வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக எவ்வித வாக்குமூலமும் இதுவரை பதிவாகவில்லை என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகி இருந்ததுடன் வவுனியா பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர், சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி மற்றும் மாணவியின் தந்தை ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இருப்பினும், அவ்வாறானதொரு பாலியல் துஸ்பிரயோகச் சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியும், அவரது தந்தையும் தெரிவித்ததாகவும், அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக எவரும் எமக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா திருநாவற்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரவூர்தி தரிப்பிடத்தில் இன்று (03.07.2017) மதியம் 1.30 மணியளவில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசரட்ணம் அரியரட்ணம் (வயது 53) இன்று (03.07.2017) மதியம் 1.30 மணியளவில் பார ஊர்தி தரிப்பிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் வவுனியா பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய பாடசாலை மாணவர் பாராளுமன்ற விளையாட்டுத்துறை அமைச்சால் நடத்தப்பட்ட ஆண்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட (ஆறு பந்து பரிமாற்றங்கள்) வவுனியா வடக்கு வலய அனைத்து பாடசாலைகளுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 01-07-2017 சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.செ.சசிகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டியில் வடக்கு வலய 12 அணிகளுக்கு மேல் பங்கெடுத்தன. அனைவருக்குமான மதிய போசன ஒழுங்கினை பாடசாலையின் பழைய மாணவர்கள் மேற்கொண்டனர்.
இறுதியில் முதலாம் இடத்தினை (வெற்றிக்கிண்ணம் மற்றும் 5000 ரூபா) புதுக்குளம் மகா வித்தியாலயமும் இரண்டாமிடத்தை (வெற்றிக்கிண்ணம் மற்றும் 3000 ரூபா) சுந்தர புரம் சரஸ்வதி வித்தியாலயமும் மூன்றாமிடத்தை மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை புதுக்குளம் பாடசாலை வீரர்கள் பெற்றுக்கொண்டனர் .
தனது கணவர் மீது புகார் கொடுத்தும் இன்னும் பொலிசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக நடிகர் தாடி பாலாஜி மீது அவர் மனைவி நித்யா கடந்த 50 நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரைப் பழிவாங்க வேண்டும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
ஆனால் ஒரு பிரபலமாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா? `நான் ஏற்கெனவே விவாகரத்து ஆனவன், நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்.
இந்தப் பிரச்னையை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும், நீ என்ன மூவ் பண்றியோ பண்ணு. நான் உன்கூட இருக்கிறதுக்கு எந்த லெவலுக்குப் போவேன்’ என்கிறார்.
இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளித்திருந்தால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துகின்றனர், இதனால் தான் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.
நித்யாவின் புகார் குறித்து பாலாஜி கூறியதாவது, காவல் நிலையத்தில் இருந்து போன் வரும்போதெல்லாம் அங்கு போய் நின்றிருக்கிறேன்.
நான் அவங்களுக்காக எவ்வளவு தூரம் இறங்கி போனாலும், அவங்க வழக்கம் போல மீடியாகிட்ட பேட்டி கொடுக்கிறது, பொலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறதுனு எனக்கு எதிரா எதையாவது பண்ணிட்டே இருக்காங்க.
இதையெல்லாம் பார்க்கும் போதுதான், அவங்களுக்கு பின்னால இருந்து யாரோ இயக்குற மாதிரி தெரியிது.
நானும் அவங்களை மாதிரி பேட்டி, புகார்னு கொடுக்கலாம். ஆனால், என் பொண்ணோட எதிர்காலத்துக்காக நான் அமைதியா இருக்கிறேன் என்று கூறியுள்ளார்
டெரி கோபங்காவுக்கு அன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மணமகளையே காணவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பரபரப்பாகத் தேடுகிறார்கள். எங்குமே அவரைக் காணவில்லை. பரபரப்பு பற்றிக் கொள்கிறது.
அவர் கடத்தப்பட்டிருப்பார் என்றோ, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்காப்பட்டிருப்பார் என்றோ அல்லது மரணத்தின் விளிம்பில் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றோ யாரும் ஊகித்திருக்கமாட்டார்கள்.
இளம் நைரோபி போதகரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இரு சோகங்களில் இதுதான் முதன்மையானது. ஆனால், அந்தக் கோர சம்பவத்திலிருந்து அவர் மீண்டு வந்திருப்பதுதான் முக்கியமானது.
அது ஒரு மிகப்பெரிய திருமணம். நான் ஒரு போதகராக இருந்தேன். அதனால் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும், எங்களுடைய உறவினர்களும் வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய எதிர்கால கணவர் ஹாரியும், நானும் மிகவும் உற்சாகமாக இருந்தோம்.
