வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் (04.02.2017) 3ம் நாளாக தொடர்கின்றது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணம் முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இவ்வேளை இன்றைய தினம் (04.02.2017) தமது ஆதரவினை வழங்கும் முகமாக யாழ்ப்பாண இ.போ.ச போக்குவரத்து ஊழியர்கள் வவுனியா நகரில் இருந்து உண்ணாவிரதம் இடம்பெறும் வவுனியா இ.போ.ச சாலைக்கு பதாதைகள் ஏந்தியவாறு பேரணியாக வந்து ஆதரவை வழங்கினார்கள்.
வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் பிரதிஷ்டா பிரதம குரு “சிவாகம பூஷணம்” சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் கிரியைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபால சபையினரினதும், ஊர் மக்களின் அயராத உழைப்பினாலும் இன்றையதினம் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கிரியைகள் மிக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (04.02.2017) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா தேக்கவத்தைப்பகுதியிலுள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து பேரணியாகச் சென்ற அப்பகு மக்கள் அதிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கண்டி வீதியிலுள்ள குறித்த மசாஜ் நிலையத்தினை அகற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன், வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம.ஆனந்தராஜ், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, கிராமசேவையாளர்கள் மக்களுடன் கலந்துரையாடினர்.
குறித்த மசாஜ் நிலையமானது நகரசபையில் அனுமதி பெறப்படாமல் செயற்பட்டு வருவதாக தெரிவித்து நகரசபை செயலாளர் இன்றிலிருந்து அதனை நிறுத்துவதாகத் தெரிவித்துடன் திங்கட்கிழமை சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வததாகத் தெரிவத்ததையடுத்து அப்பகுதி மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டுள்ளனர்.
குறித்த மசாஜ் நிலையமானது நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன் அங்கு செயற்பாடுகள், விளம்பர காட்சிப்படுத்தல் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று (04.02.2017) காலை 8.20 மணிக்கு சுதந்திர நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஹோகன புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர்.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன்,
வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம.ஆனந்தராஜ், வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கருணதாச மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்ர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்த தம்பதிகள் கொலம்பியாவின் போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யக் கூடிய மேடெல்ளின் என்ற பகுதியில் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது இவர்கள் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகினர். ஆழ்ந்த துயரத்தில் இருந்த அந்த தருணத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலுடன், போதை பழக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளிவந்தார்கள்.
அவ்வாறு போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்த பிறகும் கூட இவர்களுக்கு உதவுவதற்கு நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தினால், சாக்கடையில் தங்கி வாழ்வதற்கு முடிவு செய்தார்கள்.
பின் இந்த தம்பதிகள் வாழ்க்கையின் துவக்கத்தில், நிறைய தொல்லைகள் ஏற்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி, தங்களுக்குள் காதலை வளர்த்து வாழ்ந்து வந்தார்கள்.
மனதில் நிறைந்த காதலுட வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் சாக்கடையை விட்டு வெளியேறும் எண்ணம் கொள்ளாமல், தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் வாழ்ந்து வருகின்ற சாக்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின்வசதி, சமையல் அறை, விளக்குகள் இவை அனைத்தையும் அமைத்துக் கொண்டு மற்றவர்களை போல கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கூட கொண்டாடுகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் இந்த தம்பதிகள் பிளாக்கி எனும் நாயை தனது வீட்டின் காவலனாக வளர்த்து வருகின்றார்கள்.
உலகில் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்தொழிவதற்கு காரணமாக முக்கிய 3 காரணிகளை பட்டியலிட்டு எச்சரித்துள்ளனர் பிரபல பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
உலகம் அழிவது குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு புது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உலக தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஆய்வறிக்கையில், உகலம் கொடுமையான நோய் தொற்று, கடுமையான காலநிலை மாற்றம் மற்றும் அச்சுறுத்தும் அணுவாயுத யுத்தம் ஆகியவைகளால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்தொழியும் என எச்சரித்துள்ளது.
