தமிழ்நாட்டில் கள்ளகாதல் ஜோடி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அந்தியூரை சேர்ந்தவர் வேலு, இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதே பகுதியை சேர்ந்தவர் சுமதி, இவருக்கும் திருமணமாகி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், வேலுவுக்கும், சுமதிக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இரு வீட்டாருக்கும் தெரிந்ததையொட்டி அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டு கொள்ளாத வேலுவும், சுமதியும் தொடர்ந்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் அவர்கள் ஊரின் ஏரிகரையில் நேற்று சடலமாக கிடந்துள்ளனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இவர்கள் தவறான பழக்கத்துக்கு இரு வீட்டார்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்த நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நிலை சரியில்லாத காரணத்ததால் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது தந்தையின் நினைவுகள் குறித்து அவரது மகள் சண்முகப்பிரியா பகிர்ந்துகொண்டுள்ளார்.
ரயில்வே துறையில் வேலை பார்த்த எனது தந்தை சினிமாவுக்குள் வருவதற்காக அந்த பணியினை ராஜினாமா செய்துவிட்டு வண்டிசக்கரம் என்ற படத்தை தமிழில் முதன்முதலாக இயக்கினார்.
அந்த படம் வெற்றியடைந்ததையடுத்து, தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எனது தந்தை ஒரு நடிகனாக இருந்தபோதும், நாங்கள் நடிப்புத்துறைக்கு வரவேண்டாம் என கூறினார்.
நாங்கள் நன்றாக படித்து ஒரு நல்ல துறையில் செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. அதன்படியே, எங்களை நன்றாக படிக்கவைத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினார்.
படப்பிடிப்பில் கலந்துகொள்ள வெளி ஊர்களுக்கு சென்றால், அங்கு என்ன உணவு சிறப்பாக உள்ளதோ, அதனை எங்களுக்கு வாங்கிகொண்டு வருவார்.
உற்சாகப்படுத்தியே காரியத்தைச் சிறப்பாக செய்ய வைப்பார். செல்லம் கொடுக்குற அதே நேரம் நல்லா படிக்கலைன்னா மட்டும், கண்டிப்போட நடந்துக்குவார்.
அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவர் நிஜவாழக்கையில் ஒரு ஹீரோ. வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் சில படங்களை பார்த்துவிட்டு, எனது உடல்நிலை மட்டும் சரியாக இருந்தால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பேன் என கூறுவார்.
சமீபத்தில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, ஊசி போட மறுத்துவிட்டார்.
அப்போது வண்டிசக்கரம் படத்தை ரீமேக் செய்வது குறித்து உங்களோடு பேசுவதற்காக சிவக்குமார் அங்கிள் வெளியில் காத்துகொண்டிருக்கிறார் என்ற பொய்யை சொன்னதும் உடனே ஊசிபோட்டுக்கொண்டார்.
அவர் ஊசிபோட்டுக்கொள்வதற்காக அப்படி ஒரு பொய்யை சொன்னேன். அவர் உயிரோடு இருந்தபோது எந்த அளவுக்கு நல்ல படியாக பார்த்துக்கொண்டாரோ, அந்த அளவுக்கு இப்போது சாமியாகி எங்களை பார்த்துக் கொள்வார் என உருக்கமாக கூறியுள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சபரிநாதன் உதவி திருவனந்தபுரம் சப் கலெக்டரை காதல் திருமணம் செய்துகொள்ளும் தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் அருவிக்காரா தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சபரிநாதன்.
இவர் திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக பணியாற்றும் திவ்யா எஸ். ஐயர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். காதல் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இவர்களை பற்றிதான் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சபரிநாதன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எனது திருமணம் பற்றி பலர் கேட்டு வருகின்றனர். தற்போது இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கின்றேன். திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக இருக்கும் டாக்டர் திவ்யா எஸ்.ஐயர் என்பவரை திருமணம் செய்ய உள்ளேன்.
நாங்கள் பழகிய போது, எங்களது கொள்கை, எண்ணம் ஆகியவை ஒத்து போனதை அறிந்தோம். இரு குடும்ப ஆசியுடன், திவ்யா எனது மனைவியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.
தாய்லாந்தில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுமிக்கு கண், காது, மூக்கு ஆகிய உடல் பகுதிகளிலிருந்து ரத்தம் அடிக்கடி வெளியேறி வருகிறது.
தாய்லாந்தை சேர்ந்தவர் Phakamad Sangchai (7), இவருக்கு Hematohidrosis என்னும் வினோத நோய் உள்ளது.
