மனைவியின் காதலனை 30 முறை கத்தியால் குத்திய கணவன்!!

டெல்லியில் தனது மனைவியின் காதலனை கணவர் 30 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

வினோத் என்பவரது மனைவிக்கும் அருகில் வசிக்கும் ஷானு (21) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஷானுவை கொலை செய்ய திட்டமிட்ட வினோத், தனது மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு அவரது நம்பரில் இருந்து ஷானுக்கு போன் செய்துள்ளார்.

போன் மட்டும் செய்துவிட்டு எதுவும் பேசமால் இணைப்பை துண்டித்துள்ளார். வினோத்தின் மனைவி தான் போன் செய்துள்ளார் என நம்பி ஷான், வினோத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஷானை 30 முறை மாறி மாறி குத்தியுள்ளார் வினோத்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷானை வினோத்தின் தாயார் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, தலைமறைவாகியுள்ள வினோத்தை பொலிசார் தேடி வருகின்றனர்.

மகள் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தந்தை!!

மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவரின் மகள் மஞ்சுளா (26). இவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

இதையடுத்து தனது தந்தை வீட்டில் மன அழுத்தத்துடன் மஞ்சுளா இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மஞ்சுளாவுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதையடுத்து அவரை முத்துகிருஷ்ணன் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த மஞ்சுளா தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டுள்ளார்.

அவர் கதவை திறக்க மறுத்த நிலையில், குடும்பத்தார் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் மஞ்சுளா சடலமாக தொங்கியுள்ளார். மகள் இறந்ததை அறிந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றுள்ளார்.

பிறகு, மஞ்சுளா மரணம் குறித்து காவல் நிலையத்தில் பேச சென்றிந்த அவரின் சகோதரர் ஜானகிராமனுக்கு போன் வந்துள்ளது.

அதில், முத்துகிருஷ்ணன் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜானகிராமன் கூறுகையில், என் தந்தைக்கு மஞ்சுளாவை அதிகம் பிடிக்கும். அவர் மறுமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என தனது தந்தை விரும்பியதாக கூறியுள்ளார். பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரஜினி ஒரு கோழை : அன்புமணி ராமதாஸ்!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார், அப்போது அரசியல் குறித்து சில கருத்துக்களை முன் வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தின் பாளையங்கோட்டையில் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவரும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசினார்.

ஆனால் அவர் என் பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார் என்று கிண்டலாக கூறினார்.

மேலும் ரஜினி தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும், தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அவர் கோழைத்தனம் கொண்டவர் என்று கூறினார்.

 

சீகிரியாவில் வீழ்ந்து உயிரிழந்த யாழ். நபரின் தகவல்கள் வெளியீடு!!

 
யாழ்ப்பாணத்திலிருந்து சீகிரியாவிற்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

யாழ். ஊர்காவற்துறை, வேலணை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பாலசுப்ரமணியம் மதியழகன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3 மணியளவில் சீகிரியாவை பார்வையிட்டு திரும்பி வரும் போது விழுந்து உயிரிழந்துள்ளார்.

தனது பிள்ளைகளின் பாடசாலை நண்பர்களுடன் சீகிரியாவை பார்வையிட குறித்த நபர் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வரும் போதே இவ்வாறு கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்தவரை சீகிரியா பாதுகாப்பு பிரிவினர் அங்குள்ள கிராம வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதனையிட்ட பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி மரணம்!!

டெங்கு தொற்றினால் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் டெங்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதனால் பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் நுளம்புகள் பரவுவதனை தடுப்பதற்காக தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதி குறித்து திருப்தியடைய முடியாதென பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்கள் கற்கை நடவடிக்கைகள் மாத்திரமே பிற்போடப்பட்டுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம் : தபு குற்றச்சாட்டு!!

தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம் என நடிகை தபு கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார். 45 வயதாகும் தபுவிடம் தொகுப்பாளர் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

“நான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என கேட்கிறீர்கள். இதற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான். நானும் அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரரின் நண்பர். என் வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார். எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருவார். யாராவது என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர்களைப் பிடித்து மிரட்டுவார். என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார்” என தபு பதிலளித்தார்.

நடிகர் அஜய் தேவ்கன் 1999 ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை தபு தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவைக் காப்பாற்ற ரஜினி ஏன் முன்வரவில்லை : டி.ராஜேந்தர் சுளீர் கேள்வி!!

தமிழ் சினிமாவைக் காப்பாற்ற ரஜினி என் முன்வரவில்லை என்று திரைப்பட நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது…

ஜி.எஸ்.டி இந்த சரக்கு – சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்?

இந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்கு வந்திருக்கிறது. வளர்ச்சி? வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு – சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.

மத்திய அரசே – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே – மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே! மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே! திரை உலகத்தை பொசுக்காதே!

ரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை? தமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை? சினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை. வந்தால் என்ன செய்யப் போகிறார்? சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றார் டி ராஜேந்தர்.

