வவுனியா மசாஜ் நிலையத்திற்கு எதிராக நகரசபைச் செயலாளர் அதிரடி நடவடிக்கை!!

 
வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று (04.02.2017) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் உடனடியாக குறித்த மசாஜ் நிலையம் இயங்கிய இடத்திற்கு விரைந்து கட்டிடத்திற்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை ஒட்டியுள்ளார்.

இக் கட்டடத்தில் நாடாத்திச் செல்லப்படும் மசாஜ் நிலையத்தினை உடனடியாக பூட்டுவதுடன் உரிய அனுமதி பெற்றிருப்பின் 06.02.2017ம் திகதி காலை 9 மணிக்கு நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக 1987ம் ஆண்டு நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255க்கு அமைவாக தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்குத் தொடரப்படும் என கட்டிடத்தின் முன்னால் நகரசபை செயலாளரால் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்!!

 
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகளும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சபை பேரூந்துகளும் இன்று (05.02.2017) முதல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்னர் இடம்பெற்ற தனியார் பேரூந்து மற்றும் இ.போ.ச பேரூந்து எவ்வாறு சேவையில் ஈடுபட்டதோ அவ்வாறு சேவையில் ஈடுபடுவதுடன் இணைந்த நேர அட்டவணை தயாரித்து அதன் பின்னர் சேவை புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வது என்ற முடிவு நேற்றைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நீண்ட கலந்துரையாடலில் பின்னர் எடுக்கப்பட்டு இ.போ.ச. சாலை ஊழியர்கள் மேற்கொண்ட உணவுத் தவிர்ப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும் இன்று (05.02.2017) இ.போ.ச பேரூந்துக்கள் மத்திய பேரூந்து நிலையத்திலும் தனியார் பேரூந்துக்கள் புதிய பேரூந்து நிலையத்திலிலும் சேவையில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்தின் மீது கல்வீச்சு : மூவர் காயம்!!

 
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வெள்ளிக்கிழமை (03.02.2017) மாலை 6.00 மணிக்கு 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த தனியார் பேருந்து கொடிகாமம் சந்தியை கடந்து செல்லும் போது பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் பேரூந்தின் சாரதி புஸ்பராசா சிவானந்தன் (31 வயது) படுகாயமடைந்ததுடன் பேருந்தில் பயணம் செய்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது : சாய்பல்லவி!!

பிரேமம் மலையாளப் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒன்லைன் வாக்கெடுப்பில் 2016 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகையாக இவருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

எளிமையாகக் காட்சியளிக்கும் இவரது தோற்றம் இரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இது குறித்து சாய்பல்லவி தெரிவித்ததாவது,

மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை தெரிவு செய்த இரசிகர்கள் இனிமையானவர்கள். பிரேமம் படத்தில் நான் நடித்தேன். ஆனால், இதுவரை என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது.

இப்போதும் அதை நம்ப முடியவில்லை. நான் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தினமும் தியானம் செய்கிறேன். உடல் எடை அதிகரிக்கும் போது அதைக் கட்டுப்படுத்த யோகா செய்கிறேன். நான் சுத்த சைவம். கடந்த 3 ஆண்டுகளில் எனக்கு காய்ச்சல் வந்ததே இல்லை. தியானம்தான் இதற்குக் காரணம்

வௌ்ளை மாளிகையில் பணிபுரிவோருக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்தார் ட்ரம்ப்!!

வௌ்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பான ஆடை அணிந்து வர வேண்டும் என்றும் தங்களது புறத்தோற்றத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம் ட்ரம்ப்.

அதாவது, “பெண்கள் பெண்களைப் போலவும், ஆண்கள் ஆண்களைப் போலவும்” உடையணிந்து வர வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜீன்ஸ் உடை அணிவதற்கு தடை போடவில்லை. ஆனால், பெண்கள் ஜீன்ஸ் அணிந்தாலும் அவர்களது தோற்றம் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

பிரிட்னி ஸ்பியர்ஸ் போல் தோற்றமளிப்பதற்காக 80,000 அமெரிக்க டொலர்கள் செலவு செய்த இளைஞர்!!

அமெரிக்காவைச் சேர்த்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் தீவிர ரசிகர் ஒருவர் அவரைப் போலவே தோற்றமளிக்க 80,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரையன் ராய். மரிஜுவானா கலந்த உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியும், நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸின் தீவிர ரசிகராவார்.

