பழங்குடி பெண்கள் சிறையில் எந்தளவுக்கு சித்தரவதை செய்யபடுகிறார்கள் என்பதை சமூகவலைதளத்தில் எழுதிய துணை சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.
இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறையில் துணை சிறை அதிகாரியாக பணி புரிபவர் வர்ஷா டோங்ரே.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் அம்மாநிலத்தில், சந்தேகத்தின் பேரில் பழங்குடி பெண்களை காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
அங்கு அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி வர்ஷா சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில், சிறையில் இருக்கும் பழங்குடி பெண்களின் மார்பகங்கள் மற்றும் மணிக்கட்டுகளில் மின்சார ஒயர் மூலம் பொலிசார் ஷாக் கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.
அவர்கள் படும் வேதனைகளை கண்டு நான் மிரண்டு போயிருக்கிறேன் என அவர் எழுதியுள்ளார்.
நமது அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்பில் இது போன்ற மனித நேயமற்ற சித்ரவதைகளுக்கு இடமில்லை.
பழங்குடினர், மாவேஸ்டுகள் ஒழிய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அப்படி இருக்கையில், நாட்டின் பாதுகாப்பு படை அந்த பெண்களின் மீது பொய் வழக்கு போடுகிறது.
அவர்களின் வீடுகள் எரிக்கபடுவதோடு, பல பெண்கள் பாலியல் துன்பங்களுக்கும் ஆளாகிறார்கள் என வர்ஷா அதில் தெரிவித்துள்ளார்.
வர்ஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதை அவர் அழித்துள்ளார்.
ஆனாலும், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ள காவல் துறை நிர்வாகம், அவரின் பதிவு, நடத்தை மற்றும் பிற விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
வர்ஷா மீண்டும் எப்போது பணியில் சேர்த்து கொள்ளபடுவார் என்ற விவரம் தெரியவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் ஏவுகணைகளால் தாக்கி அழிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
அண்மையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினரின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவத்தினர் ஏவுகணைகள் மூலம் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திகதி குறிப்பிடாமல் உள்ள இந்த காணொளியில் நடைபெற்ற தாக்குதல் ஏப்ரல் மாதத்தில் நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் காணொளியில் இரண்டு இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தான் பதுங்கு குழிகளைத் தாக்குவதும், ராணுவ வீரர்களின் பேச்சுக்களும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், பாகிஸ்தானியரை திருமணம் செய்வதற்கு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் உஸ்மா (20). இவர் மலேசியா சென்று இருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலி என்பவரை சந்தித்துள்ளார்.
அதன் பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 3-ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற்றது.
இந்நிலையில் உஸ்மா சமீபத்தில் இந்திய தூதரகத்தை நாடியுள்ளார். அப்போது அவர் நான் பாகிஸ்தானியரை திருமணம் செய்து கொள்ள துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டேன் என்றும் என்னுடைய குடியேற்ற ஆவணங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.
நான் இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்பும் வரையில் இந்திய தூதரகத்தை விட்டு வெளியே செல்லமாட்டேன் என கூறியுள்ளார்.
உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த அலங்கார பந்தல் புதன் கிழமை மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிப்படுத்தப்படும்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலுக்கமைவாக நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நவீன வெசாக் பந்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும்.
கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்த நவீன வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இதன் உயரம் 60 அடிகளாகும். அகலம் 40 அடிகளாகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாப்பாத்திரங்கள் இந்த லேசர் கீற்று வெசாக் அலங்கார பந்தலில் காட்சிப்படுத்தப்படும். ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதிலும் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்திற்காக மதுக்கடைகள் மூடுவது குறித்து அரசாங்கம் எவ்வித அறிவித்தலையும் கடந்த 7ம் திகதி வரையில் விடுக்கவில்லை என கலால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் மதுக்கடைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தினங்களிலும் மதுக்கடைகளை திறப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய விமான ரகத்தைச் சேர்ந்த எயார்பஸ் ஏ380 ரக விமானமொன்றை கட்டி இழுத்ததன் மூலம் “போர்ஷ” ரக காரொன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்தில் அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
285 தொன் எடையுடைய எயார் பஸ் ஏ 380 ரக விமானமொன்றை Porsche Caynne S Diesel ரக ஒன்று 42 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றது. இது புதிய உலக சாதனையாகும்.