எங்களுடைய திருமணம் நைரோபியில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்தில் நடைபெறவிருந்தது. நான் ஓர் அழகான ஆடையையும் வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன்.
ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய இரவுதான், ஹாரியின் சில உடைகள் என்னிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். மறுநாள் காலையில் முதல் வேலையாக அதை அவரிடம் கொடுக்க என்னுடைய தோழி ஒருவர் ஒப்புக்கொண்டார். விடியற்காலையில் அவளை ஒரு பேருந்து நிலையத்திலிருந்து அனுப்பி வைத்தேன்.
என்னுடைய வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென சாலையோரத்தில் கார் ஒன்றின் மீது அமர்ந்து கொண்டிருந்த நபர் என்னை பின்புறத்தில் இருந்து இழுத்து காரின் பின் இருக்கையில் தள்ளினார். அங்கு இன்னும் இருவர் அமர்ந்திருந்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் நடந்துவிட்டன.
ஒரு சிறிய துணி என்னுடைய வாயில் அடைக்கப்பட்டது. நான் அவர்களை எட்டி உதைத்து தாக்கினேன். உதவிக்காக கத்துவதற்கு முயற்சித்தேன். துணியை எப்படியோ வெளியே தள்ளி, ‘இன்று எனக்கு திருமணம்’ என்று கத்தினேன். அப்போதுதான் முதல் குத்து என்முகத்தில் விழுந்தது. ”எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடு அல்லது செத்துவிடுவாய்” என்று அதிலிருந்த ஒருவன் கூறினான்.
என்னை காரில் கடத்திச்சென்ற ஆண்கள் மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு என்னை உட்படுத்தினார்கள். என் மூச்சு நின்றுவிடுவதைப் போலத்தான் நிச்சயமாக உணர்ந்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருந்தேன். என்வாயில் அடைத்திருந்த துணியை ஒருவன் வெளியே எடுத்த போது அவனுடைய ஆணுறுப்பை கடித்துவிட்டேன். அவன் வலியால் துடித்தான். அவனோடு இருந்த மற்றொருவன் எனது வயிற்றில் கத்தியால் ஓங்கி குத்தினான். அதற்குபிறகு, ஓடிக் கொண்டிருந்த காரின் கதவை திறந்து என்னை வெளியே தூக்கி வீசினார்கள்.
என்னுடைய வீட்டிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் நைரோபிக்கு வெளியே விழுந்து கிடந்தேன். நான் கடத்தப்பட்டு ஆறு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
ஒரு குழந்தை நான் வெளியில் வீசப்பட்டதை பார்த்துவிட்டு அவருடைய பாட்டியை அழைத்து வந்தது. பொதுமக்கள் பலர் ஓடி வந்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து எனது நாடியை சோதித்த பார்க்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. நான் இறந்துவிட்டதாகக் கருதி, என்னை ஒரு போர்வையால் மூடி பிணவறைக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், போகும் வழியில், போர்வைக்குள் இருந்த எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருமினேன். அதனை உடனடியாக கவனித்த போலீஸார் கென்யாவில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
உடல் முழுவதும் என்னுடைய ரத்தம் படிந்திருக்க நான் அரை நிர்வாணமாக இருந்தேன். குத்துப்பட்டதால் என்னுடைய முகம் வீங்கிப்போயிருந்தது. ஆனால், மருத்துவமனையிலிருந்த தலைமை செவிலியரை ஏதோ ஒன்று எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். காரணம், நான் ஒரு மணமகள் என்று கணித்திருந்தார்.
திருச்சபைக்கு நான் வராததை அடுத்து என்னுடைய பெற்றோர் பதற்றமடைந்தனர். என்னைத்தேடுவதற்காக பலர் அனுப்பப்பட்டனர். வதந்திகள் பரவின.
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை கேள்விப்பட்டு என்னுடைய பெற்றோர்ஒட்டுமொத்த கூட்டத்தினருடன் மருத்துவமனைக்கு வந்தனர். என்னுடைய திருமண ஆடையை ஹாரி கையில் வைத்திருந்தார். அதேசமயம், இதுகுறித்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிந்து அவர்களும் மருத்துவமனையில் கூடிவிட்டனர்.
அதன்பிறகு, தனிமைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் அங்குதான் மருத்துவர்கள் எனக்கு தையல்களை போட்டனர். அப்போதுதான் அந்த துயர்மிகு செய்தியையும் என்னிடம் தெரிவித்தனர். ”கத்திக்குத்து மிகவும் ஆழமாக கர்ப்பப்பை வரை போனதால் என்னால் குழந்தை பெற்றெடுக்க முடியாது.” என்றார்கள் மருத்துவர்கள்.