ஆனால் தற்போதையை அரசியல் சமூக சூழலை எடுத்துக்கொண்டால் குறித்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் எந்த நடவடிக்கையும் உலக அரசியல் வட்டாரங்கள் மேற்கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி உடனடி தேவையாக வல்லரசு நாடுகள் உருவாக்கிக் குவிக்கும் உயிரியல் ஆயுதங்களை கட்டுப்படுத்துவது முக்கிய கடமையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
சமகாலத்தில் அரங்கேறும் பல நிகழ்வுகளும் உலக அழிவு என்பது மிக அருகாமையில் உள்ளது என்பதை துல்லியமாக படம்போட்டு காட்டுவதாக குறிப்பிட்ட ஆய்வாளர்கள், தேசிய அளவில் முன்னெடுக்கும் தொடர் நடவடிக்கைகளை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல உலக தலைவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலக மக்களை அச்சுறுத்திய ebola மற்றும் zika தொற்று என்பது சர்வதேச அளவில் தடுக்கப்படவேண்டியதும், அது உலக தலைவர்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்கள் மற்றும் அதுசார்ந்த முடிவுகள் விரைந்து எடுக்கப்பட்டு நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.
கொடிய நோய் தொற்று, பருவநிலை மாற்றம் என்பவை தேச எல்லைக்கோடுகளை எப்போதும் மதிப்பதில்லை என எச்சரிக்கும் ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்கள் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஹோப் சாத்தானின் சந்ததி எனக் கூறி பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குற்றுயிராய் டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்தவரும், தற்போது ஆப்ரிக்காவில் வசித்து வரும் Anja Ringgren Loven என்பவரது மீட்புக் குழு அங்கு சென்றுள்ளது. அப்போது பரிதாப நிலையில் இருந்த குழந்தை ஹோப்பைக் கண்ட Loven கையில் சாப்பிடுவதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்து விட்டு, அதன் பின்னர் தன்னிடம் இருந்த தண்ணீரை அந்த குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.
குழந்தை ஹோப் மீது பரிதாபம் கொண்ட அவர், சிறுவனின் அந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை அங்கிருந்த மக்களிடம் இருந்து கேட்டரிந்தார். இதில் மனமுடைந்த லாவன் சிறுவனை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க வகை செய்தார். அதில் ஹோப்பிற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரத்த சிவப்பணுக்கள் ஏற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து தினசரி இரத்தம் மாற்றுதல் என பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் Loven தன்னுடைய சமூகவலைத்தில் பதிவேற்றம் செய்தார். அதில் 30 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு தானும் தன் மீட்பு படையினரும் சென்ற போது அங்கு இருந்த சிறுவனின் நிலை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹோப்பை சமூகவலைத்தளங்களில் கண்ட அனைவரும் மிகவும் அனுதாபப்பட்டனர். அதைத் தொடர்ந்து இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதனால் ஹோப்பிற்கு உதவுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கு பணம் அனுப்பப்பட்டன. இந்த வகையில் ஒரு மில்லியன் டோலருக்கும் அதிகமான நிதி சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு பின்னர் ஹோப் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்ட உடன் Loven குழந்தைகளின் தொண்டு நிறுவனமான African Children’s Aid Education and Development Foundation ல் சேர்த்து விட்டார்.
தற்போது ஹோப் நல்ல உடல் தகுதி பெற்று பள்ளிக்கு சென்று விட்டான் என்று கூறி புகைப்படத்தை Loven சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அன்று சாத்தானின் சந்ததி என பெற்றோரால் கைவிடப்பட்ட ஹோப் இன்று உலக மக்கள் உதவியுடன் நல்ல நிலையில் இருப்பது இதற்கு முக்கிய காரணம் Loven என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.
மும்பையில் ஓடும் ரயில் முன்னர் பாய்ந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் வழக்கம் போல நேற்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது பிளாட்பாரம் அருகே ஒரு இரயில் வந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு நபர் ரயில் தண்டவாளத்தில் குதித்தார். பின்னர் பயத்தில் அவர் அப்படியே தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.
இதை பார்த்த இரயில் ஓட்டுனர் ரயிலின் வேகத்தை குறைக்க முயன்றார். ஆனாலும் அவரால் வேகத்தை குறைக்க முடிந்ததே தவிர ரயிலை நிறுத்த முடியவில்லை.
அந்த நபரை கடந்து ரயில் சென்றது. ஆனால் தண்டவாளத்தில் ரயிலுக்கு அடியில் படுத்திருந்த அவர் சிறு கீரல் கூட ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டார்.
பின்னர் பொலிசார் வந்து அவரை விசாரித்ததில் அவர் பெயர் Dinkar Sakpal (65) என தெரியவந்தது.
மேலும் அவருக்கு புற்று நோய் இருப்பதும், குடும்பத்தை பிரிந்திருப்பதும் தெரியவந்ததுள்ளது.
இந்த விரக்தியினால் தான் அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை பொலிசார் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பினார்கள்.
உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநில பொலிசாருக்கு மொபைல் போன் மூலமாக பெண்கள் அதிக அளவு ஈவ்டீசிங் செய்யப்படுகிறார்கள் என புகார் வந்ததையடுத்து, உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உதவி மையம் ஒன்றை அமைத்தார்.
மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யப்பட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090 என அறிவித்தார்.
கடந்த 4 வருடங்களில் இந்த உதவி மையத்தில் 6 லட்சம் புகார்கள் குவிந்து உள்ளன.இந்த புகார்களில் 90 சதவீதம் போன் மூலம் துன்புறுத்தப்படுவதாக பதிவானது.
இந்நிலையில் பொலிசார் விசாரணையில், இளம் பெண்களின் போன் எண்கள் ரீசார்ஜ் கடைகள் மூலம் வெளிப்படுத்தப்படுவதாக தெரியவந்தது. மேலும் இளம் பெண்களின் மொபைல் எண் கொடுக்க ரீசார்ஜ் கடைகள் பணம் வாங்கி உள்ளன எனவும் தெரிய வந்தது.
மிகவும் அழகான பெண் மொபைல் போன் எண் கிடைக்க வேண்டும் என்றால் ரூ. 500 வரை வசூல் செய்து உள்ளனர். சராசரி பெண்களின் எண்களுக்கு ரூ. 50 வரை வசூலித்து உள்ளனர்.
தற்போது இதுகுறித்து விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் காதலியை கொலை செய்து விட்டு, வீட்டுனுள் புதைத்து வைத்த காதலன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உதயன் தாஷ். இவருக்கு பேஸ்புக் மூலம் அஹங்ஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் அதன் மூலம் மனம் விட்டு பேசியுள்ளனர். நட்பாக இருந்து வந்த இவர்கள் உறவு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் காதலில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இது பெரிதும் முற்றியதால் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த உதயன் தாஷ், அஹங்ஷாவை கொலை செய்து வீட்டினுள் புதைத்து வைத்துள்ளார்.
அஹங்ஷாவின் பெற்றோர் அவருடைய தொலைப் பேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து தொலைப்பேசியை எடுக்காததால் சந்தேகமடைந்து பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகமடைந்த பொலிசார் உதயன் தாஷ்வின் வீட்டை சோதனை செய்த போது, அஹங்ஷா கொலை செய்யப்பட்டு வீட்டினுள் புதைத்து வைத்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி ஊர்காவற்துறை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு நீதிபதி ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணம் செய்திருந்தார்.
இதன்படி, சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் கடந்த 24ஆம் திகதி காலை 11.30 மணியளவில் மருதனார் மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பி உள்ளார்.
அதற்கான ஆதாரமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கெமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனை கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன், மற்றைய சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நேரத்தில் வேலனைப் பகுதியில் துவிசக்கர வண்டியில் விபத்துக்குள்ளான நிலையில், இந்த பகுதியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதனை, குறித்த சந்தேகநபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வதன் மூலம் அவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சந்தேகநபர்கள் உரையாடியதனை வைத்து அவர்கள் எந்த வலையமைப்பில் இருந்து உரையாடியுள்ளார்கள் என்பதனை கண்டறிய முடியும்.
இதன் ஊடாக கொலை இடம்பெற்றதாக கூறப்படும் நேரத்தில் சந்தேகநபர்கள் எந்த பகுதியில் இருந்தார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியும் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளி பதிவுகள், மற்றும் வேலனைப் பகுதியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் சிகிச்சை நிலையத்தின் வைத்தியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிபதி ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான கால பகுதியில் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் 24ஆம் திகதி ஊர்காவற்துறை பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இக்னோரியா பகுதியின் கார்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாரயண் சிங்(38). விவசாயியான இவருக்கு சரிதா(28) என்ற மனைவி உள்ளார். சரிதாவுக்கு அப்பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த நாரயண் தன் மனைவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தன் மனைவி மீது சந்தேகம் தீராத அவர் மனைவியை கண்காணிப்பதற்கு உளவாளி ஒருவரை தயார் செய்துள்ளார்.
அவரும் அவ்வப்போது மனைவி குறித்து தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி சரிதா அவர் கதலனுடன் ஊர் சுற்றியது போல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சரிதாவின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு, அப்பகுதியில் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தலையை கொண்டு சென்று சரண் அடைந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மனைவியின் கள்ளக்காதல் நாரயணனுக்கு தெரிந்துள்ளது. அதன் பின்னர் அவர் இரண்டு முறை அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை இதனால் அவர் சரிதாவை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நாரயண் சிங்கிடம் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12000 கி.மீ தொலைவில் வெவ்வேறு பத்து நிலைகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை ஒன்றை சீனா பரிசோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கு மேலதிக அழுத்தம் தரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவின் தாயுவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சீனா சோதனை மேற்கொண்டுள்ள DF-5 ரக ஏவுகணை குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளதாகவும், சர்வதே ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஏவுகணை சோதனை முயற்சியில் சீனா மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒருபகுதியாக புதுரக MIRV பேருந்துகளை பயன்படுத்தி வருகிறது.
