அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் : மண்ணையா உண்பது?

 
அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் மண்ணையா உண்பது? என்ற கேள்வியுடன் மட்டக்களப்பில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இன்று மட்டக்களப்பில் முன்னிலை சேசலிசக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ளதுடன், அதில் சம்பளத்தைக் கூட்டு என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சுவரொட்டிகளில் பொருள் விலையும் வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை. அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுவரொட்டிகள் மூலம் அன்றாடம் தொழில் செய்து வாழ்வை நடத்தும் மக்களின் கஷ்டங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடதக்கது.

மகளுக்கு நிச்சயதார்த்தம் :  நளினிக்கு பிணை மறுப்பு!!

சொந்த வீடு இல்லாததால் நளினிக்கு பிணை  மறுக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் நளினியும், ஆண்கள் மத்திய சிறையில் முருகனும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 27 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரும் சிறையில் உள்ளனர்.  பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் 2 மாதம் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நளினியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகளை கவனிக்க நளினி 6 மாதம் பிணை கோரி சிறை துறையில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கையில், நளினி கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தனது மகள் திருமணத்திற்கு அவர் 6 மாதம் பிணை  கேட்டு மனு அளித்திருந்தார்.

அது தொடர்பாக விசாரித்த சிறை கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள், நளினிக்கு சென்னை மற்றும் வேலூரில் சொந்தமான வீடுகள் இல்லை.  எனவே அவருக்கு பிணை வழங்கக் கூடாது என சிறை நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்.சொந்த வீடு இல்லை என்பதற்காக பிணை மறுப்பது தவறானது.

இதுதொடர்பாக முதல்வர், சட்டத்துறை அமைச்சரை சந்தித்து நளினிக்கு 6 மாதம் பிணை வழங்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம். முருகனும் தனது மகள் திருமணத்திற்காக 1 மாதம் பிணை கேட்டு மனு அளிக்க உள்ளார் என்றார் புகழேந்தி.

 

4000 அடி உயரத்திலிருந்து மனைவியை கொலைசெய்ய முயற்சித்த கணவன்!!

இங்கிலாந்தின் சாலீஸ்புரி பிளானில் என்ற இடத்தில் தனது மனைவியை கொல்வதற்காக புதிய முறையாக பரசூட்டில் சில மாற்றங்களை செய்து விபத்துக்குள்ளாக்கி உள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தை சேர்ந்த எமி என்பவரே அவரது மனைவியான விக்டோரியாவிற்கு இவ்வாறு செய்துள்ளார். குறித்த பெண் வானத்தில் பறப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். இதன் காரணமாக அடிக்கடி பரசூட்டின் மூலம் வானில் பயணம் செய்துள்ளார்.

இறுதியாக பரசூட்டில் பயணம் செய்த போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே பரசூட் விழுந்ததில் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது விக்டோரியா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் எமிலி தான் விக்டோரியாவை கொல்வதற்காக புதிய முறையாக பரசூட்டில் சில மாற்றங்களை செய்து இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார்.

மேலும் அவர் இதற்கு முன்பாகவும் மனைவியைக் கொல்வதற்கு பல முறையிலும் முயற்சித்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர் விக்டோரியாவின் பெயரில் உள்ள பணத்தினை பெருவதற்காகவே இவ்வாறு முயற்சித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வவுனியாவிற்கு பேரூந்தினுள் மாட்டிறச்சி கடத்திய மூவர் கைது!!

பருத்தித்துறையிலிருந்து வவுனியாவிற்கு தனியார் பேரூந்தில் மாட்டிறச்சி கடத்திய சாரதி உட்பட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (08.10.2017) மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் சட்டவிரோதமாக மாட்டிறச்சி கடத்துவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் பேரூந்தினை சோதனையிட்ட போது பேரூந்தின் பயணிகள் பொதிகள் வைக்கும் பெட்டகத்திலிருந்து சுமார் 187 கிலோ 850 கிராம் மாட்டிறச்சி இரண்டு பைகளில் சட்டவிரோதமாக வைத்திருத்தமை உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து உடனடியாக பேரூந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் 21,27,35 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை : நடந்தது என்ன?

திருப்பூர் பல்லடம் ரோடு டி.எம்.சி. கொலனியில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தறகொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சாரதியாக வேலைசெய்யும் 35 வயதுடைய பாலமுருகனும் அவரது மனைவியான 30 வயதுடைய கலைவாணி என்பவரும் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

குறித்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்ற நிலையில் பள்ளி முடிந்து குழந்தைகள் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் ஆகியும் வீட்டின் கதவு தட்டப்பட்டும் திறக்கப்படாத நிலையில் சந்தேகம் அடைந்த உறவினர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துள்ளார்.

