முதன்முதலாக சண்டைப் போட்டியில் பங்கேற்றவர் பரிதாப பலி!!

சிங்கப்பூரில் நடைபெற்ற முவாய் தாய் சண்டை போட்டியின் போது காயமடைந்த பிரதிப் சுப்ரமணியன் என்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

முவாய் தாய் என்பது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தற்காப்புக் கலைகளுல் ஒன்றாகும். இந்த தற்காப்புக் கலையை பயன்படுத்தும் குத்துச்சண்டை போட்டிகள் தென்கிழக்கு நாடுகளில் நடத்தப்படுகின்றன.

சிங்கப்பூரில் முவாய் தாய் தற்காப்புக் கலையை பயன்படுத்தும் முதல் ஆசிய சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக இரண்டு பிரபலங்களுக்கு இடையேயான முவாய் தாய் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில், 2004ம் ஆண்டு தொடங்கிய முதல் சிங்கப்பூர் ஐடல் சீரிசின் முதல் போட்டியில் கலந்து கொண்ட யூடியுப்பில் பிரபலமான முவாய் தாய் வீரர் ஸ்டீவன் லிம் – சில்வெஸ்டர் சிம் ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.

ஆனால் இன்சூரன்ஸ் பிரச்சினைகளால் சில்வெஸ்டர் சிம் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு பதிலாக பிரதிப் சுப்ரமணியன் (31) என்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் இப்போட்டியில் களமிறங்கினார்.

இது அவருக்கு முதல் போட்டியாகும். இப்போட்டியில், காயமடைந்த சுப்ரமணியத்தால் போட்டியை தொடர முடியாமல் போனது. இதையடுத்து ஸ்டீவன் லிம் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார்.

இப்போட்டிக்கு பின்னர் பிரதிப் சுப்ரமணியன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், மாரடைப்பு காரணமாக நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணிக்கு அவர் மரணமடைந்தார்.

முதல் போட்டியிலேயே சுப்ரமணியம் மரணமடைந்த சம்பவம் அனைவர் மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் அடையாளம் தெரியாத குழுக்கள் அட்டகாசம் : இருவர் காயம்!!

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இளைஞர் குழுக்கள் நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் குருமன்காடு, வைரவப்புளியங்குளம் புகையிரத வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, குட்சைட் வீதி, தோனிக்கல் போன்ற பகுதிகளில் அடையாளம் தெரியாத இளைஞர் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடமிருந்து நகைகள், பணம் என்பவற்றை அபகரிக்க முயன்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மூன்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எகிப்தின் பெரிய பிரமிடு குறித்த ரகசியம் வெளியானது!!

எகிப்தில் உள்ள கிசாவின் பெரிய பிரமிடு கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த மர்ம விலகியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரிய பிரமிடு கட்டுமானம் குறித்து பல்வேறு தகவல்கள் இதுநாள் வரை பரவி வந்தது.

சிலர் ஏலியன்கள் பெரிய பிரமிடை கட்டியிருக்கலாம் என வாதிட்டனர். சுமார் 2500 கிலோ எடை கொண்ட கற்களை மனிதர்களால் எப்படி நகர்த்திச் சென்று கட்டுமானத்தில் ஈடுபட முடிந்தது எனவும் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பினர்.

எகிப்தின் Khufu அரசனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 2600 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 20 ஆண்டுகளாக கட்டப்பட்டது கிசாவின் பெரிய பிரமிடு என ஆய்வாளர்கள் வரலாற்று ஆதாரங்களை சுட்டிக்காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் 481 அடி உயரம் கொண்ட குறித்த கட்டிடத்தை மனிதர்களால் கட்டி எழுப்புதல் சாத்தியமா என்ற கேள்வி ஆய்வாளர்களுக்கு நீண்ட பல காலமாக விவாதப் பொருளாகவே இருந்தது.

தற்போது அந்த கேள்விகளுக்கு எல்லம் விடை தெரிய வந்துள்ளது. ஆயிரக்கணக்கான அடிமைகள் படை ஒன்று கிசா பிரமிடு கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்புகளில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர்களே படகுகளில் கொண்டுவரப்படும் கற்களை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு வழியாக கயிறு கட்டி குறித்த கட்டுமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

Merer என அறியப்பட்ட நபர் ஒருவர் குறித்த தகவல்களை ஓலைச்சுவடிகளில் குறித்து வைத்துள்ளார். Wadi Al-Jarf துறைமுகத்தில் இருந்து தற்போது இந்த குறிப்புகளை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அதில், 2.3 மில்லியன் கற்களை படகுகள் வாயிலாக பிரமிடு கட்டுமானத்திற்கு நைல் நதி வழியாக கொண்டு வந்துள்ளனர். அந்த கற்களை அடிமைகள் 20 ஆண்டுகாலம் செலவிட்டு கட்டி எழுப்பியுள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு!!

