தன்னுடைய உயிரைப் பறித்த குண்டுவெடிப்பை படம் பிடித்த அமெரிக்க இராணுவ புகைப்பட நிபுணர்!!

ஆப்கானிஸ்தானில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்த போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ புகைப்பட பெண் நிபுணர் ஹில்டா கிளெய்டனின் இறுதிப் புகைப்படம் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்த கடுமையான போர் பயிற்சியின் போது, வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில், ஹில்டா உட்பட சில வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தை ஹில்டாவின் கையில் இருந்த காம்பேட் கெமரா படம்பிடித்திருந்தது. குண்டு வெடித்து தான் உயிரிழந்த காட்சிகளை, பெண் நிபுணர் படம்பிடித்திருந்த அந்த அறிய புகைப்படத்தை அமெரிக்கா 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிட்டுள்ளது.

ஹில்டா கிளெய்டன், புகைப்பட நிபுணர் ஆவார். போர்கள் தீவிரமாக நடக்கும் போது, போரில் ஈடுபடும் வீரர்களுடன் இணைந்து, அதனை புகைப்படம் எடுக்கும் பணியை இவர் மேற்கொண்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானின் லாக்மான் மாகாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியில் இருந்த போது, வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து அதனை தத்ரூபமாக படம் எடுத்து காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், அதற்கான பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்தது. இதில், 4 ஆப்கான் இராணுவ வீரர்களும், ஹில்டா கிளெய்டனும் உயிரிழந்தனர்.

ஆனால், அந்த கடைசி நொடியையும் அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுபோன்ற மிக ஆபத்தான பணிகளில் பெண்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஆபத்தான தருணத்திலும் ஆண் வீரர்களுக்கு நிகராக பெண்கள் வேகமாகப் பணியாற்றுவதை இந்த புகைப்படம் உணர்த்தும் என்பதாலும் இதை வெளியிட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம், க்ளெய்டனின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்!!

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு விலங்குகளின் உடல்களை கொண்டு, புதிய மரபணு சிகிச்சை முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் டெம்பிள் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் எலி உடலில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தி அதை குணப்படுத்தும் வகையில் சிகிச்சையை மேற்கொள்வதற்காக, மனிதனின் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, குறித்த எலியின் உடல்கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அளிக்கப்பட சிகிச்சை முறை காரணமாக எலியின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அது எய்ட்ஸ் கிருமியை முற்றாக அழித்துள்ளதாக குறித்த பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனித உடம்பில் படிமுறையாக பரவும் எய்ட்ஸ் நோயானது, மேற்குறித்த மரபணு மாற்ற சிகிச்சையின் மூலம் எச்.ஐ.வி. கிருமியாக இருக்கும் போதே இல்லது செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு விலங்குகளின் உடல்களில் பரிசோதிக்கப்பட்டுள்ள குறித்த மரபணுமாற்ற சிகிச்சை முறையானது, விரைவில் மனித உடல்களில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை!!

பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும் 178 வீரர்கள் அடையாளங்காணப்பட்டனர். குறித்த எண்ணிக்கையானது இவ்வருடத்தில் 5 ஆக குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மதிவாணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வருடத்தில் தேசிய நடுவர்கள் ஊடாக, பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்தமையே சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் சந்தேகத்துக்கிடமாக பந்துவீசும் வீரர்களை பொறுத்தவரையில், 19 வயதுக்குற்பட்ட அணியிலிருந்து வீரரொருவர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 13 வயதுக்குற்பட்டோர் அணியிலிருந்து நால்வர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் 17 மற்றும் 15 வயதுக்குற்பட்டோர் அணியிலிருந்து சந்தேகத்துக்கிடமாக பந்துவீசும் வீரர்கள் அடையாளங்காணப்படவில்லை.

இதேவேளை கழகங்களுக்காக விளையாடும் 6 வீரர்கள் சந்தேகத்துக்கிடமாக பந்துவீசுவது கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்கள் முன்னாள் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரவீந்திர புஷ்பகுமாரவிடம் பயிற்சியை பெற்று, பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

வடகொரியாவில் 15 கப்பல்களில் அழுகிய நிலையில் நூற்றுக்கணக்கான சடலங்கள்!!

