கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் திடீரென மரணம்!!

பல வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊர் யாழ். சுன்னாகத்திற்குத் திரும்பிய முதியவரொருவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் நேற்று (29.10) தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வந்த குறித்த முதியவர் கடந்த பத்து நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான சுன்னாகத்துக்குத் திரும்பியிருந்தார்.

உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வந்த குறித்த முதியவர் திடீரென ஏற்பட்டுள்ள நெஞ்சு வலி காரணமாக நேற்று முன்தினம் (28.10) உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் தியாகராஜா(வயது 86) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவரின் சகோதரரால் கொடுமைக்கு ஆளான பெண் : கண்ணீர் மல்க பேட்டி!!

புது டெல்லியில் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் தனது மைத்துனரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதினைந்து வயதில் திருமணம் ஆனபோது குறித்த பெண் தனது மாமனார், மாமியாரால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

பின்னர் தனது மைத்துனரை திருமணம் செய்து கொண்ட தனது மூத்த சகோதரியும் அதே வீட்டில் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் தன் மைத்துனர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தனது கணவரும் தன்னை சித்ரவதை செய்வதாகவும் குறித்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் மூதாட்டி!!

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற 88 வயதுடைய பெண் நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

கனடா நியூ மார்க்கெட் நகரத்தில் காணாமல்போன வயோதிப பெண்ணை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Leslie தெரு மற்றும் St. John’s Sideroad பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பம் மற்றும் பொலிஸார் அவரது நலன் தொடர்பில் அக்கறை காட்டுகின்றனர். யோகேஸ்வரி அந்த பகுதிக்கு நன்கு பழக்கப்பட்டவர் என்ற போதிலும் சற்று குழப்பமடைந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்றிரவு வசிப்பிட பகுதியில் அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரையிலும் தொடர்ந்துள்ளது.

வசிப்பிட பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அவரை தேடி பார்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல் இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவர் பொது நிறத்துடனான 88 வயது பெண் எனவும், தலை முடி வெள்ளையாக காணப்படும் எனவும் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் உருவாகும் விளையாட்டு அரங்கு : திடீர் விஜயம் செய்த விசேட குழு!!

 
வவுனியா – ஓமந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்கின் வேலைகளை விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டப் பகுதியில் மத்திய அரசினால் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் நிர்மாணப் பணிகள் மற்றும் விளையாட்டு அரங்கின் வர்ணப்பூச்சுக்கள் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சம்பத் திஸநாயக்க தலைமையிலான குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாகாண, மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை பயிற்சிவிப்பாளர், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தேடல் வசதியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!!

ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலை முடுக்கு தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் தருகின்றது. இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி அறிந்துகொள்வதற்கு அந்த நாட்டிற்கான கூகுளின் URL ஐ பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது.

இதனைப் பயன்படுத்துவதனால் நாடுகள் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக ஜப்பான் பற்றி தேடவேண்டுமெனில் www.google.co.jp எனும் இணைய முகவரியையும், அவுஸ்திரேலியா பற்றி அறிய வேண்டுமாயின் www.google.com.அது எனும் இணைய முகவரியையும் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

ஆனால் இம் முறையினை விரைவில் நிறுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்கள் கருதியே வேறொரு நாட்டில் இருப்பவர்கள் பிற நாட்டிற்கான கூகுள் முகவரிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிகின்றது.

இரகசியமாக உளவு பார்க்கும் பேஸ்புக் : வெளியானது அதிர்ச்சி தகவல்!!

சமூக வலைளத்தளங்களின் ஜாம்பவான் ஆக இருந்துவரும் பேஸ்புக் தொடர்பில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் குரல்வழி அழைப்புக்கள் போன்றன இரகசியமாக பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை. எனினும் பிபிசி இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சமூக வலைத்தளம் ஏற்கணவே தனிநபர் தகவல்களை பகிர்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.இந்த நிலையிலேயே தற்போது புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு அவமதிப்பினை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தகவலை பரப்பியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழாவும் சிறுவர் தின விழாவும்!!

 
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழாவும் சிறுவர் தின விழாவும் நேற்று (29.10.2017) மிக சிறப்பாக தலைமை ஆசிரியர் திருமதி ராகினி தலைமையில் நடைபெற்றது.

தலைமையுரையினை தலைவர் பூந்தோட்ட முன்பள்ளி முகாமைத்துவக் குழுத் தலைவர் ப.ரவிசங்கர் நிகழ்த்தினர்.

பிரதம விருந்தினராக வன்னி விழுதுகள் பவுண்டேஷன் தலைவர் குலேந்திரன் ஆனந்தராசா, சிறப்பு விருந்தினராக ஐக்கிய தேசியக் கட்சி வுனியா மாவட்ட அமைப்பாளர் கருணதாஸ் மற்றும் கௌரவ விருந்தினராக முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல் நாயகி பூந்தோட்ம் முன்பள்ளியின் கட்டமைப்பின் தலைவர் திரு வேலயுதபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

T20 போட்டியிலும் இலங்கை அணி 3-0 என படுதோல்வி!!