இதுவரை 114 தொன் எடையுடைய கார் ஒன்று கட்டி இழுத்தமையே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.
எயார் பஸ் நிறுவனமானது, சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்திலுள்ள தனது பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 10 எயார்பஸ் ஏ 380 ரக விமானங்களில் ஒன்றை இத்திட்டத்துக்காகப் பயன்படுத்தியிருந்தது.
4.8 மீற்றர் நீளமான காரும் 73 மீற்றர் நீளமான விமானமும் விசேட இணைப்பதற்காக விசேட இணைப்பு
“போர்ஷ” நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளரான ரிச்சர்ட் பெய்ன் மேற்படி காரை செலுத்தினார்.
இச்சாதனை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த கார் சாதனையை நிகழ்த்திவிட்டது. நான் மிக நிம்மதியடைகிறேன். பொதுவாக, எமது கார்களின் வரம்புக்கு மீறிய அளவிலான இது போன்ற சோதனைகளை நாம் மேற்கொள்வதில்லை.
இக்கார் மிக சிறப்பாக செயற்படுகிறது. இக்காரை நாம் லண்டனிலிருந்து இங்கு (பாரிஸுக்கு) செலுத்திவந்தோம். இப்போது எயார் பஸ் விமானத்தை கட்டி இழுத்த இக்காரை நான் எனது வீட்டுக்கு செலுத்திச் செல்லவுள்ளேன்” என்றார்.
“எமது வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதைவிட சற்று அதிகமாக எமது கார்கள் செல்லக்கூடியவை. அவை உறுதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இச்சாதனைக்காக தமது அழகிய விமானமொன்றை அனுமதித்த எயார் பஸ் நிறுவனத்தின் தாராள மனப்பான்மைக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.
ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது உள்ள காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனுக்கு அடிமையே என சொன்னால் அது மிகையாகாது.
குறிப்பாக இளைஞர்கள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், அவர்கள் அதிகம் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின்னர், அனைவரும் சிறு நினைவூட்டலுக்கு கூட மூளைக்கு பதிலாக, ஸ்மார்ட்போன்களையே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையே டிஜிட்டல் அம்னீசியா எனப்படுகின்றது, எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைத்து முக்கியமான விடயங்களை மூளையில் பதிய வைப்பதுடன், முக்கிய குறிப்புகளில் எழுதி வைத்து நமது மூளை செயல்பாட்டை திறனை அதிகரிக்கச் செய்வதே நன்று என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை வாசல பகுதியில் 39 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று பகல் குறித்த பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாசல பகுதியில் உள்ள விடொன்றில் தனது மகளுடன் இந்த பெண் வசித்து வந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பெண் நேற்று (08) பகல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர விஷவாயு கசிவு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் ஹுவாங்பென்கியாவ் நகரிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் நிலத்தை தோண்டியபோது அடியில் இருந்து திடீரென்று விஷவாயு கசிவு ஏற்படவே, சுவாசிக்க முடியாமல் சிக்குண்டத்தில் 18 தொழிலார்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 37 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா உலக அளவில் அதிகளாவன நிலக்கரியை உற்பத்தி செய்து வரும் நாடாக கூறப்பட்டாலும், அந்நாட்டில் பாதுகாப்பற்ற நிலக்கரி அகழ்வுகள் மூலம் அதிகளவிலான தொழிலாளர்கள் பலியாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்த ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி விவாகரத்து பெற்றவர். அவருடன் பணியாற்றிய சக தொழிலாளி இந்தியாவில் நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை காட்டினார்.
சக தொழிலாளியின் மேல் வைத்த நம்பிக்கையை பெற்றோரின் மீது வைக்காத ஆயிஷா, ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டார். பெற்றோருக்குத் தெரியாமல், மும்பைக்கு வந்த ஆயிஷாவிற்கு வேலை வாங்கித் தருவதற்கு பதிலாக, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நேபாளப் பெண் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார் தரகர்.