அன்று காலையில் எனக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸிலிருந்து என்னை பாதுகாக்க தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டன. என்னுடைய மூளை முற்றிலுமாக செயல்பாட்டை இழந்திருந்தது. எனக்கு நடந்த சம்பவங்களை அது ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது.
அப்போதும் என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஹாரி கூறிக் கொண்டே இருந்தார். அவருக்கு எந்த பதிலும் சொல்லமு டியாத நிலையில் இருந்தேன். என்னை சூறையாடிய மூன்று பேரின் முகங்களும், எனக்கு நடந்த கொடுமைகளும்தான் நினைவுக்கு வந்து வந்து போயின.
என்னை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபத்தியவர்களை இறுதிவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பலமுறை அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதில் என்னால் ஒருவரை கூட அடையாளம் காண முடியவில்லை. என்னுடைய மன ரீதியிலான முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாக இது அமைந்தது.
3 மாதங்கள் கழித்து எனக்கு எச் ஐ வி தொற்று இல்லை என்று தகவல் கூறப்பட்ட உடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உறுதியான முடிவுகளுக்காக இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்கும்படி சொன்னார்கள். எனினும், நானும், ஹாரியும் எங்களுடைய இரண்டாவது திருமணம் குறித்து திட்டமிட ஆரம்பித்தோம்.
பத்திரிகைகளின் ஊடுருவல் குறித்த கோபம் எனக்கு இருந்தாலும், எனது கதையை படித்து என்னை சந்திக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினார். அவருடைய பெயர் விப் ஒகோலா. அவரும் பாலியல் வல்லுறவுக்குள்ளக்கப்பட்டு அதிலிருந்து உயிர் பிழைத்தவர். நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். அவரும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து என்னுடைய திருமணத்தை இலவசமாக நடத்திவைக்க விரும்பினார்கள்.
ஜூலை 2005, முதல் திட்டமிடப்பட்ட திருமணத்திற்கு ஏழு மாதங்களுக்கு பிறகு, ஹாரியும், நானும் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்கு சென்றோம்.
29 நாட்கள் கழித்து, மிகவும் கடும் குளிரில் நாங்கள் இருவரும் வீட்டிலிருந்தோம். இரவு உணவு முடிந்த பின், ஹாரி ஒரு கரி பர்னரை பற்ற வைத்து படுக்கை அறைக்கு கொண்டு சென்றார். அறை நல்ல சூடான பிறகு அதை அவர் எடுத்துவிட்டார். இரவு அவர் படுக்கைக்கு வரும் போது மயக்கமாக உணர்வதாக ஹாரி தெரிவித்தார். ஆனால், நாங்கள் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை.
குளிர் அதிகமாக இருந்தது. எங்களால் தூங்கமுடியவில்லை. எங்களால் படுக்கையைவிட்டு எழக்கூட முடியவில்லை. ஏதோ தவறு நடக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தோம். நாங்கள் இருவரும் மயக்கமடைந்தோம். பின்னர், சற்று நேரத்தில் லேசான சுயநினைவுக்கு திரும்பிய நான், தவழ்ந்தபடியே சென்று என்னுடைய அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஃபோன் செய்து உதவி கேட்டேன்.
அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த போது மீண்டும் மயக்கமடைந்தேன். அதன்பிறகு மருத்துவமனையில்தான் மீண்டும் எனக்கு சுயநினைவு திரும்பியது. எங்கே என் கணவர் என்று மருத்துவர்களிடம் கேட்டேன். அப்போதுதான், ஹாரி உயிரிழந்துவிட்டதை என்னிடம் தெரிவித்தார்கள்.
ஹாரியின் இறுதிச் சடங்கிற்காக திருச்சபைக்கு செல்வதென்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்புதான் இதே திருச்சபையில், கோட் சூட்டில் ஹாரி அழகாக எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்க வெள்ளை நிற ஆடையை நான் அணிந்திருந்தேன். இப்போது, நான் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டிருக்க, ஹாரி சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
நான் சபிக்கப்பட்டவள் என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்கள். அவர்களது பிள்ளைகளை என்னிடமிருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். மற்றவர்கள் நான் எனது கணவனை கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால், பிரேதப்பரிசோதனை அறிக்கையில், ஹாரியின் மூச்சுக்குழாயில் கார்பன் மோனாக்ஸைட் நிரம்பியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தது.