 
வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (24.09.2017) மாலை 6.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஸர் முஸ்தபா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக , அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் , அமைச்சின் உத்தியோகத்தர்கள், சுகாதார தொண்டர்கள், பொதுமக்கள் , இரானுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, நிரந்தர நியமனம் கோரி தொடர்ச்சியாக போராடிய நிலையில் மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிட்டிருந்த சுகாதார தொண்டர்கள் தமது நியமனம் தொடர்பில் கேட்டுக் கொள்வதற்கும், மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கும் முயன்ற போது சுகாதார அமைச்சர் ராஜித அவர்களை சந்திக்காதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதும் உடனடியாக வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பில் சுகாதார தொண்டர்கள் தெரிவிக்கையில்,

தாம் தொடர்ச்சியாக நிரந்தர நியமனம் கோரி போராடி வந்த நிலையில் ஓரு மாத காலத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்திற்கு அமைவாக எமது போராட்டத்தை கைவிட்டிருந்தோம்.

இன்று மத்திய சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளித்து எமது நியமனம் தொடர்பில் கேட்டறிவதற்காக பல மணிநேரமாக காவல் இருந்த போதும் எம்மை சந்திக்காது சுகதார அமைச்சர் சென்று விட்டார். இதனால் மிகுந்த மனவருத்த்துடன் நாம் இரவு வேளையில் வீடு திரும்புகின்றோம் எனத் தெரிவித்தனர்.

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் கௌரவிப்பு நிகழ்வு!!

 
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியல் கல்லூரியில் வணிகதினம் மற்றும் கல்லூரியின் பீடாதிபதி கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று முன்தினம் (23.09.2017) (சனிக்கிழமை) கல்லூரியின் வணிக மன்றத் தலைவர் ஏ.ரி.இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.

வணிக தினம் 2017ஐ முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களால் அறிவுக்களஞ்சியம் போட்டி, தொல்லை தரும் தொலைபேசி, நீரைச் சேமிப்போம் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் வணிக மன்றத்தின் வெளியீடான வணிகத் தேடல் என்ற நூலை விரிவுரையாளர் திருமதி நி.அரவிந்தன் வெளியீடு செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியல் கல்லூரியில் 25 வருடங்களாக ஆசிரிய கல்வியாளராக பணியாற்றிய பீடாதிபதி கு.சிதம்பரநாதனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் சிவஞானம், தமிழ் மணி அகளங்கன், இறைபணிச் செம்மல் வை.செ.தேவராஜா, உப பீடாதிபதி க.சுவர்ணராஜா மற்றும் ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கல்லூரியின் பீடாதிபதியை கௌரவித்திருந்தனர்.

நிகழ்வில் உப பீடாதிபதிகளான க.பரமானந்தம், டி.ஜெயக்காண்டீபன், விரிவுரையாளர் க.சிவகுமார்,தேசிய கல்வியல் கல்லூரியின் வணிக மன்றத்தின் ஆலோசகர் திருமதி.நிஅரவிந்தன் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா!!

அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் ஒபாமாவின் கொள்கை வகுப்பாளராக கடமையாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்.

யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிரிஷாந்தி விக்ணராஜா, இம்முறை மேரிலாண்ட் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளராவார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வௌியேறிய கிரிஷாந்தியின் பெற்றோர் ஆசிரியர்களாவர்.

9 மாத குழந்தையாக அமெரிக்காவிற்குச் சென்ற கிரிஷாந்தியின் தற்போதைய வயது 37.

ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆளுனர் பதவிக்குப் போட்டியிடும் கிரிஷாந்தி தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

250,000 தனியார் வேலைவாய்ப்பு, அதிவேக இணைய வசதி, வருடமொன்றுக்கு கல்விக்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகளை அவர் முன்வைத்துள்ளார்.

அத்துடன், குழந்தை பெற்றவுடன் பெற்றோருக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்படும் என கிரிஷாந்தி தமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

வவுனியாவில் சத்தியலிங்கம் தலமையில் தமிழரசு கட்சியின் பொதுச்சபை கூட்டம்!!