வடகொரியாவின் கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 15 கப்பல்களில், அழுகிய நிலையில் நுற்று கணக்கில் உடல்கள் கிடக்கின்றன. இது மீனவர்களின் உடலாக இருக்கும் என ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் தனது ஆட்சிகாலத்தில் மீன்பிடித் தொழில்துறையின் உற்பத்தியினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இராணுவத்துறையை கிம் ஜாங் பயன்படுத்திவருகிறார்.

ஆனால், இதுபோன்று பணிக்கு அனுப்பப்படுவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத காரணத்தினால் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது என்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கிம் ஜாங்கின் ஆட்சி பிடிக்காத காரணத்தால் அங்கிருந்த தப்பித்து செல்லும்போது உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

இதுபோன்ற, அதிக பிணங்களுடன் 15 கப்பல்கள் வடகொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இது பேய் கப்பல்கள் என அழைக்கப்படுகிறது.

மனிதர்கள் 100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறிவிட வேண்டும் : ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!!

மனிதர்கள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அபாயங்களில் இருந்து தப்பித்து உயிர்வாழ வேண்டுமானால், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறி வேறொரு கிரகத்திற்கு சென்று குடியேற வேண்டுமென விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள் அதிகரிப்பு, மக்கட்தொகைப் பெருக்கம் போன்றவை உள்ளிட்ட காரணங்களால் பூமி மிகத் தீவிரமாக ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் மூத்த விஞ்ஞானியும் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங், உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், பிபிசி சேவைக்கான ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ள ஹாக்கிங், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, மனிதர்கள் வேறு கிரகத்தில் வாழ்வது சாத்தியமா என்பது குறித்து ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மாணவர் கிரிஸ்டோஃபே கல்ஃபர்ட் விண்வெளிக்குப் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு!!

மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே கருத்து வெளியிடுகையில், பல துறை சார்ந்த சேவைகள் இதனூடாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களும் இதர சுகாதார பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போது அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராக இருப்பதாக மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம்!!

 
வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இன்று (04​.05.2017​) மாலை 6​​ மணியளவில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும் வவுனியாவிலிருந்து பாவற்குளம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் சிறிய அளவில் விபத்துக்குள்ளானதுடன் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் சிறு பதற்றம் நிலவியது.

அரச பேருந்தை தனியார் பேருந்து முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். எனினும் பாரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து ஏற்பட்ட பகுதியானது மாலை வேளைகளில் சன நெரிசல் மிகுந்த பகுதி என்பதுடன் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படும் இடமாகும்.

இவ்விபத்தில் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை இருப்பினும் இதை மனதில் நிறுத்தாது இவ்வாறு கண்மூடிதனமாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக தனியார் பேருந்து சங்கமாகட்டும் அரச பேரூந்தாகட்டும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பவ இடத்தில் நின்ற சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் விசனம் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் பதற்றத்தை தணித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பேரூந்து நிலையத்தில் மன்னார் சாலை பேரூந்தின் அசமந்தப்போக்கு : பயணிகள் சிரமம்!!

மன்னார் சாலைக்கு சொந்தமான இ.போ.ச சபையின் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் அசமந்தப்போக்கினால் இன்று (04.05.2017) பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து முருங்கன் ஊடாக முத்தரிப்பு பிரதேசத்திற்கான சேவை யுத்த காலத்திலும் இடம்பெற்று வந்தது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப் பிரதேசம் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த சமயத்தில் வவுனியா – முத்தரிப்பு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

நேற்றைய தினம் ( 03.05.2017) மீண்டும் வவுனியா – முத்தரிப்பு சேவை ஆரம்பமானது. இன்று (04.05.2017) மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மன்னார் சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேரூந்து மாலை 5 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது. மாலை 5.30 மணிக்கு மன்னார் நோக்கி புறப்பட வேண்டிய பேரூந்து பயணிகள் எவரையும் ஏற்றாது மன்னார் நோக்கி பயணித்தது.

இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்ப முடியாது பேரூந்து நிலையத்தில் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பேரூந்து நிலையத்தின் நேரக்கணிப்பாளரிடம் தொடர்பு கொண்ட போது,

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க எனக்கு அனுமதி இல்லை எனவும் இன்று மாலை 5.30 மணிக்கு வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பேரூந்து செல்லாது எனவும் தெரிவித்தார்.​

மன்னார் சாலை முகாமையாளரே இது உங்களின் கவனத்திற்கு.

வடமாகாணசபையின் சுழற்சி முறை ஆசனம் எமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் : G.T.லிங்கநாதன்!!

வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 41ஆவது வருடாந்த விளையாட்டு விழா இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த 01.05.2017 அன்று நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் GT லிங்கநாதன் தனது உரையில், வடமாகாண சபையில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்பட்ட மேலதிக ஆசனங்களில் ஒன்றை 5 வருடங்களுக்கு பகிரப்பட்டதை யாவரும் அறிவோம்.

முதல் வருடத்திற்கான பங்கீடு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்பட்டு மேரி கமலா குணசீலன் பதவியேற்றிருந்தார். எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பில் இருந்து 2013 வெளியேறியதையடுத்து மேரி கமலா தமிழரசு கட்சியின் முல்லை மாவட்ட செயலாளராக பதவியேற்று ஒரு வருடங்களும் ஆறு மாதங்களும் மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்ததன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் க்கான சுழற்சி முறை ஆசனத்தை வவுனியாவை சேர்ந்த எம்.பி.நடராஜாவிற்கு வழங்கியது. இவர் ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் பதவியில் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரெலோ அமைப்பிற்கு கடந்த யூலை மாதம் மயூரன் அவர்களுக்கு வழங்கியிருந்தது. மயூரன் இளம் வேட்பாளராக களம் இறங்கியவர் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும் அவரின் நியாயமான அரசியல் பயணம் சிறப்புற அமைய மயூரன் ஒரு வருடகாலமான இவ் வருட யூலை மாதம் பதவி விலகுவதுடன் கூட்டமைப்பு அவ் ஆசனத்தை எமது கட்சிக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளர்களான உங்களால் இதனை இன்னும் தெளிவாக சமூகத்திற்கு கொண்டு செல்வதுடன் எமது கட்சியின் துடிப்புமிக்க உங்கள் கிராமத்தின் எனது நண்பன் சந்திரகுலசிங்கம் மோகனுக்கு எமது கட்சி வழங்கும். அதன் பின்னர் உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திகள் இன்னும் வலுவுள்ளதாக மாறும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் 70வது நாளாக போராட்ட களத்தில் : முருகனிடம் சரணடைந்த மக்கள்!!

 
வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று 70வது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து இன்று​ (04.05.2017)​ மதியம் 12.15 மணியளவில் கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர் .

கடந்த 70 நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகள் தமது உறவகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய், அவசரகாலச்சட்டத்தினை இரத்து செய் போன்ற கோரிககைகளை முன்வைத்து போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் 29 முதிரை மரக்குற்றிகள் மடக்கிப் பிடிப்பு!!

 
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பார ஊர்தியில் மறைத்து கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் இன்று (04.05.2017) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட இருந்த நிலையில் ஈச்சங்குள பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் ஆரியரட்ன தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன , பொலிஸ் சாஜன் அமரசிங்க சமந்த,பொலிஸ் கான்டபில்களான நிர்பான், விதான, சந்திரவம்ச, நிஷால், பிரதீப், கருணாரட்ன, கண்ணங்கர, பாரதிராஜா, பீரிஸ், மதுர, அஜந்தன் ஆகியோர் புதுக்குளம் பகுதியில் வைத்து பாரஊர்தியை வழி மறித்து சோதனை இட்ட போது சுமார் 10 லட்சம் பெறுமதி வாய்ந்த 29 முதிரை மரக்குற்றிகள் எருவிற்குள் மறைத்து கொண்டு செல்ல இருந்ததை கண்டறிந்துகொண்டனர்.