Phakamad க்கு இந்த நோய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கத்தின் காரணமாக அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும்.
அந்த சமயத்தில் Phakamadன் மூக்கு, கண்கள், வாய், உள்ளங்கை ஆகிய பகுதிகளிலிருந்து ரத்தம் வெளியேற தொடங்கிவிடும்.
ஆனால் ரத்தம் வெளியேறும் சமயத்தில் அவருக்கு வலி இருக்காது. Phakamadன் அம்மா தன் மகள் உடல் உறுப்புகளிலிருந்து ரத்தம் வடிவதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதன் மூலம் பொது மக்களிடம் தன் மகளுக்கான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் நம்புகிறார்.
மருத்துவர்களிடம் Phakamad ஆலோசனை பெற்றும் அவர்களால் சிறுமிக்கு இருக்கும் சரியான பிரச்சனை குறித்து அறிய முடியவில்லை.
இதுகுறித்து Phakamad கூறுகையில், என் வாழ்க்கையையே இந்த நோய் பாழாக்குகிறது.
இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகுமோ என கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Phakamadன் அம்மா கூறுகையில், இந்த நிலையிலும் என் மகள் தைரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்து மில்லியனில் ஒருவரை தான் இந்த நோய் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்தது. வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை பார்த்த தாய் வேதனையின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
குழந்தைக்கு வயிற்றிலும் ஒரு தலை இருந்ததுதான் தாயின் சோகத்திற்குக் காரணம். சோகத்தில் இருந்த அவரை சமாதானப்படுத்திய மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கையூட்டியுள்ளனர்.
அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாம், இரட்டை குழந்தை என தெரிவித்திருக்கின்றன. இதனால் அப்பெண் மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.
ஆனால் குழந்தை பிறந்தபோது ஒரு குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்ததாகவும், மற்றொரு குழந்தைக்கு தலை மற்றும் சில உறுப்புகளுடன் முழுமையான வளர்ச்சி பெறாமல் இரண்டும் ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதனால் குழந்தையின் உருவமானது, 3 கைகளுடன் வயிற்றிலும் ஒரு தலையுடன் காணப்பட்டிருக்கிறது.
கடந்த 26-ஆம் திகதி மருத்தவர்கள் அக்குழந்தைக்கு 4 மணி நேரம் அறுவை சிசிக்சை செய்து வளர்ச்சியடையாத தலையை அகற்றிவிட்டனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், விரைவில் குழந்தை வீடு திரும்பும் என்று நம்பிக்கை கூறியுள்ளனர்.
அமெரிக்கப் படையினர் தென்கொரியாவில் நிறுவியுள்ள ஏவுகணை தடுப்புச் சாதனத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சீன அரசாங்கம் அமெரி்க்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இ்ந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஹுனாங், பெய்ஜிங்கில்,
தாட் எனப்படும் ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை யெனில் சீனாவின் தற்காப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சர்வதேச நாடுகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த தாட் தடுப்புமுறையானது பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயங்கும் நேரத்துக்கு முன்பு எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது.
200 கிலோமீற்றர் வரம்பில் 150கிலோமீற்றர் உயரம் வரை சென்று தாக்கும். வட கொரியாவின் சாத்தியாமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.
எதிரி படை ஓப் ஏவுகணையை செலுத்தும்போது, தாட் ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை எதிர்கொண்டு இயங்கும் முன்பு மோதி அழிக்கிறது. தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும் என்பது சிறப்பாகும்.
வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்தச் செயற்பாட்டினால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே எங்கள் தற்காப்பிற்காக தேவையான அனைத்தையும் செய்வோம் என்று சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பர்தா அணிந்த நிலையில் கண்டி குட்ஷெட் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை, கண்டி பொலிஸ் பெண்கள் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்தவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்ட போது பர்தாவில் முகத்தை மறைத்திருந்தவர் ஆண் என தெரியவந்துள்ளது..
இந்த நபர் உடலை முழுவதுமாக மறைத்த பர்தாவை அணிந்து கொண்டு குட்ஷெட் பஸ் நிலையத்தில் பயணித்த பயணிகளை அவதானித்துள்ளார். அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துக் கொண்டுள்ளமையினால் பொலிஸ் அதிகாரிகள் அவரை பல மணி நேரம் கண்காணித்துள்ளனர்.
