வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று (07.08.2016) பிற்பகல் 2.30 மணியளவில் ஆட்கள் குடியற்ற வீட்டுப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டு பல வீடுகளில் தீ பரவியுள்ளது.
ஓமந்தை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக தண்ணீர்த் தாங்கியுடன் அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் பரவியுள்ள தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இனத்தெரியாதவர் ஒருவர் வைத்த தீ காற்றில் பரவி காய்ந்திருந்த புற்கள் பற்றி குடியில்லா பகுதியிலுள்ள வீடுகளிலுள்ள புற்கள், வாழைகள், தென்னை மரங்கள் என்பன தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் கல்வியை வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இதை நடிகர் விஷால் தொடங்கி வைத்தார்.
பெண் கல்வியை வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை தீவுத்திடலில் தொடங்கி நடந்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கியது. இதை நடிகர் விஷால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது..
பெண்கள் தற்போது அரிய சாதனைகளை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். பெண் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியானது.
பெண்கள் கல்வி கற்பது ஒட்டு மொத்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. சமுதாயத்தில் பெண்களும் சொந்தக் காலில் நிற்பதற்கு கல்வியே அடிப்படை. எனவே பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வை அடித்தட்டில் இருக்கும் பெண்கள் வரை கொண்டு சேர்ப்பது நமது கடமை.
பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய எப்போதும் நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் சிவாஜி மணி மண்டபம் அமைக்கும் பிரச்சினை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ‘சிவாஜி மணி மண்டபம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முதல்மைச்சர் மேற்கொள்வார் என்று நம்புகிறேன். எங்களால் ஆன முயற்சிகளையும் எடுப்போம் என்றார்.
ஒரு பச்சிளம் குழந்தை கொடியைப் பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? அக் குழந்தையின் பெயர் லஸ்யபிரியா.3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1 மாதம் இருக்கின்றது.
இந்திய தேசியக் கொடியில் மேற்பகுதியில் சிவப்பு வருமா? பச்சை வருமா? என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும். இத்தனைக்கும் 1ம் வகுப்பு முதல் தேசிய கொடியின் கீழ் நின்று தாயின் மணிக்கொடி பாரீர்… என்று தினமும் பாடியவர்கள் தான்.
ஆனால் ஒரு பச்சிளம் குழந்தை 224 நாடுகளின் கொடியை பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?
அந்த குழந்தையின் பெயர் லஸ்யபிரியா. 3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1 மாதம் இருக்கிறது. இந்த லஸ்ய பிரியா உண்மையிலேயே அதிசய பிரியா தான்.
சென்னை பெரவள்ளூர் சக்திவேல் நகரில் வசிக்கும் லஸ்யபிரியாவின் பெற்றோர் சந்தோஷ்- சாதனாவின் லட்சியம் எப்படியாவது தன் பிள்ளையை கின்னஸ் சாதனைக்கு தயார்படுத்த வேண்டும் என்பது தான்.
அதன் காரணமாகவே கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு குடும்பத் தலைவியாக இருக்கும் சாதனா தனது குழந்தைக்கு பயிற்சி அளிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்.
கொடிகள் மீதான நாட்டத்தை புரிந்து கொண்டு 255 நாடுகளின் கொடிகளையும் சேகரித்தனர். ஒவ்வொரு கொடியையும் காட்டி அந்த நாட்டின் பெயரை சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு தினம் 5 கொடிகள் வீதம் பயிற்சி அளித்துள்ளனர். இப்போது 224 நாடுகளின் கொடிகளை பார்த்து அந்த நாட்டின் பெயரை கட கட வென்று சொல்லிவிடுகிறார்.
குழப்பிக் கேட்டாலும் அவர் எந்தக் குழப்பமும் இல்லாமல் கொடியை பார்த்து சட்டென்று சொல்லிவிடுகிறார். 8 நிமிடத்தில் 224 நாடுகளையும் சொல்லிவிடுகிறார்.
இன்னும் மழலை சொல் மாறாத பேச்சு. அவருக்கே உரித்தான அந்த மொழியில் தான் நாடுகளின் பெயர்களை சொல்கிறார்.
மீதி 31 நாடுகளின் பெயர்கள் பெரியவர்கள் வாயில் கூட நுழையாத கடினமான பெயர்கள். எனவே அந்த பெயர்களை பிரியாவால் சொல்ல முடியவில்லை.
