ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுநலவாய அமைப்பு தலைவராக்கும் யோசனைக்கு எதிர்ப்பு வலுக்கிறது!!

humanபொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாடு நிறைவில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமை தீர்மானிக்கப்படவுள்ளது.

தலைமை பதவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு சர்வதேசத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு நியூசிலாந்து பசுமைக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்த இன்றும் நாளையும் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடடில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது,
இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாப்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் நாட்டுக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது.

உரிமை மீறல்களில் ஈடுபடும் நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்யும் அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லாட்சியை ஏற்படுத்தவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து மீண்டும் தமிழ்நாடு செல்லும் அகதிகள்!!

Refugeesதமிழகத்தில் அகதிகளாக இருந்து இலங்கை திரும்பியவர்கள் கடன் மற்றும் தேர்தல் பிரச்னை காரணமாக மீண்டும் தமிழகத்திற்கு செல்கின்றனர். இது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் போர் நடந்தபோது ஏராளமானவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றனர். போர் முடிந்தபின் தமிழக முகாம்களிலிருந்து பலர் இலங்கைக்கு திரும்பினர்.

அங்கிருந்து அகதிகள் வருகை முற்றிலும் நின்றது. இலங்கை செல்ல விரும்பாதவர்கள் அந்தந்த முகாம்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் படகுகள் மூலம் அகதிகள் வரத் துவங்கியுள்ளதால் கியூ பிரிவு பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் இலங்கையில் நடந்த தேர்தல் எதிரொலியாக தாக்கப்பட்டதாலும் கடன் பிரச்னையாலும் பலர் மீண்டும் தமிழகத்திற்கு, அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். கியூ பிரிவு அதிகாரி கூறியதாவது..

தமிழகத்தில் அகதிகளாக இருந்து இலங்கை திரும்பியவர்களே மீண்டும் அகதிகளாக வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இலங்கையில் ஏற்படும் தனிப்பட்ட பிரச்னைகளுக்கு கூட மீண்டும் அகதியாக இங்கு வந்து விடுகின்றனர். கடந்த சிலநாட்களுக்கு முன் ஒரு பெண் அகதி கடன் பிரச்னையால் இங்கு வந்துள்ளார். புதிய அகதிகள் யாரும் வரவில்லை என்றார்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் மீண்டும் சுவிஸ்லாந்து திரும்பினர்!!

swissஅகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் சுவிஸ்லாந்து வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த குடும்பத்தினர் இந்த வாரம் சுவிஸ்லாந்திற்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய் ஒருவரும் இரண்டு பிள்ளைகளுமே சுவிஸ்லாந்து திரும்பியுள்ளனர். குறித்த தாயின் தேகாரோக்கியத்தை கருத்திற் கொண்டே அவர்கள் மீண்டும் சுவிஸ்லாந்து திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட குறித்த தாய் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட பின்னர் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சுவிஸ்லாந்தின் கொழும்பு தூதரக அதிகாரிகள் அவரை சென்று பார்வையிட்ட அடிப்படையில் இலங்கையில் இருந்தே அவருக்கு விசா அனுமதி கிடைத்துள்ளது. இதனையடுத்தே அவர்கள் சுவிஸ்லாந்து திரும்பியுள்ளனர்.

5 வயதில் பிரிந்தவர் 26 ஆண்டுகளின் பின் கூகுள் மூலம் இணைந்தார்!!