பாலியல் தொழிலில் ஆயிஷாவும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டார். அதுமட்டுமா? மும்பை, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்டு, வெவ்வேறு நபர்களின் பிடியில் சிக்கிய ஆயிஷா, இறுதியில் புணே சிவப்பு விளக்குப் பகுதியை வந்தடைந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அங்கு காவல்துறையினரின் அதிரடிச் சோதனையில் மீட்கப்பட்ட ஆயிஷா, தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டார். மும்பையில் உள்ள பங்களாதேஷ் ராஜீய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, ஆயிஷாவின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை கூறியது தொண்டு நிறுவனம்.
விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, ஆயிஷாவை தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நன்றாக நடந்தால் ஆயிஷா மே மாதம் 15 ஆம் திகதியன்று தாயகம் திரும்புவார்.
ஆயிஷாவின் கதை, பங்களாதேஷில் இருக்கும் ஆயிரக்கணக்கான திக்கற்ற பெண்களின் கதையை ஒத்ததாகவே இருக்கிறது. இந்தியாவில் வேலை வாங்கித்தருவதாக ஆசைகாட்டி, மோசம் செய்து அவர்களை இருண்ட வாழ்க்கைக்குள் தள்ளிவிடும் மோசடி கும்பல்கள், இரையைச் சுற்றும் பருந்தாய் திரிகின்றன.
ஆனால் ஆயிஷாவின் கதை மட்டும் ஏன் குறிப்பாக பேசப்படுகிறது? அவர் இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் செல்வதற்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, இதயத்தை தொடும்படி உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை எழுதியிருப்பது தான் காரணம். வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் (வெகுமதி) ஆக பெற்ற தொகையை கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கிறார். ஆனால் அதில் இந்திய அரசு செல்லாதது என்று அறிவித்த ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருப்பதால், அவற்றை மாற்றிக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த உணர்ச்சிபூர்வமான கடிதத்தை, ரெஸ்க்யூ ஃபவுண்டேஷனின் ரூபாலி ஷிபார்கர் ஹிந்தியில் மொழிபெயர்த்து, ஆயிஷாவின் சார்பில் பிரதமமந்திரி நரேந்திரமோதிக்கும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் டிவிட்டர் செய்தியாக அனுப்பியிருக்கிறார்.
மோதியும், சுஷ்மாவும் டிவிட்டர் செய்திகளை தொடர்ந்து பார்ப்பவர்கள். சுஷ்மா ஸ்வராஜ் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு உடனடியாக உதவி செய்பவர் என்பதால் பிரதமருக்கு எழுதிய கடிதம் அவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
செய்தி ஊடகங்களில் இந்த கடிதம் குறித்த சர்ச்சை பரவலாகிவிட்டது. “காவல்துறையினரின் உதவியுடன் ஆயிஷாவை மீட்டோம். அந்த சந்தர்ப்பத்தில் உடுத்திய உடையுடன் எங்களுடன் வந்த அவர் வேறு எதையும் கொண்டு வரவில்லை. பிறகும், கோர்ட்-கச்சேரி என பலவிதமான அலைச்சல்களில், அதற்கு பிறகும் அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை” என்று ரெவென்யூ ஃபவுண்டேஷனின் தலைவர் திரிவேணி ஆசார்யா, பிபிசியிடம் தெரிவித்தார்.
“சிறிது பணத்தை ஒளித்து வைத்திருப்பதாக ஆயிஷா சொன்னார், அங்கு சென்று பார்த்தபோது, ஒரு டிரங்க் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12-13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் கிடைத்தது.”
“பெங்களூரு சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்தபோது, விபச்சார விடுதியின் உரிமையாளர் எங்கள் கையில் பணமே தரமாட்டார். ஆனால், வாடிக்கையாளர்கள் கொடுத்துச் செல்லும் வெகுமதியை உள்ளாடைகளில் மறைத்து வைத்து பாதுகாத்தேன். அதில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே அதிகம்” என்று ஆயிஷா அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால், டிசம்பர் 31-ஆம் திகதியுடன் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசு விலக்கிக்கொண்டதும், அவை செல்லாக்காசாகிவிட்டன. புணே நகர காவல்துறை ஆணையர் ரஷ்மி சுக்லாவின் தனிப்பட்ட ஆர்வத்தினால் கட்ராஜ் காட்டில் இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து ஆயிஷாவை மீட்கும் நடவடிக்கை சாத்தியமானது.