 
இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்களில் நேற்று இடம்பெற்றது.

கடந்த 8 வருடங்களின் பின்னர் நேற்று பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடனும் பெரும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருந்தமை அரங்கில் இருந்த ரசிகர்களின் முகத்தில் தெரிந்தது.

இரு அணிகளுக்கு மிடையிலான 2 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 5-0 என கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெற்றன.

முதலிரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதிதியுமான போட்டி பல இழுபறிகளுக்குமத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் நேற்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மாலிக் ஆட்டமிழக்காது 24 பந்துகளில் 51 ஓட்டங்களையும் உமர் அமின் 37 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சஞ்சய, முனவீர மற்றும் உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறி ஆரம்பம் முதலே சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சானக 36 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அமிர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 3 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 -0 என வெள்ளையடிப்புச் செய்து தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.

இப் போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் பாகிஸ்தான் அணியின் சொயிப் மாலிக் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் 8 ஆண்டுகளின் பின் இடம்பெறும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வவுனியா பசங்க அமைப்பினர் பாத்தீனியம் ஒழிப்பு செயற்றிடத்தில்!!

 
‘பாத்தீனியம் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று (29.10.2017) காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை ‘வவுனியா பசங்க’ அமைப்பினரால் இன, மத, பேதமின்றி வவுனியா பட்டானிச்சூர், சாலம்பைக்குளம் போன்ற பகுதிகளில் வவுனியா நகரசபையின் அனுசரணையுடன் மாபெரும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

தற்போது வவுனியாவில் பாத்தீனியம் அதிகரித்து காணப்படும் இந் நிலையில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட ‘வவுனியா பசங்க’ அமைப்பினர் இவ்வாறான சமுக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.10.2017) வவுனியா வைரவப்புளிங்குளம் சிறுவர் பூங்கா வீதி, நகரசபை ஊழியர் விடுதி வீதி என்பற்றில் பாத்தீனியம் ஒழிப்பு செயற்றிட்டத்தில் இவ் அமைப்பினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களும் தொடர்பு கொள்ளவும்

தலைவர் – பா.கதீஷன் (077 – 2661413)
செயலாளர் – பா.லம்போதரன் ( 077 – 0879746)
பொருலாளர் – பா.சிந்துஜன் ( 077 – 5108572)

வவுனியாவில் வியாபார நிலையத்தில் பணம் திருடிய சிறுவன் பொலிசாரால் கைது!!

வவுனியாவில் வியாபார நிலையத்தில் பணத்திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் ஒருவனை இன்று (29.10) மாலை 3 மணியளவில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா, தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபாரநிலையம் ஒன்றில் 67 ஆயிரம் ரூபாவை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் வியாபார நிலையத்தின் உரிமையாளரால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் கல்முனைப்பகுதியிலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ளதுடன் தனது தகப்பனார் அம்புலன்ஸ் சாரதியாக பணியாற்றுவதாகவும் தனக்கு ஏழு சகோதரர்கள் உள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

கடை உரிமையாளர் தாக்கியதன் காரணமாக சிறுவனின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வியாபார நிலையத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

விடுமுறை நாளான இன்று கடையின் முன்னால் இருந்துகொண்டிருந்தேன். திடீரென கடையினுள் நுழைந்த குறிப்பிட்ட சிறுவன் பணம் வைக்கும் லாச்சியை திறந்து பணத்தை எடுத்து தனது பொக்கற்றில் வைப்பதை கண்டேன். உடனடியாக சிறுவனை பிடித்து வைத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினேன் என தெரிவித்தார்.

பேரழிவின் விளிம்பில் வடகொரியா : கடும் எச்சரிக்கை விடுத்த சீனா!!

மீண்டும் ஒரு ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனைக்கு முயற்சிக்க வேண்டாம், அது பாரிய பேரழிவை இரு நாட்டுக்கும் ஏற்படுத்தும் என வடகொரியாவை சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை மேர்கொண்டுவரும் Punggye-ri பகுதியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனியொரு சோதனைக்கு அப்பகுதி தாக்குப்பிடிக்க வாய்ப்பில்லை என சீனாவின் முக்கிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் மன்டாப் மலையின் உச்சி வெடித்துச் சிதறும் வாய்ப்பு மிக அதிகம் எனவும் சீனா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மன்டாப் மலை வெடித்துச் சிதறும் எனில் 50 மைல் தொலைவில் இருக்கும் சீனா வரை அணுக்கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளதாகவும், கடைசியாக வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனை காரணமாக ஆபத்தின் வீரியம் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இருதினங்களுக்கு முன்னர் வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் Ri Yong-ho ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், பசுபிக் பெருங்கடலின் மீதே ஹைட்ரஜன் அணு குண்டு சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜிம் மெட்டீஸ், சியோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்கா மீதோ அல்லது அதன் நட்பு நாடுகள் மீதோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் தோற்கடிக்கப்படும் என்றார்.

