வவுனியா ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு : பொலிஸாரின் விசாரணை தீவிரம்!!

ஓமந்தையில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டது. குறித்த துப்பாக்கி நேற்று(18.03.2017) மாலை புதிய சின்னக்குளம் காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.

பொதுமகனொருவரால் ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியினை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

6 வயதுச் சிறுமியின் திடீர் மரணம் : உருக்கமான கோரிக்கையை முன்வைக்கும் தந்தை!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் சிறுமியின் தந்தை மகளின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிக டெங்கு நுளம்புகள் காணப்படுவதனாலேயே தமது புதல்விக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடியது.

இவ்வாறான சூழலில் டெங்கு நோயை கட்டுப்படுத்துடுவதற்கு போதுமான வசதி அங்கு இல்லை. குறிப்பாக போதியளவில் மனிதவளமோ, இயந்திர உபகரண வளமோ திருகோணமலை பொதுவைத்தியசாலையில் இல்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

இதனை கருத்திற்கொண்டு தற்போதாவது டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தின் உதவியை நாடி, மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டும் என உருக்கமான கோரிக்கையை தந்தையான உதயராஜன் முன்வைத்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது என தெரிவித்த அவர், இதை கட்டுபடுத்த அரசியலை தவிர்த்து ஒன்றுபட்டு உழைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

 
சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெற்றது.

நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (19.03.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சைட்டம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தையும் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கருத்தரங்கு செ.மதுரகன் ( ஒமந்தை ஆரம்ப மருத்துவமனையின் சிரேஸ்ட வைத்தியதிகாரி) நெறியாள்கையின் கீழ் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வில் சி.துசாரகன் (வைத்தியஅதிகாரி), திரு.சுதாகரன் ( சிரேஸ்ட வைத்தியதிகாரி – வவுனியா) , போல் பிரைட் பெனடிக் ( முன்னாள் மருத்துவ பீட மாணவத்தலைவர்) , பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள், அரச மற்றும் அரசார்ப்பற்ற உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்கு மஸ்தான் எம்பியினால் பாண்ட் வாத்தியக்கருவிகள்!!

 
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை நேற்று முன்தினம் (17.03.2017 அன்பளிப்பு செய்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் திருமதி.யோஜராஜா தலைமையில் நடைபெற்ற சிறுவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இந்த வாத்தியக்கருவிகளை அன்பளிப்பு செய்தார்.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொன்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கருத்து தெரிவிக்கையில், இந்த பாடசாலையினுடைய பழைய மாணவன் என்ற அடிப்படையில் எனக்கும் சில பொறுப்புக்கள் இருப்பதாக உணர்கின்றேன். இதன் காரணமாக இன்னும் பல சேவைகளை செய்ய திட்டமிட்டுள்ளேன்.

நான் கல்வி கற்ற காலம் தொடக்கம் இன்றுவரை மும்மதங்களைச்சேர்ந்த மாணவர்களும் இந்த பாடசாலையில் கல்வியைத்தொடர்ந்து இன்று சமூகத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். அதே போல இங்கிருக்கும் சிறார்களும் எதிர்காலத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

பாடசாலை சமூகமே மாணவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடுபவர்கள் எனவே இங்குள்ள சிறார்களை ஆசிரியர்களாகிய நீங்கள் எவ்வாறு செயற்படுத்துகின்றீர்களோ அவற்றின் பிரதிபலன்களாகேவே அவர்கள் வெளிப்படுவார்கள்.

மேலும் நாம் அரசியலுக்குள் பிரவேசிக்காமல் எமது தந்தையின் அறிவுரைக்கமைய எமது சொந்த பணத்தில் கல்விக்கான உதவிகளை செய்துவந்தோம். என்றாலும் காலம் எமக்கும் அரசியல் பிரவேசத்தை தந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்னின் செயலாளர் உட்பட வவுனியா வலயக்கல்விப்பணிமனை உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு ப.சத்தியலிங்கத்தினால் பல்லூடக எறிகை!!

 
வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கான பல்லூடக எறிகை (மல்ரிமீடியா புரஜக்டர்) வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த (13.03.2017) அன்று ஒலுமடு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், முன்னைநாள் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.பூபாலசிங்கம், நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர், இப்பாடசாலைக்கு தேவையான மேலதிக வளங்களை கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இப்பாடசாலைக்கு தேவையான கணணிகளை நன்கொடையாளர்கள் மூலம் பெற்றுத்தர தன்னாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு!!

