இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!!

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றின் மேல் மாடியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

26 வயதான தரிந்தி ஆலோக்கா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் தொடர்பு காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை பாடசாலை சென்று வீடு திரும்பிய அவரது சகோதரியே முதல் முறையாக அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரடியுடன் நேருக்குநேர் சண்டையிட்ட இளைஞன் படுகாயம்!!

பெண் கரடி ஒன்றுடன் இளைஞனொருவன் நேருக்குநேர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவமொன்று, வில்பத்துவ சரணாலயத்தின் எல்லையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கடும் காயமடைந்த இளைஞன், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இளைஞனின் தலை, கைகள், வயிறு மற்றும் முதுகில் கூரிய நகக்கீறல் காயங்கள் மற்றும் கடுமையான கடி காயங்களும் காணப்படுகின்றன.

கடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளமையால், சத்திர சிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வில்பத்துச் சரணாலயம் மற்றும் சரணாலயத்தின் எல்லைகளுக்கு நான்கு இளைஞர்கள் சென்று அங்கிருக்கின்ற மரங்களில் ஏறி, பழங்களைப் பிடுங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

எனினும், உணவு தேடிக்கொண்டு தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வந்த அப்பெண் கரடி, அந்த நால்வரையும் கண்டுவிட்டது.

அச்சமடைந்த அந்த நால்வரும் சத்தமிட்டு, கரடியையும் அதன் குட்டிகளையும் விரட்டுவதற்கு முயன்றுள்ளனர்.

எனினும் பயமின்றி வந்த அந்தப் பெண் கரடி, அந்த இளைஞன் மீது பாய்ந்துள்ளது. அந்த இளைஞனும், பெண் கரடியை ஓங்கி எத்தியுள்ளான்.

அப்போது தூக்கியெறியப்பட்ட கரடி, மிக உயரத்துக்குச் சென்று கீழே விழுந்துள்ளது என்றும் அதன் பின்னரே, அவ்விளைஞனை கரடி சரமாரியாகத் தாக்கியதாக கரடியிடமிருந்து தப்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கரடிக்கும் மேற்படி இளைஞனுக்கும் இடையில் நேருக்குநேர் மோதல் இடம்பெற்ற போது, தாங்கள் ஒழிந்திருந்து பார்த்ததாகவும் அப்போது, குட்டிக்கரடிகள் இரண்டு மரத்தின் மீதேறி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரத்த வெள்ளத்தில் இளைஞன் மயங்கி விழுந்ததையடுத்து, தன்னுடைய குட்டிகளுடன், அக்கரடி காட்டுக்குள் சென்றதையடுத்தே, நண்பனைக் காப்பற்றி வைத்தியசாலையில் சேர்த்ததாக, அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்

 

ஆபாச வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம் : கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!!

கனடாவில் பக்கத்து வீட்டு நபரை கொலை செய்த இலங்கையருக்கு கனடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் 10 வருட சிறைத்தண்டனையின் பின்னர் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டு நபரான ஜெயராசன் மாணிக்கராஜா என்ற இலங்கையரை கொலை செய்தமை தொடர்பில் அமலன் தண்டபாணிதேசிகர் கடந்த மாதம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

2014ம் ஆண்டில் தண்டபாணிதேசிகரின் மனைவியை, பக்கத்து வீட்டுக்காரரான மாணிக்கராஜா கேலி செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க சென்ற தண்டபாணிதேசிகரை, மாணிக்கராஜா ஆபாசமான வார்த்தைகளினால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணிதேசிகர், மாணிக்கராஜாவை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தண்டபாணிதேசிகருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் நீதிபதி தீர்மானித்த 10 வருட காலத்தின் பின்னர் பிணையில் வெளியில் செல்ல விண்ணப்பிப்பதற்கு தண்டபாணிதேசிகர் தகுதியுடையவராக காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய 13 வருடங்களின் பின்னர் தண்டபாணிதேசிகர் சிறையிலிருந்து விடுதலையாக விண்ணபிக்க முடியும். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். எனவே 2027ஆம் ஆண்டு பிணைக்கு தகுதியுடையவராக இருப்பார் என கனேடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-

டெங்கு நுளம்பு பரவும் வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பு!!

டெங்கு நுளம்பின் பரவுகை ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பின் அடர்த்தி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஆறு சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்திவரும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துவரும் மாவட்டங்களில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே, இவ்விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக, மேற்படி சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் காணப்படும் இடர்பாடுகள் காரணமாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது

இலங்கையின் பல பகுதியில் இன்று முதல் அடைமழை!!

இலங்கயின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில் விசேடமாக கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

70 வயது வரை நடிக்கத் தயார்!!

இளைய தளபதி விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம், சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல், கார்த்தியுடன் சிறுத்தை உள்ளிட்ட பலபடங்களில் நடித்து பிரபமானவர் நடிகை பூமிகா.