பிரான்ஸ் பள்ளிவாசலில் தாக்குதல் : 8 பேர் காயம்!!

 
பிரான்ஸின் தென்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர்காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்து டோனி சாதனை!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

 

78 இலட்சம் கொள்ளை : ஐந்து சந்தேகநபர்கள் கைது!!

ராகம – பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து ஜூன் 26 ஆம் திகதி வேன் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 78 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கார் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் வீதியை மறித்து வேனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வவுனியா கூமாங்குளத்தில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!!

 
வவுனியா கூமாங்குளத்தில் நேற்று (02.07.2017) மாலை 6.30 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கூமாங்குளம் பல்லவன்குளம் பகுதியில் வசித்து வரும் சுப்பையா பெரியசாமி (56வயது) என்பவர் நேற்று (02.07.2017) மாலை அவரது வீட்டு கிணற்றில் நீர் எடுக்கும் சமயத்தில் கிணற்றினுள் வீழ்ந்து சம்பவ இடத்திலிலேயே மரணித்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இக் கிணறு பாதுகாப்பற்ற கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெளிச்சம் பவுண்டேசன் நிறுவனத்தின் புலமைப்பரிசில் கருத்தரங்கு!!

 
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நேற்று (02.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சுமார் 750 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு வெளிச்சம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பன்றிக்கெய்த குளம் பாடசாலையில் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆர்.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் பா.லம்போதரன் செயலாளர் தி.கார்த்திக் பொருளாளர் செ.மேனன் ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ்.சிவகுமாரன் ஆகியோருடன் பல ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய உதவிக்கல்விப் பணிப்பாளர் வடக்கு வலயம் வறுமையான மாணவர்களை அதிகம் கொண்டுள்ளது , இங்கு மாணவர்களுக்கு மேலதிக கற்கை வசதிகள் குறைவு. இன்று வெளிச்சம் பவுண்டேசன் இந்த தேவையை அறிந்து சேவையாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் தனது ஆசியுரையில் வறுமையை ஒழிக்கும் ஆண்டாக இந்த வருடம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இம்மாணவர்களுக்கு இப்படியான சேவை பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்டார் .

பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலை, புதுக்குளம் கனிஸ்டவித்தியாலயம், தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலை , பாரதிதாசன் வித்தியாலயம், புளியங்குளம் ஆ.பாடசாலை, ஒலுமடு அ.த.க.பாடசாலை, கனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வளவாளர்களாக ஆசிரியர்களான இ.பகீரதன், க.சந்திரகுமார் ம.முரளீதரன், அ.பாலசுந்தரம் , இ.சசிக்குமார், திருமதி சிவகுமாரன் ஆகியோர் கடமையாற்றினர்.

மாணவர்களுக்கு கையேடும் குளிர்பானங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியாவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் குழு சிவசக்தி ஆனந்தனுடன் சந்திப்பு!!

 
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் (01.07.2017) காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் சந்திப்பினை மேற்கொண்டது. குறித்த சந்திப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், போராட்டம் தொடர்பான இன்றைய நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை போராட்டம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினரது நிலைப்பாடு தொடர்பாக கேட்டறியப்பட்டதோடு, இதுவரை அவரது பங்களிப்பு, அக்கறை தொடர்பாக வினவப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடர்பான அழுத்தங்களை எவ்வாறு வழங்கவேண்டும் என்பது தொடர்பாக விளக்கப்பட்டதோடு, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இச்சந்திப்புகள் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டம் கட்டமாக சந்திக்கும் ஏற்பாட்டில் இது முதலாவது சந்திப்பாகும்.

தனித்தனியாக சந்திப்பினை மேற்கொண்ட பின்னர் விரைவில் அனைவரையும் ஒரே மேடையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயம் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.06.2017 வியாழக்கிழமை மகோற்சவ குரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .

வவுனியா கூமாங்குளத்தில் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வுகள்!!

 
கூமாங்குளம் சித்திவிநாயகர் ஆலய அறநெறி பாடசாலையில் இன்று (02.07.2017) காலை 9.30 மணியளவில் மாணிக்க வாசகர் குரு பூசை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாணிக்கவாசகர் திருவுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மாணவர்களுக்கு சைவ சமய புத்தகங்களும் வழங்கப்பட்டன

திருமதி அன்னம்மா சிறபப்பலம் அறக்கட்டளை அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆலய தலைவர் ந.ஆறுமுகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் மா.சுரேந்திரன் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, அஸ்திரம் இளைஞர் கழக தலைவரும் அன்னம்மா சிற்றம்பலம் அறக்கட்டளை இணைப்பாளருமாகிய நா.ஸ்ரீதரன் மற்றும் அறநெறி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆசியாவில் உயரமான கட்டிடம் இலங்கையில்!!

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது.

இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த கட்டிடம் உலகில் உயரமான கட்டிடங்களில் 9 வது கட்டிடமாகும்.

625 மீற்றர் உயரத்தில் 117 மாடிகளை கொண்டதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.