இதனால் குறிப்பிட்ட எல்லையில் இருந்து பல்வேறு நிலைகளை குறிவைக்க முடியும் என கருதப்படுகிறது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்க பாதுகாப்பு வல்லுனர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னரே சீனா இதுபோன்ற பல நிலைகளை தாக்கும் ஏவுகணைகளை சோதனைக்கு கொண்டு வந்துள்ளது.
தென் சீனக்கடலில் சீனா செயற்கை தீவுகளை அமைத்துள்ளதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுபெற தொடங்கியுள்ளன.
சீனாவின் இத்தகைய ஆதிக்கத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது. எனினும், அமெரிக்காவின் நுழைவிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதன் காரணமான தென் சீனக்கடல் பகுதி பதட்டமான பகுதியாகவே இருந்து வருகின்றது. மேலும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றால் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பார் என கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், சீனா ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, தேக்கவத்தை A9 வீதி பகுதியிலேயே வீதியின் இரு பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை சுவசெவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிஸ்சார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அப்பகுதி மக்களால் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் குறித்த மசாஜ் நிலையம் தொடர்பில் முறைப்பாடு செய்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொலிசார் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டனர். தற்போதும் கறுப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.
மியான்மார் இராணுவத்தினரின் நடவடிக்கையில் இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்ட ரொஹிங்யா முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினருக்கும், ரொஹிங்யா முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வந்தது. குறித்த மோதலில் முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால், ஏராளமானோர் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாக குடியேறினர்.
ரக்கினே பகுதியிலிருந்து ரொஹிங்யா முஸ்லீம்களை அப்புறப்படுத்தும் பணியில் மியான்மர் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம்பெற்றுள்ளதோடு, அந்நாட்டு இராணுவம் இனஅழிப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டனர்.
மேலும் கடந்தவாரம் வெளியாகவிருந்த விசாரணை அறிக்கைகளும், அந்நாட்டு அரச தலையிட்டால் பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர் ராணுவத்தினரின் நடவடிக்கையில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம். எனவும் பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பலியானவர்களில் கணிசமான குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் குறித்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் சயீத் ராத் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளதாவது, மியன்மார் அரசை தம் கண்டிப்பதாகவும், அந்நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.
பெளத்தர்கள் அதிகமாக வாழும் மியன்மாரை, நோபல் பரிசு பெற்ற ஆன் சாங் சூகி ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் சிறுபான்மையினர் மீது அதிக கவனம் செலுத்துமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மியன்மார் அரசை வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரசவ வலியில் துடிக்கும் பெண் மீது மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்ணின் அடாவடித்தனமான காணொளி இணையத்தில் பகிரப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், பிரசவ வலியில் துடிக்கும் தனது மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். அவர் செலுத்திச் சென்ற கார் தவறுதலாக ‘ஓடி’ (Audi) கார் ஒன்றுடன் மோதியது. இதில், ஓடி காரின் முன்புறம் சற்றே நெளிந்தது.
ஓடி காரைச் செலுத்திச் சென்ற பெண், விபத்தை ஏற்படுத்திய காரின் சாவியைப் பிடுங்கியபின் கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
காரினுள் கர்ப்பிணியான தனது மனைவி இருப்பதாகவும் அவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர் தெரிவித்தார். அது உண்மைதான் என்று அறிந்தபோதும் அந்தப் பெண் மசியவில்லை. சமாதானம் ஏற்படுத்த முயன்ற பொலிஸாருக்கும் அந்தப் பணக்காரப் பெண் செவிசாய்க்கவில்லை.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், அந்தப் பணக்காரப் பெண் மீது கடும் கோபம் கொண்டனர். ‘சாவியைத் தருகிறாயா, இல்லையா?’ என்று அவர்கள் அந்த ‘ஓடி’ பெண்ணை அச்சுறுத்தவே, வேறு வழியின்றி சாவியைத் தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டு, காரில் ஏறித் தப்பிச் சென்றார்.
இந்தக் காட்சி இணையத்தில் பரவி வருவதுடன், பலரது கண்டனங்களையும் குவித்து வருகிறது.