5 வயதுச் சிறுவன் 5 நிமிடங்களில் 221 நாடுகளின் பெயரைச் சொன்னதுதான் இதுவரை சாதனையாக இருக்கின்றது. எங்கள் பிரியாவுக்கு 3 வயதுதான் ஆகின்றது. ஆனால் 224 நாடுகளின் பெயர்களை சொல்கிறார். எப்படியாவது அவர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.
இது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள 30 மாநிலங்களின் தலைநகரங்களையும் பிரியா சொல்கிறார் என்றார்.
குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும், அறிவாற்றலும் அதிகம் என்பார்கள். லஸ்யபிரியாவும் அதை நிரூபித்து வருகின்றார்.
கனடாவில் வசிக்கும் ராம் சிவாவின் ராம் பவுண்டேசன் மூலம் கொழும்பு தேசிய அரச வைத்தியசாலைக்கு மாதாந்தம் கிளினிக் செல்ல கூட வசதி இல்லாத 4 பேருக்கு போக்குவரத்துச் செலவு, தங்குமிட, உணவுத் தேவைக்கான மாதாந்த பண உதவியின் முதல் மாத கொடுப்பனவு நேற்று முன்தினம் (05.08.2016) வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் வைத்து தமிழ் விருட்சம் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கொழும்புக்கு சிகிச்சைக்கு சென்று வரும் மன்னார் உப்புக்குளத்தில் வசிக்கும் பசுபதி வேல்முருகு அவர்களுக்கும், இதயப் பிரச்சனை சம்மந்தமான சிகிச்சைக்கு கொழும்பு செல்லும் 1 ம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பு முல்லைதீவில் வசிக்கும் செல்லத்துரை தயாபரனுக்கும், வவுனியாவில் வசிக்கும் சுவாசக்குழாய் பிரச்சனை சம்மந்தமாக கொழும்பு சென்று வரும் 2 வயதுக் குழந்தை ஸ்டிபினிக்கும்,
வவுனியாவில் வசிக்கும் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்று வரும் 7 வயதுக் குழந்தை திசாலினிக்கும் இந்த மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தவீசன், வசந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனி கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வவுனியா வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 06.08.2016 சனிக்கிழமை அன்று “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டத்தின் மூலம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் மாணவர்களுக்கு, துவிச்சக்கர வண்டிகளை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனி கிளையின் தோழர் பவானந்தன் அவர்களுடன் இணைந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.
இவ் நிகழ்வுகளில் நா.இரத்தினலிங்கம்(குருபரன்), புளொட் அமைப்பின் பொருளாளர் இளங்கோ, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜெகதீஸ்வரன்(சிவம்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணி சார்பான செயற்குழு உறுப்பினர் சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொருளாளர் நிஷாந்தன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், அமைப்பாளர் வ.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஆரம்பமான ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது பிரான்ஸ் வீரரின் கால் உடைந்தது. இதனால் பரிதாபத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றுமுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு போட்டிகளின் தகுதிச் சுற்றுக்கிடையில் ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்றும் நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி சார்பில் சமிர் எய்ட் சையித் கலந்து கொண்டார்.
இவரது சுற்று வரும்பொது துள்ளிக் குதித்து சென்று கொண்டிருந்தார். கடைசியாக டைவிங் செய்து தரையில் நிற்கும்போது அவரது இடது கால் சரியாக தரையில் பதியாமல் நிலைதடுமாறிப் போனார். இதில் அவரது இடது கால் உடைந்தது.
இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் சக நாட்டு வீரர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக மருத்துவக்குழு விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமிர் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பியன் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்றவர். ஏற்கனவே 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தொடரிலும் இதுபோன்று காயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவர் கொரின் மௌஸ்டார்ட்-காலோன் கூறுகையில் ‘‘இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது அவர் முருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.
பொட்டு படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவரான நமீதா வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். இது அவருக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.
தமிழ் படமுன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. பிரபல ஹீரோக்களின் ஜோடியாகவும், கவர்ச்சி வேடத்திலும் கலக்கிய இவர் ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம் பிடித்தார்.