 
வவுனியா தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பொதுச்சபைக்கூட்டம் குருமன்காடு தாயகம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (23.09.2017) மாலை 3.30 மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

கட்சியினுடைய வளர்ச்சி எதிர்கால நடவடிக்கை வவுனியா மாவட்டத்தில் எடுக்க வேண்டிய தேவைகள் தொடர்பாகவும் காணி அபகரிப்பு, முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் தொடர்பாக எங்களுடைய கட்சிக்கு இருக்கின்ற கரிசனைகளை தலைமைத்துவதற்திற்கு தெரிவித்து இந்தப்பிரச்சினைகள் தொடர்பாகவும் கட்சி என்ற அடிப்படையில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கலாம் என்ற விடயங்கள் தொடர்பாகவும்,

எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழரசுக்கட்சியாக எவ்வாறு செயற்படலாம் என்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்

இக் கூட்டத்திற்கு வவுனியா தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் நடைபெற்ற அக்கினிச் சிறகுகள் அமைப்பின் கன்னி மாநாடு!!

 
அக்கிச் சிறகுகள் அமைப்பின் முதலாவது மாநாடு இன்று (24.09.2017) காலை 9.30 மணிக்கு வவுனியா றோயல் கார்டின் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் அரவிந்தன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றுடன் ஆரம்பான இன் நிகழ்வில் மாணவி பிரியந்தினியின் வரவேற்பு நடனம் , புத்தகம் வெளியீடு , பாடல் வெளியீடு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் , சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தேவராசா, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் சுகாதார அமைச்சரின் செயலாளர் பா.சிந்துஜன், வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவர் ஜோன்சன் (தேவா) , வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ராஜன், இலக்கிய ஆர்வலர் மேழிக்குமரன், தாமரை வெளியிட்டகத்தின் பணிப்பாளர் சந்திரபத்மன், அக்கினி சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இளைஞர் யுவதிகளை கொண்ட இவ் அமைப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 119 பொலிஸாருக்கு தவறான முறைப்பாட்டை வழங்கியவரை கைது செய்ய நடவடிக்கை!!

வவுனியாவிலிருந்து பொதுமகனொருவர் வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணோருவர் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இலக்கத்திற்கு இன்று (24.09.2017) மதியம் 2.45 மணியளவில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கொழும்பு அவசர பொலிஸ் இலக்கத்திலிருந்து வவுனியா போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி விரைந்த போக்குவரத்து பொலிஸார் நெளுக்குளம் பகுதி முழுவதும் விபத்துக்கள் எவையும் இடம்பெற்றுள்ளதாக என தேடிப்பார்வையிட்ட சமயத்தில் விபத்துக்கள் எவையும் இடம்பெறவில்லை.

பின்னர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் வினாவிய போதும் விபத்துக்கள் எவையும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவ் முறைப்பாட்டை மேற்கொண்ட நபர் அழைப்பு மேற்கொண்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் யாழ். இளைஞர் சம்பவ இடத்தில் பலி!!

 
மன்னார் – யாழ் பிரதான வீதி, மாந்தை சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் யாழ். ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த சன்முகப்பிள்ளை இதுசன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருவதாவது, திருக்கேதீஸ்வரத்தில் இருந்து 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில், அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி பிரதான வீதியை கடக்க முற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியுடன் குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த சதுகரன் (வயது-19), கூறாய் மேற்கைச் சேர்ந்த சதீஸ்குமார் (வயது-20), கைதடியைச் சேர்ந்த எஸ்.தமிழ் வானன் (வயது-18) ஆகிய மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன், படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் வீதி போக்குவரத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், லொறியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ள சாதனைத் திருமணம்!!

 
இலங்கையில் உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் ஒசரி புடவையை பிடிப்பதற்கு சீருடையிலுள்ள பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டமை சர்ச்சையான விடயமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணை செய்யும் அளவுக்கு பல்வேறு மட்டங்கள் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

அலவத்துகொட சரத் ஏக்கநாயக்க பாடசாலையின் 2500 மாணவர்கள் புடவையை ஏந்திப் பிடிக்க ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் கின்னஸ் சாதனை நடத்தும், நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியினால் இலங்கைக்கு சர்வதேசத்தினால் பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்த போதிலும் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற டெலிகிராப் போன்ற பிரபல செய்தி சேவைகளினால், இலங்கையில் உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணத்தில், சிறுவர்கள் குழந்தை தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கார்டியன், பிரான்ஸ் செய்தி சேவைகள் உட்பட சர்வதேச ஊடகங்களும் இவ்வாறே செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான கொள்கைகளுக்கமைய, பல வருடங்களுக்கு முன்னரே குழந்தை தொழிலாளி சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்கை குறித்து கருத்திற்கொள்ளாமல் இலங்கையில் இன்னமும் குழந்தை தொழிலாளி சேவை முன்னெடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் கண்டி திருமண நிகழ்வு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

104 இளம் காதல் ஜோடிகளை பிடித்து சென்ற பொலிஸார்!!