மிகமோசமான சோகத்தை நான் எதிர்கொண்டேன். கடவுள் என்னை கைவிட்டுவிட்டார் என்றும், மற்றவர்களும் என்னை கைவிட்டுவிட்டனர் என்பது போலவும் நான் உணர்ந்தேன்.
நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதை அனைவரிடமும் கூறினேன்.
அந்த துயரம் மிகவும் தீவிரமாக இருந்தது. உங்கள் நகங்களில் உணரும் அளவுக்கு மோசமாக இருந்தது.
ஆனால், அப்போது ஒரு நபர் இருந்தார். அவர்தான் டோனி கோபாங்கா. என்னை அடிக்கடி வந்து சந்தித்தார். எனது கணவரை பற்றி ஊக்கப்படுத்தினார். ஒருமுறை அவரிடமிருந்து மூன்று நாட்களுக்கு தொலைப்பேசி வரவில்லை. அப்போது அவர் மீது எனக்கு கோபம் வந்தது. அப்போதுதான் நான் அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதை நான் உணர்ந்தேன்.
என்னை திருமணம் செய்துகொள்வதாக டோனி என்னிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், நான் ஒரு பத்திரிக்கையை வாங்கச் சொல்லி, அதில் என்னைப் பற்றி முழுமையாக படித்துவிட்டு அதற்கு பிறகும் என்மீது காதல் இருந்தால் சொல்லுங்கள் என்று அனுப்பிவைத்தேன். அவர் மீண்டும் வந்தார். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ”கடவுள் தரும் பரிசுதான் குழந்தைகள். கிடைத்தால் வாழ்த்துவோம், கிடைக்காவிட்டால் உன்னை காதலிக்க நிறைய நேரம் எனக்கு இருக்கும்” என்றார். அவர் கூறிய அந்த வரிகள் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது.
எங்களுடைய திருமணத்தை டோனியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எங்களுடடைய திருமணத்திற்கு சுமார் 800 பேர் வருகை தந்திருந்தனர்.
எனது முதல் திருமணம் நடைபெற்று மூன்றாண்டுகள் கழித்து டோனியுடன் திருமணம் நடைபெறுகிறது என்பதால் மிகவும் பதற்றமாக இருந்தேன். பிரார்த்தனை கூட்டத்தின் போது அனைவரும் எங்களுக்காக பிரார்த்திக்க என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன்.
திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டிற்கு பிறகு, நான் சுகவீனம் அடைந்து மருத்துவரிடம் சென்றேன். என்னுடைய பெரிய ஆச்சரியம் நான் கர்ப்பம் தரித்திருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
பல மாதங்கள் படுக்கை ஓய்வை தொடர்ந்து திஹில் என்ற ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அதன் பிறகு, நான்காண்டுகள் கழித்து நாங்கள் டோடா என்ற இரண்டாவது பெண் குழந்தையை நான் பெற்றெடுத்தோம்.
இன்று, என்னுடைய மாமனாருக்கு நான் சிறந்த நண்பர்களில் ஒருவராக இருக்கிறேன்.
மக்கள் மீண்டெழுவதற்கு நம்பிக்கையாக இது இருக்கும் என்ற தன்னம்பிக்கையை விதைப்பதற்காக ‘கிராளிங் அவுட் ஆஃப் டார்க்னஸ்’ என்ற தலைப்பில் நான் சந்தித்த சவால்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளேன்.
காரா ஒல்முரானி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளேன். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அதிலிருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவு மற்றும் ஆலோசனை ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
என்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்களை நான் மன்னித்துவிட்டேன். அது அவ்வளவு சுலபமானதல்ல. எதற்கும் கவலைப்படாத மனிதர்களை நினைத்து இவ்வளவு நாள் நான் சோகமடைந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.
வாழ்க்கையில் எது நடந்தாலும் சரி முன்னேறி கொண்டே இருக்கவேண்டும். தவழ்ந்து செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் அவ்வாறும் செல்ல வேண்டும். விதியை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும். காரணம் அது காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள்தான் அதைப் பெற வேண்டும்.
டெல்லியில் தனது மனைவியின் காதலனை கணவர் 30 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
வினோத் என்பவரது மனைவிக்கும் அருகில் வசிக்கும் ஷானு (21) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஷானுவை கொலை செய்ய திட்டமிட்ட வினோத், தனது மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு அவரது நம்பரில் இருந்து ஷானுக்கு போன் செய்துள்ளார்.