“ஆதரவற்ற பங்களாதேஷ் பெண், மிகுந்த நெருக்கடிக்கு இடையில் சேமித்து வைத்த பணம் செல்லாதது என்று தெரிந்ததும் அவர் முகத்தில் தென்பட்ட ஆதங்கத்தைப் பார்த்து வருத்தப்பட்டேன்.. இந்தக் கடிதத்தை பார்த்து, மத்திய அரசு ஏதாவது செய்தால் நல்லது. இல்லாவிட்டாலும், ஆயிஷா பங்களாதேஷ் திரும்பிச் செல்வதற்கு முன்னதாக அவருக்கு நிதியுதவி செய்வதற்கான சாத்தியங்களை ஆராய்ந்துவருகிறேன்” என்கிறார் ரஷ்மி சுக்லா.
பத்தாயிரம் ரூபாய் என்பது பலருக்கு மிகச்சிறியத் தொகையாக இருக்கலாம். ஆனால் ஆஷா போன்ற ஒரு பெண்ணுக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது.
அவர் தாயகத்திற்கு செல்வதற்கு முன், செல்லாத நோட்டுகளை மாற்றி செல்லத்தக்க நோட்டுகளாக வழங்கினால் அது, அவரின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதோடு, கேள்விக்குரிய அவரது எதிர்காலத்திற்கு ஒரு நல்ல பதிலை உருவாக்கவும் உதவிபுரியலாம். செல்லாக்காசு செல்லுமா, செல்லாதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப் படிவங்களும், பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்களும் கடந்த வியாழக்கிழமை வெளியான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விண்ணப்பத்திற்கான இறுதி திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமெனவும், புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 வயதான ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு மொரவக்க பிரதேசத்தில் 3 வயதான சிறுமியை தடியால் தாக்கி கொலை செய்தமை தொடர்பாக அந்த சிறுவன் மீது மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று (08.05) மாத்தறை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகத்திற்குரிய சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, குறித்த கொலை மனித படுகொலை என தீர்ப்பளித்துள்ளார்.
இதன்காரணமாக 16 வயதான சிறுவனுக்கு கடும் வேலையுடனான 10 வருட சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
களுத்துறை – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் மரணமானார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகொரடுவ பகுதியில் குறித்த துப்பாக்கி;ச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமானவர் கொஸ்கொட 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சாமர அபேசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தற்போது நாகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று நடைபெறும்.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.05.2017) மதியம் 2.30 மணியளவில் நேரக்கணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
பருத்தித்துறைலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து (பருத்தித்துறை டிப்போ) வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நின்றது. பேரூந்தினை வேறு இடத்தில் தரித்து நிறுத்துமாறு சாரதிக்கு வவுனியா இ.போ.ச நேரக்கணிப்பாளர் உத்தரவிட்டபோது. நேரக்கணிப்பாளரின் வார்த்தையினை மதிக்காது. அவ்விடத்திலிலேயே பேரூந்தினை தரித்து விட்டு சென்றுவிட்டார்.
உடனடியாக நேரக்கணிப்பாளர் இ.போ.ச பருத்தித்துறை பேரூந்தினை எடுத்து போக்குவரத்துக்கு எவ்வித இடையூறு இன்றி தரித்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த பருத்தித்துறை பேரூந்தின் சாரதி நேரக்கணிப்பாளரை தாகாத முறையில் பேசியதுடன் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளவும் முயற்சித்தார். அருகில் நின்ற இ.போ.ச ஊழியர்களால் இப் பிரச்சனை சுமுகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் இவ்விடயம் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (08.05.2017) ஐந்தாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா? , நீண்ட காலமாக சேவை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? , வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.