joinரயில் பயணத்தின் போது தன் சகோதரனை பிரிந்த ஐந்து வயது சிறுவன் 26 ஆண்டுகளுக்குப் பின் கூகுள் ஏத் இணையதளம் உதவியுடன் தன் வீட்டை அடைந்தார். இதனால் தொலைந்த சிறுவனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சரோ முன்ஷி கான், 26 ஆண்டுகளுக்கு முன் தன் 14 வயது சகோதரனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் பயணத்தில் தன் அண்ணனை தொலைத்த சரோ முன்ஷி கான் செல்லும் இடம் தெரியாமல் ஊர் ஊராக அலைந்துள்ளார். வீதிகளில் திரிந்த சரோ அனாதை இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளில் சரோவை அவுஸ்ரேலியாவை சேர்ந்த தம்பதி தத்து எடுத்து சென்றனர். பல ஆண்டுகளாக தன் வீட்டு நினைவாகவே இருந்த சரோ 5 வயதில் தன் நினைவில் இருந்தவைகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, இணையதளத்தில் தேட ஆரம்பித்தார். சரோவின் விடா முயற்சியால் கூகுள் ஏத்தில் சரோ தன் ரயில் பயணத்தில் சகோதரனை பிரிந்த இடத்தை கண்டறிந்தார்.

அதன் பின் தன் வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவு பயணித்திருக்க முடியும் என்ற யூகத்தின் அடிப்படையில் கூகுள் ஏர்த்திலேயே தன் சொந்த ஊர் பற்றி தகவல்களை தேடினார். இறுதியில் தன் பிறந்த ஊர் பற்றி தகவல்களை அறிந்த சரோ 26 ஆண்டுகளுக்குப் பின் தன் தாய் மற்றும் ரயில் பயணத்தில் பிரிந்த சகோதரனுடன் ஒன்று சேர்ந்துள்ளார்.

சரோவின் வருகையால் அவனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது சூப்பர்மேன் செயல் போல உணர்வதாக சரோவின் சகோதரர் கூறியுள்ளார். கூகுள் ஏர்த் உதவியுடன் தான் பிறந்த இடத்தை கண்டறிந்து, உறவினர்களுடன் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சரோ உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் சீனாவை சேர்ந்த ஒருவர் 23 ஆண்டுகளுக்குப் பின் கூகுள் ஏர்த் இணையதளம் உதவியுடன் தன் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்துள்ளார். தற்போது இந்தியாவிலும் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பேஸ்புக்கில் தொந்தரவு : மாணவி தற்கொலை, இரு சிறுமியர் கைது!!

Facebookஅமெரிக்காவில் புளோரிடா லேக்லேண்டை சேர்ந்த மாணவி ரெபெக்கா அன்னா செட்விக். 7ம் தரத்தில் படித்து வந்த இந்த மாணவி கடந்த 5 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் செயல்படாத சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

இதுகுறித்து ரெபெக்காவின் நண்பர்கள் 15 பேரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிகளின் பெற்றோர்கள் பொலிசாருக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர். இருந்தும் சிறுமிகள் அனைவரும் வலைதளத்தில் பேசிக்கொண்டு வந்தனர். அப்போது பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் ரெபெக்கா தற்கொலை குறித்து அவள் கவலையடையவில்லை என்ற வாசகம் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளிகளான 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரெபெக்காவை நேரிடையாகவும், வலைதளம் மூலாமகாவும் வார்த்தைகளாலும் மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால் அவர்களின் கணினியும், மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீதான வழக்கு போல்க் கவுண்டி ஷெரிப் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அவர்கள் இருவரும் ரெபெக்காவை தற்கொலை செய்துகொள்ள தூண்டும் அளவிற்கு தேவையில்லாத தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் வயதினரான குற்றவாளி சிறுமிகள் மீது மற்ற குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

இவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இளம் சிறார்களுக்கான சிறையில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.

சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் இன்று மீண்டும் சத்தியப்பிரமாணம்!!

CVV

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

வட மாகாண சபையின் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புக்களுக்கே சி.வி.விக்னேஸ்வரன் இன்று சத்தியப்பிரமாணம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குளவி தாக்கி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

wasp-300x199குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் 31 பேரும் மாணவிகள் 5 பேரும் இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

ஹந்தான மலை பகுதிக்கு நேற்று மாலை 259 மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். மலையில் இருந்த குளவி கூடு ஒன்று களைந்து மாணவர்களை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவருக்கும் உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் 200வது போட்டியில் 300 அடித்தால் கலக்கலாக இருக்கும் : கவாஸ்கர்!!

sunil-gavaskar

சச்சின் விளையாடப் போகும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 300 ஓட்டங்கள் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் அணி்த்தலைவர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறப் போகும் மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் போட்டிதான் சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் முச்சதம் அடிக்க வேண்டும் என்று விருப்பம் வெளியிட்டுள்ளார் கவாஸ்கர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் வான்கடேவுக்கு தனி இடம் உண்டு. அங்கு தான் அவர் தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார்.

