பிரசவ வலியில் துடித்த பெண் : மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்!!(காணொளி)

பிரசவ வலியில் துடிக்கும் பெண் மீது மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்ணின் அடாவடித்தனமான காணொளி இணையத்தில் பகிரப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், பிரசவ வலியில் துடிக்கும் தனது மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். அவர் செலுத்திச் சென்ற கார் தவறுதலாக ‘ஓடி’ (Audi) கார் ஒன்றுடன் மோதியது. இதில், ஓடி காரின் முன்புறம் சற்றே நெளிந்தது.

ஓடி காரைச் செலுத்திச் சென்ற பெண், விபத்தை ஏற்படுத்திய காரின் சாவியைப் பிடுங்கியபின் கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

காரினுள் கர்ப்பிணியான தனது மனைவி இருப்பதாகவும் அவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர் தெரிவித்தார். அது உண்மைதான் என்று அறிந்தபோதும் அந்தப் பெண் மசியவில்லை. சமாதானம் ஏற்படுத்த முயன்ற பொலிஸாருக்கும் அந்தப் பணக்காரப் பெண் செவிசாய்க்கவில்லை.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், அந்தப் பணக்காரப் பெண் மீது கடும் கோபம் கொண்டனர். ‘சாவியைத் தருகிறாயா, இல்லையா?’ என்று அவர்கள் அந்த ‘ஓடி’ பெண்ணை அச்சுறுத்தவே, வேறு வழியின்றி சாவியைத் தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டு, காரில் ஏறித் தப்பிச் சென்றார்.

இந்தக் காட்சி இணையத்தில் பரவி வருவதுடன், பலரது கண்டனங்களையும் குவித்து வருகிறது.

உலக சாதனைக்கு தயாராகும் இலங்கையர்கள்!!

இலங்கையின் 69வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேசிய சுதந்திர தினத்தில் பேஸ்புக் பக்கத்திலுள்ள இலங்யைர்கள் இணைந்து உலக சாதனை ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர்.

சுதந்திர தினமான நாளை காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலான இரண்டு மணி நேரங்களுக்குள் தங்கள் பேஸ்புக் பக்கத்தின் cover புகைப்படமாக நிலையான அளவு தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை பதிவு செய்யவுள்ளனர். இதனூடாக உலகில் இதுவரை குறைந்த காலப்பகுதியினுள் அதிக cover புகைப்படம் மாற்றிய சந்தர்ப்பம் இதுவாக அமையும்.

பேஸ்புக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்களும் கண்கானிக்கப்படுகின்றது. இலங்கையர்களின் முயற்சி வெற்றியளித்தால் உலகத்திலேயே முதல் முறையாக குறைந்த காலப்பகுதியில் அதிக மக்கள் cover புகைப்படமாக தேசிய கொடியை பதிவேற்றம் செய்யப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகும்.

தங்களின் வீட்டின் முன்னால், வாகனங்களில் தேசிய கொடியை ஏற்றுவது இலகுவான விடயமாகும். உலகளாவிய ரீதியில் இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதன் மூலம் சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் இந்த நடவடிக்கையில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெயரை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு இணையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய வயது இளைஞனுடன் கள்ளக்காதல்: வீட்டை விட்டு ஓடிய இரு குழந்தைகளின் தாய்!!

இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் பக்கத்து வீட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்ததையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காட்னி மாவட்டத்தை சேர்ந்தவர் கயாபிரசாத் இவர் மனைவியின் பெயர் சாவித்திரி .

இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள், ஐந்து வயதில் ஒரு மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சாவித்திரிக்கும் அவர் வீட்டில் அருகில் வசிக்கும் Kevat (21) என்னும் இளைஞனுக்கு கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது.

தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த சாவித்திரி Kevat உடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்ய முயல அதை கயாபிரசாத்துக்கு தெரிந்தவர்கள் யாரோ பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

கோவிலுக்கு உடனடியாக சென்ற பொலிசார் நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா மரணத்திலும் அரசியல் : அம்பலமான நடிகை கௌதமியின் நாடகம்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் ரகசியம் காக்கப்பட்டது ஏன் என்றும், அதற்கான தகவல்களை வெளியிடக்கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கௌதமி கடிதம் எழுதினார்.