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து வந்த நமீதா நடிப்புக்கு சமீபகாலமாக சிறிய இடைவெளி கொடுத்திருந்தார் இப்போது மீண்டும் தமிழ் திரை உலகில் மறு பிரவேசம் செய்திருக்கிறார்.
பரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பொட்டு’. இதில் நமீதா நடிக்கிறார். இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய நாயகிகளும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜிஷிண்டே, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
வடிவுடையான் இயக்கும் இந்த படத்தில் நமீதா அபூர்வ சக்திகளை அடக்கி ஆளும் பெண் மந்திரவாதியாக நடிக்கிறார். பரத் மருத்துவ கல்லூரி மாணவராக நடிக்கிறார். பேய் படமாக இது உருவாகிறது.
இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்யும் ‘பொட்டு’ படத்துக்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக ஸ்வெட்லானா பன்க்ரடோவா விளங்குகிறார். இவரின் கால்களின் நீளம் தலா 132 சென்ரிமீற்றர் (4 அடிஇ 3. அங்குலம்) ஆகும்.
ரஷ்யாவில் 1971 ஏப்ரல் 29 ஆம் திகதி பிறந்தவர் ஸ்வெட்லானா பன்க்ரடோவா. அவர் உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண் என 2003 ஜூலை மாதம் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இப்போதும் அவரே உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக விளங்குகிறார்.
எவ்வாறெனினும், 45 வயதான ஸ்வெட்லானா உலகின் மிக உயரமான பெண் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடுப்புக்கு மேல் அவரின் உடற்பகுதி சாதாரண அளவிலேயே உள்ளது. இதனால், அவர் 195 சென்ரிமீற்றர், அதாவது 6 அடி 5 அங்குல உயரமானவராகவே உள்ளார்.
உலகின் மிக நீளமான பெண்ணாக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டவர் சீனாவில் வசித்த யாவோ டெஃபென் ஆவார். இவர் 8 அடி 7 அங்குல உயரமானவர். 2012 ஆம் ஆண்டு தனது 40 ஆவது வயதில் அவர் இறந்தார்.
மோசமான வரிகளைக் கொண்ட பாடல்களை நான் பாட மாட்டேன். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடுவதற்குக் கூட நான் மறுத்திருக்கிறேன் என பொலிவூட் திரையுலகின் பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி தனது 43 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியவர் சோனு நிகம். இவ்வருடம் அவர் பாடிய 3 பாடல்கள் வெளியாகின. இம்மூன்று பாடல்களுமே இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.
இந்நிலையில் திரைப்படங்களில் ஏன் சொற்ப எண்ணிக்கையான பாடல்களை மாத்திரம் பாடுகிறீர்கள் என அவரிடம் வினவப்பட்டது. அக்கேள்விக்கு சோனு நிகம் பதிலளிக்கையில், “என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களில் பாடுவது அவ்வப்போதுதான். ஒவ்வொரு இசை நிறுவனமும் தமது கலைஞர்களின் பட்டியலை வைத்திருக்கின்றன.
அப்பாடகர்கள் தமது இசையமைப்பாளர்களுக்கு சிறந்த பாடல்களைக் கொடுக்க வேண்டும். இந்த ட்ரெண்ட்டை நாம் விமர்சிக்கவில்லை. தமது பாடகர்களால் ஒரு பாடலை பாட முடியாது என இசை தயாரிப்பாளர்கள் கருதினால் மாத்திரமே அவர்கள் என்னிடம் வருவார்கள்.
எனவே, சோனு நிகம் ஒரு வருடத்தில் தொடர்ச்சியாக 100 பாடல்களை பாட வேண்டும் என எதிர்பார்ப்பதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
தரக் குறைவான வரிகளைக் கொண்ட பாடல்கள் குறித்து சோனு நிகம் கூறுகையில், “மலிவான வரிகளைக் கொண்ட பாடல்களை பாட நான் விரும்பவில்லை. இதே காரணத்தால் 7 வருடங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடுவதற்குக்கூட நான் மறுப்புத் தெரிவித்துள்ளேன்.
ரோபோட் (2010) படத்தின் பாடலொன்றின் வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அப்பாடலை நான் பாடவில்லை. அவரும் (ரஹ்மான்) அப்பாடலில் பங்காற்றக் கூடாது என நான் கூறினேன்.