போன் மட்டும் செய்துவிட்டு எதுவும் பேசமால் இணைப்பை துண்டித்துள்ளார். வினோத்தின் மனைவி தான் போன் செய்துள்ளார் என நம்பி ஷான், வினோத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஷானை 30 முறை மாறி மாறி குத்தியுள்ளார் வினோத்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷானை வினோத்தின் தாயார் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, தலைமறைவாகியுள்ள வினோத்தை பொலிசார் தேடி வருகின்றனர்.
மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவரின் மகள் மஞ்சுளா (26). இவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இதையடுத்து தனது தந்தை வீட்டில் மன அழுத்தத்துடன் மஞ்சுளா இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மஞ்சுளாவுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதையடுத்து அவரை முத்துகிருஷ்ணன் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த மஞ்சுளா தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டுள்ளார்.
அவர் கதவை திறக்க மறுத்த நிலையில், குடும்பத்தார் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் மஞ்சுளா சடலமாக தொங்கியுள்ளார். மகள் இறந்ததை அறிந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றுள்ளார்.
பிறகு, மஞ்சுளா மரணம் குறித்து காவல் நிலையத்தில் பேச சென்றிந்த அவரின் சகோதரர் ஜானகிராமனுக்கு போன் வந்துள்ளது.
அதில், முத்துகிருஷ்ணன் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜானகிராமன் கூறுகையில், என் தந்தைக்கு மஞ்சுளாவை அதிகம் பிடிக்கும். அவர் மறுமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என தனது தந்தை விரும்பியதாக கூறியுள்ளார். பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார், அப்போது அரசியல் குறித்து சில கருத்துக்களை முன் வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தின் பாளையங்கோட்டையில் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவரும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசினார்.
ஆனால் அவர் என் பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார் என்று கிண்டலாக கூறினார்.
மேலும் ரஜினி தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும், தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அவர் கோழைத்தனம் கொண்டவர் என்று கூறினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சீகிரியாவிற்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
யாழ். ஊர்காவற்துறை, வேலணை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பாலசுப்ரமணியம் மதியழகன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 3 மணியளவில் சீகிரியாவை பார்வையிட்டு திரும்பி வரும் போது விழுந்து உயிரிழந்துள்ளார்.
தனது பிள்ளைகளின் பாடசாலை நண்பர்களுடன் சீகிரியாவை பார்வையிட குறித்த நபர் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வரும் போதே இவ்வாறு கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்தவரை சீகிரியா பாதுகாப்பு பிரிவினர் அங்குள்ள கிராம வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை சோதனையிட்ட பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டெங்கு தொற்றினால் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் டெங்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதனால் பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் நுளம்புகள் பரவுவதனை தடுப்பதற்காக தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதி குறித்து திருப்தியடைய முடியாதென பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்கள் கற்கை நடவடிக்கைகள் மாத்திரமே பிற்போடப்பட்டுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம் என நடிகை தபு கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார். 45 வயதாகும் தபுவிடம் தொகுப்பாளர் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.
“நான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என கேட்கிறீர்கள். இதற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான். நானும் அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரரின் நண்பர். என் வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார். எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருவார். யாராவது என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர்களைப் பிடித்து மிரட்டுவார். என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார்” என தபு பதிலளித்தார்.
நடிகர் அஜய் தேவ்கன் 1999 ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை தபு தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவைக் காப்பாற்ற ரஜினி என் முன்வரவில்லை என்று திரைப்பட நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது…
ஜி.எஸ்.டி இந்த சரக்கு – சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்?
இந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்கு வந்திருக்கிறது. வளர்ச்சி? வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு – சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.
மத்திய அரசே – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே – மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே! மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே! திரை உலகத்தை பொசுக்காதே!
ரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை? தமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை? சினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை. வந்தால் என்ன செய்யப் போகிறார்? சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றார் டி ராஜேந்தர்.
பிரான்ஸின் தென்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர்காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராகம – பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து ஜூன் 26 ஆம் திகதி வேன் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 78 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கார் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் வீதியை மறித்து வேனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வவுனியா கூமாங்குளத்தில் நேற்று (02.07.2017) மாலை 6.30 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூமாங்குளம் பல்லவன்குளம் பகுதியில் வசித்து வரும் சுப்பையா பெரியசாமி (56வயது) என்பவர் நேற்று (02.07.2017) மாலை அவரது வீட்டு கிணற்றில் நீர் எடுக்கும் சமயத்தில் கிணற்றினுள் வீழ்ந்து சம்பவ இடத்திலிலேயே மரணித்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இக் கிணறு பாதுகாப்பற்ற கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.