 
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு சிறார்களின் உடற்பயிற்சி கண்காட்சியுடன் ஆரம்பமானது

இதேவேளை போட்டிகளின் இடைநடுவே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கட்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா சார்பில் அவரது இனைப்பாளரும் சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவருமான ப.கார்த்திக், தாய்மடி நற்பணி நிதியத்தின் ஸ்தாபகர் திருமதி பிரேமிளா, சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறீரெலோ கட்சியின் மாவட்ட இனைப்பாளர் திரு.சூரி சிறீரெலோ கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.டினேஸ் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன் சசி தாய்மடி நற்பணி நிதியத்தின் செட்டிகுளம் பிரதேச இனைப்பாளர் திரு.ஆனந்தராசா முன்பள்ளிகளின் இனைப்பாளர் திருமதி லூத்மேரி, செட்டிகுளம் பிரதேச சமூக சேவையாளரும் வர்த்தகருமான திரு.இருதயராசா, வீரபுரம் முன்பள்ளி ஆசிரியரும் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை கண்டு களித்ததுடன் சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் 23ம் நாளாக தொடர்கின்றது!!

 
வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து இன்று (18.03.2017) காலை 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒரவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமற்போன ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன் என்ற 34 வயது குடும்பஸ்தரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடியுள்ளனர்.

எனினும் வேலைகளுக்குச் சென்றிருப்பதாகவும், வருவார் என்றும் நினைத்துக்கொண்டிருந்துள்ளனர். நேற்றும் குறித்த நபர் வீடு வராததையடுத்து மேலும் தேடுதலை மேற்கொண்டபோது நேற்று மாலை கிணற்றிற்குள் குறித்த நபரின் சடலம் இருப்பது தெரியவந்தள்ளது.

இன்று காலை சம்பவ இடத்திற்கச் சென்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

திருமணமாகி மனைவி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஒரு பிள்ளையுடன் வசித்து வருவதாகவும் இருவருக்கிடையே கருத்து முரண்பாடு காரணமாக சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையம் நெல் உலரவைக்கும் மைதானமாக மாற்றம்?

 
வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையமானது தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்து காயவைக்கும் மைதானமாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது.

195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பணிகள் சில தினங்கள் இடம்பெற்று பின்னர் அரச, தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்ப்பட்டதால் கைகலப்பில் ஈடுபட்ட இரு சாரதிகளை கைதுசெய்து நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து இ.போ.ச சாலை சாரதிகள் மேற்கொண்ட பணிப் புறக்கணிப்பினையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மார்ச் 31ம் திகதி வரை தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் மூடப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

எனினும் இன்று காலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை பொதுமக்கள் அப்பகுதியில் உலரவைக்கும் பணியினை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞன் கெளரவிப்பு!!

 
இலங்கை காது கோளாதோர் கிரிக்கட் அணியின் வீரர் பாலகிருஷணன் தர்மசீலனுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மகத்தான கௌரவிப்பு ஒன்று நேற்று (17.03.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சமூகசேவைத்திணைக்கள தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் நா.இராஜமனோகரன், கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் எஸ்.கிருபாகரன், வவுனியா பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலைய சார்பில் திரு.சிவகுமாரன் சீட் நிறுவனம் சார்பில் மா.சிவகுமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,

புன்னகை அமைப்பின் க.சர்மிலன், வவனியா வளாக ஊழியர் நலன்புரிச்சங்கம் சார்பில் எஸ்.பூங்கண்ணன், வவுனியா துடுப்பாட்ட சங்கத்தலைவர் ரஜீபன், விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன், வவுனியா வர்த்தக சங்கப்பிரதிநிதி அல்ஹாஜ் ஆரிப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுபாசினி தர்ஸன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி, சமூக ஆர்வலர் மஹா விஸனு ஆலய உறுப்பினர் சுப்ரமணியம், யாழ் மாவட்ட நவாலி, மாதகல், சண்டிலிப்பாய் முதியோர் சங்கப்பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட கரைச்சி முதியோர் சங்கப்பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட வெளிக்குளம் முதியோர் சங்கப்பிரதிநிதி அ.நடராஜா, வாடி வீடு உரிமையாளர் திரு.கதிர்காமராஜா,