தற்போது தனது கடைசி டெஸ்ட் போட்டியை அங்கு ஆடவுள்ளார். இதன் மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுச் சுற்றை எட்டுகிறது. எல்லோரும் சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் 300 ஓட்டங்களை அவர் குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

குறைந்தது இரட்டைச் சதமாவது அவர் அடிக்க வேண்டும் என்றும் அதுதான் அவரைப் போன்ற மேதைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

கெளதம் மேனனும் சூர்யாவும் பிரிந்தனர் : 5 கோடியை திருப்பி கொடுத்த சூர்யா!!

Surya-Gauthamசிங்கம்–2 படத்துக்குப்பின் கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்காக 5 கோடி முற்பணம் வாங்கினார். ஆறு மாதங்களாகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. கவுதம்மேனன் திருப்தி அளிக்கும் வகையில் முழு கதையையும் தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார்.

ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை கெளதம் மேனன் ஆரம்பித்து எட்டுமாதம் காத்திருந்தும் அந்த படம் நடக்கவில்லை என்றும் இந்த படத்துக்கும் அதே அனுபவம் ஏற்பட்டுள்ளது என்றும் சூர்யா கூறினார். இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது என்பதால் விலகுகிறேன் என்றும் சூர்யா அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கெளதமிடம் இருந்து வாங்கிய 5 கோடியை சூர்யா திருப்பி கொடுத்தார். இருவரும் சமரசமாக பிரிந்தார்கள். கெளதம் பிடித்தமான கதையை தயார் செய்ததும் அவர் படத்தில் நடிப்பேன் என்று சூர்யா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாயுடன் சண்டை : 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

hangஅக்கரைப்பற்று – அட்டாளச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தனது வீட்டின் பின்புறம் குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

தொங்கிய நிலையில் இருந்த சிறுவன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
ஹஜ் பெருநாள் தினமான நேற்று தனது தாயுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் சிறுவன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணையை அக்கரைப்பற்று நீதவான் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது யுவதியை தவறான நோக்கில் ஒட்டிசுட்டானில் இருந்து வவுனியா அழைத்து வந்தவர் பிடிபட்டார்!!

Girlஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை தவறான நோக்கதுடன் அழைத்து வந்தவர் வவுனியாவில் பிடிபட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை தந்திரமாக அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 40 வயது நபர் ஒருவர் அழைத்து வந்துள்ளார். ஒட்டிசுட்டானில் இருந்து நேற்று பிற்பகல் வவுனியா நகருக்கு வந்து ஆட்டோ ஒன்றில் இருவரும் ஏறிய போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட நகரில் ஆட்டோ ஓடும் இளைஞர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பிடித்துள்ளனர்.

குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் வைத்தே பிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா சிறுவர், பெண்கள் பாதுகாப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த யுவதியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரை எச்சரித்தபின் பொலிசார் விடுதலை செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி இவ்வாறு தொடர்ச்சியாக பெண்களை கூட்டிவருபவர் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

டெண்டுல்கரிடம் இருந்து இலங்கை அணி நிறைய கற்றுக்கொண்டது : அர்ஜூன ரணதுங்க!!

Ranatungaஇந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது..

சுனில் கவாஸ்கர் டெண்டுல்கர் ஆகியோரிடம் இருந்து தான் நாங்கள் ஆட்ட நுணுக்கங்களை கற்று கொண்டோம். டெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு இந்தியாவிடம் இருந்து கற்று கொள்ள முடியுமென்று நினைக்கவில்லை.

இந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம்.