இதனையடுத்து பாரஊர்தியில் இருந்த ஜோன்ஜெராட் (வயது 37) , ராசரட்ணம் (வயது 48) சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்குமாறு சுகாதார தொண்டர்கள் தொடர் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் இன்று (04.05.2017) பிற்பகல் 1 மணியிலிருந்து பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இப் போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்..

கடந்த 1994ம் ஆண்டிலிருந்து குடும்பநல உத்தியோகத்தர்களின் உதவியாளர்களாகவும், சுகாதார பரிசோதகர்களுக்கு உதவியாளர்களாகவும் நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றோம் இன்று வரை எமக்கு நிரந்த நியமனம் வழங்கப்படவில்லை

எனவே நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று முதல் தொடர் போராட்டத்தினை மேற்கொள்வதாகவும் நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தொழிலுக்குச் சென்றவர் மீது கத்திக் குத்து!!

வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்குச் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்காகச் சென்ற கல்மடுவைச் சேர்ந்த அ.ஞானசீலன் (வயது 48) என்ற குடும்பஸ்தரை பின்தொடர்ந்த சிலர் அவருடன் முரண்பட்டு அவர் வைத்திருந்த கத்தியைப் பறித்து அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் பாடசாலையின் அதிபருக்கு எதிரான போராட்டம் முடிவிற்கு வந்தது!!

 
வவுனியா செட்டிக்குளம் படசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்றோர் இணைந்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று(03.05) உணவு தவிர்ப்பு போராட்டம் காலை 8 மணியளவில் 6 பேர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்ட இடத்திற்கு வருகைத் தந்த மேலதிக கல்விப்பணிப்பாளர், மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் என அனைவரும் பாடசாலையின் நிலைமைகளை ஆராய்ந்ததுடன் பெற்றோருடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இதே வேளை குறித்த அதிபரை தற்காலிகமாக வவுனியா தெற்கு வலயத்திற்கு இடம்மாற்றம் செய்து அவர் குற்றமற்றவர் என விசாரணைகளிலிருந்து அவரை விடுவித்து அதன் பின்னர் எமது பாடசாலைக்கு மாற்றுமாறு தெரிவித்திருந்தனர்.

மேலும் அதுவரையில் எமது பாடசாலையினை உப அதிபரின் தலைமையில் இயங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து சாதகமான முடிவிற்கு வந்த அதிகாரிகள் பாடசாலையினை தற்காலிகமாக உப அதிபரின் தலைமையில் இயங்க அனுமதித்தனர். அத்தோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தமது போராட்டத்தினை இதன் பின்னர் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செயலிழந்தது வட்ஸ் அப் : அதிர்ச்சியில் பயனர்கள்!!

வட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்த சம்பவம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் வட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லாத நிலை உருவாகி உள்ளது. உலகின் மிக பிரபலமான குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக வாட்ஸ் அப் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வட்ஸ் அப் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை வட்ஸ் அப் ட்ராக் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வாட்ஸ் அப் நிறுவனம், சோதனை முயற்சியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த பதிப்பினை விண்டோஸ் ஃபோன்களில் தரவிறக்கம் செய்யும்போது ‘மீடியா கோப்பு’களை பெறுவதில் சிக்கல் உள்ளதாக பயனாளர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல் ‘வாட்ஸ் அப்’ பில் மெசேஜ்களை அனுப்புவதிலும் சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டது.

பயனாளர்களின் குற்றச்சாட்டுக்கு, சரியான முறையில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, ‘வாட்ஸ் அப் பீட்டா 2.17.140’ பதிப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை எனவே இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யவேண்டாம் என்று வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு பதில் சொன்னது.

இரண்டுநாட்களுக்கு முன்னர் இப்படியோர் அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில்தான் இன்று அதிகாலை அதன் சேவை முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது.

மாற்றத்துக்கான புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது ‘வாட்ஸ் அப் பீட்டா 2.17.140’ பதிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல் போன்ற காரணங்களால் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இ

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!!

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.

நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் தான் பிரபல நடிகையான பவானி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார், குடும்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.