அனுராதபுரம் மாநகர சபையினால் பாரமரிக்கப்படும் ரிவர் பார்க் மற்றும் நேச்சர் பார்க் பூங்காக்களில் விசேட தேடுதலை நடத்திய பொலிஸார், 104 இளம் காதல் ஜோடிகளை பிடித்து அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவர்கள், அனைவரும் பகுதி நேர வகுப்பு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, அனுராதபுரம் நகருக்கு வந்த பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இரண்டு பேருந்துகளில் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காதல் ஜோடியினர் எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 45 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பூங்காக்கள் ஜயஸ்ரீ மஹாபோதி புனித வெள்ளரசு மரம் அமைந்துள்ள வீதிக்கு எதிரில் அமைந்துள்ளன.

வழிபாட்டு தலத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இப்படியான பூங்காக்கள் இருக்கக் கூடாது என அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ மஹாநாம, மாநகர ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உலகில் முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த ரோபோ!!

உலகில் முதன் முறையாக சீன ரோபோ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 40 கோடி மக்கள் புதிய பற்களுக்காக காத்திருப்பது தெரியவந்தது.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல் பல் வைத்தியர்கள் இல்லை, எனவே பல் மருத்துவ துறையில் ‘ரோபோக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

அதற்காக ஸியான் நகரில் உள்ள இராணுவ மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலை, பெய்ஜிங்கில் செயற்படும் பெய்காங் பல்கலைக்கழகத்தின் ‘ரோபோ’ நிறுவனம் இணைந்து பல் மருத்துவ ரோபோவை உருவாக்கியுள்ளது.

அந்த ‘ரோபோ’ ஷான்ஸி மாகாணத்தின் ‘ஸியான்’ நகர வைத்தியசாலையில் ஒரு பெண்ணுக்கு பல் அறுவை சிகிச்சை செய்தது.

அப்போது அந்த பெண்ணுக்கு புதிதாக 2 செயற்கை பற்களை பொருத்தியது, இந்த அறுவை சிகிச்சையின் போது ரோபோவுடன் வைத்தியர்களும் உடன் இருந்தனர்.

பற்களை ரோபோ சரியாக பொருத்தியது, 0.2 முதல் 0.3 மி.மீட்டர் மட்டுமே மிக சிறு தவறு நடந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு பல் வைத்தியர்கள் நோயாளிகளுக்குரிய கருவிகளை பொருத்தினர், அறுவை சிகிச்சைக்குரிய திட்ட செயல்பாடுகள் ரோபோவில் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி ‘ரோபோ’ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்தது, இதன் மூலம் உலகில் பல் அறுவை சிகிச்சை செய்த முதல் ரோபோ என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதற்கு முன்பு பற்களில் ரூட் கேனால் அறுவை சிகிச்சை மற்றும் பல் தாடை எலும்பு அறுவை சிகிச்சையில் மட்டுமே ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

 

இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இவரது தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

கொழும்பில் விபசார விடுதி சுற்றிவளைப்பு : 12 பேர் கைது!!

கொழும்பில், கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியின் உரிமையாளர் மற்றும் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து குறித்த விபச்சார விடுதிகள் நேற்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதானை சங்கராஜ மாவத்தையில் மற்றுமொரு விபசார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. அதனை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவரும் மேலும் 7 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 24 வயது முதல் 48 வரையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் இன்றைய தினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லண்டன் கட்டிட தொகுதியில் திராவக தாக்குதல் : 6 பேர் காயம்!!

லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கட்டிட தொகுதியில் ஆசாமிகள் நடத்திய திராவக தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.

லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக திராவக வீச்சு, அரிக்கும் ஒருவகை திரவத்தை வீசி தாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2010 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையில் 1800 ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 454 சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், கிழக்கு லண்டனில் அதிநவீன வசதிகளை கொண்ட மால்கள் நிறைய அமைந்துள்ளன.

ஸ்டப்போர்ட் பகுதியில் உள்ள மாலில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த கூட்டத்திற்குள் புகுந்து அரிக்கும் தன்மை கொண்ட ஒருவித திரவத்தை பார்வையாளர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் சுமார் 6 பேர் காயம் அடைந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

தொடர்ந்து அந்த பகுதியில் பொலிசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த வாரம் லண்டனில் சுரங்க ரெயிலில் வெடி குண்டு வெடித்து 30 க்கு மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.