“கட்சி எதுவாக இருந்தாலும் சாராயம், பியர் , சிகரட் , கசிப்பு , கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் அதன் முகவர்கள் தெரிவு செய்யப்பட்டால் கிராமத்தில் உள்ளவர்களின் மூளையின் அளவு விளங்கும்” என உள்ளுராட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள இவ் வேளையில் வவுனியாவில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக வவுனியா நகர், வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி , நூலக வீதி என பல்வேறு இடங்களில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பாக இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சாராயம் , பியர் , சிகரட் , கஞ்சா குடிக்க பழக்கும் மற்றும் கிராம அபிவிருத்திக்கு கிடைக்கும் பணத்தினை கொள்ளையடிக்கும் மற்றும் குடித்தாலும் குடிக்காவிட்டாலும் சாராயம் , பியர் , சிகரட் , கஞ்சா கொடுத்து வாக்கு கேட்கும் மற்றும் பெண்களை தரக்குறைவாக கருதும் மற்றும் சூழல் தொடர்பில் எந்த வித உணர்வும் இல்லாத ஒருவர் தெரிவானால் எங்கள் நிலமை என்ன? எனவே வாக்காளர் ஆகிய நாங்கள் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞன் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்திகதி ஸ்ரீராமபுரம் எனும் இடத்தில் ஒரே ஊரை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் சிக்கன் திருச்செல்வம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டிற்காக ஸ்ரீராமபுரம் பிரதேசத்தை சேர்ந்த மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றிலே முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இதன் பின்னர் 2017ம் ஆண்டு 10ம் மாதம் 02ம் திகதி சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்திலே இந்த எதிரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்ததுடன் வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கினை அரச சட்டவாதி ஐ.எம்.எம்.பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய எதிரிகளான இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவ்விருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், முதலாம் எதிரி தாக்கியதால்தான் மரணம் சம்பவித்துள்ளது என்பது சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டு இன்றைய வழக்கில் முதலாம் எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தை கட்டியெழுப்பும் அரசாங்கம் எனும் தொனிப்பொருளில் நாளை (31.01.2018) காலை 9.30 மணிக்கு வவுனியா கலைமகள் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ள இந் நிலையில் அவரின் வருகையினை முன்னிட்டு பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து குருமன்காட்டுச் சந்தி வரையும் , வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலிருந்து கலைமகள் மைதானம் வரையும் வீதிகளில் 100ற்கு மேற்பட்ட பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்றைய தினம் (30.01.2018) கலைமகள் மைதானத்திற்கு அருகேயுள்ள வீடுகளில் உள்ளவர்களின் விபரங்கள் சிவில் உடையில் வந்த பொலிஸாரினால் திரட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005ம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது குறித்த நபர் தனது பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டிற்குள் அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனை அம் முகாமில் அரசசார்பற்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கண்டு அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதுடன் சிறுமியின் தயாரிடம் சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தயார் குறித்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் பொலிசார் சிறுமியின் வாக்குமூலத்தினை வைத்தியசாலையில் வைத்து பதிவு செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்து வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. கடந்த 2017.10.24அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வுப் பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததுடன் சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டு நேற்றைய தினம் 29.01.2018 தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரியைக் குற்றவாளியாகக்கண்டு கொள்ளப்பட்டு எதிரிக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருடசிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபா அபராதமும் அதைச்செலுத்தத்தவறின் ஒரு மாத சாதாரண சிறை தண்டனையும் மற்றும் இரண்டாம் மூன்றாம் குற்றச்சாட்டுகளுக்கு 10வருட கடூழியச்சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபா அபராதமும் அதனைச் செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதைச்செலுத்தத்தவறினால் ஒரு வருடம் கடூழியச்சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தள்ளார். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று30.01.2018 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
அதிகாலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று காலை 7.30 மணியாளவில் கொடிதம்ப பூசையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று ஆறுமுக பெருமான் உள்வீதி வலம் வந்து 9.00 மணியளவில் திருத்தேரில் ஆரோகணித்து பின்னர் ஆண்பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமுமாய் வடம் பிடிக்க வவுனியா நகரின் வழியே வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த தேர்த்திருவிழாவில் அடியார்கள் சிலர் பாற்குடம் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்தி கடன்களையும் செய்திருந்தனர்.10.30 மணியளவில் தேர் இருப்பிடத்தை அடைந்ததும் தொடர்ந்து அர்ச்சனை செய்யும் நிகழ்வும் அதனை தொடர்ந்து பச்சை சாத்தல் வைபவமும் இடம்பெற்றது.
வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 29.01.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது.
மாலையில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்று 7.30 மணியளவில் முருகப்பெருமான் சப்பரத்தில் ஆரோகணித்து வவுனியா நகரை வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார்.
இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
இதேபோன்று, துருக்கியைச் சேர்ந்தவர் சுல்தான் கோசென் (36) 8 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். உலகின் மிக உயர்ந்த மனிதரான இவரையும் ஆம்கேவையும் தங்களது நாட்டிற்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது.