வவுனியா சமூக சேவைஉத்தியோகத்தர் சோபனா, கரைச்சி சமூக சேவை உத்தியோகத்தர் ஆரணி, கைதடி முதியோர் இல்ல அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரா, வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வசந்தரூபன், கலைவாணி, சக்தி விளைட்டுக்கழக உறுப்பினர்கள், சீட் வலுவூட்டல் வளாக மாணவர்கள், வவுனியா வளாக ஊழியர்கள், விரிவுரையாளர்கள், வெளிச்சம் அமைப்பு, ஓகன் நிறுவனம், வரோட் நிறுவனம், வவுனியா சிதம்பரபுர பிரதேச மக்கள், ஓய்வு பெற்ற ரெலிகொம் நிறுவன நிர்வாக உத்தியோகத்தர், சமூக ஆர்வலர் விக்கி, செவிப்புலன் அற்றோர் சங்கத் தலைவர் கணநாதன், விளையாட்டு கழக இளைஞர்கள், பிரஜைகள் குழு சலசலோஜன், தமிழ் விருட்சம் மாணிக்கம் ஜெகன், சங்கர், பயிற்சியாளர் புரட்சி எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர் .

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட நிகழ்வின் தலைவர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் இது மாற்றுத்திறனாளிகளாக உள்ளோரின் திறமைகளை இந்த சமூகம் எப்போதும் பாராட்டவும் தட்டிக்கொடுக்க பின் நிற்காது என்பதற்கும் நல்ல எடுத்துக்காட்டு. தர்மசீலனுக்கு மட்டுமல்ல இனிவரும் காலங்களில் இவ்வாறான திறமையான வீரர்களுக்கு நாம் உரிய கௌரவத்தை வழங்க ஏற்பாடுகளை செய்ய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய அவசித்தையும் வலியுறுத்தினார்.

சீட் நிறுவன பிரதிநிதி மா.சிவகுமார், இவ்வீரர் சீட் வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தமது திறமைகளை வெளிப்படுத்தியது போல் பல மாணவர்கள் நல்ல திறமைகளுடன் உள்ளனர் . அவர்களையும் இந்த சமூகம் கண்டு கொண்டு எதிர்காலங்களில் ஊக்குவிக்க ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் இராஜமனோகரன் தனது உரையில், இன்று இந்த வீரர் பலருக்கு முன்உதாரணமாகிவிட்டார். இனிவரும் காலங்களில் இவர் தக்குரிய தகமைகளைப் பேணி மற்றவர்களையும் நம்பிக்கை பெறவைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தர்மசீலன் தனது பதிலுரையில் தனக்கு இந்த அன்பான உள்ளங்கள் மூலம் கிடைத்த பாராட்டு கௌரவிப்பு உதவிகளை நான் மறக்க மாட்டேன். எனது இந்திய பங்களாதேஷ பயணங்களுக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றிதெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பலரும் உரை நிகழ்த்தினர். வவுனியா துடுப்பாட்ட சங்கம், வவனியா வளாக ஊழியர் நலன்புரிச்சங்கம், புன்னகை அமைப்பு , திரு. சுப்ரமணியம், வவுனியா வர்த்தக சங்கம், வவுனியா பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் , திரு.கதிர்காமராஜா உட்பட வருகை தந்திருந்த பல நல்ல உள்ளங்களின் உதவிடன் 75000 ரூபா வரையான நிதி உதவிகள் இவ் வீரருக்கு கிடைக்கப்பெற்றன.

இவர் நாளை 19.03.2017 தனது பயணத்தை ஆரம்பித்து பங்களாதேஸ் மற்றும் இந்தியா நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றி ஒரு மாதத்தின் பின் நாடு திரும்பவுள்ளார்.

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 12 பயணாளிகளுக்கு உதவி!!