அவரைப் போலவே தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்ட ராய், அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
இதற்காக பல்வேறு விதமான சிகிச்சைகளில் அவர் ஈடுபட்டார்.

முதற்கட்டமாக உடல் எடை கூட்டும் ஊசிகள், மூக்கு அறுவை சிகிச்சை, உடலில் வளந்துள்ள அதிகப்படியான முடியை நீக்க லேசர் கதிர் சிகிச்சைகள், உதடு சீரமைப்பு சிகிச்சைகள், பின்புறத்தைப் பெரிதாக்கும் ஊசிகள் என மொத்தமாக 90 முறை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

இத்துடன், அவர் நின்றுவிடவில்லை. தன்னுடைய தோலை இளமையாக வைத்திருக்க பல்வேறு விதமான க்ரீம் மற்றும் லோஷன்களையும் பயன்படுத்துகிறார். இதற்காக மாதமொரு பெரிய தொகையை செலவிடுகிறார்.

தன்னுடைய வளர் இளம்பருவத்தில் தன்னை முழுமையாக அறிந்துகொள்வதற்கு பிரிட்னி ஸ்பியர்ஸ் பெரிதும் உதவினார் என்று கூறும் ராய், தற்பொழுது வெஸ்ட் ஹாலிவுட் பகுதிகளில் உள்ள இரவு விடுதிகளில் பிரிட்னி ஸ்பியர்ஸின் பிரபலமான பாடல்களுக்கு நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அலரி மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுத்த இந்தியப் பிரஜை கைது!!

அலரி மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான சந்தேகநபர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

195 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான வினோத பொருள் கண்டுபிடிப்பு!!

 
உலகில் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சுமார் 195 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர் ஒன்றின் என்பை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வினோத பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது மிகவும் மென்மையான இழையம் ஒன்று காணப்பட்டுள்ளது.

ரொரன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இவ் இழையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் புரதங்களினால் ஆன ஒரு கட்டமைப்பு என குறித்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த Robert Reisz என்பவர் தெரிவித்துள்ளார்.

மேடையில் நடனமாடிய பிரபல நடன கலைஞர் சுருண்டு விழுந்து பலி : வெளியானது அதிர்ச்சி வீடியோ!!

மேடையில் பரதநாட்டிய நடனம் ஆடி கொண்டிருந்த நடன கலைஞர் திடீரென அதே இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஓமனகுட்டன் (48) பிரபல பரதநாட்டிய கலைஞரான இவர் இந்தியா முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் 400 மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார்.

இவர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி கொண்டிருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இணைந்து நடனம் ஆடினார்.

ஆடி கொண்டிருக்கும் போதே ஓமனகுட்டன் அதே மேடையில் சுருண்டு விழுந்துள்ளார். முதலில் இதை பார்க்காத அருகில் இருந்த பெண் பின்னர் இதை கவனித்து உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார்.

உடனே ஓமனகுட்டனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

ஓமனக்குட்டனின் இறப்பிற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகள் எரியூட்டியமையானது வடமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானது!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஏற்பதும், மறுப்பதும், விமர்சனம் செய்வதும் ஜனநாயக ரீதியான நிலைப்பாடு என்ற போதிலும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும், நாகரிகமற்ற முறையில் ஏளனப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளவோ,அனுமதிக்கவோ முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (4) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா சம்பந்ததனின் உருவப்படங்கள் வவுனியாவில் எரியூட்டப்பட்டது.

காணாமல் போனோரின் உறவுகள் என்ற பெயரில் ஒருவரின் வற்புறுத்தலாலும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவுமே அது நடந்தேறியதேயொழிய அது வவுனியா மக்களின் நிலைப்பாடு அல்ல.

அதே போன்றே நேற்றைய தினம் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகளை யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னாரில் எரியூட்டியது வடக்குமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானதாகும்.

அமைச்சர் இலங்கை அரச போச்குவரத்துச் சபை ஊழியர்களை விமர்சித்திருந்தால் பதிலுக்கு கருத்துக்களால் விமர்சிப்பதே உகந்த நடைமுறையாகும்.

ஆனால் நடந்த உருவபொம்மை எரிப்பானது வன்முறைக்கு ஒப்பான நிகழ்வு என்பதனால் குறித்த சம்பவம் கண்டிக்கப்படக்கூடியதாகும்,

இலங்கை அரச போக்குவரத்துச்சபை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, போராட்டம் என்பதும், போக்குவரத்து சேவையை நிறுத்தியிருப்பதும் அவர்களின் ஜனநாயக போராட்ட வழி முறையாகும்.

இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகளையும், நியாயப்பாடுகளையும் வலியுறுத்தி, நீதிகோரி நிற்கும் போது முழுமையான ஆதரவு தெரிவிப்பது எம்மைப்போன்ற ஜனநாயகவாதிகளின் கடமையாகும்.

அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதும் எமது கடமையாகும்.

ஆனால் உருவபொம்மை எரிப்பானது மக்கள் பிரதிநிதி ஒருவரை உயிருடன் எரிப்பற்கு ஒப்பான வன்முறை செயற்பாடாகும் என்பதனால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மத்திய மாகாண அரசு மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும் இலங்கை அரச போக்குவரத்து, தனியார் போக்குவரத்து பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டியவையே. புரிந்து கொள்ளலும், விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல் தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இப்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமானதல்ல.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரமான, தீர்வினையும்,முடிவுகளையும் எட்ட வவுனியாவில் இலங்கை அரச போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் என்பன திறந்த மனத்துடன் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் உடன்பாட்டுக்கு வருவது சேவைமனப்பான்மையுள்ள ஒவ்வொரு ஊழியர்களினதும் கடமையாகும்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாட்களாக செய்துவந்த காரியம் : வசமாக மாட்டிய 19 வயது இளைஞன்!!

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சீதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 19 வயதுடைய இளைஞர் என்றும், குறித்த நபரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள பல பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் உதம்மிட பிரதேசத்தினை சேர்ந்தவர் என்றும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு!!

 
இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இருதரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு மற்றும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பேரூந்து சேவையினை சீர் செய்வதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்..

இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்குமிடையில் கடந்த ஐந்து நாட்களாக கருத்து முரண்பாடுகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைத் தரப்பினர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு பஸ் சேவை இடம்பெறாமல் சிரமமான நிலை ஏற்பட்டு இருந்தது.

இந் நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வட மகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நான் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான ஜயதிலக, மயூரன் உட்பட அரசாங்க அதிபர், பொலிஸ் தரப்பினர், மற்றும் இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து துறையை சேர்ந்த பொறுப்பானவர்கள் அதனுயை தொழிற்சங்கங்கள் என அனைத்தும் சேர்ந்து பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டெனிஸ்வரன் தலைமையில் அவருக்கு கீழ் உள்ள தலைவர் நிக்கிலஸ்பிள்ளை அவருடன் சேர்ந்து வட மாகாண போக்குவரத்து சபையின் சி.ஆர்.எம். நிறைவேற்றுப் பணிப்பாளர், வட மாகாண தனியார் பேரூந்து சபையின் தலைவர் செயலளார் உட்பட நான்கு உத்தியோகத்தர் வீதம் இணைந்து மிக விரைவில் இணைந்த நேர அட்டவனையினை தயாரிப்பதாகவும் அதனை மிக விரைவில் அமைச்சரிடம் கையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மாவட்டத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கான பேரூந்து நிலையமாக செயற்படுமெனவும் அதுவரை இரு தரப்பினரும் புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டார்களோ அது போல் முரண்பாடுகள் இன்றி செயற்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட உள்ளுர் சேவைகளை பழைய பேரூந்து நிலையத்தில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படும் வகையில் இணைந்த நேர அட்டவனை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே இதற்கு இரண்டு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்.

அங்கு கருத்து தெரிவித்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையினை நடத்தவேண்டும் என்பதற்காகவே கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன்.

இரண்டு தரப்பினருக்குமிடையில் உள்ள முரண்பாட்டை ஆராய்கின்றபோது இணைந்த அட்டவணை இல்லாமைதான முக்கிய காரணமாக இருக்கின்றது.

குறிப்பாக வெளி மாவட்டங்களுக்கான இணைந்த நேர அட்டவனை தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையினரின் கோரிக்கையான மாவட்டங்களுக்கிடையிலான உள்ளுர் சேவைக்கான இணைந்த நேர அட்டவணையும் தயார் செய்து அதனை அமுல்படுத்தப்பத்தவும் தாயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

ஆகவே தனியார் துறையினரிடமும் அது தொடர்பில் கேட்டிருக்கின்றேன். இணைந்த நேர அட்டவணை தயார் செய்யப்பட்வுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சந்தர்ப்பத்தில் யாரேனும் அதனை மீறுவார்களேயானால் ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேபோல் பல லட்சம் ரூபா பெறுமதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அது தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது. இணைந்த நேர அட்டவணையை ஒரு வார காலத்தில் தயார் செய்து தருகின்றபோது மறுதினத்தில் இருந்தே புதிய பேரூந்து நிலையம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், ஏ.ஜயதிலக உட்பட்ட பிரமுகர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு சென்று அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு மூடுவிழா!!