பரத் கபூர் என்ற யோகா மாஸ்டரை திருமணம் செய்து கொண்டபிறகு மிகச்சிலபடங்களில் கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடித்து வருகிறார் பூமிகா. இது குறித்து அவரிடம் கேட்ட போது,

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘எம் எஸ் டோனி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் அவரது சகோதரியாக நடித்திருந்தேன். அதே போல் ஹிந்தி,தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாகயிருக்கிறேன். ஆனால் படத்தின் கதை நன்றாக இருக்கவேண்டும். எனக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். அத்தகைய பாத்திரங்களை மட்டுமே தெரிவு செய்து நடித்து வருகிறேன்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் நானி நடிக்கும் படத்தில் ஒருமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள். என்னைக் கேட்டால் எனக்கு பொருந்தும் கதைகளில் 70 வயது வரை நடிக்க தயாராகவே இருக்கிறேன் என்றார்.

900 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை இடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்!!

ஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் ராக்கா நகரம் உள்ளிட்ட பகு திகளையும், ஈராக்கில் மொசூல் நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளை ராணுவம் ஏற்கனவே மீட்டு விட்டது. கடைசியாக அவர்களிடம் இருந்த மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் போர் தொடுத்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நகரை மீட்டு விடுவோம் என்று அறிவித்து இருந்தனர். ஆனால், 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் முழுமையாக மொசூல் நகரை மீட்க முடியவில்லை.

அங்குள்ள டைக்ரீஸ் நதிக்கு கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

மேற்கு பகுதியில் ஒரு சில இடங்கள் மட்டும் ராணுவம் வசம் இருக்கிறது. மற்ற இடங்களை இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் தங்கள் பிடியில் வைத்துள்ளனர். அவற்றை கைப்பற்றுவதற்காக ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இடத்தில் அல் நூரி என்ற பழமை வாய்ந்த மசூதி இருந்தது. இது 1172-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த மசூதி ஈராக்கின் முக்கிய அடையாள சின்னமாகவும் இருந்து வந்தது.

இதில், ஹட்பா எனும் புகழ்பெற்ற சாய்வு கோபுரமும், மேலும் பல்வேறு கோபுரங்களும் இருந்தன. மிகப்பிரமாண்ட வளாகத்தில் மசூதி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த மசூதியை தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த நகரை பிடித்த போது, இந்த மசூதியில் இருந்துதான் அதன் தலைவர் அபுபக்கர் அல்பக்தாதி தனது இயக்கம் பிடித்து வைத்துள்ள இடங்களுக்கு இஸ்லாமிய தேசம் என்று பெயரிட்டார்.

ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிப்பு!!

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். தினமும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 11 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கணக்கெடுத்துவருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த கூட்டத் தொடரின் போது மேலும் இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக மிக திறமையாக கிரிக்கெட் அரங்கில் பிரகாசித்துவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கே டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை பத்திலிருந்து பன்னிரண்டாக உயர்வடையவுள்ளது.

இறுதியாக 2000 ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிரந்தர உறுப்புரிமை கிடைக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

வவுனியாவில் இராண்டாவது நாளாக இன்றும் தொடரும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு!!

 
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (21.06.2017) மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்களை பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் (22.06.2017) நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் நேற்று முதல் (22.06.2017) காலவரையரையற்ற நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் நடிகர் விஜயின் பிறந்தநாள் சிறப்பு கொண்டாட்டங்கள்!!

 
வவுனியா வசந்தி திரையரங்கில் நடிகர் விஜயின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா இளைஞர்கள் நேற்று (22.06.2017) திரையங்கினை அலங்காரம்செய்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஷேட காட்சியாக போக்கிரி படம் காண்பிக்கப்பட்டது.

அதைப்போல் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடமும் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் வவுனியாவில் கொண்டாட்டப்பட்ட சமயத்தில் அச் செய்தியினை எமது வவுனியா நெற் இணையத்தில் வெளியிட்டிருந்தோம். இப் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பலரும் தமது கண்டனங்களை பதிவுசெய்திருந்தனர்.

தாயகத்தில் தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்து தமது வாழ்க்கையை தியாகம் செய்த பல தலைவர்களை மறந்த இந்த இளம் சமுதாயத்தினர் ஒரு தென்னிந்திய சினிமா நடிகருக்கு  இவ்வாறு பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக வவுனியாவில் பலரும் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண சபையே அரசியல் சிபாரிசுக்கு முன்னுரிமை வழங்காதே : வவுனியாவில் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (22.06.2017) ஐம்பதாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று ஐம்பதாவது நாளை முன்னிட்டு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக இன்று (22.06.2017) காலை 10.30 மணியளவில் கறுப்பு ஆடையணிந்தும் கறுப்பு துணியினை வாயில் கட்டியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெயில் மழை பாராது ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வடமாகாண சபையே லஞ்ச ஊழலை கைவிடு தொண்டர்களுக்கு நியாயமான முறையில் நியமனத்தை தா, வடமாகாண சபையே அரசியல் சிபாரிசுக்கு முன்னுரிமை வழங்காதே, யுத்தகாலங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் சிரமம் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய எமக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்த காலத்திலிருந்து தற்போதுவரை எதுவித வேதனமும் இன்றி கடமையாற்றும் எமக்கு கல்வித் தகமையினை கவனத்தில் எடுத்து அரச வேலைவாய்ப்பை வழங்க பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் மூலம் அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சர் எழுத்துமூலம் எமக்கு நிரந்தர அரச வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதம் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம் : வைத்தியசாலை வளாகம் போர்க்களமானது!!