அப்போது வீட்டு உத்திரத்தில் பாலமுருகனும், கலைவாணியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் ர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

கடன் தொல்லை காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்ப பிரச்சினையா?, வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல கோணங்களில் தெற்கு பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்திறந்து பார்த்த சனீஸ்வரர் விக்கிரகம் : இலங்கையில் நடந்த அதிசயம்!!

வாழைச்சேனை, கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சனீஸ்வர விக்கிரகத்தின் ஒற்றைக்கண் திறந்த சம்பவம் மக்கள் மத்தியி;ல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பது நவக்கிர சன்னிதானத்திலுள்ள சனீஸ்வரர் விக்கிரகத்தின் கண் திறந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் இங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் புரட்டாதி சனியன்று இடம்பெற்றுள்ளது.

ஆலய பிரதமகுரு சனிக்கிழமை காலை பூசை செய்யும் போது விக்கிரகத்தில் ஒரு மாற்றம் காணப்படுவதை அறிந்துள்ளதுடன், ஆலயத்திற்கு வந்த பக்தர் ஒருவரும் அதனை கண்ணுற்று பார்வையிட்டுள்ளனர்.

அதன் பின்னர் சனீஸ்வரர் வலது கண் திறந்த நிலையில் தென்பட்டதை கண்டு ஆலய நிருவாகத்தினரிடம் தெரிவித்ததுடன், இச்சம்பவத்தை கேள்வியுற்ற பக்கதர்கள் பெருந்திரளாக ஆலயத்திற்கு வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் புரட்டாதி மூன்றாவது சனி என்பதால் சனீஸ்வரர் விக்கிரகம் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் என ஆலய பிரதம குரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மெதுவாக கண் மூடும் நிலைமை காணப்படுவதாகவும் ஆலய பிரதமகுரு தெரிவித்தார்.

தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது!!

சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.டி.எம் அட்டையை திருடி அதன் மூலம் 12 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பெற்ற பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 28 வயதான சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!

 
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் 2017/2018 ஆம் ஆண்டுக்குரிய மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 04.10.2017 அன்று காலை 8 மணிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்லூரி நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பெயரில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் சிவகுமாரன் டினோஜன் கலந்து கொண்டு மாணவ முதல்வர்களுக்கான சின்னங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம்!!

 
வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றாகிய கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் நேற்று (06.10.2017) கல்லூரி அதிபர் கேசவன் இளங்கோவன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோர் பற்றிய விழுமியங்கள் பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அருகிச்செல்லும் விழுமியப்பண்புகளை மாணவர் மத்தியில் மீண்டும் ஏற்படுத்துவதற்காக ‘பெரியோரைத்துணைக்கோடல்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்திதனார் .

நிகழ்வில் கனடா புன்னகை அமைப்பின் உதவியூடாக கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மின்சாரம் இல்லாத கிராமத்தில் இருந்து கற்க வரும் மாணவர்களுக்கு கற்க வசதியாக சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகள் வழங்கப்பட்டன. செல்வன் கிருசாந்தன், செல்வன் சாகீசன், செல்வி துர்க்கா ஆகியோருக்கு பாடசாலை அதிபரால் இவை வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம்!!

 
வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

கல்லூரியின் அதிபர் த.தர்மகடாட்சம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, சிறப்பு நிகழ்வாக வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் மாணவரின் மனப்பாங்கு விருத்தியில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்துவோர் ஆசிரியர்களா? பெற்றோர்களா? என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்கள் பங்கு கொண்ட பட்டிமன்றமும் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வின்போது வவுனியா தெற்கு கல்வி வலய ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் வீ.பரஞ்சோதி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா!!

 
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (06.10.2017) பாடசாலையின் அதிபர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களினால் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் மாணவர்களினால் கவிதை, பாடல்கள் , நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் பழைய மாணவர்களும் இணைந்து ஆசிரியர்களுக்கு மதிய போசனமும் நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் இந் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை 65 ஆயிரம் டொலருக்கு விற்பனை!!

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை 65 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1945ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் ஆட்சி அதிகாரம் பறிபோனது. அப்போது அவர் அல்ப்ஸ் மலை தொடர் பகுதியில் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார்.

ஹிட்லர் வாழ்ந்து வந்த மாளிகையை சோதனையிட்ட இராணுவ சிப்பாய் ஒருவர், ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டையை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பல வருடங்களின் பின்னர் இராணுவ சிப்பாய் எடுத்துச் சென்ற ஹிட்லரின் உலக உருண்டையை அவர் ஏலவிற்பனை நிறுவனம் ஒன்றிடம் கையளித்துள்ளார்.