பின்னர் கண்டி பொலிஸ் தலைமையக பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை அழைத்து சோதனையிட்ட போது அவர், பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியில் ஒடி சென்று ஏறி தப்பித்துக் கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.
பஸ் வண்டியை நிறுத்தி குறித்த நபரை கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்ட போது பர்தாவில் முகத்தை மறைத்திருப்பது ஆண் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் மனைவி கம்பளை பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் சேவை செய்வதாகவும், அவர் தவறான உறவு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய முகத்தை மூடி அவரை கையும் களவுமாறு பிடிப்பதற்கு முயற்சித்ததாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நபரின் மனைவி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மயிலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கொழும்புக்கு நேரடியான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை தனது புதிய நேரடி சேவையை, இந்தாண்டுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கான நேரடி சேவையை ஆரம்பிக்க நீண்டகாலம் திட்டமிட்டிருந்த நிலையில், அது விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வழியாக இந்தியாவின் தெற்கு முனையில் உள்ள சிறிய தீவுக்கு அதிக பயணிகள் செல்கின்றனர். இங்கு பயணிப்பற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை ஊடாக செல்வதே ஒரே நேரடி வழியாகும். இதற்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் சேவை வழங்கவுள்ளது.
இந்த விமான சேவை பல்வேறு திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய ஸ்ரீலங்கன் விமான சேவையினால் FlySmiles என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக நேரங்களை தெரிவு செய்யும் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03.05.2017) மதியம் 12 மணியளவில் கஞ்சா வைத்திருந்த சந்தேச நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட சமயத்தில் சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03.05.2017) பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை பிடிக்க முற்பட்ட சமயத்தில் சந்தேக நபர் கஞ்சா பையை கீழே வீசிவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
சிதம்பரபுரம்- கற்குளத்தில் வசித்து வரும் துரை ( வயது 34) இவரை பொலிஸார் தேடிவருவதுடன் இவரிடமிருந்து 1கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.
ரெலோ இயக்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற இருக்கும் இவ் அஞ்சலிக் கூட்டத்தில்இ ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ரெலோ இயக்க செயலாளர் நாயகமும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பிரதிநிதிகளும் அஞ்சலி உரையாற்றவுள்ளனர்.
ரெலோ இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் 1983ல் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ரெலோ இயக்கத்தின் தலைவராக சிறி சபாரத்தினம் செயற்பட்டு வந்த வேளையில் 1986 ஏப்ரல் மாத இறுதியில் போராட்ட இயக்கங்களுக்கிடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல் காரணமாக பல இயக்க போராளிகள் கொல்லப்பட்டதுடன் மே மாதம் ஆறாம் திகதி ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டிருந்தார்.
கொலை செய்யப்பட்ட சிறி சபாரத்தினம் மற்றும் இயக்க போராளிகள்இ அக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவு நாளை ரெலோ அமைப்பினர் வருடந்தோறும் மே மாதம் ஆறாம் திகதி அனுஷ்டித்து வருகின்றதுடன் ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே மாதம் ஆறாம் திகதி வரை தமிழ் தேசிய ஒற்றுமை வாரமாகவும் பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தியுற்று விஷமருந்திய பெண்ணை வைத்தியசாலையில் அனுதிக்க உதவிய அயல் வீட்டுப் பெண் ஒருவர் விஷமருந்திய பெண் இறந்து விடுவார் என நினைத்து அவரது வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து அலுமாரியிலுள்ள தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் அலவ்வ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷமருந்திய 40 வயதான பெண் பூரண சுகமடைந்து வீடு திரும்பியபோது தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விஷமருந்திய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவிய அலவ்வ கொரொக்கல்தெனியவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விஷமருந்திய பெண் தமக்கு உதவும்படி கூச்சலிட்டதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான ஆடைகளை எடுக்க அலுமாரியைத் திறந்தபோது தங்க ஆபரணங்களை கண்டு கொண்ட பின்னனர், விஷமருந்திய பெண் வைத்தியசாலையில் இறந்துவிடுவார் என நினைத்து இரகசியமாக அவரது வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியிலிருந்த தங்க ஆபரணங்களை எடுத்துக் கொண்டதாக அவர் பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருடிய தங்க ஆபரணங்களில் சிலவற்றை அலவ்வ நகரிலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்து தனது கடன்களை மீளச் செலுத்தியுள்ளதாகவும் எஞ்சியிருந்த தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள பாகுபலி-2 படம் நிகழ்த்தி வருகிறது.
