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன. அதிகப்படியான பனிப்பொழிவால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக போலந்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவில் 7 பேர், செக்குடியரசில் 6 பேர், லிதுவேனியாவில் 5 பேர், பிரான்ஸில் 4 பேர், செர்பியா, இத்தாலி, ஸ்லோவேனியா, ரொமானியாவில் தலா 2 பேர், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பனிப்போர்வையால் சுவிற்சலாந்தின் ஜெனிவா விமான நிலையம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மற்றும் எடின்பர்க் விமான நிலையங்களும் ஸ்தம்பித்தன.

தெற்கு பிரான்சில் 2 ஆயிரம் கார்கள் ஹெரால்ட் பகுதியில் கடுமையான பனியால் சாலைகளில் உறைந்து கிடக்கின்றன.

இதனால் போக்குவரத்தை தவிர்க்குமாறு ஸ்வீடன் சாலை போக்குவரத்துத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மோசமான பனிப்புயலுக்கு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பெயரை வைத்துள்ளன.

பிரிட்டன் ‘கிழக்கில் இருந்து வந்த பீஸ்ட்’ என்றும் டச் சைபீரியன் பியர் என்றும், ஸ்வீடன் ஸ்னோ கேனான் என்று அழைக்கிறது.

– One India-

இலங்கையில் ஓராண்டுக்கு 48000 இயற்கை கருக்கலைப்புக்கள்!!

இலங்கையில் ஓராண்டுக்கு 48000 இயற்கைக் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிபுணத்துவ மருத்துவர் கபில ஜயரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கருச்சிதைவு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருடமொன்றுக்கு இலங்கையில் சுமார் 4 லட்சம் கருத்தரித்தல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதில் மூன்று இலட்சத்து 52 ஆயிரத்து சிசுக்கள் உயிருடன் பிறக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட பல நாடுகளில் இயங்கிய பேஸ்புக் Explorer Feed நிறுத்தம்!!

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவத்தினால் பரீட்சித்து பார்த்த பேஸ்புக் Explorer Feed நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை தொடர்பில் பேஸ்புக் பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக குறித்த 6 நாடுகளின் பேஸ்புக் பயனாளர்களுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட பதிவுகள் மாத்திரமே பேஸ்புக் பக்கங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கு Explorer Feed பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற வகையில் பேஸ்புக் மாற்றமடைந்தது.

எப்படியிருப்பினும் இந்த நடவடிக்கையினை பேஸ்புக் பயனாளர்கள் விரும்பவில்லை.

பரீட்சார்த்த நடவடிக்கை காரணமாக பேஸ்புக் பக்கங்களுக்காக விருப்பங்கள் குறைவடைந்துள்ளதாகவும், அது இணையத்தளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண் தானம் செய்த அமலாபால்!!

ரஜினி காந்த், கமல் ஹாசன், பார்த்திபன், சீதா, திரிஷா, மீனா, சினேகா, லைலா உட்பட சிலர் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்துள்ளனர்.

அந்த வரிசையில் இணைந்துள்ளார் அமலா பால்.
அவர் புதுச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

உலகிலேயே இந்தியாவில் தான் கண் பார்வை இல்லாதவர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம், கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான்.

இனிமேலாவது பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனவைரும் முன்வர வேண்டும்
என அமலா பால் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இரும்பு உருக்கும் ஆலை உரிமையாளர்!!

யாழ்ப்பாணம், ஆணைகோட்டை பிரதேசத்தில் இரும்பு உருக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலுவை ராசா எனும் 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை

யாழ்ப்பாண நீதவானின் உத்தரவுக்கமைய சடலம் மேலதிக விசாரணைக்காக சடலம் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுஷ்கா சர்மாவின் திரைப்படத்திற்கு தடை!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் தனது மனைவியின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள பரி திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குர்ரான் மற்றும் இந்து மந்திரங்களை கொண்டு மாயாஜாலம் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் அப்படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த படத்துக்கு சிந்து தணிக்கை சான்றிதழ் அமைப்பும், பஞ்சாப் தணிக்கை சான்றிதழ் அமைப்பும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தடை விதித்துள்ளது.

விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயல்வெளியில் வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் நேற்று (02) வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 39 ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்து கொண்டிருந்தவரை வழி மறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த 39 ஆம் கிராமத்தினை சேர்ந்த 49 வயதான கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்!!

 
வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் செயற்திட்டங்கள், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02.03) புகையிரத வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா பேர்ம் (FIRM) நிறுவனத்தினூடாக தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் செயற்திட்டங்கள் எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமாக அங்கத்தவர்களிடையே தெளிவை ஏற்படுத்தி அடுத்து நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் சமாதான பேரவையின் ஆலோசகர் ஹென்றி டிமெல், தேசிய சமாதான பேரவை செயற்திட்டம் மற்றும் அமுலாக்கத்தின் அதிகாரி எம்.எச்.முஹமட், வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.‌

வவுனியா இளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும்!!

 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று முன்தினம் (01.03.2017) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபைத் தேர்தலின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக
வாக்குகளினை பெற்று நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் கலந்து சிறப்பித்து தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவிக்கையில்.

இளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் என்பதுடன் பெரியோர்களின் ஆசியுடனும் இளைஞர்களின் வலுவான ஆதரவுமே என்றும் ஒரு இளைஞனை சமூக வலுவுள்ளவனாக மாற்றும்.

இன்று கரப்பந்தாட்ட சுற்று தொடரில் பங்குபற்றுகின்ற பதிவு செய்யப்பட்ட அனைத்து கழக வீரர்களும் வெற்றியாளர்கள். பாடப்பரப்புடன் இணைப்பாடவிதான செயற்பாடான விளையாட்டின் மூலம் தமது ஆளும் திறனை இன்னும் வலுவுள்ளதாக மாற்றி சமூகத்தில் பயணிக்க வேண்டும்.

இவ் வருடம் கிராம சேவையாளர் பிரிவுகளின் அடிப்படையில் இளைஞர் கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் திறமையுள்ள பல இளைஞர்களை அறிமுகம் செய்யக்கூடிய வாய்ப்பு இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனது கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் தற்போது நான் ஆரம்பித்துள்ள அரசியல் பயணம் என்பவற்றுடன் கலை மற்றும் கலாசார திறன்களின் வழிகாட்டி இளைஞர் சேவைகள் மன்றமும் ஒன்று என்பதனை தங்களிடம் பெருமையாக கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவி பணிப்பாளர் சிசிர, நிஸ்கோ இணைப்பாளர் ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிரிய இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன அமைதிப்பேரணி!!

சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது.

சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே இதன் வலியை வெளிப்படுத்த வவுனியாவின் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (03.03.2018) மாபெரும் கண்டன அமைதிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கண்டன அமைதிப்பேரணி வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா பழைய பஸ்நிலையத்தில் முடிவடைய உள்ளது.

எனவே வவுனியாவின் அனைத்து இளைஞர் யுவதிகளையும் ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவின் சுயாதீன இளைஞர்கள்