இந்த நிறுவனம் அந்த உலக உருண்டையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு 65 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதேபோல் ஹிட்லர் பயன்படுத்திய சட்டை ஒன்றும் 10 ஆயிரம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் 125 பவுண் நகைகள் கொள்ளை : மூன்று மணி நேரத்தில் நகைகளை மீட்ட பொலிஸார்!!

 
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லடி பாலத்திற்கு அருகில் புதிய டச்பார் வீதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் அப்படியே கொள்ளையிட்டு செல்லப்பட்டிருந்தது.

சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையினை தொடர்ந்து குறித்த நகைப் பெட்டகம் திருகோணமலை – திரியாய காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் நகைப் பெட்டகத்தை மீட்டு வந்ததுடன், பொலிஸாரினால் நகைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

கடந்த மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் இருந்து திட்டங்களை தீட்டிய இளைஞர்கள் இந்த கொள்ளை முயற்சினை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று தினங்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நான்கு இளைஞர்கள் மட்டுமே இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு குறித்த நகைப் பெட்டகம் கொள்ளையடித்து செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கல்லடி கடற்கரையில் புதைத்திருந்த நிலையில், மீண்டும் அவற்றினை எடுத்துக் கொண்டு திருகோணமலை திரியாய காட்டுப்பகுதியில் புதைத்து வைத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா!!

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நாசா. இன்று அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் விண்வெளித் துறையான நாசா மனிதர்களை அனுப்பும் முயற்சியை கையில் எடுத்தது.

பெரும் முயற்சிகளுக்கும், பல தோல்விகளுக்கும் அடுத்து 1969 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 தேதி வெற்றிகரமாக மனிதர்களை அனுப்பி , அங்கு அமெரிக்க கொடியை நட்டது. உலக வரலாற்றில் இது இன்னமும் பெரிய மைல் கல்லாக உள்ளது.

நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம் பிடித்தது. இதையடுத்து நிலவின் மீதான ஆசையை குறைத்துக் கொண்ட நாசா செவ்வாய் கிரகத்தின் மீது தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தது.
இந்தியாவின் இஸ்ரோ தவிர மற்ற எந்த நாடுமே நிலவில் ஆராய்ச்சி செய்யாமல் அமைதி காத்து வந்தன.

இந்த நிலையில் தற்போது அமெரிக்க மீண்டும் நிலவு ஆராய்ச்சியை கையில் எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் ” நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். இந்த முறை வெறும் கொடியை மட்டும் நட்டு விட்டு வரும் பயணமாக இது இருக்காது. இனி நடக்கப் போகும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது ” என்று கூறினார்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் நாசா , அதற்கு முன்னூட்டமாக இந்த நிலவுப் பயணத்தை திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தவுடன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் வேலை ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது நாசா நிறுவனம்.

லண்டனில் வரதட்சணை கொடுமையால் பெண் மரணம்!!

இங்கிலாந்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை வீட்டின் முன்னால் போராட்டம் செய்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த சுவாதி என்பவர் தனது கணவர் ராஜேஸ் என்பவருடன் லண்டனில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, திருமணத்தின்போது சுவாதியின் குடும்பத்தினர் 35 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த ராஜேஸ், அதன்பின்னர் லண்டனில் வேலை கிடைத்தால் அங்கு தனது மனைவியுடன் குடியேறினார்.

மேலும் மனைவியிடம் பணம் கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்துள்ளார், இதற்கு மாமனாரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி தனது வீட்டிற்கு போன் செய்த சுவாதி, வரதட்சணை கேட்டு என்னை இங்கு கொடுமை செய்கிறார்கள். எனக்கு இங்கு வாழவே பிடிக்கவில்லை, நான் இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.

சுவாதி பேசிய இரண்டு நாட்கள் கழித்து, தனது மாமனார் வீட்டிற்கு போன் செய்த ராஜேஷ், சுவாதி கடலில் விழுந்துவிட்ட காரணத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் போன் செய்து சுவாதி இறந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் வரதட்சணைக்காக எனது மகளை கொலை செய்துவிட்டார்கள் என ஹைதராபாத் பொலிசில் புகார் அளித்துள்ளனர், ராஜேஷின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் இந்திய அரசும், தெலுங்கானா மாநில அரசும் சுவாதியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் எனவும், அவரின் கணவர் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுவாதி உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிரட்டையில் தேநீர் அருந்திய மைத்திரி : வியப்பில் மக்கள்!!

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான சில நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

அந்த வகையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் பலரின் கவனத்தை பெற்றுள்ளதோடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கெக்கிராவ திப்படுவௌ நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேநீர் பானத்தை சிரட்டையில் ஜனாதிபதி அருந்தியுள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமகால அரசியல்வாதிகள் பலரும் சொகுசு வாழ்க்கையையும், ஆடம்பரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

அத்துடன், இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.