மட்டுமின்றி உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் எனவும் ஜிம் மெட்டீஸ் அப்போது தெரிவித்துள்ளார்.

தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் எதிர்ப்பு நிலையை கைக்கொள்ள முடிவெடுத்திருப்பது கிம் ஜோங் அரசை தனிமைப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

விமானத்தில் தனி ஆளாக பயணித்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

விமானத்தில் தனி ஒருவராக பயணித்த பெண்ணுக்கு விமான ஊழியர்கள் ராஜ மரியாதை அளித்து கெளரவித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தை சேர்ந்த Karon Grieve (57) என்ற பெண் சில தினங்களுக்கு முன்னர் கிரீஸ் நாட்டின் ஹெராக்லியன் நகருக்கு விமானத்தில் பயணம் செய்ய கிளாஸ்குளோ விமான நிலையத்துக்கு வந்தார்.

189 பேர் அமரக்கூடிய ஜெட் ரக விமானத்தில் பயணம் செய்ய Karon உட்பட மூன்று பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் பயண நேரத்தின் போது Karon மட்டும் அங்கு வர மற்ற இருவர் வரவில்லை. இதையடுத்து தனி ஆளாக Karon விமானத்தில் பயணம் செய்தார்.

விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு தரும் ராஜ மரியாதையை கொடுத்தனர். உணவு இலவசமாக வழங்கபட்டதுடன், விமானத்தில் உள்ள எந்த இருக்கையில் வேண்டுமானலும் உட்கார்ந்து கொள்ள Karon-னுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

விமானம் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவர் தனது உடமைகளை ஊழியர்களிடம் கொடுக்க, விமான நிலையத்தில் Karon காக்க வைக்கபடாமல் உடனடியாக அனுப்பட்டார்.

விமானத்தில் பயணம் செய்த நாள் முழுவதும் முக்கிய பிரமுகர் போல தான் உணர்ந்ததாக Karon மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பசியில் கதறிய குழந்தை: மதுபோதையில் தாக்கிய கொடூர தந்தை!!

பசியால் கைக்குழந்தை அழுத நிலையில் மதுபோதையில் இருந்த தந்தை ஆத்திரத்தில் மற்றொரு குழந்தையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சேலத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரயில் நிலையத்தில் மதுபோதையில் தள்ளாடி வந்த நபர் ஒருவர், பிறந்து 17 தினங்களே ஆன கைக்குழந்தையை தூக்கி கொண்டும், நான்கு வயது குழந்தையுடனும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினார்.

அப்போது பசியால் கைக்குழந்தை அழுததால் ஆத்திரமுற்ற அந்நபர், உடன் வந்த நான்கு வயது குழந்தையை சரமாரியாக தாக்கினார். இதனை கண்ட பயணிகள், போதை ஆசாமி குழந்தைகளை கடத்தி வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவர்களை மீட்டு பால் மற்றும் உணவு வழங்கி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் விசாரித்ததில் இரு குழந்தைகளும் அவருடையது தான் என தெரியவந்தது. இதனையடுத்து அக்குழந்தைகளின் தாய் பாரதி என்பவரை வரவழைத்து பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்ட நைஜீய இளைஞர் : கட்டிவைத்து அடித்த மக்கள்!!

 
புனேவில் நைஜீரிய இளைஞர் ஒருவர் பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதாக கூறி பொதுமக்கள், அவரை கட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிபிஏ பயின்று வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் பண்டுகி சலிமா ரச்செட். இவர் சாலையில் வாகனங்களில் சென்றவர்களை தாக்கியும், கார் கண்ணாடிகளை உடைத்தும் இடையூறு செய்திருக்கிறார். மேலும் தன் உடைகளை களைந்து பேருந்தில் சென்ற பெண்களுக்கு ஆபாச சைகைகள் செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ப்ரைட் ரைஸ் கிடைக்காததால் சிறுவன் தற்கொலை!!

காலி – ஹினிதும ஓபான பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஓபான மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த 8ஆம் தர மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காலை குறித்த மாணவர் தனது தந்தையுடன், ஹினிதும நகருக்கு சென்றுள்ள போது, ஃப்ரைட் ரைஸ் (fried rice) வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

இதனை அவரது தந்தை மறுத்துள்ளதனை தொடர்ந்து வீடு திரும்பி, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னைத்தானே கத்தியால் கீறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதியின் நிலை!!

மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தன்னைத்தானே கத்தியால் கீறிக்கொண்டு நேற்று (28.10) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த இலங்கை அகதி அஜாய் (24) தாய் தந்தையை இழந்து கடந்த 2015இல் தமிழகத்திற்கு சென்றுள்ளார். தமிழகம் சென்றவர், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைமறைவானார்.

இந்த நிலையில், நேற்று தன்னை முகாமில் அனுமதிக்க வேண்டும் என வழியுறுத்தி கை,கால் வயிற்றுப்பகுதிகளில் தன்னைத்தானே கத்தியால் கீறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த அகதியை பொலிஸார் ராமநாதபுரம் அரச மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.