இதே போன்று மலிவான வரிகளைக் கொண்டிருந்ததால் ஹிமேஷ் ரேஷாமியாவின் இசையில் பாடுவதற்கும் நான் மறுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவீன தொழில்நுட்பமானது அனைவரையும் சிறந்த பாடகர்களாக்குவற்கு உதவுகிறது. ஆனால், மேடையில் பாடுவது ஒரு பாடகருக்கான கடும் பரீட்சைக் களமாக அமையும் எனவும் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.
கண் பார்வை அற்றோர் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுக்கின்றார்கள்.
ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது. அவாறான விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி நாளை பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2016, விழிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கான சத்த பந்து கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பமாகின்றது .
அடுத்த நிகழ்வாக 20.08.2016 இல் சக்கர நாட்காலி கூடைப்பந்தாட்டப்போட்டிகள் வவுனியாவில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பில் 28.08.2016 இலும் வவுனியாவில் 04.09.2016 இலும் நடைபெறவுள்ளன.
சத்தப்பந்து கிரிக்கெட் போட்டிகள் வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் இடையில் நடைபெற உள்ளது.
முற்றிலும் கண்பார்வை இழந்தவர்கள் இவ்வாறான ஒரு விளையாட்டுக்காக தாம் மைதானத்தில் இறங்கும் போது கவலைகளை மறந்து ஒரு புதிய உத்வேகத்தை அடைகின்றோம் என பெருத்த நம்பிக்கையோடு காத்திருகின்றார்கள்.
அவர்களுக்கான இவ்விளையாட்டு போட்டிகளில் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு தமிழ் மாற்று திறனாளிகள் அன்பாக கேட்டுக் கொள்கின்றார்கள்.
டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரையிலான விடயங்களை உள்ளடக்கிய இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
வவுனியா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு வவுனியா, சிந்தாமணி ஆலய மண்டபத்தில் நேற்று (06.08.2016) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் மு.திருநாவற்கரசினால் எழுதப்பட்ட இந்த நூலை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் வெளியிட்டு வைத்திருந்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமானமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.ஆ.யோதிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், மன்னார் பொது அமைப்புக்களிள் ஒன்றியத்தலைவர் சிவகரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அனுராதபுரம் நகரில் பகுதி நேர வகுப்புச் சென்ற 12 வயதான மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
44 வயதான இந்த ஆசிரியர் அனுராதபுரம் நகரில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் சேவையாற்றி வருகிறார். ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை குறித்து மாணவி அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருமணமான இந்த ஆசிரியருக்கு இரண்டு புதல்விகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும், இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களுடன் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் கோனஹேன முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பிரதான வௌியேறும் வாயிலில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் வசமிருந்து, வரி ஏய்ப்பு செய்து நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 2309 டெப்கள், ஒரு தொகை சிகரெட்டுக்கள் உட்பட பல பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி இரணடு கோடியே 34 இலட்சத்து 33,978 ரூபாய் என பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சுங்க அதிகாரிகளால், சந்தேகநபர்களுக்கு 21 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்…சென்று வருகிறேன்” என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் திருமணமாகாத இரு மகள்கள் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது நிர்வாகி ஒருவர், ’அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகவும், அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லையென்றும்’ கூறினார்.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், ஈஷா யோகா மையத்தில் ஏராளமானவர்களுக்கு மூளைச்சலவை செய்து பிரம்மசரியம் மேற்கொள்ள வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.
மேலும் ஈஷா சம்கிருதி பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தியோ, மூளைச்சலவை செய்தோ பிரம்மசரியம் ஏற்க வைப்பதில்லை என யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ’ஈஷா யோகா மையத்தில் சுவாமி ஏகாக்ரா உள்ளிட்ட பலர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கின்றனர். அவை மூடி மறைக்கப்படுவதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சுவாமி ஏகாக்ரா மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர்களை யோகா மையத்தினர் சொல்ல வைத்தனர். மனநலம் சரியில்லாத ஒருவருக்கு எப்படி பிரம்மசரியம் ஏற்க முடியும்?” என்று கூறியுள்ளார்.
கினிகத்ஹேன பொல்பிட்டிய பிரதேசத்தில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாக இவ்வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக உயர் ஆபத்துகளும் காயங்களும் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.