 
வவுனியா பம்பைமடு வைகறை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் மருத்துவப்புனர்வாழ்வு பெற்ற 12 பயணாளிகளுக்கு நேற்று (17.03.2017) காலை 9.30 மணியளவில் வைகறை வைத்தியசாலையில் வைத்து வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தினால் நாற்சக்கரக்காலி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், வைகறை நிர்வாக உத்தியோகதத்ர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

மோட்டிவேசன் ஸ்ரீலங்கா, வடமாகாண சுகாதார அமைச்சு இணைந்து இவ்வருடத்தில் வடமாகாணத்தில் மருத்துவப் பனர்வாழ்வு பெற்ற பயணாளிகளுக்கு 110 நாற்சக்கரக்காலிகளை வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு!!

 
வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு நேரங்களில் வீதிகளில் திரிவதுடன் இவற்றினால் அதிகமான விபத்துக்களும் இடம்பெறுகின்றன.

இதேவேளை கட்டாக்காலி மாடுகள் வயல் வெளிகளுக்கு சென்று விவசாய நிலங்களில் சேதம் விளைவிப்பதாகவும் தாம் பெரும் நஸ்டம் அடைவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

3851 ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் படைத்த சாதனை!!

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே நடந்த ஒருநாள் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒரு நாள் போட்டி நோய்டாவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்கள் குவித்து, 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் சார்பில் பால்ஸ்டிர்லிங் 6 விக்கெட்டுகளும், அயர்லாந்து அணி சார்பில் ராசித்கான் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

ஒரே போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது 3,851 ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கார் பந்தய போட்டியாளர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் விபத்தில் பலி!!

சென்னையை சேர்ந்த பிரபல கார் ரேஸர் அஸ்வின் சுந்தரும் அவர் மனைவியும் கார் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர் (31), பிரபல கார் ரேஸ் வீரரான இவர் 2003ல் இருந்து 2013ம் ஆண்டு வரை கார் ரேஸ்களில் பல சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அஸ்வின் தனது மனைவியுடன் சென்னையில் எம்.ஆர்.சி நகர் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார் அஸ்வினின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்படித்து கொண்டதால் காரில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய் : அதிர்ச்சி தரும் காரணம்!!

சிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு வயதில் குழந்தை ஒருவர் உள்ளார்.

இதை இரண்டாவதாக திருமணம் செய்த பெண் தான் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் திடீரென்று அக்குழந்தையின் கண்களை தாக்கி பிடுங்கியுள்ளார். இதனால் அக்குழந்தை இரத்தம் வழிந்த நிலையில் வலி தாங்கமுடியாமல் கதறியுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் அப்பெண் இரவு நேரத்தில் படுக்கையை ஈரம் செய்த காரணத்தினாலே இது போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

அப்பெண் குழந்தையை தாக்கும் போது, குழந்தையின் தந்தை அருகில் இருந்ததாக கூறப்படுகிறது.மனிதாபிமானம் இன்றி இது போன்ற செயலில் ஒரு தாய் இருக்கும் இடத்தில் ஒரு பெண் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வயது குழந்தைகள் படுக்கையை ஈரம் செய்வது ஒன்றும் புதிதல்ல, 12ல் 1 குழந்தை படுக்கையை ஈரம் செய்யத்தான் செய்யும் என்று என்ஹச்எஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அக்குழந்தை ஒரு இடத்தில் இரத்தம் வழிந்த நிலையில் உட்காரவைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

நான் ஜெயலலிதாவின் மகன் என்ற இளைஞனுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!!

ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வருகிறார்.
மேலும் தனது சொத்துக்களை மீட்டு தாருங்கள் என நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், நான் 1985ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் திகதி பிறந்தேன். மறைந்த எம்.ஜி.ஆர் முன்னிலையில் ஜெயலலிதா என்னை தத்து கொடுத்து விட்டார்.

அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்து போட்டுள்ளனர். ஜெயலலிதாவை நான் அடிக்கடி வந்து சந்திப்பேன் எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பேசிய நீதிபதி, இதை பார்த்தாலே பொய் வழக்கு என தெரிகிறது.

மேலும், இந்த உயர்நீதிமன்றத்தை உங்களது தனிப்பட்ட விளையாட்டுக்கு பயன்படுத்துகிறீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என கிருஷ்ணமூர்த்தியை எச்சரித்த நீதிபதி, நீ சமர்ப்பித்துள்ளது போலி ஆவணம் என தெரிகிறது.

ஜெயலலிதா கையெழுத்திட்ட ஒரிஜினல் பத்திரத்தை திங்கள்கிழமை பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.