இன்று (04.02.2017) பிற்பகல் 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் புதிய பேரூந்து நிலையத்தினை முடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் முதலாம் குருக்குத்தெரு மற்றும் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியிலிருந்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுவதுடன் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை இன்று முதல் மார்ச் 31ம் திகதி வரை முடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வவுனியாவில் ஆயுதமுனையில் 3 வீடுகளில் கொள்ளை!!

 
வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் நேற்று(03.02.2017) இரவு 8.45 மணியளவில் மூன்று வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

நேற்று இரவும் 8.45 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்ற கொள்ளையர்கள் தம்மை சிஐடி எனத் தெரிவித்து வீட்டில் உள்ளவர்களின் அடையாள அட்டைகளை காட்டுமாறு தெரிவித்துள்ளனர்.

வீட்டின் குடும்பத்தலைவர் அடையாள அட்டையை எடுக்கச் சென்றவேளை அவரையும் வீட்டில் உள்ளவர்களையும் ஆயுதமுனையில் மிரட்டி 17 பவுண் தங்க நகைகள், 66 000 ரூபாய் பணம், கைத்தொலைபேசி ஒன்று உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தங்கள் முகங்களை கறுப்புத் துணியால் மறைத்திருந்ததாகவும் வாள், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் பணம், நகைகளைத் தருமாறு தம்மைத் தாக்கியதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதே நேரம் அப் பகுதியில் மூன்று வீடுகளில் கொள்ளயிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை பூவரசங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு!!

அமெரிக்காவின் சட்டமா மன்ற மேலவை உறுப்பினரான கமலா ஹாரிஸின், நீண்டகால செனட் உதவியாளராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohini Kosoglu என்ற,பெண்ணுக்கே இந்த நியமனம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக சட்டமா மன்ற மேலவையில் சட்டம் மற்றும் அரசியல் கொள்கை நிபுணராக Rohini Kosoglu கடமையாற்றியுள்ளார். அவர் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றுள்ளார்.

அண்மையில்,சட்டமா மன்ற மேலவை உறுப்பினர் மைக்கேல் பென்னட்டின் கொள்கை இயக்குனர் மற்றும் மூத்த ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

”ரோகினி போன்ற வலுவான அறிவுடைய ஒருவர், எங்களது அணியில் இணைவதற்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என” அமெரிக்காவின் சட்டமா மன்ற மேலவை உறுப்பினரான கமலா ஹாரிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தேசத்தின் இலட்சியங்களுக்காக போராட ரோகினியுடன் நெருக்கமாக வேலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நான் எதிர்ப்பார்க்கின்றேன் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டுத்தொகுதி : பம்பலப்பிட்டியில் பிரமாண்டம்!!

வரலாற்றில் முதல் முறையாக ஹெலிகொப்ட்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டு தொகுதி ஒன்றின் நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பம்பலபிட்டியில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீட்டுத்தொகுதி, மிகவும் உயரமானதாக அமையவுள்ளது. ACHILLEION என பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

30 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீட்டு திட்டத்தை 2020ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

வீட்டு தொகுதிக்கு மேல் பகுதியில் ஹெலிகொப்டர் முற்றம் ஒன்றும் நிர்மாணிக்கப்படுகின்ற நிலையில், தனிப்பட்ட ஹெலிகொப்பட்டர் ஒன்று குடியிருப்பாளர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ளது. நிலையில், 5 மோட்டார் வாகனங்கள் இதற்காக ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு கோபுரங்களிலான இந்த கட்டடத்தில் 54 மாடிகள் மாடிகளில் 584 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இலங்கையில் முதலாவது வான் பாலம், முதல் விமான நீச்சல் தடாகம் மற்றும் பாரிய பல்கலைக்கழகம் மற்றும் தனிப்பட்ட திரையரங்கமும் இந்த வீட்டுத் தொகுதியில் உள்ளடக்கப்படவுள்ளது.