இலங்கை அணியின் மூத்த வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்கார ஓய்வு பெற்ற பிறகு அணியை எப்படி கையாள்வது என்பது பற்றி இலங்கை அணி தயார் நிலையில் இல்லை என்றார்.

வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த பெண்களுக்கு ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனத்தால் உதவித் திட்டங்கள்!!(படங்கள்)

யுத்தத்தினால் பாதிப்படைந்த பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பும் முகமாக ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனம் வவுனியா கிராமிய பெண்கள் அமைப்புடன் இணைந்து உதவித்திட்டங்களை செய்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தின் புதியவேலர்சின்னக்குளம், மகிழங்குளம், விளக்குவைத்தகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பெண்களுக்கு சுகாதாரமான குடிநீரை பெற்றுக் கொள்ளும் முகமாக பில்டர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 40 பெண்களுக்கு அவர்களின் சிறுதொழிலை விருத்தி செய்யும் முகமாக வட்டியில்லா கடன்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த யூலைமாதம் இப்பகுதியில் 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார எழிச்சிக்காக வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் தோட்டச் செய்கை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயசித்ரா, ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனத்தின் தலைவர் டொக்டர் செல்வமலர் ஜயாத்துரை, இந் நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த அமராவதி நவரத்தினம், முரளி ஜெகநாதன், சிறுவர்கல்வி அபிவிருத்தி இணைப்பாளர் மனோகரி ராஜகோபால், கிராமிய பெண்கள் அமைப்பின் திட்ட இணைப்பாளர் பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4

சிம்புவுக்கு அக்காவாக நடிக்கும் ரம்பா!!

Rambaஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இருந்தாலும் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் அவருக்கு நடிகை என்ற உயர்ந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது இரண்டரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ரம்பா தற்போது நடிகர் சிம்புவுக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சுற்று வர முடிவு செய்துள்ளார்.

இனிமேல்,அக்கா, அண்ணி போன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் ரம்பா தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம். ரம்பா நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

வட மாகாணத்தின் முதலாவது பயிர் மருத்துவ முகாம்!!(படங்கள்)

வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவ முகாம் புத்தூர் நிலாவரையில் நடாத்தப்பட்டது.பயிர்களில் ஏற்படும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை விவசாயிகள் இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காகவும் இந்த பயிர் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும், தோட்ட மண் மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிர் மருத்துவமுகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும் பூச்சியியல், மண்ணியியல் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5

விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு சம்பளத்தில் வெட்டு : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!!

Actசினிமா படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் சி.டி. வெளியீட்டு விழாக்களுக்கு வர மறுக்கும் நடிகைகளுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் முன்னணி நடிகைகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த படங்களை விளம்பரபடுத்த நடிகர், நடிகைகளை வைத்து பத்திரிகையாளர் மற்றும் ஊர் ஊராக அவர்களை அழைத்து போய் ரசிகர்களை சந்திக்க வைத்தல் போன்றவற்றை நடத்துவது உண்டு. ஆனால் இவற்றில் நடிகர்கள் மட்டும்தான் பங்கேற்கின்றனர். நடிகைகள் வருவது இல்லை.

பொதுவாக நடிகைகள் டப்பிங் பேசுவதற்கு முன்புதான் முழு சம்பளத்தையும் செட்டில் செய்வது வழக்கம். ஆனால் தமிழில் டப்பிங் பேச தெரியாத கதாநாயகிகள் படப்பிடிப்பு இறுதி நாளில் நிலுவை சம்பளம் முழுவதையும் வசூலித்து வருகிறார்கள். அதன் பிறகு அவர்களை படங்கள் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பிடிக்க முடிவதில்லை. இசை வெளியீட்டு விழாக்களுக்கும் வருவது இல்லை.

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு சம்பளத்தை முன் கூட்டியே கொடுக்காமல் சுமார் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, டாப்சி, லட்சுமி மேனன், நஸ்ரியா என பல நடிகைகள் வருகிறார்கள். இவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று மாலை சங்க அலுவலகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்துக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் டி.ஜி. தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதில் நடிகைகளுக்கு சம்பளத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.