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி வைத்தியசாலையில் அகன்ஷா என்ற 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியிற்கு வைத்தியசாலையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள உதவியாளர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, வைத்தியசாலை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்லை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பொலிஸார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவி கூறுகையில், அன்றைய தினம் தன்னுடைய தாய் தனக்கு உடைகளை மாற்றிவிட்டு சென்று விட்டார்.அதன் பின் இரவு நேரத்தில் தன்னுடைய வார்டிற்கு வந்த உதவியாளர் தன்னுடைய உடை முழுவதும் ஈரமாக இருப்பதாகவும் அதனால் உடை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதனால் , மற்றொரு பெண் தாதியரை அல்லது தன் தாய்யை கூப்பிடுவதாக நான் கூறினேன். ஆனால் அவரோ அவர்கள் யாரும் இல்லை தானே உடை மாற்றி விடுகிறேன் என்று கூறினார்.

அதன் பின் தன் உடையை அவர் மாற்றினார். அப்போது தனக்கு ஒரு வித தயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக எனது படுக்கைக்கு வந்து படுத்துவிட்டேன். படுக்கைக்கு வந்த அவர் தன் உடலில் ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார். அப்போது நான் மயங்கிய நிலையை அடைந்துவிட்டேன். அதை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், காலையில் வந்து பார்க்கும் போது, என் மகளிடன் உடையில் மாற்றங்கள் இருந்தன. அப்போது அவள் எதுவும் கூறாமல் அழுது கொண்டு இருந்தால். அவளைத் தொடர்ந்து கேட்ட பின் நடந்தவற்றை கூறினாள்.

இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது இந்த தகவல் வெளியில் பரவியதால், எங்கள் உறவினர்கள் மற்றும் சிலர் எங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர் என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமி தொடர்பாகவும் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2017

வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்கதர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெறவுள்ளதாக புதூர் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.

????
????
????
????

வவுனியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனால் வருமானத்தை இழந்த குடும்பத்திற்கு உதவி!!

வவுனியா கற்குழி பகுதியில் வசிக்கும் சுரேஸ்குமார் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் தரன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் முதலாம் ஆண்டு கல்வி கற்று வருகிறார். இரண்டு வயதில் இன்னொரு மகனும் இவர்களுக்கு உண்டு. தற்போது சுரேஸ்குமாரின் மனைவி மேகலா மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில் மகனுக்கு அடையாளம் காணப்பட்ட இரத்தப்புற்று நோயால் மகரகம ஆஸ்பத்திரியில் தந்தையும் மகனும் ஒரு மாதகாலமாக நிற்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் குடும்பத்திற்கு வருமானம் போசாக்கான உணவின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதை சமூக ஆர்வலர் திரு.யோகநாதன் அடையாளம் கண்டு மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தார்.

இதன்படி நேரில் சென்று ஆராய்ந்து நிலமையை உணர்ந்து V3 அமைப்பினர் மூலம் ஆறுமாத காலத்திற்கான உலர்உணவு வழங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித நேய அடிப்படையிலான இந்த உதவித்திட்டம் நேற்று (21.06.2017) கற்குழியில் உள்ள இவர்களது வாடகை வீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவர்களுக்கு அயலவர்களின் உதவியும் உள்ளது. வரும் காலங்களில் உதவ விரும்புபவர்களும் முன்வரலாம் .மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் மற்றும் அயலவர் தர்சினியும் இதில் கலந்து கொண்டனர்.

அரசினால் கர்ப்பினிப்பெண்கள் மாதாந்தம் பெறும் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவுத்திட்டம் இவருக்குக் கிடைப்பதால் அதில் அடங்காத பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

வவுனியாவில் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

 
த கொம்பாரிசன் எல் கே அமைப்பின் ஏற்பாட்டில் கூமாங்குளம் அஸ்திரம் நற்பணி மன்றத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த கோனேஸ்வரன் காவியாவின் எட்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு கூமாங்குளம் அந்தோனியார் முன்பள்ளி மற்றும் கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளியைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு நேற்று (21.06.2017) கூமாங்குளம் அந்தோனியார் ஆலயமுன்பள்ளியில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தகப்பைகள், தண்ணீர்போத்தல்கள், சாப்பாட்டு கிண்ணிகள், கொம்பாஸ் உள்ளடங்கலான கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதி சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கூமாங்குளத்தைச் சேர்ந்த சரவணமுத்து, மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், முன்பள்ளிக் கட்டமைப்புத் தலைவரும் கொம்பாரிசன் அமைப்பைச் சேர்ந்த செயல்திட்ட அதிகாரி நா.ஸ்ரீதரன், அஸ்திரம் பொதுச் செயலாளர் நா.கிருஸ்ணமூர்த்தி மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அஸ்திரம் நற்பணி மன்ற இளைஞர்கள் சமூகத்திற்கு முன்னுதாரனமான பல பணிகளில் ஈடுபட்டு வருவது ஏனைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல பண்பு என மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.