எகிப்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி வாரியம் விடுத்த அழைப்பினை ஏற்று இருவரும் அங்கு சென்றனர்.
ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.
கடந்த 2009 ஆம் ஆண்டில் உலகின் உயர்ந்த மனிதரானார் கோசன். உலக வரலாற்றில் 8 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர் இவர் தான். பிட்யூட்டரி சுரப்பியினால் அவர் அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறார்.
இதேபோன்று, அகண்டிரோபிளேசியா என மருத்துவ உலகில் அழைக்கப்படும் குறைபாட்டு நோயினால் குள்ள வடிவத்தினை ஆம்கே பெற்றுள்ளார். அவர் 2 வயது குழந்தையின் சராசரி அளவை விட உயரம் குறைந்தவராகக் காணப்படுகிறார்.
இவர்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா.
அதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் புதிய பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஓர் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
வட கொரியா மற்றும் 10 இஸ்லாமிய தேசங்களிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் தடை விதித்தது டிரம்ப் நிர்வாகம்.
இப்போது அந்நாடு இந்த தடையை ஓரளவுக்கு நீக்கி உள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன், அவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.
மேலும் அவர், எங்களுக்கு எங்கள் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று என்றார்.
தடை விதிக்கப்பட்ட நாடுகள் – எகிப்து, ஈரான், ஈராக், லிப்யா, மாலி, வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் என்கின்றன அகதிக் குழுக்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளில் 40 சதவிகிதத்தினர் இந்த 11 நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிரம்ப் அரசாங்கம், தடை விதித்தப் பிறகு, இந்த 11 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் வெறும் 23 பேர் தான் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.
அந்த 23 நபர்களும் ஒரு சட்ட அனுமதிக்குப் பின்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.
சிங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளனர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே, இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது, இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனிஷ்ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக் கொண்டிருந்த போது எம் சிரேஷ்ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள்.
நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களை தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15 ஐ தாம் எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதேபோல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல் படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே? நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே.
ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நன்மைகள் முக்கியம் தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம்.
அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது.
மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒரு பகுதி, தமிழர்கள் இங்கு 10 ஆம் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்து விட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம்.
இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும். பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும்.
பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால் தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.
நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும்.
ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல்வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு.
எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில் தான் சிங்கள மக்கள் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.
நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம், எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம், நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால் தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்க வேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறி போகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
விசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம்.
நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
அத்துடன் நாட்டை சூழவுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை பணத்தை செலுத்தாததால் குறித்த மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து குறித்த அதிகாரியை இருவர் தாக்கியுள்ளனர்.
அச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அதிகாரியை லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் உல்ஹிட்டியாவ பகுதியை சேர்ந்த 46 வயதானவராவர்.
இக்கொலை சம்பவத்தில் தொடர்புபட்ட இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (30) மாரவில நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் அதிசக்தி மின் வலுக்கொண்ட மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தார்.
150 வோல்ட் உடைய குறித்த மின் விளக்கு ஒன்றின் விலையானது 17,500 ரூபா ஆகும். இவ்வாறான மின் விளக்குகள் வவுனியா நகரின் முக்கியமான (வைரவப்புளியங்குளம், குருமன்காடு, வவுனியா நகர், வவுனியா பேரூந்து நிலையம் , பஜார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி) போன்ற பல பகுதிகளில் 39 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இரவு வேளைகளில் போக்குவரத்தினை இலகுவாக மேற்கொள்வதற்கு இந் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனால் வவுனியா நகர் இரவு வேளைகளில் மின்னொளி வீசிப்பிரகாசிக்கின்றதைக் காணக்கூடியதாக உள்ளது.
வவுனியா புகையிர வீதியில் இன்று (30.01.2018) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பணத்தை (காசு) ஏற்றிக்கொண்டு பயணித்த வான் வைரவப்புளியங்குளம் பஜாச் விற்பனை நிலையத்திற்கு அருகே வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சைட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (30.01.2018) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று (30.01.2018) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (29.01.2018) மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட விருந்தினராக வவுனியா மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரிட்சையில் முதல் முன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும், ஐந்தாம் ஆண்டு புலைமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் விசேட சித்திபெற்ற மாணவர்களுக்கு புலைமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
கணிதப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், கலைப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், இ-டெக் பிரிவில் ஆறு மாணவர்களுக்கும், விசேட பிரிவில் மூன்று மாணவர்கள் உட்பட புலைமைப்பரீட்சையில் விசேட சித்திபெற்ற 11 மாணவர்களுமாக மொத்தம் 32 மாணவர்களுக்கு புலைமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
புலைமைப்பரிசில் வழங்கியவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராஜா, சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் ஆர்.தயாபரன், செயலாளர் அன்ரன் புனிதநாயகம், சட்டத்தரணி ரீ.கெங்காதரன் மற்றும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.