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்திய சினிமா வரலாறுகளையும் திருத்தி எழுதுகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த பாகுபலி-2 தற்போது வரை நான்கு நாட்களில் 600 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்னமும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இதில், வெளியாவதற்கு முன்பே கர்நாடகத்தில் சத்யராஜிற்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம், விநியோகஸ்தர்கள் கருத்து வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகளை படக்குழு சந்தித்தது. இந்நிலையில் படம் வெளியான பின்னரும் மேலும் ஒரு சிக்கல் படக்குழுவுக்கு வந்துள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தில், குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பினரை புண்படுத்தியிருப்பதாக படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் “அரேகட்டிக்க பொரட்ட சமிதி” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர், நாங்கள் கொடூரமானவர்கள் அல்ல, பாகுபலி-2 படத்தில் எங்களை மனிதாபிமானமற்ற மற்றும் சமூக விரோத மக்களாக காட்டியிறுப்பதாக கூறி, குறிப்பிட்ட அந்த காட்சியில் வரும் கட்டிக்கா என்ற வசனத்தை நீக்கும்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வறட்சியான காலநிலையால் நாடு முழுவதும் 9,58,000 ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், வறட்சியினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு பகுதியில் சுமார் 4,50,000 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்
யாழ். குடாவில் வறட்சியின் கொடூரத்தால் தீவுப்பகுதிகளே அதிகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
வழமையான நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரதேச செயலகங்களால் குறித்த பகுதிகளில் பவுஸர் மூலம் நாளாந்தம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த போதிலும் தற்போது நீர் வழங்கலிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குடிநீர் இன்றி கால்நடைகளும் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், பயிர்ச்செய்கைகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.
சிறுபோக விளைச்சலை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகளும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளதுடன், நீரின்றி மரங்களும் வாடி வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்திலும் குடிநீருக்காக மக்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், வயல் நிலங்களும் காய்ந்து காட்சியளிக்கின்றன.
வவுனியாவிலும் நீரின்றி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பெருமளவிலான குளங்கள் வற்றியுள்ளதால் கால்நடைகள் குடிநீரின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.
வெப்ப மிகுதியால் மக்கள் அதிக நீராகாரங்களைத் தேடிச்செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விவசாயமும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
அம்பாறை – நாவிதன்வெளி குடியிருப்பு முனை பகுதி மக்கள் தமது இதர தேவைகளுக்காக குளத்தினைப் பயன்படுத்தி வந்த நிலையில், வறட்சி காரணமாக குளம் வற்றியுள்ளமையால் நீரின்றி மக்கள் அல்லலுறுகின்றனர்.
கிணறுகளிலும் நீர் வற்றிவிட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சில மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.
வருடத்தின் முதல் 4 மாதங்களில் நாடு பூராகவும் சுமார் 40,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் கூறினார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், காலி, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தீவிர காய்ச்சலுடன் கூடிய உடல் வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது உகந்தததாகும் என சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதால், நோய்த் தாக்கம் அதிகரிப்பதுடன், மரணம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, குருநாகல் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சந்தன கெதன்கமுவ குறிப்பிட்டார்.
இதேவேளை, அங்கொடை தொற்றாத நோய்கள் தொடர்பான ஆய்வுப் பிரிவிலும் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகள் பலவற்றிலும் டெங்கு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
டெங்கு நுளம்புகள் பரவாமல் சூழலை துப்புரவாக வைத்திருத்தல் அவசியம் எனவும் சுகாதார தரப்புகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
பிரித்தானிய பாராளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சாடியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிர்க்ஸிட் விவாதத்தின் போது தவறான கணக்குகளை கசிய விட்டுள்ளதால் அது லண்டன் தேர்தலை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 8 ஆம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பாரளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் மகாராணியை சந்தித்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
பிரக்ஸிட் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு சிக்கல் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தெரேஸா மே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பில் தெரேஸா மே விமர்சித்துள்ளதுடன் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் பிரித்தானியாவிற்கு அத்தியாவசியமற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் தெரேஸா மே குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.
நீர்ப்பாசனக் குளங்களின் நீர் கொள்ளளவு 36 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ கூறினார்.
இதன் காரணமாக நீர்மின்சார உற்பத்தி நீர்த் தேக்கங்களிலும் நீர்மட்டம் 30 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மகாவலி வலயங்களுக்கு உட்பட்ட நீர்த் தேக்கங்கள் பலவற்றிலும் நீர்மட்டம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக மின்சார உற்பத்தியில் துரித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.