இதன் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், இந்நிலையில் தீபக் என்பவர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீபக் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அப்படியொரு கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு வரவில்லை என பதிலளித்துள்ளனர்.

சிக்கலில் முகநூல் : கோடிகளை கொட்டி பிழைத்தது!!

இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பிரதானமானது முகநூல் பக்கமே. தற்போது பாரிய அளவு விமர்சனங்கள் முகநூல் நிறுவனம் மீது திரும்பியுள்ளது.

முகநூல் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டு கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ள காரணத்தினாலேயே இவ்வாறு விமர்சனங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.

அதாவது அண்மையில் இன்னுமோர் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு முகநூல் மீதும் நிறுவுனர் மார்க் மீதும் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 500மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக கொடுத்துள்ளது முகநூல் நிறுவனம்.

இந்த அபராதத் தொகை கிட்டத்தட்ட 75280000000.00 ரூபாய் வரையிலும் இலங்கைப் பெறுமதி ஆகும். ஒரு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியமைக்காக இத்தனை அளவு அபராதம் கொடுக்கப்பட்டமை வியப்பாக பேசப்படுகின்றது.

இதேவேளை இதன் படி ஒரு பக்கம் வறுமை, பிணி, பட்டினி என மக்கள் செத்து மடிய மற்றொரு பக்கம் இவ்வாறான நிலையும் உலகில் தொடர்ந்து வருவதாக சமூக வலைத்தளங்கள் விமர்சிக்கின்றன.

இந்த விடயம் ஒரு வகையில் முதலாளித்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு நவநாகரீகம் வேண்டாமெனக் கோரிக்கை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தலைமுடியில் வர்ணம் பூசுவது, காதணிகளை அணிவது போன்ற நவநாகரீகங்களை (ஃபேஷன்) மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தீர்மானத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு தெரியப்படுத்துமாறு கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதானி ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன் இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் ஒரு வேக பந்து வீச்சாளர் தலைமுடியில் வர்ணம் பூசியுள்ளதை மாற்றிக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது உத்தரவு அல்ல எனவும் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறையான பின்னணியை மேம்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் திறந்துவைப்பு!!

 
இன்று (03.02.2017) காலை 12.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனகுமார, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம், 3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் திறந்து வைப்பு!!

 
வவுனியா, ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் இன்று (03.02.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனகுமார, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், திடீர் மரண விசாரணை அதிகாரி திரு.கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஓமந்தை பாரம்பரிய உணவகம் 2.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கலாச்சார மண்டபம் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைப்பு!!

 
இன்று (03.02.2017) காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை வவுனியாவில் பல்வேறு கட்டிடங்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 59.93 மில்லியன் செலவில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் கலாச்சார மண்டபம், கல்நாட்டினகுளம் மருதநிலம் பொழுதுபோக்கு மையம், 50மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு பொதுப் பூங்காக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்து வைப்பு!!

 
வவுனியா நகரசபை பொதுப் பூங்கா நெல்சிப் திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்டு நகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 9 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பூங்கா இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அதையடுத்து வவுனியா குருமன்காட்டில் வவுனியா நகரசபையின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினையும் வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கே.கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, செ.மயூரன், ஜெயதிலக, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, முன்னாள் நகரசபை செயலாளர் ச.சத்தியசீலன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் 10 அடி உயரமான சிலைகள், 100 கற்குகைகள், ஓலைச்சுவடிகள் : வியப்பில் மக்கள்!!

வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபிகள், 10 அடி உயரமான சிலைகளும் 110க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே குறித்த தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பொறுப்பதிகாரி புலஸ்திகம சிரிரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் சுமார் 50 ஓலைச்சுவடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தாதுப்பொருட்கள் அநுராதபுரம் யுகத்திற்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்புடைய பண்டைக்கால கட்டடங்களும் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் மஹா கச்சக்கொடி பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருளியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த தாதுப்பொருட்களையும், கட்டடத்தையும், ஓலைச்சுவடியையும் பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 11ம் நூற்றாண்டு வரை வரலாற்று ரீதியான அநுராதபுர காலப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதை யுனெஸ்கோ சபை உலக மரபுரிமை நகரமாகவும் தெரிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மொனராகலை கியுலேயாய வெட்டமுகல பிரதேசத்தில் நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஆரம்ப காலத்தில் கல்லில் வரையப்பட்ட புராதன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.

அதில் 200 முதல் 300 ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த கற்பாறை 75 மீற்றர் நீளமும் 20 மீற்றர் உயரமும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இ.போ.ச சாலைக்கு விரைந்த செல்வம் அடைக்கலநாதன் : பரபரப்பான சூழ்நிலை தொடர்கின்றது!!

 
இன்று (03.02.2017) பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, ஆகியோர் கலந்து கொண்டு இ.போ. ச சாலை ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இறுதியில் நாளை 11 மணியளவில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் முடிவு பெற்றுத்தருவதாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதுடன் ஊழியர்கள் தமது போராட்டத்தினை கைவிடப்போதில்லை என்றும் தொடர்ந்தம் தமது போராட்டம் இடம்பெறும் என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா இ.போ.ச ஊழியர்களால் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு இறுதிக்கிரியை : கொடும்பாவியும் எரிப்பு!!

 
வவுனியாவில் இன்று (03.02.2017) தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, ஆகியோர் இ.போ.ச. சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து கலந்தரையாடியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுடனும் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவினை பெற்றுத்தருவதாக தெரிவித்துச் சென்றனர்.

தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலமையில் இவ்விடயம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , கே.கே.மஸ்தான் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, செ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச ஊழியர்களை சந்திக்க மறுத்ததுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தனது செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் டெனிஸ்வரனின் கொடும்பாவிக்கு முன்னால் ஒப்பாரியிட்டு அழுது , சிரித்து, வெடி கொழுத்தி, முட்டியுடைந்து கொடும்பாவியினை எரித்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணத்தில் ஏழு சாலை ( வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை, கோண்டாவில் ) ஊழியர்களும் பேரூந்துக்களில் வவுனியா உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் இப் பணிப்புறக்கணிப்பினால் இரண்டு நாட்கள் வடமாகாண மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில்!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (03.02.2017) அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை மருத்துவ சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும் இதனை ஆட்சேபித்து களனி மருத்துவப்பீட மாணவர்கள் நேற்று (02.02.2017) பேரணி ஒன்றை நடத்தினர்.

முன்னதாக இந்த பேரணிக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தவு பெறப்பட்டிருந்தபோதும் மாணவர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகம் வரை தமது பேரணியை நடத்தினர்.

இதன்போது பேரணி மீது கண்ணீர் மற்றும் தண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் 12 மருத்துவப்பீட மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் மாணவர் மீது தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்தே அரச மருத்துவ அலுவலர் சம்மேளனத்தை சேர்ந்த மருத்துவர்கள் இன்று காலை 8 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் பிரிவுகள் மாத்திரமே இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் இன்றும் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

 
வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இ.போ.ச ஊழியர்கள் நேற்று (02.02.2017) தொடக்கம் வடமாகாண ரீதியாக இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

வவுனியா A9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அதன் காரணமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வவுனியாவில் போக்குவரத்து அமைச்சருக்கு பாடைகட்டிய இ.போ.ச ஊழியர்கள்!!

 
வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் இன்று(03.02.2017) காலை 11.00 மணி தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உரிய தீர்வு கிடைக்காதுவிடின் தற்போது வடமாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எமது பணிப்புறக்கணிப்பு இலங்கை முழுவதும் எமது ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பாக மாற்றமடையும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கொடும்பாவியினை எறிக்கவுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.